கந்தர் மாலை வெண்பா
மா. குமாரசுவாமி
வெண்பா1 / 1
கந்தர் மாலை வெண்பா · மா. குமாரசுவாமி
வெண்பா
1காப்பு✓
சீர்பெருகு மாவைத் திருமுருகன் சந்நிதியில்
ஆர்வமொடு வீற்றிருக்கு மைங்கரனே — பார்பரவு
தம்பிதனை வெண்பாவிற் றாள்பணிந்து பாடுகிறேன்
தும்பிமுகா நீயே துணை.
2✓
பாட்டெழுத நானறியேன் பாட்டி லுனதுபுகழ்
கூட்ட வகையறியேன் கூர்வேலா — ஏட்டிலே
நல்லபடி நானெழுத நாமகளே மாவையுறை
வல்லவளே வந்தருளு வாய்.
3✓
தாயார் பெறவில்லை தந்தை நுதல்விழியின்
தீயாகிச் சேயான தேவனவன் — தாயாகித்
தாங்கி யருள்புரிவான் தண்ணார் வயல்மாவை
ஓங்குபுகழ் வேலவனென் றோது.
4✓
கந்தனுறை மாவையிற் காட்டுகிற தீபங்கள்
சிந்தையைக் கந்தன்பாற் சேர்த்துவிடும்—மந்திரங்கள்
முந்தைவினை போக்கிவிடும் மூவாசை நீக்கிவிடும்
பந்தவினை மாற்றிவிடும் பார்.
5✓
மூலப் பொருளாவான் மூர்த்திதலந் தீர்த்தமெலாஞ்
சாலப் பொருந்துகிற தண்ணளியான் — கோலமிகு
மாவைப் பதியுறைவான் மக்கள் துயர்தீர்த்து
ஆவிக்கு நற்றுணையா வான்.
6✓
இந்திரனும் வானவரு மேத்துகிற வாழ்த்தொலியும்
அந்தணர்கள் கூறு மருமறையும் — மந்திரமும்
ஆனந்தக் கூத்துடையா ரார்ப்பரிப்பும் மாவையில்
ஞானவொளி காட்டுந் நனி.
7✓
பாடிப் பரவுமிடம் பண்டிதர்கள் கூடுமிடம்
ஆடி யடங்குமிடம் அற்புதங்கள் — நாடுமிடம்
ஓடி யொதுங்குமிடம் ஓங்காரக் கந்தனிடம்
தேடியுறை மாவையிட மே.
8✓
சின்னஞ் சிறுபிள்ளை செந்தூர் தரும்பிள்ளை
வன்னமயி லேறி வரும்பிள்ளை — மன்னுலகில்
தேவர் தொழும்பிள்ளை சீருடைய வேற்பிள்ளை
மாவைநகர் மாப்பிள்ளை யே.
9✓
அருவாகி யுள்ளுறையு மானந்தத் தெய்வம்
குருவாகி வந்தகுக தெய்வம் — திருவாரும்
மாவைத் தலமுறையும் மாணிக்கத் தெய்வமுயர்
தேவர் தொழுந்தெய்வ மே.
10✓
ஈராறு தோள்காட்டி யின்ப விழிகாட்டி
ஓராறு தண்முகமு மொண்வேலும் — நேராக
மாவையிற் காட்டி மனங்குளிர வைத்தனனே
தேவர் தொழுந்தேவ னே.
11✓
வேலும் மயிலுமென வேண்டுவார் தங்களுடன்
பாலும் பழமாய்ப் பழகிடுவான் — வேலுடனே
வந்தருளிக் காத்திடுவான் வண்மாவை வீற்றிருக்கும்
சுந்தர வேலனெனச் சொல்.
12✓
ஆறுமலை யாடிவரு மண்ண லமர்ந்திருந்து
ஆறுமலை கீரிமலை யாக்கினான் — சீறும்
மயிலேறி வந்துநன் மாவை யுறையும்
அயில்வேல னென்றே யறி.
13✓
தந்தையின் பிள்ளையாய்த் தப்பாமல் வந்துதித்தான்
விந்தை புரிமாவை வேல்முருகன் — தந்தையோ
சுட்டெரித்தான் முப்புரத்தைச் சூர னுடல்கெடவேல்
விட்டழித்தான் வேலனிவ னே.
