முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் அடைக்கலப்பத்து
வி. அண்ணாமலை முதலியார்
பாடல்1 / 1
இரத்தினகிரிப் பாலமுருகன் அடைக்கலப்பத்து · வி. அண்ணாமலை முதலியார்

பாடல்

கட்டளைக் கலித்துறை
1✓
அருட்கட லேயுன் அருளினால் அன்பர் அழுந்திநின்றே
சுருக்கெடுத் திட்டார் கடையனேன் உன்றன் கழலிணையைக்
கருத்தினிற் கொள்ளாயிப் பேதையேன் உய்யக் கருவதனை
அருளினால் தீர்த்திரத் நாசலம் ஆள்வாய் அடைக்கலமே.
2✓
அறிவினுள் ளேயறி வாகி யுணர்த்தும் அருட்சுடரே
பிறிவறி யாவுன் அடியா ருனதடி பேணுகின்ற
நெறியறி யேன்உன் றனையறி யேன்யான் நெகிழ்ந்துருகி
அறியும் அறிவருள் ரத்நாச லாஉன் அடைக்கலமே.
3✓
வினையேன் இழைத்த பிழையைப் பொறுத்திடும் மெய்ப்பொருளே
நினையேன் உனையன்றி வேறோர் புகலிடம் நின்மலனே
எனையே பிறவிப் பெருங்கடல் வற்ற எடுத்தருள்வாய்
அனையே அனைய இரத்ன கிரியாய் அடைக்கலமே.
4✓
பாலினுள் வெண்ணெ யெனமிளிர் கின்றமெய்ப் பாலகன்செவ்
வேலினால் ஆணவச் சூரைத் தடிந்த விறல்மயிலோன்
சீலமே செய்திடு பூசையில் ஒன்றாத சிந்தையனேன்
ஆலமர் கோமகன் ரத்நா சலன்தாட் கடைக்கலமே.
5✓
கறங்கோலை போலும் பிறவியிற் பட்ட கயவனின்பால்
பிறங்கிடும் தீவினை தீர்த்துன் னருளைப் பெரிதருள்வாய்
நிறமுரு இல்லாதாய் ஆறு முகமுடை நின்மலனே
அறவிடை யோன்சுதா ரத்நாச லாநின் அடைக்கலமே.
6✓
கற்றிலேன் ஞானக் கலையுடன் உன்பால் கசிந்துருகப்
பெற்றிலேன் உன்னருள் சேர்ஞானி யார்தம் பெருங்கருணை
உற்றிலேன் ஏழையேன் இன்னுயிர் தந்தேன் உனதடிக்கே
அற்பனேன் வேண்டினேன் ரத்நாச லாநின் அடைக்கலமே.
7✓
எண்ணிலேன் என்னுளே நின்திருப் பேர்ஆ றெழுத்தையுமே
நண்ணிலேன் நின்னடி யார்அடி தீவினை நண்ணியதால்
மண்ணிலே தோன்றி மலர்த்தாள் தொழாது மடிகின்றநான்
அண்ணலே ரத்ந கிரியாய் நினதாட் கடைக்கலமே.
8✓
என்றனை அஞ்சே லெனவே கருணையால் ஏற்றருளும்
உன்றனை யன்றியோர் தெய்வமும் கொண்டிலேன் ஒண்பொருளே
இன்றெனை ஒப்புவித் தேன்வினை போக்கி இனிதருளாய்
அன்றுனை ஏத்திலேன் ரத்நாச லாநின் அடைக்கலமே.
9✓
கண்ணின் மணியே மணியி லியங்கும் கதிரொளியே
நண்ணும் கதியேநன் நாத முடிவுறு நாயகனே
எண்ணும் எழுத்தில் உறைந்தருள் செய்யும் எழிற்பொருளே
அண்ணும் இரத்நாச லாஎனை ஆள்உன் அடைக்கலமே.
10✓
சிந்தை முதலாகச் செய்கை முதல்யாவும் சீரடியில்
பந்த மறஒப்பு வித்தேன் பழவினை பற்றறுத்தே
சந்த நிறைநின் கழற்கீழென் னாவி கலந்திடவே
அந்தண னேரத்ந வெற்பனே யான்உன் அடைக்கலமே.