முருகன் App
குமர வயலூர்க் குமரன் மீது பாடிய குமர வெண்பா
கீ. கோதண்டபாணி
காப்புச் செய்யுள்1 / 1
குமர வயலூர்க் குமரன் மீது பாடிய குமர வெண்பா · கீ. கோதண்டபாணி

காப்புச் செய்யுள்

✓
எடுத்த வினைமுடிக்கும் ஏந்துகோட்டண்ணால்
தொடுக்கும் கவிதைத் தொடையை - விடுப்பின்றி
மாமுருகன் மீது மனங்குழைந்து சூட்டுதற்கு
தாமருள்க முன்வந்து தான்
1✓
வயலூர் முருகாவென் வண்டமிழின் வேந்தே
அயலார் அறியா அழகா - மயலொன்றும்
சேராது என்னைச் செழித்தோங்கச் செய்குவாய்
ஆராத இன்பம் அளித்து
2✓
அன்பேயென் னாருயிரே அண்டர் பெருமானே
இன்பமாய் என்னிதயம் ஏற்றிட்ட - நன்முருகா
மன்னியஎன் குற்றம் களைந்தேநல் மாண்பமைய
என்னையே ஏற்க இசைந்து
3✓
ஓங்குபுகழ் உத்தமனே உன்றன் பதகமலம்
எங்கொலிநீர் ஞாலமிதில் எய்திடவே - வீங்குசீர்
ஐயன் அருள்நல்கி அன்பனையிவ் வையமிதில்
உய்ய அருள்க உவந்து
4✓
காலத்தால் மூத்துக் கனிந்தோனே சீரிளமைக்
கோலத்தால் என்றும் குறையாதோய் - ஞாலத்தில்
கண்கண்ட தெய்வமெனக் கற்றோர்கள் தாம்வணங்கும்
பண்கொண்ட பாலனேநீ பார்
5✓
காலமெல்லாம் உன்றன் கனிவைப் பெறவேதான்
ஞாலமிதில் ஆவலுடன் நானிருப்பேன் - சீலமுறு
ஆலமுண் டோன்மகனே அன்புதிகழ் செவ்வேளே
கோல மயிலோடு வா
6✓
முத்தமிழை நீயளிப்பாய் மூவாக் குமரனே
எத்திக்கும் உன்கவியால் ஏற்றமுற - இத்தினமே
ஞாலமெல்லாம் சுற்றிவந்தாய் நற்கனிக்காய் இன்முருகா
கோல மயிலேறி வா
7✓
பொங்கிவரும் பூம்புனலாய் பூத்தஎழில் தேன்மலராய்
செங்கரும்புத் தீஞ்சுவையாய் நின்றொளிரும் - பங்கமிலா
நன்மால் மருகாநீ நற்றமிழின் முன்தலைவா
இன்னினியே வந்தருள்க ஏற்று
8✓
புன்தொழில்கள் யாதும் புரியாது பீடுற்ற
நன்செயல்கள் யாவையும் நானுஞற்ற - உன்றன்சீர்
பொன்னார் திருவடியே புல்லியேன் என்றனக்கு
நன்மனமே நல்க நயந்து
9✓
அன்புமிகு நெஞ்சம் அழைக்கும் விழியுடன்
என்றும் பொழியும் இறையவனே - அன்றைக்கு
ஞானம் உரைத்தோனே நானிலத்தில் மிக்கோனே
வானின் மழைபோல வா
10✓
நினைவுவந்த நாள்முதலாய் நின்னையே எண்ணி
இனைந்துருகி வாழ்கின்ற என்னை - தினைத்தானும்
தீது நலியாது செய்தொழில்கள் வெற்றியுற
பாதுகாத் தோம்பப் பரிந்து
11✓
தித்திக்கும் செந்தமிழில் தீம்பாக்கள் பாடியே