14✓
மயிலேறி யீசற்கு மந்திரஞ் சொல்லி
நிலைபேறு கண்ட நிமலன் — நிலையாக
ஆடு மயிலேறி யம்மை யிருவருடன்
கூடுமிடம் மாவையெனக் கூறு.
15✓
வேதப் பொருளறியா வேதன் தலைகுட்டிப்
பாதம் பணியவைத்த பாலகன் — சீதவயல்
நன்மாவை நாயகன் நாதற்கு நாதனிவன்
துன்பகற்றி நிற்பான் துணை.
16✓
சீரார் பரங்குன்றம் செந்தூர் திருத்தணியும்
ஏரார் பழநியொடு ஏரகமும் — நேராகக்
கண்ட முருகனைநாம் காலமெலாம் மாவையிற்
கண்டு களித்திடுவோம் காண்.
17✓
வேலும் மயிலும் வினைதீர்க்கும் வேலவனின்
காலுமே முத்திதனைக் கைகூட்டும் — பாலகனாம்
மாவைக் குமரன் மலரடியே தஞ்சமெனில்
பாவப் பிணியோடும் பார்.
18✓
புவியரசி நன்மா ருதப்புர வல்லி
பவவினையால் வந்தபழி தீர்ந்து — நவமாகக்
கந்தனுக்குக் கோயிலொன்று கட்டினாள் மாவையில்
கந்தனருள் கண்டு களித்து.
19✓
அலங்காரம் நல்லூரில் ஆற்றோரா வேலன்
தலங்காணு மன்னதா னந்தான் — நலமாம்
அருட்கோலங் காட்டி யடியார்க் கருளுந்
திருக்கோலம் மாவையெனத் தேர்.
20✓
நிலந்தரும் கல்விதரும் நீண்டபுத்தி யாக்கை
நலந்தரும் செல்வமும் நல்கும் — வலந்தரும்
மாதா விலுமினிய மாவை நகர்வேலன்
பாதார விந்தம் பணி.
21✓
ஆறு முகங்காட்டி அஞ்சு முகமோட்டித்
தேறு முகந்தந்த தெய்வமே — ஆறுபடை
வீடுடைய வேலவனே விண்ணோர் புகழ்மாவை
நாடிவந்த தேனோ நவில்.
22✓
ஆசை யடங்குமிடம் ஆங்காரம் நீங்குமிடம்
ஓசை யொடுங்குமிடம் உண்மையில் — பாசம்
அழியுமிடம் வேல னருளுமிடம் புத்தி
தெளியுமிடம் மாவையெனத் தேர்.
23✓
கோலத் திருவுருவைக் கூர்வேலின் தண்ணளியைக்
காலமெலாங் கண்டு களித்திடுவீர் — வேலவனை
சீலமிகு மாவின் திருவைத் தினந்தொழுது
ஞாலமிசை வாழ்வீர் நனி.
24✓
புத்திவரும் சக்திவரும் போற்றித் துதித்திடவே
பத்திவரும் பாடிப் பரவிடவே — முத்திதரும்
ஆனை முகன்தம்பி ஆறு முகன்மாவை
வானவனை யென்றும் வழுத்து.
25✓
அரவணை கொண்ட அரிமருகா மாவைச்
சரவணப வாவெனச் சாற்றி — இரவுபகல்
அற்ற இடங்கண்டு ஆறு முகம்பெற்றுப்
பற்றற்று வாழ்வீர் பணிந்து.
26✓
வள்ளியொடு குஞ்சரியை வாரி வலமிடமாய்
அள்ளி யணைத்தே யருகிருத்தி — மெல்லவே
மாவைப் பதியமர்ந்து மக்கள் துயர்போக்குந்
தேவனிவன் செந்தூர னே.
27✓
கேட்ட வரமருள்வான் கேளா திருப்போர்க்கும்
ஊட்டிவளர் தாய்போ லுதவிடுவான் — நாட்டமொடு
மாவைப் பதியுறையும் மன்னன் மலரடியே
பாவவினை போக்கும் பணி.
28✓
வள்ளி! உனதடியில் வந்தடைந்த வேடனவன்
தெள்ளுதமிழ் தந்த சிவகுமரன் — வள்ளல்
அடியார் துயர்போக்க ஆசையொடு மாவை
குடிபுகுந்தா னென்றே குறி.
