கிளிவிடுதூது
குருசுப்பராயசுவாமிகள்
நூல்1 / 1
கிளிவிடுதூது · குருசுப்பராயசுவாமிகள்
நூல்
1✓
ஐந்துகரனுக் கிளைய வாறுமுக வேலவனைச்
செந்திற் குகந்தவனைக் கிளியே
சேரமனந் தேடுதடி
2✓
கூடிக் குலாவிமெத்தக் குகனோடு வாழ்ந்ததெல்லாம்
வேடிக்கை யல்லவடி கிளியே
வெகுநாளைத் தொந்தமடி
3✓
நீலமயில் வாகனனால் நெஞ்சங் கரைந்ததன்றிப்
பாலுங்கசப் பாச்சுதே கிளியே
பசலையும் பூத்ததடி
4✓
சேமநிதி யாடைபணி சென்றாலுஞ் சிறுதுயர்
காமங்கொடுந் துயரடி கிளியே
கன்னிகைமார்களுக் கெல்லாம்
5✓
மாலைவடி வேலவர்க்கு வரிசையாய் நானெழுதும்
ஓலையுங் கிறுக்காச்சடி கிளியே
என்னுள்ள முங்கிறுக்காச்சடி
6✓
ஊரார் வசைசொல்லவும் உற்றார் வசைசொல்லவும்
வாராத வார்த்தையெல்லாம் கிளியே
வந்து வந்து போகுதடி
7✓
ஐந்து வயதினிலே யறியாப் பருவத்திலே
பிஞ்சிலே கூடினனடி கிளியே
பிரியமனங் கூடுதில்லை
8✓
வள்ளிக் குகந்தவனை மருவியிருந்த விதம்
கள்ளப் புணர்ச்சியல்லடி கிளியே
கற்பு நிலையப்படியடி
9✓
அந்தந்த நாளையினான் அறியாதே கூடிவிட்டேன்
இந்த விதிவருமென்று கிளியே
நான் எண்ணியறிந்தேனில்லை
10✓
எல்லார்க்கு மொருவிதம் எனக்கொருவிதமடி
வல்லார்க்கும் வல்லவனாம் கிளியே
மான் மருகன்றந்தமையல்
11✓
எட்டாப் பழமடியோ இறக்காதனவடியோவு
வட்டாத வானந்தமே கிளியே
மான் மருகன்றந்தசுகம்
12✓
சுட்டும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவைத்தான்
எட்டிரண் டுமறியேனடி கிளியே
ஏமாந் திருந்தேனடி
13✓
மோகந்தவிர வென்னை முந்தி பிடித்திலுத்து
ஏக வெளிதனிலே கிளியே
என்னைக் கலந்தானடி
14✓
வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளங் குழையுதடி கிளியே
ஊனு முருகுதடி
15✓
எட்டி யெட்டிப்பார்ப்பவர்க்கு எட்டஎட்ட நிற்குமது
சுட்டுக் கடங்காதடி கிளியே
சுந்தரத்தின் பேருருவம்
16✓
கன்னல் மதுரமொழிக் கட்டழகன் என்குரவன்
என்னபொடி போட்டானோடி கிளியே
இடைபிரியக் கூடுதில்லை
17✓
அறிவு என்றானப்பால் அறியறிவுதானென்றான்
பிறிதொன்றுமில்லை யென்றான் கிளியே
பேசா திருந்தானடி
18✓
அலைந்து திரிபவர்க்கு ஆசையுண்டு தாபமுண்டு
கலந்து சுகிப்பவர்க்குக் கிளியே
கண்ணீரும் வருமோடி
19✓
கானமயிலேறு மென்றன் கட்டழகன் றந்துவரும்
ஆனந்த மென்பதெல்லாம் கிளியே
அழுது தவிப்பதோவடி
20✓
உண்டாற் கிறுக்கவைக்கும் ஊரிலுள்ள கட்சரக்கு
கண்டாற் கிறுக்கவைக்கும் கிளியே
என் கட்டழகன் பேருருவம்
21✓
