திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-2
ஆதிசங்கரர்
பாடல்1 / 1
திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம்-2 · ஆதிசங்கரர்
பாடல்
1✓
காலமெலாம் பாலனவன் கணேசன் திருவுடையோன்
சூலமொடு ஐம்முகத்தோன் சுரனோடு நான் முகனும்
சீலமிகு திருமாலும் தேடிவரும் கரிமுகத்தோன்
மூலவினை மலைநீக்கி முழுச்செல்வமருள் புரிவான்.
2✓
கவியறியேன் வசனமோ கண்டறியேன் யென்றன்
செவியறியா தொலியெதையும் செப்பியு மறியேன் பொருள்
புவிபுகழும் ஆறுமுகா! உன் புனித முகம் நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து.
3✓
உலகமெலாம் காக்கும் கந்தா உளம் மகிழும் ஒளி உருவே
நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெலாம் வாழும் தேவே
பலர்போற்றும் சிவன் மைந்தா! பக்திமிகு அந்தணர் தம்
குலதேவா! வேதத்தின் தத்துவமே! கோலமயில் வாகனனே! பணிக்கின்றேன்
4✓
செந்திற் கடலுடையோன் சேவடி துணையென்றே
வந்தவர்தம் பிறவியெனும் வரையில்லாக் கடலினியே
கந்தன் திருவருளால் கடந்திடுவர் பராசக்தி
மைந்தன் பதம்பணிவோம் மால்மருகன் சொன்னபடி.
5✓
ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலலையும்
ஆங்கென் அடிபணிந்து அமர்ந்திடுமாம் விந்தை போல
ஏங்கும் கவலையொடு என்முன்னே வந்திட்டால்
நீங்கும் தீங்கென்பான் நெஞ்சிலுறை செந்தூரான்.
6✓
எந்தன்மலை வந்தவர்கள் எந்தைமலை போனவர்கள்
கந்தன்மலை வந்தவர்கள் கைலைக்கு வந்தோரென்பான்
சிந்தும் ஒளி மதிமுகத்தோன் செந்திலுறை ஆறுமுகம்
செந்தாமரை மலரொக்கும் சேவடிகள் தாம் வாழ்க.
7✓
எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்க வல்ல
சித்தர்வாழ் கந்தன்மலை சீரலைவாய் ஓரத்தினில்
புத்தொளியாய்க் குகையினிலே புனிதகுகன் வீற்றுள்ளான்
புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்.
8✓
மாணிக்கக் கட்டிலென்ன மாசறு பொற் கோயிலென்ன
நாணக் கண்டிடலாம் நாற்கோடி ரவி ஒளியும்
வானத்துத் தேவன் வரம்வேண்டத் தான்தருவான்
காணக்கண் குளிரும் கார்த்திகேயன் தாள்பணிவோம்.
9✓
செந்நிறப் பாதமலர் சிந்தும் தேனமுதமலர்
இன்னொளி பாதரசம் இன்பமய மாக்கும் மனம்
உன்னினைவில் நினைவாக உலவிவரும் வண்டெனவே
என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே.
10✓
தங்கமய ஒளிவீசும் தகதகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரைஞாணும் ஒட்டியாணம்
கிண்கிணிக்கும் சலங்கை ஒலிகிறங்க வைக்கும் இடுப்பழகும்
எங்கும் ஒளி வடிவாம் எழில்முருகன் நாம் பணிவோம்.
11✓
மங்கைகுற வள்ளிதனை மால் மருக னணைத்ததுமே
கொங்கை யழகிட்ட குங்குமமும் மார்புதைந்தே
அங்கும் செவ்வொளிவீச அன்பர்தமை யாட்கொள்வான்
தங்கநிற மார்புடையோன் தாரகனைக் கொன்றவனாம்.
12✓
சூரபதுமனைக் கொன்றே சுரன்பகை தான் வென்றே
தூரயமனை ஒட்டி துண்டித்த யானைத்தந்தம்
பாருலகம் படைத்தவனைப் பணியவைத்த வேலவனைச்
சேரும் உயிர்காக்கச் செந்தூரான் கரம் துணையே.
13✓
பனிக்காலச் சந்திரனும் பருவமெல்லாம் நிறைந்தாலோ
தனித்தாறு முழுமதியின் தன்னொளிபோல் ஆறுமுகம்
தனக்குள்ளே மாசுற்றும் தரணியிலே தோணும் மதி
கனிக்காக வலம்வந்த கந்தனுக்கு நிகராமோ.
14✓
அன்னப் பறவைகளோ? ஆறுமுகா புன்சிரிப்பு
இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம்வருமே
வண்ணமலர்த் தாமரையில் வண்டுலவும் விழியழகை
என்ன சொல்ல! சிவபாலா! எழில் தாமரை முகனே!
15✓
கண்விழிகள் பன்னிரண்டும் காதுவரை நீண்டிருக்கும்
நின் கருணைப் பெருவெள்ள நீர்த்துளிதான் கிட்டாதோ
அன்பரெனத் தொழுவோர்க்கு அருள்புரிந்தால் குறைந்திடுமோ
உன்பார்வை படுமாயின் உய்வேனே உமைபாலா.
16✓
முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
என்னின் றுதித்தமைந்தா என்றென்றும் வாழ்கவென
சொன்னதுமே ஆறுமுறை சுகவாழ்வை நிலையாக்கும்
மண்ணுலகின் சுமைதாங்கும் மணிக்கிரீட சிரம்பணிவோம்.
