வண்டுவிடு தூது
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
பாடல்கள்1 / 1
வண்டுவிடு தூது · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
பாடல்கள்
1✓
மூக்கா லுழுதுண்ணும் வண்டுகாள்
மூத்தோன் இளவலைக் கண்டுதான்
தேக்கா ரமுதரன் மைந்தனே
சீர்ப்பார்ப் பதிதரு கந்தனே
நோக்கா யுனைநினைந் தன்பினால்
நோற்பாள் தனையின மென்றுநீர்
மாக்கா வளமலி போரிவாய்
மாத்தா ளிணைதொழு தேத்துமே.
2✓
தாமரைப் பூமணத் தேனெலாந்
தண்டுறை யுண்டுறை வண்டுகாள்
கோமளப் பாவையர் கேள்வனை
கொண்டை மயுரப்ர சண்டனைப்
பாமணப் போரியிற் கண்டிதோர்
பாவைப ணிந்தன ளென்றுதான்
நீர்மனத் தன்பொடு பேசுவீர்
நீள்சுகப் பொய்கையில் மூழ்கவே.
3✓
தாதினைத் தேனொடுங் கூட்டியே
சந்தனம் பூசிய வண்டுகாள்
ஆதரித் தென்னைமுன் ஆண்டவன்
ஆறுமு கப்பெரு மாளுடன்
பேதைமைப் பான்மைய ளாயினும்
பிச்சியை யொத்தவ ளேனுமியான்
மூதருட் பேரமு தாழிவாய்
மூழ்கிடப் பேசுமின் நீவிரே.
4✓
சோலை விருந்திட வுண்டுதான்
சோபனம் பாடிய வண்டுகாள்
காலமெ லாமுனை யேநினை
காரிகை கைதொழு தாளென்றே
ஆலையின் வாயென மேதிவாய்
அம்புயத் தேன்சொரி போரிவாழ்
வேலவன் நூபுரக் கஞ்சமேல்
விழுந்தெழுந் தாடிவி ளம்புமே.
5✓
கோங்கலர் மாழைம தாணிமேற்
குயின்ற மணியன்ன வண்டுகாள்
மாங்கனி வாழையின் தீங்கனி
மன்னு பலாக்கனிச் சாறெலாந்
தேங்குறும் போரியி லுண்டுநீர்
செவ்வேள் பதம்பணிந் தேத்தியே
ஓங்கொளி வீடுற நாயினேன்
ஓதுமின் என்துணை நீவிரே.
6✓
சந்தனச் சாரலின் நெய்தலில்
தண்டலை நந்தனச் சூழலில்
வந்தொரு நால்வகைப் பூநறை
வாசந் துளைந்தாடும் வண்டுகாள்
கந்தனைப் போரிவி சாகனைக்
கண்டென் கவலைக்க ருத்தறச்
சிந்தை மகிழ்ந்தெனை யாளவே
செப்புமின் எற்குற வானிரே.
7✓
மல்லிகைத் தாதரித் துண்டலர்
வாரிசத் தேன்கொடு வாய்கழீஇ
மெல்லிதழ்ப் பூவணை மீதிலே
மென்துயில் கொண்டுறை வண்டுகாள்
அல்லியல் நெஞ்சினன் அன்பிலா
ளான நெறிபுரி யாதவள்
புல்லிய ளென்றுவி டாதெனைப்
போரி முருகனுக் கோதுமே.
8✓
தண்டலை யூர்விண்டு நெய்தலூர்த்
தாவடி போய்ப்பனைக் கள்ளெலாம்
மொண்டு மிகக்கொள்ளை கொண்டுதான்
மொய்த்து வருஞ்சிறை வண்டுகாள்
பண்டெனை யாண்டருள் நேசனைப்
பண்புறு போரியில் வாசனைக்
கண்டினம் ஆண்டுகொ ளென்றுநீர்
காண வுரைத்திடு வீர்களே.
9✓
மாமலைச் சேணிலத் தேதுஞ்சி
வார மனைபுகுந் துண்டுபின்
கோமலர்க் காமுக சாலையிற்
கூடும் அரசில வண்டுகாள்
தேமலர்த் தார்புனை மார்பணைச்
செஞ்சிறை யஞ்சேவ லாளனைக்
காமணக் குந்திருப் போரிவாய்
கண்டெனை யாண்டிடச் சொல்மினே.
10✓
நீல நிறப்பொறி வண்டுகாள்
நித்தலுங் கைதொழு வேன்உமை
ஏல வுரைத்த மொழிகளை
யெல்லாம் அயர்த்து விடாதுநீர்
சால நிகழ்த்திடும் போரிவாழ்
சண்முக வேலனுக் குங்களைப்
போலு மெனக்குற வுண்டுகொல்
பொங்கரும் நுங்களுக் கீவலே.