முருகன் App
பினாங்கு தண்ணீர்மலை வேல் முருகன் காவடிச்சிந்து
காவடிச்சிந்து1 / 1
பினாங்கு தண்ணீர்மலை வேல் முருகன் காவடிச்சிந்து

காவடிச்சிந்து

1✓
கந்தன்மேல் காவடிச் சிந்து - பாடக்
காத்திடும் வேழத்தைப் போற்றியே வேல்வேல்
சுந்தரத் தீந்தமிழ் தன்னில் - நலம்
சூழ்ந்திடக் காதலால் சொல்லுவோம் வேல்வேல்.
2✓
கொக்கர கோவெனும் சேவல் - புவி
கூவியெ ழுப்பக் கொடிகொண்டாய் வேல்வேல்
எக்கண முந்துணை நின்றே - அருள்
ஈந்திடும் பன்னிரு கையனே வேல்வேல்!
3✓
காவடி தூக்கியே வேல்வேல் - எங்கள்
காணிக்கை சேர்க்கவே நாடினோம் வேல்வேல்
பூவடி மீததை ஏற்றே - அருள்
பூரித்து நல்கிட வேண்டினோம் வேல்வேல்.
4✓
உன்புகழ் பாடிப்ப ணிந்தே - பரம்
உற்றிட வேதுணை தேடினோம் வேல்வேல்
தென்தமிழ் தந்தருள் செய்தே - மலைத்
தெய்வமே பக்கலில் நின்றிட வாவா.
5✓
கார்த்திகைப் பெண்டிர் அறுவர் - நல்ல
கானமு டன்சுவைத் தாலாட்டுப் பாட
நேர்த்தியாய்ப் பூந்துயில் கொண்டாய் - அன்னை
நேசமு டன்சேர்க்க சண்முகம் ஆனாய்!
6✓
நெற்றிக் கனல்வழி ஈந்த - திரு
நீறணி ஈசருக் கோம்பொருள் சொல்லி
உற்ற பெருந்துயர் தீர்த்தே - சுரர்
ஓம்பிடக் காத்திட்ட சேந்தனே வேல்வேல்.
7✓
கொவ்வை இதழ்வள்ளி நேசா - தேவ
குஞ்சரி நல்லுளக் கோவிலின் வாசா
செவ்வைப் பொருளுப தேசா - தமிழ்
செப்பும டியர்பால் சென்றிடும் தாசா.
8✓
என்றுந் துணைசெய்வாய் வேல்வேல் - கலை
ஏற்றம் வழங்கிடத் தோன்றுவாய் வேல்வேல்
குன்றுக் குடையசெவ் வேள்வேல் - குலம்
கோத்திரம் சாத்திரம் காப்பாயே வேல்வேல்.
9✓
ஏறும யில்தனில் ஏறி - இந்த
ஞாலம்வ லம்வந்த சீலனே வேல்வேல்
ஆறுப டைவீ டமர்ந்தே - உல
காண்டிடக் கோலமும் பூண்டவா வேல்வேல்.
10✓
ஓம்பொருள் தேராப் பிரமன் - தலை
உச்சியில் குட்டிச்சி றைசெய்த பாலன்
பூம்பொழில் சூழ்மலை எங்கும் - நலம்
பூத்திடக் காத்திடும் புண்ணிய சீலன்.
11✓
தென்திசைக் குள்ளமு னிக்கு - தமிழ்
செப்பியி லக்கணச் சீர்செய்தாய் வேல்வேல்
அன்போ டருணகி ரிக்கும் - புகழ்
அண்டிவந் தாக்கினாய் ஆனந்தம் வேல்வேல்.
12✓
குற்றம் சிவனது பாட்டில் - அன்று
கூறிய கீரனுக் குற்றதோர் துன்பம்
முற்றக் குறைத்தருள் செய்த - இரு
மூன்றுமு கத்தனே காத்திட வாவா.
13✓
சுட்டப ழக்கதை காட்டி - அவ்வை
சொற்பொருள் துய்த்திடச் செய்தனை வேல்வேல்
மட்டிலா நல்லின்ப வாழ்வை - தினம்
மன்பதைக் கீந்திடும் மன்னவா வேல்வேல்.
14✓
அண்ணலே பன்னிரு கையால் - எமை
ஆண்டருள் செய்திட வேண்டினோம் வாவா
கண்ணருள் சிந்தியே வாவா - எந்தக்
காலத்தி லுந்துணை யாகநீ வாவா.