செல்வச்சந்நிதி முருகன் கண்ணிகள்
ஞா.ம. செல்வராஜன்
பாடல்1 / 1
செல்வச்சந்நிதி முருகன் கண்ணிகள் · ஞா.ம. செல்வராஜன்
பாடல்
1✓
சந்நிதியில் வந்துதித்த வெற்றிவேலா — ஒரு
சங்கதிநீ செய்ய வேண்டும் வெற்றிவேலா — ஒரு
தோகைமயில் மீதிலேறி வெற்றிவேலா — எம்முன்
தோன்றிவந்து நிற்கவேண்டும் வெற்றிவேலா
வள்ளி தெய்வானையினோடு வெற்றிவேலா — வந்து
வர்ணமுகங் காட்டவேண்டும் வெற்றிவேலா
பன்னிருகை வேலுடனே வெற்றிவேலா—வந்து
பாலர்முகம் பார்க்கவேண்டும் வெற்றிவேலா
ஆனைமுகன் தம்பியான வெற்றிவேலா—எம்மை
ஆதரித்து ஆளவேண்டும் வெற்றிவேலா
கண்ணனின் மருமகனான வெற்றிவேலா—எம்மைக்
கண்திறந்து பார்க்க வேண்டும் வெற்றிவேலா
ஆறுபடை வீடுடைய வெற்றிவேலா—நித்தம்
ஆறுதலளிக்க வேண்டும் வெற்றிவேலா
மாரிமழைபெய்ய வேண்டும் வெற்றிவேலா—இந்த
மானிலங்களுய்ய வேண்டும் வெற்றிவேலா
பஞ்சங்கள் ஒழியவேண்டும் வெற்றிவேலா—செல்வப்
பாக்கியம் வழியவேண்டும் வெற்றிவேலா
வஞ்சனைகள் வாடவேண்டும் வெற்றிவேலா—பகை
வன்மமெல்லாம் ஓடவேண்டும் வெற்றிவேலா
அன்புகள் சுரக்கவேண்டும் வெற்றிவேலா—உன்மேல்
ஆசையும் பிறக்கவேண்டும் வெற்றிவேலா
ஆவிநீங்கும் போதினிலும் வெற்றிவேலா—எம்முன்
அன்புடனே நிற்கவேண்டும் வெற்றிவேலா.