29✓
புலனடக்கிப் போற்றிவரும் புண்ணியர்க்கு மாவைத்
தலமுருகன் தன்றாள் தருவான் — நிலவுலகில்
கந்தா! கடம்பா! கதிர்வேலா! என்றுருகிச்
சிந்தையிற் கொள்க தினம்.
30✓
அருளொழுகு கண்களொடு அன்புமுக மாறும்
பெருகுபுய மீராறும் பேணும் — திருவுடைய
கூர்வேலுங் கண்டு குளிர்ந்திடலாம் மாவையில்
ஏர்பெருகு கந்தன்றா ளேத்தி.
31✓
அந்தரம்வாழ் தேவ ரரிபிரம னிந்திரனும்
சிந்தை மகிழ்ந்தினிது சேவிக்க — பஞ்சரதம்
ஏறிவரும் வேலவனை இன்பமுறக் காணுபவர்
பேறுபெற்றார் மாவையிற் பேசு.
32✓
கண்ணுதலான் பெற்ற கனியமுதே! கந்தனே!
விண்ணோர் சிறைமீட்ட வேலவனே! — மண்ணுலகில்
மக்கள் துயர்போக்க மாவை தனிலமர்ந்து
பக்கத் துணையானான் பார்.
33✓
மணியோசை கேட்டு மனமுருகு மன்பர்
பிணிதீர்க்கும் மாவைப் பெருமான் — அணிவேலை
செங்கரத்திற் றாங்கிவருஞ் செவ்வேள் திருவடியைத்
தங்கவைப்பா னென்றலைமேற் றான்.
34✓
காவின் மயிலாடக் கண்டு மனங்களித்து
மாவின் குயில்பாடும் மாவையில் — மேவியுறை
ஈசன் முருகேசன் எண்ணு மடியவர்தந்
நேசன் குகராச னே.
35✓
பெற்றாளும் வாராள் பிரியமனை பிள்ளைகளும்
உற்றாரும் வாரா ருறுதுணையாய் — வற்றாத
அன்புடைய மாவை யணிவேலன் பொற்பதமே
பொன்றுங்காற் பொன்றாத் துணை.
36✓
பத்தர்கள் சூழப் பவனிவரும் பாலகனைச்
சித்தங் களிகூரச் சேவித்து — முத்திதனைப்
பெற்றிடுவோம் மாவையிலே பேசி முருகனடி
பற்றிடுவோம் வாரீர் பணிந்து.
37✓
அருணகிரி பாடலிலே ஆழ்ந்திருப்பா னன்பு
அருண்நிதியந் தந்தே யளிப்பான் — குருமணியாய்
மண்டு புகழ்கொண்ட மாவைக் கதிர்வேலன்
அண்டியருள் செய்வா னறி.
38✓
தொல்லை வினைவந்து துன்பப் படுத்தாமல்
எல்லை யிலாவின்ப மெய்திடவே — சொல்மாவை
கந்தன் திருவடியைக் கைதொழுது ஏத்திடுவீர்
சிந்தை தனையொடுக்கி யே.
39✓
ஆரா வமுதே அடியே னடிபோற்றி
நீராய்க் கசிந்துருகி நின்றிடச்செய் — சீராரும்
வேல்முருகா மாவை விளங்கு சிவகுமரா
மால்மருகா மன்னா மகிழ்ந்து.
40✓
கந்தா கடம்பா கதிர்வேலா காங்கேயா
சிந்தா குலமகற்றுஞ் செவ்வேளே — வந்தாளும்
மந்தா கினிமகனே மாவைப் பெருமானே
எந்தா யிரங்கா யினி.
41✓
நக்கீரன் செய்தமுரு காற்றுப் படைக்கிரங்கி
அக்கிரமம் மிக்கமலை யானவனை — தக்கபடி
தண்டித்த வேலவனே தண்மாவைக் காவலனே
அண்டியுனைப் போற்ற வருள்.
42✓
பொற்சிலம்பு தண்டையும் பூணூல் அரைஞாணும்
கொற்றமுறு வேலுங் குளிர்முகமும் — பற்றுடனே
காணவே கண்ணிரண்டுங் காணா கதிர்மாவை
வாணுதல் வள்ளிகண வா.
43✓
அலங்காரஞ் செய்து அநுபூதி கண்டு
இலங்கு திருப்புகழு மேற்றித் — துலங்கும்
அருண கிரியாரை யாண்டகுகா மாவைத்
திருவே யெனக்குமரு ளே.
