செல்வச்சந்நிதி அகவல்
வைத்தியர் ஆண்டியப்பர்
அகவல்1 / 1
செல்வச்சந்நிதி அகவல் · வைத்தியர் ஆண்டியப்பர்
அகவல்
1✓
சிந்தையி லெழுந்த செழுஞ்சுடர் வெள்ள
செங்க மலத்துள் செந்திப் பதியே
உந்தியி லுதித்த ஓங்கா ரத்துள்
அந்தமி லொத்த ஐங்கர முதல்வா
உகார உயிராய் ஓரைந் தெழுத்தாய்
சிகாரத்தி னுள்ளே செம்மை சிறந்தும்
அகாரத்தி னுள்ளே ஆட்டிய தாயும்
நகாரத்தி னின்ற நண்பா சரணம்
நாலிதழ் இருக்கும் நாதா சரணம்
ஆறிதழ் இருக்கும் ஆதீ சரணம்
பத்திதழ் இருக்கும் பதியே சரணம்
பன்னிரண்டு இதழில் பரமா சரணம்
பதினாறு இதழில் புருடா சரணம்
இரண்டாம் இதழில் இறைவா சரணம்
எல்லாம் தானாய் ஏகாந் தத்தில்
நில்லா நிலையில் நிறுத்தியே என்னை
ஒத்த இடத்தில் ஒருவரு மறியா
அந்தவெளி யதனில் ஆக்குமந் தன்னில்
நித்திய மான நிலாவுமண் டபத்தில்
மூல நாடியின் மும்மண் டலத்தில்
மேலை வாசல் ஆலயந் தன்னில்
ஆயி ரம்இதழ் அனந்த கோடி
ஆதித்தன் ஒளியும் சந்திரனொளியும்
மனந்தனில் உதித்த மதிமுக மாறும்
கதுவிய கன்ன கவச குண்டலமும்
விண்களிற் றோன்றிய கண்க வீராறும்
வேத வொளியில் அணிமுடி யாறும்
விந்து நாதமும் மேலாந் தரத்தில்
சோதி நீறும் சுந்தரத் தழுகும்
செவ்விதழ் கனிவாய் செம்முகச் சிரிப்பும்
பங்கய இதழ்சேர் பன்னிரு புயமும்
பன்மணி யணிந்த பதக்கமு மார்பும்
நன்மணி முத்தும் நவரத்தின மாலையும்
பொற்புரி நூலும் பொருந்திய அழுகும்
விற்பொரு வேளை வென்றதோர் வீழும்
உந்திச் சுழியும் உரோமத் தொழுங்கும்
செந்தியை ஒத்த செவ்வரிப் பட்டும்
சிறந்த மருங்கிற் சீரா வழுகும்
பாதச் சிலம்பும் பன்மணித் தண்டையும்
ஓங்கார மென்னும் ஒண்மயி லேறி
பாங்கான கோழிக் கொடியொரு கையும்
ஆங்கார மென்னும் மவ்வொரு கையும்
பாசந் தன்னைப் பகர்ந்த கையொன்றும்
அங்குசம் தன்னை அணிந்த கையொன்றும்
வச்சிரம் தன்னை வகுத்த கையொன்றும்
கடகம் தன்னைக் கவர்ந்தகை யொன்றும்
வள்ளியை மணந்து அணைத்த கையொன்றும்
தெய்வத யானையைச் சேர்த்த கையொன்றும்
நகார மொருகையும் தனுவொரு கையும்
சங்கொரு கையும் சக்கர மொருகையும்
மின்னிய வயிறும் பன்னிரு கையும்
விண்ணும் மண்ணும் மேருவும் தானாய்
என்கணுள் நிறைந்த கந்தா சரணம்
காலும் கனலும் புனலு மாகப்
பொருந்தி யிருந்த புதல்வா சரணம்
சாக்கிரம் சாக்கிரம் சாக்கிரம் தன்னில்
தாக்கி யிருந்த சண்முகா சரணம்
சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம்
விற்பொரு ளாகி விழித்தாய் சரணம்
திசையும் திக்கும் தேவரும் தானாய்
அசைவா யமர்ந்தாய் சரணம் சரணம்
பசுவும் பாசமும் நேசமும் தானாய்
இதய மாக்கிய இறைவா சரணம்
ஊனாய் உயிராய் ஒன்றாய் எங்கும்
நீயாய் நானாய் நின்றாய் சரணம்
நின்சர ணம்தனை நினைப்பவர் தங்கள்
நீண்ட பிறப்பைத் தவிர்ப்பாய் சரணம்
நிலவுலா வியநீண் மணிமண்ட பத்துள்
உலவு கின்றதோர் ஒருவன் பெருமையை
அகில சோதியோ டானந்த மாகி
திலக மாமயில் தித்தியென் றாடும்
திருச்செங் கோட்டுறை செல்வமென் சிந்தையே.