பத்திமையால் உன்னைப் பரவுகின்றேன் - இத்தினமே
சித்தம் களித்துச் செழித்தோங்கி வாழவேநின்
புத்தருள் ஈக பொலிந்து
12✓
தனக்குவமை இல்லாதோய் தாளைப் பணிந்தேன்
மனக்கவலை மாற்றி யருள்க - நினக்கென்று
ஏதும் பெறாதே எளியபதம் மேற்கொண்டாய்
சீத மலரடியாய் செப்பு
13✓
நெஞ்சம் கனிந்துருக நித்தமுனைப் பாடிடுவேன்
கொஞ்சும் மழலைக் குமரனே - விஞ்சுபுகழ்
வேலவனே செந்தில்மே யோனே விழைவோர்கள்
பாலவனே உன்கடைக்கண் பார்
14✓
பாடும் தினைப்புனத்துப் பாடலினைக் கேட்டலுமே
வேடனாய் வந்தீர் விழைந்தவள்முன் - ஆடாமல்
வேங்கையாய் நின்றீர் விரைந்து அருளுகவே
தீங்கொழித்து வாழச் சிறந்து
15✓
விண்ணிலே கார்முகிலைக் கண்டே விழைந்தாடும்
மண்ணில் மயில்போல் மகிழ்வுறுவேன் - தண்ணளிசால்
மிக்கவளஞ் சான்ற வியன்வயலூர் வீற்றிருப்போய்
இக்கணமே வந்தருள்க ஏற்று
16✓
பொருள்தரும் கல்விதரும் புன்மை நெறியை
இருளெனவே ஓட்டிவிடும் எக்காலும் - அருள்உருவாம்
எம்மையன் குன்றமரும் இன்முருகன் தாளிணையைச்
செம்மையாய் போற்றியக் கால்
17✓
தலைச்சங்கப் பாவலனாய் தண்தலைமை ஏற்றாய்
கலைக்குரிசில் என்றுன்னைக் கண்டேன் - இலைமலிந்த
வேலனே எங்களது வெவ்வினையைத் தானறுக்கும்
சீலனே செந்திவாழ் வே
18✓
கண்ணுதலோன் மைந்தனே கார்வண்ணன் நன்மருகா
எண்ணியோர் எண்ணமெலாம் ஈடேற்றும் - திண்ணியனே
பண்கொண்டு பாடும் பரிவுடையர் நின்னருளால்
உண்மகிழ்ந்து வாழ்வர் உயர்ந்து
19✓
ஆரா வமுதே அணையா ஒளிவிளக்கே
பேரா வியற்கைப் பெருமானே - சீராரும்
நன்செய் வளமிக்க நன்வயலூரார்ப் பெம்மானே
அன்புடனே காக்க அமர்ந்து
20✓
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்நீ - பார்புகழ
வாலறிவு தானளிக்க வண்மையாய் இவ்வுலகில்
கோல மயிலுடனே வா
21✓
மங்கல நன்வேடந் தாங்கி மனுக்கட்கு
இங்கிதமாய்த் தோன்றும் இனியவனே - பங்கமிலா
செங்கரும்பும் தெங்கும் செழிக்கும் வயலூரா
எங்களைக் காக்க இனிது
22✓
அண்ணா மலையான் அழகமர் செல்வனே
பண்ணோடு பாடல்கொள் பாவலனே - எண்ணும்
எழுத்தும் உணர்த்தியே ஏந்தலென இவ்வுலகில்
செழித்தோங்கச் செய்க சிறந்து
23✓
தமிழின் சுவையாய் தணலின் ஒளியாய்
அமிழ்தின் இனிமையாய் அண்டர் - கமழ்வாழ்வின்
