செந்தில் முருகன் வழிநடைப் பாட்டு
தமிழண்ணல்
பாடல்1 / 1
செந்தில் முருகன் வழிநடைப் பாட்டு · தமிழண்ணல்
பாடல்
1✓
வண்ணமுறக் காண்பதற்கே செந்தில்வாழ் முருகா
வழிநடந்து வருகின்றோம் எந்தையே முருகா
கண்ணிறையக் காட்சிதரும் கவினுருவே முருகா
களிப்பருள வேண்டுகின்றோம் தந்தருள்வாய் முருகா!
2✓
வள்ளிதெய்வ யானையுடன் செந்தில்வாழ் முருகா
வழிநெடுகத் துணையாகி வருபவனே முருகா
துள்ளுமத வேலெமக்குத் துணைதருவாய் முருகா
துயர்களைய மயிலமர்ந்து வந்தருள்வாய் முருகா!
3✓
நீலநிறக் கடலலையின் மேலெழுந்து வருவாய்
நிகரற்ற செஞ்சுடராய்ப் பேரொளியைத் தருவாய்
கோலமயில் மீதிருக்கும் குமரனுனைக் காண்போம்
கொடுந்துயரம் பறந்தகல விரைந்துநடை நடந்தோம்!
4✓
வாழ்க்கைஒரு நடைப்பயணம் என்பதனை உணர்ந்தோம்
வழிநடந்து வழிநடந்து வருவதென விரைந்தோம்
துழ்ந்திருக்கும் வளங்களெலாம் வழிப்பயணக் காட்சி
சுடர்வேலன் திருவடியை அடைவதுநும் மாட்சி!
5✓
வளங்கொழிக்க வரம்தருவாய் வேலவனே முருகா!
கடைக்கணித்தால் பொன்குவியும் மாலவனின் மருகா!
நினைத்ததெலாம் நடக்கவைக்கும் வேலவனே முருகா!
அனைத்தையுமே எமக்களிக்கும் மாலவனின் மருகா!
6✓
ஆணவத்தை விட்டுவிட்டுப் புறப்பட்டோம் முருகா
அறியாமை மும்மலத்தை அகற்றிவிட்டு வந்தோம்
காணுமுன்னிற் கலப்பதற்கே கடுகிநடை நடந்தோம்
காவடிகள், பாற்குடங்கள் தோள்ஏந்தி விரைந்தோம்!
7✓
வாயில்வழி தேடிவரும் அடியரெமைப் பார்ப்பாய்
தாயனையாய் எம்சோர்வைத் தாங்கிவர வழைப்பாய்
பனிபடர்ந்த சோலையில்உன் பசுமையினைக் காண்போம்
கனிநிறைந்த காவிலுன்றன் கருணையினைக் காண்போம்!
8✓
இருள்நிறைந்த வழியில்நீ ஒளியாகி வருவாய்
இடர்மிகுந்த பாதையில்நீ துணையாகி வருவாய்
வெயில்நிறைந்த போதினிலே நிழலாகி நிற்பாய்
வேட்கைமிகும் போதில்நீர்த் தடமாகி நிற்பாய்!
9✓
காலைஒளி ஆகிவரும் காவலனே முருகா
வேலின்ஒளி நண்பகலில் விளைப்பவனே முருகா
மாலைஒளி ஆகிவரும் மாலவனின் மருகா
மதியிலும்உன் தண்ணருளை வடித்தளிக்கும் முருகா!
10✓
ஏர்திகழும் கார்முகிலின் எழிலுருவே முருகா
பார்புரக்கும் வயற்பரப்பின் பசுஞ்சுடரே முருகா
உன்னடியை நாடிவந்தோம் ஓங்கார முருகா
பொன்னடியைத் தந்தெம்மைப் புரந்தருள்வாய் முருகா!