தாழ்வாரைக் கைதூக்குந் தம்மனைக் குள்ளேயிருந்து
வாழ்வாரை வாழ்த்துமடி கிளியே
மான் மருகன்றன் கருணை
22✓
எட்டும் வரைக்குந்துன்பம் எட்டிவிட்டாற் பேரின்பம்
தட்டினாலும் போகாதடி கிளியே
தானா யறிந்ததடி
23✓
மணத்த குழலிருந்தென் மற்றவழ கிருந்தென்
குணந்தான் குறியடியோ கிளியே
என் கோலமயில் வாகனற்கு
24✓
சொல்லாத சொல்லும்வரும் துறவாத் துறவும்வரும்
கல்லாத கல்வியும்வருங் கிளியே
என் கணவரைச் சேர்ந்தவர்க்கு
25✓
என்னோ டுடன்பிறந்தா ரெத்தனையோ பேர்கள்பட்டார்
அத்தனை பேர்கள் பட்டுங் கிளியே
அவனாசை போகுதில்லை
26✓
மாடுமனை போனாலென்ன மக்கள்சுற்றம்
போனாலென்ன
கோடிசெம்பொன் போனாலென்ன கிளியே
அவன் குறுநகை போதுமடி
27✓
முத்து நகைக்குமவன் மோனமொழி வார்த்தைகட்கும்
பித்துப் பிடித்தேனடி கிளியே
பேசுதற்குக் கூசுதடி
28✓
ஆடுமயில் வாகனனா லன்றுமுதற் பட்டதுயர்
ஏடுமடங்காதடி கிளியே
எல்லாமெழுதவென்றால்
29✓
என்னைக் கெடுத்தான்பின் என்னைத் தானென்றுசொன்னான்
தன்னையுங்கெடுத்துக் கொண்டான் கிளியே
ஷண்முகத்தான் மாயவித்தை
30✓
பக்தியுள்ள பேர்களுக்குப் பயன்றரும் பொருளது
முக்திபெற்ற பேர்கட்கெல்லாம் கிளியே
மூடிவைக்குஞ் செம்பொருளது
31✓
ஊனம் வருமென்றறியேன் உள்ளுக்குள்ளே கலந்தேன்
மானம்பறி போச்சடி கிளியே
மற்றவருக் கேச்சாச்சடி
32✓
அஞ்சியொடுங்கி நின்றேன் அழுது சலித்துநின்றேன்
பஞ்சுபடு பாடுபட்டேன் கிளியே
என் பாக்கியத்தைக் காணவென்று
33✓
கொஞ்சி யிருப்பார்கள் குழலைமொழி மாதரெல்லாம்
அஞ்சியிருப்பேனடி கிளியே
என் ஆறுமுகவேலவர்க்கு
34✓
மோகம் மெத்தவானாலும் முன்னும் பின்னும் பார்த்து
ஏகாந்தவேளையிலே கிளியே
என் குறையைச் சொல்வேனடி
35✓
மதியா தொருவார்த்தை வாயிருந்து வந்துவிடும்
எதிர்த்தொன்றும் சொல்லாரடி கிளியே
என்றன் மட்டும் சொந்தமடி
36✓
சீவிச் சிணுக்கெடுப்பார் சிந்துாரப் பொட்டிடுவார்
மேவியிருந்திடுவார் கிளியே
விகற்பமொன்றுமில்லையடி
37✓
வைவேன் பிணங்கிடுவேன் மறுத்து மருவிடுவார்
பொய்மட்டுங் கூடாதடி கிளியே
என்பொன்னின் வடிவேலவற்கு
38✓
பேசி யிருக்கின்றார்கள் பித்தமுத னோய்களுக்கு
ஆசைக்கொருமருந்தைக் கிளியே
அங்கெழுதி வைத்தார்இல்லை
39✓
சரியா யெழுதிவந்துந் தங்கவடி வேலரென்னைப்
பிரியாவெழுத்தெழுதக் கிளியே
பிரமன் மறந்தானடி
40✓
இரண்டு என்றானப்பால் இரண்டு மொன்றாமென்றான்
ஒன்றென்றுமில்லை யென்றான் கிளியே
உணர்வுதெரியுதில்லை
41✓
