திருச்செந்தூர் பாதயாத்திரைப் பதிகம்
அரு சோமசுந்தரன்
பதிகம்1 / 1
திருச்செந்தூர் பாதயாத்திரைப் பதிகம் · அரு சோமசுந்தரன்
பதிகம்
✓
செந்தில் ஆண்டவா திருச்செந்தூர் ஆண்டவா
செந்தில் ஆண்டவா திருச்செந்தூர் ஆண்டவா
✓
தேவகோட்டை அன்பரெல்லாம் பாட்டுப்பாடியே
தேடிஉன்னை நாடிவந்தார் செந்தூர்ஓடியே
பாவமெல்லாம் போக்குகின்ற பழனியாத்திரைப்
பக்தரெல்லாம் கூடிவந்தார் பாதயாத்திரை. (செந்தில் ஆண்டவா)
✓
வேலெடுத்துப் பாட்டுப்பாடி வெற்றியாகவே
வீரமோடு சுற்றிவந்தார் பற்றிலாமலே
நாலெழுத்துக் கற்றவர்கள் யாருமில்லையே
நமச்சிவாய என்றபின்னர் நாலுமில்லையே (செந்தில் ஆண்டவா)
✓
காடுமேடு பள்ளமுள்ளு கால்நடையாகக்
கந்தனுக்குச் சிந்துபாடி வேல்படையாகப்
போடுபோடு போடுஎன்று போகுதுபாரே
போரெழுந்த செந்தூருக்குக் காவடிபாரே! (செந்தில் ஆண்டவா)
✓
பாலரோடு பெண்ணும்ஆணும் பக்தியாகவே
பாட்டுப்பாடிக் கூட்டம்கூடி சித்தியாகவே
வேலருக்குச் சித்திரையில் காவடிஆட்டம்
வேலெடுத்த பேர்களுக்குச் சேவடிநாட்டம் (செந்தில் ஆண்டவா)
✓
மெல்லமெல்ல மெல்லச்செல்லும் பாதயாத்திரை
மேனிநோகத் தோணியாவான் பாதயாத்திரை
வெள்ளமாகக் கூடுகின்றார் மக்கள்கூட்டமே
வேலன்அங்கே ஆடுகின்றான் வீரஆட்டமே (செந்தில் ஆண்டவா)
✓
மூட்டைதூக்கி யாத்திரைக்கு முன்னேவந்தவர்
மோகமெல்லாம் மூட்டைகட்டிப் போட்டுவந்தவர்
வேட்டையாடும் வேலனுக்கு வள்ளிஆகிறார்
வேலனது பாதத்திலே புள்ளிஆகிறார்(செந்தில் ஆண்டவா)
✓
சோறுபோட்டுப் பாதையிலே நீரினைஊற்றிச்
சுகமளித்த பேர்களுக்கு வேதனைமாற்றி
ஆறுமுகக் கந்தனவன் ஆறுதல்கூட்டி
அத்தனையும் தந்திடுவான் பால்முகம்காட்டி (செந்தில் ஆண்டவா)
✓
மாசிமகம் பச்சைசாத்தி மால்மருகாநீ
மாந்தருக்குக் காட்சிதந்தாய் வேல்முருகாநீ
காசிமுதல் குமரிவரை உனதுஎல்லையே
கால்நடந்து வந்தவர்க்குக் கவலைஇல்லையே (செந்தில் ஆண்டவா)
✓
வைகாசி விசாகத்திலே கடலின்எல்லையே
வந்திருந்த பேரைஎண்ண வார்த்தைஇல்லையே
பங்குனியில் உத்திரத்தில் பக்தர்கூட்டமே
பார்வையிலே ஈர்ப்பதுவும் பாலன்நாட்டமே (செந்தில் ஆண்டவா)
✓
செந்தூரின் கடற்கரையில் தேரும்ஓடுது
செட்டிநாட்டுக் காவடியும் சேர்ந்துகூடுது
எந்தூரும் எங்களுக்குச் சொந்தமில்லையே
ஈசன்மகன் வேலனைப்போல் பந்தமில்லையே. (செந்தில் ஆண்டவா)
✓
வெய்யில்என்றும் மழையிதென்றும் வாடவில்லையே
வேட்டிசட்டை சேலைமாற்றிப் போடவில்லையே
கையிலொன்றும் தோளில்ஒன்றும் கனக்குதுமூட்டை
கடலலையில் செந்தூரான் பிரிக்கிறான்ஏட்டை (செந்தில் ஆண்டவா)
✓
பச்சைமயில் வாகனத்தில் பறந்துவருகிறான்
பக்தர்குறை தீர்ப்பதற்கு விரைந்துவருகிறான்
இச்சைஎல்லாம் வேலனது பாதத்தில்தானே
எழுந்துவிட்டான் நம்முடைய நாதத்தில்தானே (செந்தில் ஆண்டவா)
✓
பல்லக்கில் வந்திடுவான் பார்புகழ்வேலன்
பாதத்தில் வந்தவர்க்குப் பைந்தமிழ்ச்சீலன்
உள்ளத்தில் வைத்தவர்க்கோ ராயிரம்கோடி
உவகையுடன் தந்திடுவான் பாயிரம்பாடி (செந்தில் ஆண்டவா)
✓
அப்பனுக்கும் உபதேசம் அன்றளித்தவன்
அன்புடனே எங்களுக்கும் இன்றளித்தவன்
சுப்பனுக்குப் பின்னர்ஒரு தெய்வமில்லையே
சுகமளிக்க வருவதில்ஓர் ஐயமில்லையே. (செந்தில் ஆண்டவா)
✓
மேகமுட்டும் கோபுரமும் அங்கேதெரியுது
மின்னலைப்போல் வேலுமங்கே மின்னித்தெரியுது
தாகம்தீரச் செந்தூரானைப் பருகவாருங்க
தமிழால்அவனைப் பாடிஆடி உருகவாருங்க. (செந்தில் ஆண்டவா)