முருகன் App
செட்டிமக்கள் தருமம் காக்க வருகவே
கண்ணதாசன்
பாடல்1 / 1
செட்டிமக்கள் தருமம் காக்க வருகவே · கண்ணதாசன்

பாடல்

1✓
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா - வெறும்
ஆண்டியாகிப் பழநிவந்த வேலய்யா
கற்பனையைத் தாண்டிநிற்கும் கந்தய்யா - உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா!
2✓
மலையினிலே அரசனமைத்த மன்னனே - எங்கள்
மடியினிலே குழந்தையான கந்தனே
தலையிருக்கும் வரையில்உனை வணங்குவோம் - உன்
சந்நிதியில் பாடிப்பாடி மயங்குவோம்!
3✓
காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் - அங்கு
கந்தனையே எண்ணியெண்ணி வாழ்ந்தனம்
பூவிரிந்த பாண்டிநாட்டில் வந்தனம் - உன்
பொன்னடியைக் கண்டுகண்டு மகிழ்ந்தனம்!
4✓
ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்விலே - மயில்
ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே!
5✓
இலங்கையிலும் உனதுகோவில் கட்டினோம் - பர்மா
எங்கணுமே உனதுசிலை நாட்டினோம்
மலையநாட்டில் உனதுகோயில் ஆக்கினோம் - எங்கள்
மனத்திலுள்ள பயத்தைஎல்லாம் போக்கினோம்!
6✓
தண்டபாணி கோவிலின்றி ஊருண்டா - உன்னைத்
தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டா
கொண்டுவிற்கப் போனஎங்கள் கொள்கையே - உனைக்
கொண்டுவைக்கப் போனஎங்கள் கொள்கையல்லவா?
7✓
செந்திலாளும் பழநியாண்டி முருகவேள் - எங்கள்
செட்டிமக்கள் தருமம் காக்க வருகவே
அந்தமிலா அழகுத்தெய்வம் கந்தவேள் - உன்
அன்புமக்கள் வாழ்வுகாக்க வருகவே!
8✓
ஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் - நீ
ஆண்டுவரும் பழநிநோக்கி வருகிறோம்
வேண்டிவரும் நலங்களெலாம் அருளுவாய் - உன்
வீட்டுமக்கள் போலஎமை ஆளுவாய்!