17✓
மாலை மணியணிகள் மார்பில் அசைந்தாட
கோலமிகு காதணியும் குண்டலமும் தோள்வரையும்
மேலிடை பட்டாடை மேன்மையொளி வீசிடுமே
வேலன் புரமெரித்தோன் வேதமைந்தா நீ வருக.
18✓
“இங்குவா” வெனறதுமே இளைய திருக்குமரன்
சங்கரிதன் மடியிருந்து சங்கரன் கரம்தழுவும்
தங்கநிற இளமேனி தவழும் குழந்தையவன்
திங்கள் முகமாறும் தினமும் பணிந்திடுவேன்.
19✓
குமரா! ஈசன்-திருமகனே! குகனே! திருமயில் வாகனனே!
அமரர்பதியே! ஆறுமுகா! அடியார் துயர்கள் நீக்குபவா!
சமரில் தாரகனைக் கொன்றவனே! சரவண வள்ளி மணாளா!
உமையாள் உருவாம் வேல்முருகா! உம்மைப் பணிந்தோம் காத்திடுவாய்
20✓
புலனடங்கி நினைவிழந்து பொறி கலங்கி கப மடைக்கப்
பலம் நலிந்து செயல் மறந்து பயம் மிகுந்து உடல் நடுங்க
நலம் நசிந்து உயிர் மறைந்து நமனை நாடும் போதினில்
உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உனையல்லால்.
21✓
வெட்டு, பிள, பொசுக்கென்று வெஞ்சினமாய் யமதூதர்
கிட்டவரும் காலமதில் திருமயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்டவந்து ‘அஞ்சேல்’ எனத்
தொட்டுக் காத்தருளத் தோன்றிடுவாய் வேலவனே.
22✓
உனைப்பணிந்து கேட்கின்றேன் ‘ஓம் முருகா’ என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்
துணைபுரிவாய் அப்பொழுது துதித்திடுவேன் இப்போதே.
23✓
தாரகன் சிங்கமுகன் தம்பிகளின் தமையனவன்
சூரபத்மன் என்பவனும் சூழும் அண்ட மாயிரத்தை
வீரமொடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன நோய்நீக்கிப் பார்த்தருள்வாய் வேலவனே.
24✓
உமையாள் திருமகனே! உன்னடியேன் துக்கமெனும்
சுமையால் தளர்ந்தவன் நான் சுந்தரவடி வேல்கொண்டு
இமையா அமரர்தேவா! ஏழைக் கிரங்கும் வேலா!
உமையன்றி வேறறியேன், உளநோய் நீக்கிடுவாய்.
25✓
காசம்கபம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலெனும்
நாசம்செய்யும் பெருநோயும் நலியவைக்கும் பைசாசம்
வாசம் செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலா உன்
பூசுமிலைத் திருநீற்றால் போக்கிடுவாய் தீவினையாம்.
26✓
கந்தனைக் காணவே கண்கள் கரங்களும் அவன் பணிக்கே
செந்தில் முருகன்புகழ் செவிபடைத்த பயனாகும்
சந்ததமும் அவன்சரிதம் சந்தமொடு வாய்ப்பாடும்
சிந்தனையும் உடல்வாழ்வும் சீரலைவாய்க் கந்தனுக்கே.
27✓
பக்திநெறி மனிதர்க்கும் பரதத்துவ முனிவர்க்கும்
முக்தி யளித்திடுவர் மும்மூர்த்தி தெய்வங்களாம்
எந்தையு மறிந்திடாத எளியநிலைப் பஞ்சமரின்
சித்தமருள் முருகனன்றி சிறியேனெதையு மறியேனே.
28✓
மனைவியொடு மக்களும் மனையில்வாழும் பசுக்களும்
மனிதனொடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும்
நினைந்துமையே வணங்கவும் நித்தமும் துதிக்கவும்
வினைகள் நீங்க வேள்வியை விதிப்படி நடக்கச்செய்வீர்.
29✓
நெடியமலைக் கிரௌஞ்சமதை நினைத்ததுமே வேல்கொண்டே
பொடிசெய்த வேலவனே! புண்படுத்தும் நோய்களையும்
கொடியவிடப் பிராணியொடு கொத்தவரும் பறவையினம்
கடுகியோடச் செய்திடுவீர் கைகள்தாங்கும் வேலதனால்.
30✓
தன்மகன் செய்தபிழை தந்தைதாய் மன்னியரோ?
உன்மகன் நானன்றோ! உலகத்தின் தந்தையே நீ
தென்பரங் கிரிதேவா! தேவ சேனாபதியே!
என்பிழை மலையெனினும் எளியேனைப் பொறுத்தருள்வாய்.
31✓
கந்தா! உன்மயில் போற்றி கடம்பா வேல்போற்றி சிவன்
மைந்தா! சேவல் போற்றி! மறியாடும்தான் போற்றி
சிந்தா குலந்தீர் செந்தூரா! சிந்தும் சேவடியும் போற்றி
வந்தே வரமருள்வாய் வணக்கம் வணக்கமையா.
32✓
வெற்றிதரும் இன்ப வடிவேலனே! சிவன்மகனே!
வெற்றியின் திருஉருவே! விளங்கும் புகழுடையோய்!
வெற்றி கொண்ட திருக்கடலே! வெள்ளப் பெருக்கினைப்போல்
வெற்றிபுகழ் இன்பமெலாம் வேண்டுவோர்க் கருளிடுவீர்.
33✓
கந்தனின் புஜங்கமதைக் கவிபாடி பக்தியோடு
வந்தித்து வழிபட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம்
சிந்தைக் குகந்த இல்லாள், செல்வம் நன் மக்களுடன்
தந்திடும் பேரின்பநிலை தரணிபுகழ் குகனருளே.