முருகன் App
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
குமரகுருபர அடிகள்
பகுதி 11 / 1
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா · குமரகுருபர அடிகள்

பகுதி 1

1✓
பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேற்றிய
பாமேவு தெய்வப் பழமறையும்—தேமேவு
2✓
நாதமு நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய்—ஆதிநடு
3✓
அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தந் தணந்த பரஞ்சுடராய்—வந்த
4✓
குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும்
செறியும் பரம சிவமாய்—அறிவுக்கு
5✓
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக் கெட்டா வடிவாய்த்—தனாதருளின்
6✓
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்குந் தனிப்பொருளாய்—எஞ்சாத
7✓
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவர வும்புணர்வும்
காரணமு மில்லாக் கதியாகித்—தாரணியில்
8✓
இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்கும்
தந்திரத்திற் சாராது சார்வதுபோல்—முந்தும்
9✓
கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்—திரிகரணம்
10✓
ஆகவரும் இச்சை அறிவியற்ற லாலிலய
போகஅதி காரப் பொருளாகி—ஏகத்(து)
11✓
உருவும் அருவும் உருவருவு மாகிப்
பருவ வடிவம் பலவாய்—இருள்மலத்துள்
12✓
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்தியளித் தற்குமல
பாகமுற வேகடைக்கண் பாலித்துத்—தேகமுறத்
13✓
தந்த அருவுருவஞ் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து—மந்த்ரமுதல்
14✓
ஆறத்து வாவுமண்டத் தார்ந்தவத்து வாக்களுமுற்
கூறத் தகுஞ்சிமிழ்ப்பிற் கூட்டுவித்து—மாறிவரும்
15✓
ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள்—தீர்வரிய
16✓
கன்மத்துக் கீடாய்க் கறங்குஞ் சகடமும்போற்
சென்மித் துழலத் திரோதித்து—வெந்நிரய
17✓
சொர்க்காதி போகமெல்லாந் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்கா ரணஞ்சிறிது நண்ணுதலும்—தர்க்கமிடும்
18✓
தொன்னூற் பரசமயந் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து—முன்னூல்
19✓
விரதமுத லாயபல மெய்த்தவத்தி னுண்மைச்
சரியைகிரி யாயோகஞ் சார்வித்(து)—அருள்பெருகு
20✓
சாலோக சாமீப சாரூப மும்புசிப்பித்து
ஆலோகந் தன்னை அகற்றுவித்து—நால்வகையாம்
21✓
சத்திநி பாதந் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் காலம் உளவாகிப்—பெத்த
22✓
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி—உலவா
23✓
தறிவுக் கறிவாகி அவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்—பிறியாக்
24✓
கருணைத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப்பேர் கொண்டு— திருநோக்கால்
25✓
ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழுமத்து வாக்கள் இருமூன்றும்—பாழாக
26✓
ஆணவ மான படலங் கிழித்துஅறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப்—பூணும்
27✓
அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவுங் காட்டிக்
கடியார் புவனமுற்றுங் காட்டி—முடியாது
28✓
தேக்கு பரமானந்தத் தெள்ளமுத மாகியெங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப்—போக்கும்
29✓
வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா இன்பம்—மருவுவித்து
30✓
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் மின்னிடத்துப்
31✓
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளி வெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி—மூத்த
32✓
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்(து)உள்நின்(று)
ஒருமலத்தார்க் கின்பம் உதவிப்—பெருகியெழு
33✓
மூன்றவத்தை யுங்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத்—தோன்றவரும்
34✓
யானெனதென் றற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக—ஞானம்
35✓
திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா—இருநிலமே
36✓
சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே—மின்னுருவம்
37✓
தோய்ந்தநவ ரத்நச் சுடர்மணியாற் செய்தபைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும்—தேய்ந்தபிறைத்
38✓
துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும்—விண்ட
39✓
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு)
அருள்பொழியும் கண்மலர் ஈராறும்—பருதி
40✓
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும்—நிலவுமிழும்
41✓