44✓
கந்தர் கலிவெண்பா காட்டி யருள்பெற்ற
எந்தை குமர குருபரன்போல் — சந்ததமும்
கந்தனே மாவைக் கனியே யுனைப்பாட
வந்தருள வேண்டும் வரம்.
45✓
பாடிப் பரவிப் பணிந்துருகி நின்னடியைக்
கூடிடவே வேண்டுகிறேன் கூர்வேலா — ஓடி
மயிலேறி வந்திடுவாய் மாவைப் பதிவாழ்
அயில்வேல் கரங்கொண்ட வா.
46✓
தேவர் சிறைமீட்ட தெய்வமே சீருடைய
மாவைப் பதியுறையும் மன்னவனே — பாவியேன்
நாளும் மனமொடுக்கி நாவா லுனைத்துதித்து
வாழ வழிகாட்டு வாய்.
47✓
நோயுற் றழுந்தாமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடக்காமல் பாவியெனை — நேயமொடு
மாவைப் பதியுறையும் மன்னா மயிலேறும்
தேவே உனதடியிற் சேர்.
48✓
தாயா ரெனக்கில்லை தந்தைமனை தானில்லை
நாயாய்க் கிடந்தலைந்து நானிங்கு — பேயாகித்
தேடுவா ரற்றுத் திரியாமல் மாவைவளர்
ஆடுமயி லோனே யருள்.
49✓
புழுவாய்ப் பிறந்தாலும் பூதலத்தி லுன்னை
வழுவாது ஏத்தியே வாழ்வேன் — அழுதழுது
மாவைத் திருமுருகா மால்மருகா வென்றேத்தும்
பாவியெனைத் தள்ளாமல் பார்.
50✓
இன்னல் பலவந்து ஏங்கித் தவித்தாலும்
உன்னடியை யான்மறவே னுத்தமனே — மன்னுபுகழ்
மாவைப் பதியுறையும் மன்னவனே யுன்நாமம்
நாவில் நிலைத்திடச்செய் நாளும்.
51✓
கந்தா முருகா கதிர்வேலா மாவைநகர்
வந்தாள் சிவகுமரா வாழ்த்துகிறேன் — நெஞ்சதனில்
அஞ்சுதலை நீக்கியே யாறுதலைத் தந்திடுவாய்
வெஞ்சூர் தடிந்தவே ளே.
52✓
ஆலால முண்ட வரனார் திருமகனே
சேலார் வயல்மாவைச் செம்மலே — மாலோன்
மருமகனே வந்து மரணபயம் தீர்ப்பாய்
அருமருந்தே யாறுமுக வா.
53✓
எண்ணமெலாந் நின்னடியே வேறேதும் யானறியேன்
தண்வயல்சூழ் மாவைத் தனியரசே — மண்ணுலகில்
காக்குங் கடவுளெனக் கைகூப்பிப் போற்றுமெனைத்
தூக்கிவிட லாகாதோ சொல்.
54✓
பள்ளியறை தன்னிற் பரிந்துரைத்துச் சீர்மாவை
வள்ளி யெனக்காக வாதாடி — உள்ளநிறை
தண்டமிழிற் பேசித் தமியேனை ஆண்டருளப்
பண்ணிடுவா யின்றே பணிந்து.
55✓
ஆதீன நற்குருவா மையா மனமுருகி
வேதா மிகவகுத்த வேதங்கள் — ஓதியே
பூவைச் சொரிந்துசெயும் பூசைக் குகந்துகந்தன்
மாவையருள் கின்றான் மகிழ்.
56✓
மன்றாடி மைந்தனே மாவையுறை கந்தனே
குன்றேறி வாழுங் குமரனே — என்றுமே
இன்புற் றிருந்து இனிய புகழ்பேசி
யன்புற் றிருக்க வருள்.
57✓
என்று வரும்மரணம் என்று விழுமுடலம்
ஒன்றும் புரியா துழல்கின்றேன் — பொன்றுநாள்
வந்தென்னைச் சேரமுனம் வாராய் வளர்மாவைச்
சுந்தரா நல்ல துணை.
58✓
உள்ளக் கிழியதனி லுன்னுருவம் மாவையுறை
வள்ளலே யானெழுதி வாழ்த்துகிறேன் — துள்ளியே
ஓடவிட மாட்டேன் உலவுபுல னைந்தினையும்
ஆடவிட மாட்டே னறி.