தாரணியோர் மெச்சத் தனியரசுசெய்து வந்தேன்
சீரலைவாய்வந்ததனால் கிளியே
என் சீரலைவாயாச்சுதடி
42✓
ஏகம் பேதமுனக் கின்று மென்றுமானாலும்
தேகமிருக்கும் மட்டுங் கிளியே
சேர்ந்து சுகித்திரென்றான்
43✓
ஆதரவாய்க் கூடிடினும் அங்குப் பிரிந்திடினும்
பேதமற்று வாழ்வதுவே கிளியே
பெருவாழ்வு என்றுசொன்னான்
44✓
நான்பேதை யாதலினால் நாதனென்ன சொன்னாலும்
பேதமென்றெண்ணேனடி கிளியே
பேதமிருக்காதடி
45✓
சேர்க்கையிலென் கணவன் திடமென்ன சொன்னாலும்
ஏக்கமெடுக்குதடி கிளியே
என்புமுருகுதடி
46✓
விட்டுத்தான் சொல்லுகிறேன் மெள்ளமெள்ளப் பித்தேற்றிக்
கட்டுக்குலைத்தானடி கிளியே
கண்டவருக் கேச்சாச்சடி
47✓
கட்டுக் கொடிபடர்ந்த கருவுருக் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தாரடி கிளியே
வேலவர்க்குச் சொல்வதெவர்
48✓
சார்பிலி ருப்பேன் சலிப்புவந்தாலென் கணவர்
மார்பிற் றுயின்றிருவேன் கிளியே
மயங்கவு மாட்டேனடி
49✓
எல்லாரைப் போலமனத் தெண்ணமற்று வாழ்ந்திடலாங்
கல்லா திருந்தேனில்லை கிளியே
கற்று மென்னகண்டேனடி
50✓
வைவேலெடுத்த வென்றன் மன்னனை யல்லாதெவையும்
பொய்யாகத் தோற்றுதடி கிளியே
பொருத்தமு மில்லையடி
51✓
தன்னை யறிந்தாற் றனியாகா தானாலும்
மன்னர் மறந்திடலாமோ கிளியே
வழக்கிடுங் காரியமோடி
52✓
எண்ணாத வெண்ணியெண்ணி யீடழிந்து போவதற்குப்
பெண்ணாய்ப் பிறந்தேனடி கிளியே
பிறக்குமுன் செய்தவினை
53✓
கூடிச் சுகங்கொடுத்த கொற்றமயில் வாகனனார்
பாடும் புலவர்கையில் கிளியே
பட்டோலை யானேனடி
54✓
வாடி யிருப்பானேன் வலியவே நங்கணவர்
தேடி வருவாரென்று கிளியே
திடமும் பிறக்குதில்லை
55✓
பர்த்தா மனைவியென்று பாடும் பழக்கமெல்லாங்
கர்த்தாவின் சீரடியோ கிளியே
கருத்தில் வேறெண்ணாதபடி
56✓
என்னைமருட்டவென்று ஏன்றமட்டும் பார்த்துவந்தாய்
உன்றன் மருட்டுக்குள்ளே கிளியே
உலகமிருக்குதடி
57✓
ஆறுமுகம் போற்காமம் ஆருமிங்கே வாருமென்று
கூறுந்திருவாய்முத்தங் கிளியே
கொண்டினிவாழ்வதென்று
58✓
என்னோடு நீயும் இணங்கியவரைக் கலந்தும்
உன்குணம் வேறாச்சடி கிளியே
உனக்குத் தெரியுதில்லை
59✓
எனக்குச் சலிப்புமுனக் கெக்களிப்பு மாயிருந்தால்
மனத்துயர் போவதென்று கிளியே
மன்னர் மகிழ்வதென்று
60✓
மனக்கிளி நீயொரு மறுவற்ற பெருங்கிளி
சின்னக்கிளி யானாயடி கிளியே
சேர்க்கையின் தோஷத்தினால்
61✓
ஒருவரு மறியாமல் உள்ளுக்குட் கூடியதைத்
தெருத்தோறுந் தூற்றுகிறாய் கிளியே
செல்வரென்ன வெண்ணாரடி