ஏந்தலே! எப்பொருட்கும் நீங்கா இறைவனே
காந்தமாய் என்னைக் கவர்
24✓
உண்ணினும் உண்ணா தொழிந்தாலும் ஊக்கமாய்
எண்ணினும் எண்ணா திருப்பினும் - அண்ணல்நீ
பண்ணின் இனிமையாய் பாலிற் படுநெய்யாய்
எண்ணத்தே நிற்பாய் இசைந்து
25✓
அடுத்தகணம் நேர்வ தறியாத வாழ்வு
படைத்த இறைவனின் பண்பே - அடுத்தடுத்து
செல்வம் பெருக்கிச் சிறப்புடனே வாழினுமென்
நல்லருள் இல்லா விடின்
26✓
நன்செய்யும் பொன்விளைக்கும் நற்பொன்னி யின்ஒழுக்கால்
கன்ன லிளவாழை காய்க்கமுகும் - மின்னொளிரும்
சீர்வயலூர் மேவும் சிறப்பமைந்த செம்மால்நீ
பாரிலெமைக் காக்க பரிந்து
27✓
அரவணைப் பள்ளிகொளும் அண்ண லரங்கம்
பரவிய தென்மேற்குப் பாங்கர் - விரவிய
ஒள்வயலூர் மேயோய் உயர்ஞான பண்டிதனே
கள்ளமறக் காக்க கனிந்து
28✓
நல்லனவே செய்க நடுநிற்க எஞ்ஞான்றும்
அல்லன செய்யற்க ஆண்டானை - ஒல்லுமா
றெண்ணுக என்றும் இருள்நெஞ்சு கொள்ளற்க
என்றுரைக்கும் ஏந்தல்தான் நீ
29✓
அண்ணலே நின்னுளம் எம்பால தாகுக
எண்ணமெம் இல்குறையை ஏற்றருள்க - மண்ணில்
தண்ணருள் வாழ்க தராதலத்தோர் தாம்வாழ்க
திண்ணியநின் அன்பில் திளைத்து
30✓
உமையாள் பயந்த உயர்ஞானச் செல்வா
இமையோர் இடர்தீத்த ஏந்தால் - நமையெல்லாம்
கண்ணிமைபோல் காத்துக்குழல் சேர்க்க வேண்டுவனே
பண்ணிசையாய் உன்னைப் பணிந்து
31✓
குருகு பெயர்க்குன் றெறிந்தாய் குணத்தால்
உருகு மனமுடையோர் உன்னால் - பெருகி
நலம்பெற்று வாழவே நாணாளும் உன்றன்
மலரடியை ஈக மகிழ்ந்து
32✓
பூவெனில் தாமரைப் பூவேயாம் பூதலத்தில்
பாவெனில் வெண்பாதா னாகுமே - நாவால்
உரைக்கும் குறளே உயர்நூலாம் உன்தாள்
புரையற்ற மக்கள் புகல்
33✓
இடருற்றோர் வேண்டுதலை ஏற்றெளிதாய் என்றும்
இடர்தீக்கும் இன்முருகன் எந்தை - மடமிகுக்கும்
புன்தொழிலே ஆற்றும் புவியுளோர் நந்தமக்கு
நன்துணை நல்லடியே தான்
34✓
பொன்னடியை நல்லெழிலைப் புன்மைதீர் தெய்வமணம்
உன்னுரிமை கொண்ட உரவோனே - இன்னருளால்
மன்னா உலகத்து மன்பதைகள் தாம்விரும்பும்
அன்னையாய் ஆர்க அமர்ந்து
35✓
செஞ்ஞாயிற் றின்னொளியும் செவ்விதழும் பொன்முடியும்
அஞ்ஞானம் நீக்கும் அருளொளியும் - எஞ்ஞான்றும்
மக்கள் மனக்கவலை மாற்றும் மதியொளியும்
எக்காலும் என்னகத்தே தான்
