ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
மெ. மெய்யப்பன் (காரைக்குடி)
பாடல்கள்1 / 1
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே · மெ. மெய்யப்பன் (காரைக்குடி)
பாடல்கள்
1✓
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே.
2✓
ஆழிப் படுக்கை கொண்டோனின்
அருமை மருகா ஆடுகவே
ஊழி தாண்டி நிற்பானின்
உத்தமச் செல்வா ஆடுகவே
வாழும் மனிதர் யாவருக்கும்
வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளுங் கவலை ஓடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
3✓
ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா ஊஞ்சல் ஆடுகவே
பாடுகள் குறைந்தே மாந்தரெலாம்
பண்பால் உயர்ந்தே வாழ்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம்பெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
4✓
முன்னே பின்னே சென்றாலும்
முளையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும்
எல்லாம் உன்னைச் சுற்றியதே
குன்றாக் குடியாய் எமையாக்கும்
குன்றக் குடியின் வடிவேலா
கண்ணே மணியே கதிர்வேலா
கவினாம் ஊஞ்சல் ஆடுகவே.
5✓
விண்ணவர் செல்வி தெய்வானை
வேடவர் மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி
மேதகு சேவற் கொடியாட
கொண்டிடுங் காதல் உணர்வோடு
கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
6✓
மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்
மாபெரும் அருளுடை சுயம்புவென
பெண்ணின் நல்லார் இருவருடன்
பெருமயில் ஏறி வந்தவனே
கண்ணே தெரியாக் காட்டிடையே
கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
உன்னால் வழியும் தெரிந்துயர
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
7✓
ஆறடி நெடிதாம் உருவுடனே
அடியார் பக்தி உருவேற்ற
பேரருள் கொண்டாய் பெரும்பேடா
பிள்ளை நலிவினைப் போக்கிடவே
சீரடி வணங்கிட வந்துள்ளோம்
செல்வா அருளினைத் தந்திடுக
ஆரிருள் விலகி ஒளிபெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.