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும்—வின்மலிதோள்
42✓
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்துந் திருமுகமும்—எவ்வுயிர்க்கும்
43✓
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதருஞ் செய்ய மலர்முகமும்—சூழ்வோர்
44✓
வடிக்கும் பழமறைக ளாகமங்கள் யாவும்
முடிக்குங் கமல முகமும்—விடுத்தகலாப்
45✓
பாச விருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும்—நேசமுடன்
46✓
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோக மளிக்கு முகமதியும்—தாகமுடன்
47✓
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும்—கொந்தவிழ்ந்த
48✓
வேரிக் கடம்பும் விரைക്കുറவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும்—ஆரமுதம்
49✓
தேவர்க் குதவுந் திருக்கரமுஞ்—சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும்—ஓவாது
50✓
மாரி பொழிந்த மலர்க்கரமும்பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும்—மார்பகத்தில்
51✓
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கி லொருகரமும்—மொய்த்த
52✓
சிறுதொடிசேர் கையுமணி சேர்ந்த தடங்கையும்
கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும்—தெறுபோர்
53✓
அதிர்கே டகஞ்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்குங் கரமும்—முதிராத
54✓
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூ ணகன்மார்பும்—பைம்பொற்
55✓
புரிநூலுங் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை யழகும்—திருவரையும்
56✓
நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும்
பாதத் தணிந்த பரிபுரமும்—சோதி
57✓
இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தரு தெய்வீக வடிவும்—உளந்தனிற்கண்(டு)
58✓
ஆதரிப்போர்க் காருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே—ஓதியஐந்து
59✓
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய்—ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே—தாங்கரிய
60✓
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப்—பந்தனையால்
61✓
ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா—வைத்த
62✓
கலையே அவயவமாக் காட்டுமத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய்—பலகோடி
63✓
அண்ட முருவாகி அங்கஞ் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த்—தொண்டுபடும்
64✓
ஆவிப் புலனுக் கறிவளிப்ப வைந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே—மேவ
65✓
வருமட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தருமட்ட யோகத் தவமே—பருவத்(து)
66✓
அகலாத பேரன் படைந்தோ ரகத்துப்
புகலாகும் இன்பப் பொருப்பும்—சுகலளிதப்
67✓
பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
தேரின்ப நல்குந் திருநாடும்—பாரின்பம்
68✓
எல்லாங் கடந்த இருநிலத்துப் போக்குவர
வல்லா துயர்ந்த அணிநகரும்—தொல்லுலகில்
69✓
ஈறு முதலுமகன் றெங்குநிறைந் தைந்தெழுத்தைக்
கூறி நடாத்துங் குரகதமும்—ஏறுமதம்
70✓
தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம்
காய்ந்தசிவ ஞானக் கடாக்களிறும்—வாய்ந்தசிவ
71✓
பூரணத்துப் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துப் கட்டு நறுந்தொடையும்—காரணத்துள்
72✓
ஐந்தொழிலும் ஓவா தளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும்—சந்ததமும்
73✓
நீக்கமின்றி யாடி நிழலசைப்பான் போற்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும்—தேக்கமழ்ந்து
74✓
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசுந் தசாங்கமெனப் பெற்றோனே—தேசுதிகழ்
75✓
பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையு முக்கட் பரஞ்சோதி—ஆங்கொருநாள்
76✓
வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோ டதோமுகமும்—தந்து
77✓
திருமுருகங்க ளாறாகிச் செந்தழற்க ணாறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப—விரிபுவனம்
78✓
எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும்
பொங்குந் தழற்பிழம்பைப் பொற்கரத்தால்—அங்கண்
79✓
எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுகியென் றெம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய்—அடுத்ததொரு
80✓
பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப்—போதொருசற்
81✓
றன்னவளுங் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற்
சென்னியிற்கொண் டுய்ப்பத் திருவுருவாய்—முன்னர்
82✓
அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன்—குறுமுறுவற்
83✓
கன்னியொடுஞ் சென்றவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள் கண் டவ்வுருவ மாறினையும்—தன்னிரண்டு
84✓
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச்—செய்ய
85✓
முகத்தில் அணைத்துச்சி மோந்து முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத் தளித்துச்—சகத்தளந்த
86✓
வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்
துள்ள முவப்ப வுயர்ந்தோனே—கிள்ளைமொழி
87✓
மங்கை சிலம்பின் மணியொன் பதிற்றோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து—தங்கள்
88✓
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயுந் தார்வீர வாகு—நெருப்பிலுதித்(து)
89✓
அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந்(து)—எங்கோன்
90✓
விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந்தெண் திக்கும்
நடத்தி விளையாடு நாதா—படைப்போன்
91✓
அகந்தை யுரைப்பமறை யாதி யெழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை—புகன்றிலையால்
92✓
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்துங் கோமானே—மட்டவிழும்
93✓
பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரம மொழிந்தோனே—கொன்னெடுவேல்
94✓
தாரகனு மாயத் தடங்கிரியுந் தூளாக
வீர வடிவேல் விடுத்தோனே—சீரலைவாய்த்
95✓
தெள்ளு திரைகொழிக்குஞ் செந்தூரிற் போய்க்கருணை
வெள்ள மெனத்தவிசின் வீற்றிருந்து—வெள்ளைக்
96✓
கயேந்திரனுக் கஞ்ச லளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச்—சயேந்திரனாம்
97✓
சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய
வீரனைத்தூ தாக விடுத்தோனே—காரவுணன்
98✓
வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய
தானவர்கள் நாற்படையுஞ் சங்கரித்துப்—பானுப்
99✓
பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய்—சகமுடுத்த
100✓
வாரி தனிற்புதிய மாவாய்க் கிடந்தநெடுஞ்
சூருடலங் கீண்ட சுடர்வேலோய்—போரவுணன்
101✓
அங்கமிரு கூறா யடன்மயிலுஞ் சேவலுமாய்த்
துங்கமுட னார்த்தெழுந்து தோன்றுதலும்—அங்கவற்றுள்
102✓
சீறுமர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்து மிளையோனே—மாறிவரு
103✓
சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென
மேவத் தனித்துயர்த்த மேலோனே—மூவர்
104✓
குறைமுடித்து விண்ணங் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்தாட் கொண்டளித்த தேவே—மறைமுடிவாம்
105✓
சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றைமணஞ் செய்தோனே—பொய்விரவு
106✓
காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப்—பூமருவு
107✓
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத் தினிதிருந்து—மேன்மைபெறத்
108✓
தெள்ளித் தினைமாவுந் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே—உள்ளமுவந்து
109✓
ஆறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன்
கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே—நாறுமலர்க்
110✓
கந்திப் பொதும்பரெழு காரலைக்குஞ் சீரலைவாய்ச்
செந்திற் பதிபுரக்குஞ் செவ்வேளே—சந்ததமும்
111✓
பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும்—பல்கோடி
112✓
பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசுமடற்
பூதமுந்தீ நீரும் பொருபடையும்—தீதகலா
113✓
வெவ்விடமும் துட்ட மிருகமுத லாமெவையும்
எவ்விடம்வந் தெம்மை எதிர்ந்தாலும்—அவ்விடத்தில்
114✓
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும்—கச்சைத்
115✓
திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையும் ஈரா(று)
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும்—விரிகிரணம்
116✓
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற—வந்து இடுக்கண்
117✓
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமுந் தந்துபுகுந்(து)
உல்லாச மாக உளத்திருந்து—பல்விதமாம்
118✓
ஆசுமுதல் நாற்கவியு மட்டாவ தானமுஞ்சீர்ப்
பேசுமியல் பல்காப் பியத்தொகையும்—ஓசை
119✓
எழுத்துமுத லாமைந் திலக்கணமுந் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து)—ஒழுக்கமுடன்
120✓
இம்மைப் பிறப்பில் இருவா தனையகற்றி
மும்மைப் பெருமலங்கண் மோசித்துத்—தம்மைவிடுத்(து)
121✓
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகந் துய்ப்பித்துச்—சேய
122✓
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின் றருள்.