59✓
அறப்பணிகள் செய்தறியே னானாலும் பாதம்
மறப்பறியேன் மாவை மணியே — பிறப்புதரும்
பந்த வினையகற்றிப் பாதார விந்தத்தைத்
தந்தருள்க ஞானபண்டி தா.
60✓
கிள்ளைமொழி பேசிக் கிளுகிளுக்க மாவைதனில்
வள்ளியொடு குஞ்சரியும் வாய்த்திருந்தும் — பிள்ளையிலாப்
பாவியென வுன்னைப் பரிகசிக் காதிருக்கத்
தாவியெனைத் தத்தெடுப்பா யே.
61✓
இன்னல் தனைநீக்கி யேற்று அடியவரை
அன்னையெனக் காக்கு மரிமருகா — வன்னமயில்
கொண்டவனே மாவைக் குகனே யடியவனின்
பண்டைவினை போக்கிவிடப் பா.
62✓
பாத கமலத்தைப் பற்றாமல் பற்றறுத்துப்
பாத கமலத்தைப் பற்றிடச்செய் — சீதவயல்
மாவைப் பதியுறையும் மாமணியே மாலறியாத்
தேவன் திருக்குமர னே.
63✓
அண்ட மெலாந்தனது ஆளுகைக் குட்படுத்திக்
கொண்டபெருஞ் சூரன் குடல்பிதுங்க — பண்டொருநாள்
வேல்தொடுத்த மாவைநகர் வேலவனே உன்னிரண்டு
கால்பிடித்தேன் கைதொழுதேன் காண்.
64✓
தொழுது உனைப்பாடித் தோத்திரங்கள் செய்தும்
அழுதுமகங் காரமக லாதே — அழிகின்றேன்
அந்தமொடு ஆதியு மற்றவனே மாவையுறை
சுந்தரனே வாராய் துணை.
65✓
பொல்லாப் புழுவாய்ப் புகுந்து கிடந்தலைந்து
நில்லா வுலகில் நிலைத்தாலும் — மெல்லவே
உன்னை மறவா வுயர்நிலையை மாவையுறை
மன்னவனே தந்து மகிழ்.
66✓
வஞ்ச மனத்தானை வாழும் வகையறியா
தஞ்ச மனத்தானை யாட்கொள்வாய் — பிஞ்சு
மனத்தோனே மாவைசேர் மன்னவனே வேடர்
இனத்தோனே வேலா இனி.
67✓
சொல்லத்தான் வேண்டுமா சொல்லா தறியீரோ
எல்லாந் தெரிமாவை யீசரே — கல்லால்
அடித்தாலும் போகேன் அடிக்கீ ழமர்வேன்
எடுத்தடி வையே னினி.
68✓
காத்திடுவா யென்றுன்னைக் கையெடுத்துக் கந்தப்பா
ஏத்தித் தொழுகின்றேன் என்னுள்ளம் — பார்த்து
இனியா கிலுமிரங்கி யேற்றிடுவாய் மாவைக்
கனியா இனிக்குங்கு கா.
69✓
ஆத்தா ளடித்தாளோ அப்பன் மறுத்தானோ
சேர்த்தெனைக் கொள்வதற்குத் தேவியரும் — பார்த்து
வெறுத்தாரோ மாவைசேர் வேலவரே சொல்லும்
ஒறுத்தாலும் போகே னுணர்.
70✓
பொல்லா வினைபோக்கிப் புன்னெறியிற் சேராது
எல்லா நலனு மெனக்களிப்பாய் — நல்லமனம்
தந்திடுவாய் மாவை தருநிதியே வேல்முருகா
சிந்தை யுறைதெய்வ மே.
71✓
ஆசை யறுத்துவிடு அன்பாக வுன்புகழைப்
பேசவெனை வைத்துவிடு பெம்மானே — நீசனெனத்
தள்ளியே வையாதே தண்வயல் சூழ்மாவை
வள்ளிக்கு வாழ்வளித்த வா.
72✓
போகு மிடமறியேன் புத்திதடு மாறுகிறேன்
தாவுங் கொழுகொம்பு தானறியேன் — பாவியெனைப்
பாராது நீயகன்றால் பார்த்திடுவா ரார்மாவைச்
சீரான வேற்பிள்ளை யே.
