முருகன் App
முருகக் கடவுள் மீது கிளித்தூது
சி. சுப்பிரமணிய பாரதியார்
பாடல்1 / 1
முருகக் கடவுள் மீது கிளித்தூது · சி. சுப்பிரமணிய பாரதியார்

பாடல்

பல்லவி✓
சொல்ல வல்லாயோ?-கிளியே
சொல்லநீ வல்லாயோ?
அனுபல்லவி✓
வல்லவேல் முருகன்-தனையிங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
1சரணங்கள்✓
தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை-இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2✓
அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கொர்
முல்லைச் செடியதன்பாற்-செய்த வினை
முற்று மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3✓
பாலை வனத்திடையே-தனைக்கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று(சொல்ல)