36✓
வண்டமருஞ் சோலை வயலூர்த் திருப்பதியில்
ஒண்டளிர்க்கை மாதர் உடனுறைய - புண்டரிகப்
பொற்பாதம் காட்டிப் புலமைசால் இன்குமரா
நற்பதமே நல்கி யருள்
37✓
மாலே புகுந்த மடநெஞ்சு மற்றெதையும்
சீலமாய்க் கொள்ளாது தீவினையீர் - பாலகன்ற
பாரோர்தாம் காண இயலாப் பதங்களையே
ஏருடனே காண்கின்றேன் யான்
38✓
கூற்றுவன் சாரான் கொடுவினையும் தான்சாரா
மாற்றமும் ஒவ்வா மனமேற்கா - ஆற்ற
மிக்க புனலும் மிகுசெந்நெல் நல்வளமும்
ஒக்கவய லூராவென் றோது
39✓
காண்ககண் நின்னுருவைக் கேட்கசெவி நின்புகழை
ஈண்டிய நின்நாமம் வாயொலிக்க - யாண்டும்
கடம்பின் மணநுகர்க கண்ணகன் ஞாலம்
உடம்பு பொருந்தி ஒளிர்
40✓
வேந்தராய் வேடனாய் வேங்கை மரமாயும்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய் - சார்ந்தவர்க்கு
அன்பாய் அளியாய் அருளுருவாய் எம்மான்நீ
இன்னருளைத் தானளிப்பாய் ஏன்று
41✓
மனத்துன்பம் சாரா மதியுடையான் தன்னை
தனக்கேதான் தஞ்சமாய்ச் சாரின் - புனத்தினிலே
ஏந்திழைமுன் ஏந்தலாய் எண்மையாய்த் தோன்றியே
காந்தமென ஈர்த்தாளைக் காண்
42✓
தோன்றிற் புகழோடு தோன்றுகவே என்றுரைத்த
சான்றோன் உரைக்கேற்பத் தாரணியில் - ஆன்றபுகழ்
மிக்கு உயர்ந்து மேதினியில் மேலோனாய்
தக்கநிலை எய்தவருள் தான்
43✓
பாலன் முதியன் பாரில் மிகச்சேயன்
காலன் அணுகாத கண்ணுதலோன் - சீலன்
தமருள்ள மாய்க்கொள்ளின் தாரணியில் என்றும்
அமரவாழ் வெய்துவர் ஆன்று
44✓
பிரணவத்தின் உட்பொருளை பிரமா உணறான்
திரணமாய் எண்ணிச் சிறையிட்டாய்- மரணமே
எய்தும் மறுவாழ்வு ஏன்றிட்ட எம்மையே
உய்ய அருள்க உவந்து
45✓
உள்ளன்பே பேரொளியாய் ஊற்றுணர்வே எண்ணெயாய்
கள்ளமிலாச் சிந்தை கனதிரியா - வள்ளலுன்
வண்ணத் திருவடிக்கே வைத்திட்டேன் இவ்விளக்கை
எண்ணத் தமிழ்பாடும் யான்
46✓
வண்ண விளக்கை வரிசையால் ஏற்றியுளத்
திண்மையாய் நின்கருணைச் சீர்போற்றி - விண்ணில்
வளரும் உவாநாள்வண் கார்த்திகை நாளில்
முளரித்தாள் வாழ்த்துவம் முன்
47✓
செவ்வேளே தண்முருகா செந்தில் குமரனே
வெவ்வினையை நீக்கும் விமலனே - இவ்வுலகின்
கண்கண்ட தெய்வமே காசினியோர் தாம்போற்றும்
தண்ணளியோய் நீயே சரண்
48✓
எங்கள் இறையே! இமையோர் குறைகளைந்தாய்