73✓
மாவை வளர்சோலை மாங்குயிலாய் நான்பிறந்தால்
கூவி யுனையழைத்துக் கும்பிடுவேன் — பூவுலகில்
ஆக்கி விடுகுயிலாய் ஆனந்த வேலவனே
தூக்கிவிடு நீயே துணை.
74✓
மாவையில் நந்தவன மாமலராய் நானுதித்தால்
பூவாகி நின்னடியைப் பூசிப்பேன் — ஓவாது
மாலையா யென்றும் மணிமார்பிற் சேர்ந்திடுவேன்
வேலையா வேண்டுமிது வே.
75✓
வேளப்பா நன்மாவை வேலப்பா என்பாடல்
கேளப்பா சீர்கார்த்தி கேயப்பா — வாழப்பா
பாழப்பா இப்பிறவி பாவியுடல் வீழுமுனம்
ஆளப்பா வந்துகந்தப் பா.
76✓
எல்லா மறிபவனே யெங்கும் நிறைபவனே
நில்லாத யாக்கை நிலைகெடுமுன் — தில்லையுளான்
மைந்தனே மாவை மரகதமே மற்றெனது
சிந்தை தெளிந்திடவே செய்.
77✓
பஞ்சப் புலனடக்கிப் பாவி மனமொடுக்கி
அஞ்செழுத்தை யோத வறிவிப்பாய் — நெஞ்சினில்
ஆறெழுத்தைக் கண்டு அகங்குளிரச் செய்மாவை
ஏறுமயி லேறுபவ னே.
78✓
உன்னுருவம் கண்வழியா யுள்ளத்தைத் தொட்டவுடன்
கன்மனமும் நெக்கிக் கசியுதே — வன்னமயில்
ஏறிவரும் மாவை யெழிலாரும் வேலவரே
ஆறுமுகந் தாருமை யா.
79✓
சித்தமெலா முன்னடியிற் சேர்த்திடுவாய் செவ்வேளே
புத்தி தடுமாறிப் போகுமுனம் — சத்தியமாய்
உன்னைவிட வுற்றா ரொருவரிலை யிங்கெனக்கு
மன்னுங்குக மாவைமன் னா.
80✓
ஆடவைத்தா யாடுகிறேன் அன்பர் தொழுங்குமரா
கூடவைத்தா லுன்னடியிற் கூடுகிறேன்— தேடவைத்துத்
துன்பப் படுத்தாதே தூமாவைக் கந்தனே
இன்பத் திருவே யினி.
81✓
எத்தாலு முன்னையே யேத்தித் தொழுகின்றேன்
செத்தா லெனையெங்கு சேர்த்திடுவாய் — பித்தான
பத்தனென மாவைப் பரனே யறியாயோ
சித்தப் படியெதுவுஞ் செய்.
82✓
அரனார் மகனே அரிமருகா வேலா
சரவண சண்முக சாமி — இரவுபகல்
என்றும் நினதடியே யென்மனத்தில் சீர்மாவை
ஒன்றியுள கந்தா வுணர்.
83✓
சரவணத்தில் வந்துதித்த சண்முகனே மாவைப்
புரமிடமாய்க் கொண்டுறையும் பொன்னே — பிரமனின்
ஆங்காரம் நீக்கி யருள்புரிந்த வேலவனே
தூங்காமா லென்னுள்ளந் தூங்கு.
84✓
கல்லா திருந்துவிட்டேன் கற்றோர்கள் தம்பக்கம்
செல்லா தொழிந்தேன் சிறுமையேன் — வல்லானே
மாவையுறை வேலவனே மண்ணி லுனையன்றிப்
பாவியெனக் கார்துணையப் பா.
85✓
மடக்கவழி காணேன் மனக்குரங்கு ஓடிப்
படக்கெனவே பக்கமெலாம் பாயும் — மடக்கி
மலரடியிற் சேர்த்துவிட மார்க்கமுரை மாவை
இலகுபுகழ் வேலா வெனக்கு.
86✓
எருமைக் கடாவினிலே யேறியம ராசன்
அருகினில்வந் தென்னை யழைத்தால் — கருவுற்று
மேலும் பிறக்காமல் மேதினியில் மாவையுறை
வேலவனே காத்திடுக வே.
87✓
ஊரார் பழிக்காம லுள்ள முலராமல்
சீரான வாழ்வுதருஞ் செவ்வேளே — நேராகக்
கூற்றுவனார் வந்தென்னைக் கூப்பிடுமுன் மாவையொளி
யேற்றிடுவா யென்னுள்ளத் தே.
