முருகன் App
இரத்தினகிரி பாலமுருகன் பாமாலை
வி. அண்ணாமலை முதலியார்
பாமாலை1 / 1
இரத்தினகிரி பாலமுருகன் பாமாலை · வி. அண்ணாமலை முதலியார்

பாமாலை

1✓
உன்பெருமை எல்லாஅம் உளமுருக அடியார்கள்
நன்குரைக்கக் கேட்டுன்னை நானெப்போது அடைந்திடுவேன்
என்றாவல் மிகக்கொண்டேன் இரத்தினப்பேர்க் கிரியிலுறை
துன்றுபுகழ்த் திருமுருகா! துயர்தீர்க்கும் சுடர்வேலா!
2✓
இன்றென்னை எதிர்பாராது இங்கிழுத்தாய் ஆட்கொண்டாய்
என்றுமுன்னை மறந்தறியா ஏழையரை வாழ்விக்கும்
அன்புருவே! இன்புருவே! அருளுருவே! எழிலுருவே!
துன்புறுத்தும் வினைதீர்க்கும் தூமணியே! திருமுருகா!
3✓
இருவினைகள் நன்குபோக்கி எனக்கருளும் தெய்வமே! என்
குருவாகி ஆண்டருளும் குமராஎன் உளத்தமர்ந்து
மருள்நீக்கும் நல்மருந்தே! மயிலூரும் மாமணியே!
உருகியுனை நாடுவாரை உய்விக்கும் வித்தகனே!
4✓
உன்னருளை நாடியுன்னை உள்ளும்போ தெலாம்அருளும்
இன்னமுதே! அருட்கடலே! எங்குமொளிர் பெருமானே!
என்பெயரைப் பூண்டுள்ள இரத்தினநற் கிரிதன்னில்
என்றுமுறை பாலனாக இலங்கிஅருள் பொழிவோனே!
5✓
முருகனையே எண்ணிஎண்ணி முற்றாத நம்பிநம்பி
உருகுகின்ற அடியார்கள் உய்ந்திடுதல் உறுதியன்றோ!
இரும்புநிகர் மனத்தரையும் ஈர்க்கு மிரத் தினகிரியோன்
அருள்நாடிச் சென்றடைவோர் அறிந்திடுவர் ஐயமின்றி.
6✓
அமைதியினை நாடுகின்ற அன்பர்காள் கவலைதரும்
சுமைகளினைத் தாங்கியிங்கு சோர்வில்லா உள்ளத்தோடு
எமைவாட்டும் துன்பமின்றி என்றுமின்ப வாழ்வுபெற
இமைப்பொழுதும் மறவாமல் இறைஞ்சுங்கள் முருகனையே!
7✓
வந்தேன்உன் அருளினாலே வலிந்தீர்க்கும் பாங்குணர்ந்தேன்
சிந்தனைக்கும் எட்டாத திருக்கோலம் கண்டபின்என்
நொந்தவுள்ளம் மகிழ்வெய்த நோயெல்லாம் தீர்ந்ததம்மா!
கந்தனேஎன் தவநிதியே கதிர்வேலா காத்தருள்வாய்!
8✓
திருமுருகா! ஒருமுதல்வா! தித்திக்கும் புத்தமுதே!
மருவுவார்க்குக் குளிர்மதியே! மறந்திடார்தம் மனவிளக்கே!
உருகுவார்க்குத் தெளிதேனே! உள்குவார்தம் உறுதுணையே!
அருள்நிதியே! அன்புற்றே! அமரர்ஏறே! அருட்கடலே!
9✓
இரத்தினநற் கிரிதன்னில் இருந்தென்றும் அருள்சுரப்போய்
இரக்கமின்றி ஈழத்தில் இரவுபகல் ஓய்வின்றி
அரக்கர்போல் எம்மினத்தை அழிக்கின்ற ஆட்சியரைத்
துரத்திவென்று தமிழீழம் துலங்கிடப்பேர் அருள்புரிவாய்!
10✓
என்கண்ணும் உள்ளமுடல் எல்லாமே நிறைந்துநின்றே
இன்னுயிரில் ஊனதனில் இலங்குணர்வில் கலந்துளோனே
அன்புடனே நல்லருளும் அறமும்சேர் நெறியினிலே
நன்குசென்று நானிலத்தோர் நல்லமைதி பெற அருள்வாய்!