செங்கண் நெடுமால் திருமருகா - தங்கு
புகழ்சால் திருப்பத்ததைப் புந்தியுள் கொண்டார்
மகிழ்வாழ்வு எய்துவர் மன்
49✓
விண்ணரசும் மண்ணரசும் மேவியெனைச் சாரினுமத்
தண்ணரசு வேண்டேன்யான் தாளிணைகள் - கண்கொண்டு
போற்றி வழிபடும் பொன்வாழ்வுப் பேற்றினையே
ஏற்றித் தொழுகுவேன் யான்
50✓
எண்ணினும் ஏத்தினும் இன்றேநின் னேரடிகள்
கண்ணினும் மேலதாய்க் காண்கின்றேன் - உண்மனமே
மென்கரும்பை மேதி கடித்தேதான் முத்துதிர்க்கும்
பொன்வயலூர்த் தேவனையே போற்று
51✓
குமரா வயலூர்க் குணவா கொடிய
எமையணுகா வாறு எடுப்பேன் - தமராய்த்
தொடுக்கும் பழம்பாடல் தொல்லமுதே தூயோர்
படுக்கும் பழம்நீயே பார்
52✓
அறுமுகவேள் என்றே அகங்குழைந்தே நின்னை
முறுகியநல் பாசத்தால் முன்னி - சிறுகால்
மறவாது உன்றன் மலரடியே எண்ணி
இறவாது வாழ்கின்றேன் யான்
53✓
செந்தில்வாழ் குன்றே சிறப்பமைந்த பண்டிதனே
வந்த இருவினைக்கு மாமருந்தே - புந்தியுள்ளே
நின்றிலங்கும் தேவே நெடுமால் மருகாநின்
அன்புத்தாள் தானே அணி
54✓
வயலூர்வாழ் மன்னா வயங்கொளிசேர் தென்னா
கயல்விழிசேர் வள்ளியினைக் கண்டு - நயமுடனே
கொண்டே யமைந்து குறைகளைந்தாய் குன்றவர்தம்
அண்ணலென ஆங்கே அமர்ந்து
55✓
செந்நெலும் கன்னலும் செங்கதிரோன் தன்வரவால்
பின்னைக் கமுகும் பிணைந்திட்டே - நன்கதலி
தன்னையுங் கொண்டு தழைத்தொளிரும் பெற்றித்தே
இன்முருகன் எந்தைக்கிடம்
56✓
அருண கிரியாரின் ஆரமிழ்தப் பாட்டின்
கருணைத் தலைவனெனக் காமுற்றாய் - தருணமென
எண்ணி அகங்குழைந்தே ஏற்றமுடன் பாடுகின்றேன்
திண்ணியவுன் அன்பில் திளைத்து
57✓
குறிஞ்சிக் கிழவனே குற்றங்கள் நீக்கும்
அறிஞர் அறிவொளியாம் ஐய - வறிஞர்
இடர்நீக்கும் ஏந்தால் இனியநறுந் தேனே
மடம்நீக்கி ஏற்க மகிழ்ந்து
58✓
நக்கீரர் பாடிய நன்முருகாற் றுப்படையின்
தக்க பொருளாய்த் தனித்திலங்கும் - மிக்கோனே
ஒக்கலென உற்றோர்க்கு ஒண்ணிதயம் தானளித்து
மிக்கோனாய் ஆக்க விரைந்து
59✓
கல்லூராரித் தோன்றலெனக் கற்றவர்கள் காமுறவே
நல்ல பெயர்தந்து நாணாளும் - மல்லல்சால்
வல்லரென் றென்னை மதித்தே புகழ்ந்திடவே
நல்லருள் ஈக நயந்து
60✓
அலைமோதும் செந்தில் அழகனே அண்டர்
தலைவனாய் வாழும் தகையோய் - உலைவேன்