88✓
புத்திரரோ டுற்றார் பொருந்து சுடுகாடு
செத்தவுடன் கொண்டென்னைச் சேர்க்குமுனம் — அத்தனே
அன்புடைய மாவை யணிமுருகா வுன்பாதம்
இன்பமுறத் தந்தருள்வா யே.
89✓
துட்ட னெனவூரார் சொல்லி விலக்கிடினும்
கட்டியுன் கால்பிடிப்பேன் கந்தனே — நட்டமிடும்
ஈசன் மகனே எழிலாரும் மாவையூர்
வாசனே காத்தருள வா.
90✓
சூலப் படையுடனே தூதுவருஞ் சூழ்ந்துவரக்
காலனைக் கண்டு கருத்தழிந்து — ஞாலமிசை
பாவியுடல் வீழுமுனம் பாடிமனம் மாவையுறை
தேவனடி தேடுதிலை யே.
91✓
பாழு முடல்சுமந்து பாவிமனங் கெட்டழிந்து
மாழு முனங்கந்த மாவையான — தோழனென
நீளப் பழகியவன் நெஞ்சில் நிறைந்தவன்றன்
றாளைப் பதித்திடுவான் றான்.
92✓
வீரனெனக் கையிலே வேலெடுத்து நிற்கிறாய்
சூர னுடல்கிழித்த சுப்ரமண்ய — தீரமுடன்
காத்திடுக கந்தனே காலமெலாம் மாவையில்
ஏத்திடுவோ முன்னடியை யே.
93✓
கூடித் திரிந்தவுயிர் கூடுவிட்டுப் போகவுடல்
தேடிச் சுடுகாட்டில் சேர்ப்பதன்முன் — நாடியெனை
வந்தவினை போக்கி வளர்மாவை வேலவனே
சிந்தா குலந்தீரச் செய்.
94✓
காலனுயிர் நீக்கக் கடாவில் வரும்போது
வேலவனே மாவைசேர் வேந்தனே — ஓலமிட்டுக்
கந்தா வெனக்கூவிக் கத்திடுவேன் காத்திடுவாய்
அந்தமொடு ஆதியற்ற வா.
95✓
மூவுலகுங் காப்பவனே மூலமலந் தீர்ப்பவனே
தேவுலக நாயகனே செந்தூரா — பூவுலகை
என்னுயிர்விட் டேகுமுன மேற்றருள மாவைசேர்
வன்னமயில் வாகனனே வா.
96✓
நாட்கள் நகர்கிறதே நாடி நமனார்தம்
மாட்களுட னிங்குவர வாயத்தம் — ஓட்டித்
துரத்திடுவாய் மாவைத் துயர்களையும் வேலா
கரங்கொண்ட வேலினைக் காட்டி.
97✓
அமரா வதியுறையு மையா குமரா
தமராகி மாவையூர் சார்ந்தாய் — நமனாரும்
பாசக் கயிறுகொண்டு பாவியெனைப் பார்க்குமுனம்
நேசக் கரமெனக்கு நீட்டு.
98✓
உடலுந் தளர்ந்து உலகோர் நகைக்கத்
திடமற்றுக் கோலூன்றித் தேய்ந்து — நடமாடித்
தள்ளாடி வீழுமுனந் தாங்கிடவே தண்மாவை
வள்ளலே வள்ளியுடன் வா.
99✓
மண்புகழும் மாவை மகராஜ ராஜஸ்ரீ
சண்முக நாதகுரு தக்கபடி — விண்ணவரும்
போற்றிப் புகழ்ந்திடச்செய் பூசை தனைக்கந்தன்
ஏற்றெவர்க்கும் வாழ்வளிப்பா னே.
100✓
பஞ்சப் புலனடக்கிப் பக்குவமாய் வேலவனை
நெஞ்சத் திருத்தி நினைந்துதொழும் — வஞ்சமிலாச்
செஞ்சொற் புலவனெனைச் சீர்மாவைக் கந்தனே
அஞ்சலெனக் காப்பா னறி.
101✓
கந்தனே வாழ்க கடம்பனே வாழ்கவீசன்
மைந்தனே வாழ்கவாழ்க மாதுமை — தந்தருளும்
சுந்தரா வாழ்கவாழ்க தூயனே மாலையாளும்
எந்தையே வாழ்கவாழ்க வே.