62✓
ஆசைக்கணவர் சொன்ன அந்தரங்கச் சொல்லதனைப்
பேசிவிட்டோமென் றெண்ணுவாய் கிளியே
பேசுதற்கும் வாராதடி
63✓
வேண்டியென்ன சொன்னாலும் மிஞ்சுகிறாய் நீயும்நானுந்
தோண்டியுங் கயிறுமடி கிளியே
சொல்லியுந் தெரியுதில்லை
64✓
எண்ண முடிவதெல்லாம் இந்தவுடலிற் போனால்
இந்தவுடலே வருமென்று கிளியே
யாருனக்குச் சொன்னாரடி
65✓
தன்னிற்றிடம் பிறந்தார் சத்தசத்தென் பதில்லை
சின்மய மென்பதில்லை கிளியே
திரிபுடியு மில்லையடி
66✓
சுட்டிடுவா ரவ்விடத்திற் றூங்கிக் கிடந்திடுவார்
எட்டியெட்டிப் பார்த்திடுவார் கிளியே
இருக்குந் திரிபுடியடி
67✓
கீழிருந்தேபோகவேணும் கிட்டிவிட்டால்மேற்குதித்துத்
தாழ்வில்லா நிலையில்நிற்குங் கிளியே
சமர்த்தே சமர்த்தடியோ
68✓
இப்படி யப்படிநா னிருந்திட வேணுமென்ற
தப்பித வெண்ணமெல்லாங் கிளியே
சற்குருமுன் நில்லாதடி
69✓
மனமொன்று சாக்ஷியொன்று மற்றதெல்லாம் நெடுவழி
மனம்போனாற் சாக்ஷியென்ற கிளியே
வார்த்தையும் போகுமடி
70✓
இனிமேற் பிறப்பதனை யாரறிபவர் அதனால்
யாரும் பிரமமென்னக் கிளியே
இயம்பிடலா மோவடி
71✓
மரிப்பா ரொருவரன்றி மனஞ்சஞ்சரித் ததென்றால்
மனம்போன விடமதுவே கிளியே
மாமவுன மாகுமடி
72✓
பாடுவதும் ஆடுவதும் பரநிலை கூறுவதுந்
தேடுவதுங் கூடுவதுங் கிளியே
சிந்திக் கிலகமேயடி
73✓
இரவு பகலாகும் ஏந்திழையார் மோகமுற்றால்
பகலிரவாகு தேயடி கிளியே
பாவியென்ன செய்வேனடி
74✓
அறுநான்கிற் கல்விபெற்றேன் அப்படி யப்படித்தான்
எழுநான் காமாண்டினிலே கிளியே
என்னை யறிந்தேனடி
75✓
ஒருசொல் சொன்னாலதற்கே யுயிர்விட வேணுமப்பாற்
பலதரஞ்சுட்டிச் சொல்லியுங் கிளியே
பாவியுயிர் போகுதில்லை
76✓
கண்கொடுத்து வாழவைத்த கண்மணி யோடேகூடி
எண்ணமெல்லாம் முடியாவிட்டால் கிளியே
என்குலத்திற்கே வசையடி
77✓
பெரும்பாவி மாதேவன் பேருறுப்பெல்லாம் படைத்து
உருகா மனமதொன்றைக் கிளியே
ஊடே படைத்தானடி
78✓
பத்தஞ்சு வைத்திருக்கும் பாக்கியத்தி னாலல்ல
உத்தமர் தஞ்சேர்க்கையினால் கிளியே
ஒன்றையுமதியேனடி
79✓
அண்ணலை நினைக்கும் போதாறாக நீர்பெருகும்
கண்ணுக்குத்தான் சுபாவமோ கிளியே
கள்ளக் கண்ணீரோவடி
80✓
கள்ளங் கபடுவைத்தே கவல்கின்றே னழுகின்றேன்
உள்ளங் கனிந்ததென்றால் கிளியே
உத்தம ரறியாரோடி
81✓
அன்பு பெருகவவன் அன்று சொன்னதை நினைந்தால்
என்பு குளிருதடி கிளியே
என்னென்னவோ தோணுதடி
82✓
ஆகமெல்லாம் நோவுகின்ற தவன்றந்த மையல்மிஞ்சி
முகத்திற் கண்ணீர்வருகுதே கிளியே