மலைபோன்ற துன்பமும் வாலிதினின் நீக்கும்
இலைபனிநீர் போல எனக்கு
61✓
ஊரற்றேன் பேரற்றேன் ஒண்ணிதியம் தானுமற்றேன்
சீரற்றேன் என்னினுமுன் சேவடிகள் - காருற்ற
மேகங்கண் டாடும் வியன்மயிலின் நன்தலைவா
ஆகமே கொண்டேன் அணி
62✓
உற்றோரும் மற்றோரும் உண்டிங்கு என்றாலும்
அற்றேன் அவர்களது ஆதரவு - மற்றெனக்கு
பற்றாக நீயமைந்து பாரில் உயர்வளிக்க
வற்றாத வள்ளால் மலர்ந்து
63✓
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமென
ஓயாது வேண்டும் உளமுடையேன் - தாயாய்
வளமான வாழ்வளிப்பாய் வள்ளி மணாளா
உளமார எங்கட் குவந்து
64✓
நரப்புநோய் யாதும் நலியாத வாறு
பரப்புடையெம் மக்களெலாம் பாரில் - உரப்புடனே
உன்னைப் பணிந்து உயர்வாழ்வு எய்திடவே
என்றும் அருள்க இனிது
65✓
மறதியின்றி உன்னை வாணாளில் வாழ்த்தும்
உறுதியுடை என்னை உவப்பால் சிறிதும்
தொல்லை யளிக்காமல் தூய்மனமே தானளித்து
பல்லாண்டு வாழப் பணித்து
66✓
ஐம்பொறிகள் என்றும் அறிவுணர்ச்சி தான்பெறவும்
தீங்கறவே நோயின்றிச் சீர்பெறவும் - ஓங்குபுகழ்
நீங்காத செல்வா நிறையன்பென் செல்வற்குப்
பாங்காய் அருள்க பரிந்து
67✓
இதயநோய் இல்லாமல் இன்னலமும் சீரும்
உதயமால் ஒண்கதிரோன் போல - கதியுடனே
வந்தென் மகற்கு வாணாளும் கூர்மதியும்
சந்தமுடன் ஈக தழைத்து
68✓
உடல்நலமே ஓம்பாது உற்றபொருள் பெற்றால்
அடல்பெரிய ரென்றாரும் ஆய்வர்? - மடமிருக்கும்
நன்னிதியம் பெற்றாலும் நாளுமுன் நற்பதம்போல்
இன்னிதியம் ஆமோ எனக்கு
69✓
மல்லல் வளஞ்சால் வயலூர்க் குமரேசா
எல்லையில் அன்பினை இன்புடனே - நல்குடிக்கு
ஒல்லை உவந்து உடல்வளமும் பல்லாண்டும்
நல்லருளும் ஈக நயந்து
70✓
மன்னா உலகினிலே மன்னுநலே தான்விரும்பி
உன்னைத் தலைவனாய் ஓம்புகின்றேன் - இன்னருளே
ஈந்தென் உளக்கருத்தை இவ்வுலகில் தானளித்து
ஏந்தலென ஆக்க இனிது
71✓
காமர் கயல்பிறழக் காவி முகைநெகிழத்
தாமரையின்போது தளையவிழப் - பூமருவு
எந்நாட்டும் ஈடில்லை என்றுரைக்கும் பெற்றித்தாய்
இந்நாட்டு எந்தைதன் ஊர்
72✓
அழகொளிரும் பாங்கில் முருகொளிரும் என்ற
பழமொழிக்குச் சான்றாகப் பாரில் - விழைவால
எழிலார் வயலூரில் ஏற்றமுடன் நிற்கும்
வழியுணர்ந்தேன் அன்புன்பால் வைத்து
