கந்தரநுபூதி
அருணகிரிநாதர்
கந்தரநுபூதி · அருணகிரிநாதர்
நூல்
1ஆடும் பரிவேல்✓
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா வருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானை சகோதரனே!
2உல்லாச நிராகுல✓
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீ யலையோ
எல்லாமற என்னை இழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே!
3வானோ புனல்பார்✓
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வது சண் முகனே?
4வளைபட்ட கை✓
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே!
5மக மாயை✓
மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங்குவதே!
6திணியான மனோ✓
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்புமதோ?
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயாபரனே!
7கெடுவாய் மனனே✓
கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே!
8அமரும் பதி கேள்✓
அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம்பொரு தானவ நாசகனே!
9மட்டுஊர் குழல்✓
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே!
10கார் மாமிசை✓
கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே!
11'கூகா' என என்கிளை✓
கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே!
12செம்மான் மகளைத்✓
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
'சும்மா இருசொல் லற'என் றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!
13முருகன் தனிவேல்✓
முருகன் தனிவேல் முநிநம் குருவென்
றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
திருளன் றொளியன் றெனநின் றதுவே!
14கைவாய் கதிர்வேல்✓
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே!
15முருகன் குமரன்✓
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!
16பேராசை என்னும்✓
பேராசை எனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியுஞ்
சூரா சுர லோக துரந்தரனே!
17யாம்ஓதிய கல்வியும்✓
யாமோதிய கல்வியும் எம்மறிவுந்
தாமேபெறவேலவர் தந்ததனாற்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே!
18உதியா மரியா✓
உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா!
அதிகா! அநகா! அபயா! அமரா!
பதிகா! வலசூர! பயங் கரனே!
19வடிவும் தனமும்✓
வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே!
மிடியொன்றொரு பாவி வெளிப் படினே!
20அரிதாகிய மெய்ப் பொருளுக்கு✓
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா உபதேசம் உணர்த் தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதாரக நாக புரந் தரனே!
21கருதா மறவா✓
கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா சுரசூர விபாட ணனே!
22காளைக் குமரேசன்✓
காளைக் கும ரேசன் எனக்கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல் வள்ளி பதம்பணியும்
வேளைச் சுரபூ பதி மேருவையே!
23அடியைக் குறியாது✓
அடியைக் குறியா தறியா மையினான்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே!
24கூர்வேல் விழி✓
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல் புரந்தர பூ பதியே!
25மெய்யே என வெவ்வினை✓
மெய்யே எனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலேறிய சேவகனே!
26ஆதாரம் இலேன்✓
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோதமநோ
தீதா சுரலோக சிகாமணியே!
27மின்னே நிகர் வாழ்வை✓
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன்இங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே!
28ஆனா அமுதே!✓
ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானா கரனே! நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே?
29இல்லே எனும் மாயையில்✓
இல்லே எனுமாயையில் இட்டனைநீ
பொல்லேன் அறியாமைபொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில்என்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே!
30செவ்வான் உருவில்✓
செவ்வான் உருவில் திகழ்வே லவன்அன்
றொவ்வா ததென உணர்வித் ததுதான்
அவ்வா றறிவார் அறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே?
31பாழ்வாழ்வு எனும்✓
பாழ்வாழ் வெனுமிப் படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வா கனனே!
32கலையே பதறிக்✓
கலையே பதறிக் கதறித் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலைகூறிடு வாகையனே!
33சிந்தா ஆகுலம்✓
சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும்
விந்தா டவி என்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோதயனே
கந்தா முருகா கருணா கரனே!
34சிங்கார மடந்தையர்✓
சிங்கார மடந்தையர் தீநெறிபோய்
மங்காமல் எனக்கு வரந் தருவாய்!
சங்க்ராம சிகாவல சண் முகனே!
கங்காநதி பாலக்ரு பாகரனே!
35விதிகாணும் உடம்பை✓
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே!
36நாதா குமரா✓
நாதா குமரா நம என் றனார்
ஓதாய் என ஓதியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பாதசே கரனே!
37கிரிவாய் விடு✓
கிரிவாய் விடுவிக் ரமவேல் இறையோன்
பரிவா ரம்எனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே!
38ஆதாளியை ஒன்று✓
ஆதாளியை ஒன் றறியே னை அறத்
தீதாளியை ஆண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே!
39மாஏழ் சனனம்✓
மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடித்தோள் புணருந்
தேவே சிவசங்கர தேசிகனே!
40வினை ஓட✓
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோ டருவித் துணையோ டுபசுந்
திணையோ டிதணோடு திரிந்தவனே!
41சாகாது எனையே✓
சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே!
42குறியைக் குறியாது✓
குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியாமையும் அற்றதுவே!
43தூசா மணியும்✓
தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின்
பேசா அநுபூதி பிறந்ததுவே!
44சாடும் தனிவேல்✓
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே!
45கரவாகிய கல்வியுளார்✓
கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயாபரனே!
46எந்தாயும் எனக்கு✓
எந்தாயும் எனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே!
47ஆறாறையும் நீத்து✓
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!
48அறிவு ஒன்று✓
அறிவொன் றறநின் றறிவார் அறிவிற்
பிறிவொன் றறநின்ற பிரான் அலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறும்வே லவனே!
49தன்னம் தனி✓
தன்னந் தனிநின் றதுதான் அறிய
இன்னம் ஒருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே!
50மதி கெட்டு✓
மதிகெட் டறவா டிமயங் கிஅறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்?
நதிபுத் திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே!
51உருவாய் அருவாய்✓
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!