மூச்சு மொடுங்குதடி
83✓
சீராளன் என்குடிச் செல்வனவன் றிருவாயை
வாரிமுத்தங் கொள்வதற்குத் கிளியே
வாயிதழ் துடிக்குதடி
84✓
உருவமுமென் கணவனுருவல்லா வுருவைப்போற்
பரமசுக வடிவமே கிளியே
பாலுந்தேனும் போலடி
85✓
நிமிஷம் யுகமாமென்பர் நேரிழையா ரெல்லாரும்
அதுவோரளவு பட்டதே கிளியே
அப்படியு மில்லையடி
86✓
அரைக்கணம் வீண்போக்கேன் அப்படியே வாழ்ந்து
வந்தேன்
மருவாவொரு நாளோடே கிளியே
வாணாளும் போகுதடி
87✓
விட்டுப் பிரிந்தாரென்றும் விடாமலே யெப்போதுந்
தொட்டேயிருக்கின்றா ரென்றுங் கிளியே
துணிந்து சொல்லப்படுவதில்லை
88✓
கனவு நனவாகும் கைகலந்தாற் போற்களிப்பர்
நனவு கனவாகுதே கிளியே
நானினியேது செய்வேன்
89✓
நான்போனால் நீபோவாய் நானிருந்தால் நீயிருப்பாய்
நான்தானே போய்விடுவேன் கிளியே
நாணந்தலை குனியுதே
90✓
நம்முடைய சொல்லவன்சொல் நந்தொழி லவன்றொழில்
நம்மாசை யவனாசையே கிளியே
நாமெனுமகம் போய்விட்டால்
91✓
ஓயாத்துயர் தனிலும் உயிர்போனாற் றேவையில்லை
பாய்ந்து விடுவோமென்றாலுங் கிளியே
பாக்கியத்தி னுயிரடியோ
92✓
கருக்கொண்ட தென்றுவன்றே கணவன்நானென்று
சொன்னான்
உருக்கொண்டு நின்றாலல்லவோ கிளியே
ஊடலெல்லாந் தீர்த்திடலாம்
93✓
சாருந்தொழில் கட்கெல்லாஞ் சாடைசெய்கின்றான்
றன்னைக்
கூர்ந்தறியும் புத்தியில்லையே கிளியே
கொடும்பாவி யென்னசெய்வேன்
94✓
கண்டோர்க்குப் பேரிழிவு கலந்தார்க்கு இன்பநிலை
கொண்டாரைத் தெய்வமென்று கிளியே
கோடிமறை கூப்பிடுதடி
95✓
இதைச்சத மென்று கண்டோர்க் கேயது
தெரியாதென்றால்
அதைச்சதமென்று கண்டோர்க்குக் கிளியே
அவனி தெரியுமோடி
96✓
வேதத்தின் சாகைகட்கு மேலானா னாதலினால்
விசாகனெப்பெயர் கொண்டான் கிளியே
வேலெடுத்த மூலகுரு
97✓
எங்கும் நிறைந்திருப்போன் எட்டியுமெட்டா திருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே
என் குமரப்பெருமானடி
98✓
வள்ளிக் குகந்தவன்றான் மறையின்முடிவில் வந்தான்
புள்ளிமயி லூர்ந்தானடி கிளியே
போக்குவரத் தில்லானடி
99✓
கண்ணன் கரிமுகவன் கபாலியே முதலாம்
எண்ணரிய தேவரிவனே கிளியே
எமதாயி சத்தியவனே
100✓
நீநா னெனும்போது நினக்கர்த்த மானாலது
தானே நிர்வாணமென்று கிளியே
சற்குருமுன்சொன்னாரடி
101✓
இங்குமங்கு மெங்குமுள்ள தேகரச வானந்தம்
அங்கமு மனந்தமென்றால் கிளியே
அவதூத மாகுமென்றான்
102✓
மாமயிலோன் வாழ்கநாம் வருந்தாது வகைதந்த
நீமனமே வாழ்ந்திருப்பாய் கிளியே
நீடூழிக் காலம்வரை