73✓
உலகோர் உவப்புறும் ஒண்கதிரோன் காலைப்
பலர்புகழப் பைங்கடலில் பாய்ச்சி - இலகொளி
பெற்றே யொளிரும் பெருமைத்தால் மஞ்ஞையில்
உற்றே யமர்ந்தான் உவந்து
74✓
இளமையும் நல்லெழிலும் இன்பமுடன் பெற்றே
வளமும் நலமும் வயங்கும் - உளமுடை
நன்முருகா நீயென்றும் நல்லோர்க் கருளவே
உன்னடியை ஈக உவந்து
75✓
முதல்தமிழன் முன்கண்ட மூவா இளையோய்
பதமலரை கண்டேயிப் பாரில் - நிதமுமே
வாழ்த்தி வழிபடும் வல்லோர்க் கருளுகவே
ஊழிதோ றூழி உவந்து
76✓
மாடம் ஒளிரும் மதுரையின் தென்மேற்கே
பீடுசால் பேர்ப்பரங் குன்றதனில் - ஆடமைத்தோள்
தெய்வானை உள்மகிழத் தெய்வமணங் கொண்டோய்நீ
எய்யாது ஏற்க இனிது
77✓
தணிகை மலைத்தேவே தாருவாய் நின்று
பணிகுறுவர் வள்ளியினைப் பாங்காய் - அணிகொண்ட
மன்றலில் ஏற்று மகிழ்ந்திட்ட மால்மருகா
இன்னருளை ஈக எமக்கு
78✓
பழனிப் பதியமர்ந்த பண்டிதனே ஞான
எழில்மிக்க ஏந்தால் எவர்க்கும் - வழிபடில்
நற்பதமே நல்கும் பழம்நீயே உன்றன்
அற்புதத்தாள் தானே அகம்
79✓
ஓங்கி யுலகளந்த உத்தமனின் நன்மருகா
பாங்காகச் செந்தில் பதியமர்ந்தோய் - நீங்காத
அன்பை யளித்தே அகங்களித்து என்நெஞ்சில்
இன்பமுடன் தங்குகவே இன்று
80✓
கற்றோர் தலைவணங்கும் கற்பகத்தின் நற்கனியே
மற்றோர் உணரா மணிக்குன்றே - சொற்றமிழின்
தேனே இனிய செழும்பொருளே செம்மையேன்
தானே வணங்குவன் தாள்
81✓
மலையை உறைவிடமாகக் கொண்டயென் மால்மருகா
அலையெறியும் செந்தில் அமுதே - கலைநலஞ்சால்
கற்றோர் உவக்கும் களிப்பேயென் கண்ணேயுன்
பொற்பாதம் தானே புகழ்
82✓
வாயும் திரைமோதும் கானல் துறையமர்ந்தோய்
ஆயும் அமரர் அணிதலைவா - பாயன்பு
மேய பெருமான் மெலியோர் குறைகளைவாய்
நீயே எனக்கு நிலை
83✓
பழமுதிர் சோலைக் கிழவோனே பாரில்
கழல்பணிவோர் தாம்வாழக் கண்டு - நிழல்போலத்
தொடர்ந்து வழிபடும் தூயோனாம் என்னை
இடரின்றிக் காக்க இனிது
84✓
வயலூர்ப் பெருமானே வண்டமிழ்ச் செல்வா
கயல்பிறழ் வாவிகள்சூழ் காக்கள் - பயநகராம்
நல்வயலூர் மேவும் நலமிக்க செவ்வேளே
அல்வினையை நீக்கி அருள்
85✓
ஊமன் எனப்பெற்றோர் ஒப்பாரில் லுன்றனது
சேமநிதிச் சேவடியில் சேர்த்த - நாமநீர்
சூழும் புவனத்தே தூயோன் குருபரனை,
ஆழ்புலவன் ஆக்கியது ஆர்?
86✓
பழமுதிரும் சோலைப் பசுந்தேனே பாரில்
உழந்து துதிப்போர்க் குரியோனே - அழகேந்தும்
பெம்மானின் சேயே பெரியோய் புலமையோய்
எம்மானே ஏற்க இனிது
87✓
மகனில் குறையை மறுக்கும் மருந்தே
அகம்நிறைந்த செல்வா அருந்தேவே - புகலின்றி
வாடும் எனது மனக்குறையைத் தானகற்றி
ஈடின்றி வாழவருள் ஈங்கு
88✓
செங்கோட் டமர்ந்தசெவ் வேளே செழுஞ்சுடர்சால்
தங்கநிறம் சான்ற தகவுடையோய் - மங்காத
ஏரகம் நீங்கா இறைவனே எம்மகத்தை
ஊரகமாய்க் கொண்டே ஒளிர்
89✓
திருவே ரகமேய செம்மால் சிவன்தான்
உருகி வழிபட் டுணரும் - பெருமானே
அன்பர் அகஇருளை நீக்கி அறிவொளியை
இன்பமுடன் ஈக இனிது
90✓
தென்னையும் வாழையும் சேர்ந்து வளர்ந்தெங்கும்
அன்ன வயல்சூழும் நன்னகரம் - இன்னலஞ்சால்
பொன்னிவளஞ் சூழும் வயலூர்ப் புனிதநீ
அன்னையாய்க் காக்க அமர்ந்து
91✓
விண்ணிலுள்ள கார்முகிலைக் கண்டு விழைவுடனே
தண்ணிய பொற்கலாபம் தான்விரித்து - மண்ணில்
மகிழ்ந்தாடும் மாமயிலே போல மனங்குழைந்து
இகழாது ஏற்க இனிது
92✓
எப்போதும் உன்னாமம் எண்ணி யிருப்பல்லால்
கைப்போ தகத்தின் இளையோய்நீ - முப்போதும்
வேண்டுவார் உள்ளத்தின் வேணவா தாளளிப்பாய்
ஈண்டு புகழோய் இனிது
93✓
என்னிலைமை எல்லாம் அறிவித்தும் இன்முருகன்
தன்னருளைத் தாளிணையைத் தாரானோ - மென்மயிலின்
மீதமர்ந்தோன் மேதினியோர் உள்ளக் கமலமாம்
போதமர்ந்தோன் சேவடியைப் போற்று
94✓
மானிடம் பாட மகிழ்வுற்றேன் மாண்பமைந்த
தேனிடம் தானுறையும் தென்றலவன் - பானிலாப்போல்
நின்றொளிரும் எந்தை நிறைவளங்கள் மிக்குற்ற
நன்வயலூர் நாதனையே நாடு
95✓
வானத்துத் தாமரையோ மண்ணகத்துக் கற்பகமோ
ஏனற் புனங்காத்த ஏந்திழையாள் - பானல்
பெருவிழி யைக்கண்டு பெம்மானே நீவிர்
அருளுள்ளம் கொண்டீரே யன்று
96✓
என்றும் மறந்தறியேன் இப்பிறப்பில் எஞ்ஞான்றும்
நின்றுன் நினைவகலா நீர்மையால் - சென்று
சூர்மா தடிந்த சுடரிலைய வேலோனே
பார்மீது நல்லருளைத் தா
97✓
பல்லோரும் உன்னைப் பணிந்தே வழிபடினும்
எல்லோரும் வேண்டுவதை யான்வேண்டேன் - நல்லார்
அவைக்கண் அமர்ந்தக்கால் யாரினு மேலாய்
புவிக்கண் விளங்கஅருள் பூத்து
98✓
எண்ணிய எண்ணமெலாம் ஈடேற்றும் எம்பெருமான்
மண்ணில் மனக்குறையை மாற்றி - திண்ணம்
உளமகிழ்வு பெற்று உலகினிலே நானுலவ
வளமுடைய வாழ்வளிப் பாய்
99✓
ஆன்ற பெரும்புலவீர்! ஆரமிழ் தப்பாட்டில்
ஏன்ற உலகப் பொருளியைத்து - ஊன்றுங்
கருத்துக் குவியலாய்க் கண்டிடினும் எந்தை
திருத்தப்பா விற்கீடோ செப்பு
100✓
அணிவயலூர் வாழி அறுமுகவேள் வாழி
பிணிமுகப் பெம்மான்நன் பெய்வளைகள் வாழி
பணிமொழியால் ஏத்துஞ்சீர் பாவலர்தாம் வாழி
அணிசெவ்வேல் வாழ்கஆர்ந்து.