அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்
பதிகம்
1✓
சரவணத் துதித்த அந்தச்
சண்முகப் பெருமான் றன்னைச்
சிரவணக் கஞ்செய் தேத்தித்
திருப்தியுஞ் சீருங் கொள்வோம்
அரசனைப் பதனைச் செய்யும்
அநுராத புரத்தி லென்னைக்
கரவனைப் பாக்கு வாறாங்
கதிரேசக் காத லோனே.
2✓
காதலால் யானுஞ் சென்று
கந்தனைக் கண்ணாற் கண்டேன்
ஏதமின் றியன்ற சீரார்ந்
தெழிலுறு கோவில் தன்னில்
சாதலாந் துன்ப மில்லை
சந்ததம் சுகமே யுண்டு
ஆதலா லனைவ ருஞ்சென்
றநுரனை வழுத்து வோமே.
3✓
வழுத்துவோம் வாழ்வு வேண்டி
வடக்கிருந் திடுவான் றன்னை
எழுத்திலே வடிக்கின் றேனே
எந்தனின் மாட்சி தன்னைப்
பழுத்தநற் பழம்நீ யென்ற
பான்மையாம் பாலன் முன்னை
அழுத்தியே அசுரன் தன்னை
அடர்த்தருள் செய்த தேவே.
4✓
தேவுதன் தெய்வத் தன்மை
தேர்ந்திடா என்னை யின்று
மேவுதன் கோவி லுக்கு
விருப்பொடு மீர்த்து வந்தே
சேவுகஞ் செய்வா யென்று
திருவழி காட்டி என்பாற்
பாவகந் தருளும் எந்தை
பகர்திரு வடிகள் போற்றி.
5✓
திருவடி மறவேன் ஐயா
திருவருள் வழியில் வாழும்
ஒருவர மருளு வீரேல்
உள்ளமும் உணர்வும் ஓங்கும்
பெருநிலை தானே சேரும்
பிஞ்சுகா பேதை யேற்கும்
அருளுருக் காட்சி தந்த
அநுரையி லமர்ந்த கோவே.
6✓
கோவேயென் றென்று முன்றன்
கோலத்தைக் காட்டு வாயேல்
சாவேவ ராதா மென்று
சாகின்றேன் சாட்சி யில்லை
பாவாரஞ் சூட்டி யன்பாற்
பரவுத லறியேன் ஐயா
நாவீறிங் கிருந்து மென்ன
நமனிடம் ஏகின் றேனே.
7✓
நமனிட மேகு நாளில்
நாமேது செய்கின் றோமால்
எமதுநா னென்ப வற்றை
எறிவதுஞ் செய்வோம் வானம்
கமமிகு நிலையில் நாளுங்
கார்முகில் கதுவி வண்டர்
அமர்பொழில் சூழு மாரு
ரநுரையிற் கந்த வேளே.
8✓
கந்தவே ளுனது பாதங்
கருத்திலே வைத்தே னையா
வந்தனை வழிபா டாற்றி
வாழ்ந்திடு மக்கள் தம்மைச்
சிந்தனை செயல்சொல் யாவும்
சிறந்திட நல்வாழ் வீந்தே
அந்தமி லமர வாழ்வை
யளித்திடு மநுரை வேலே.
9✓
வேலனே விக்கி னங்கள்
வினைகளை விடுவிப் பாயே
ஞாலம்பொல் லாங்கு நீங்கி
நலம்மிகக் காத்தி டாயே
சீலமார் தமிழ்முன் போலத்
திகழ்ந்திட அருள்செய் வாயே
மாலவன் மருகா கந்தா
வரந்தரு மநுரை வாழ்வே.
10✓
வரமது தருவாய் போற்றி
வானவ ரேறே போற்றி
கரஞ்சிரங் குவித்தேன் போற்றி
கார்த்திகைத் தீபா போற்றி
புரமிசை யிருப்பாய் போற்றி
புனிதனே குமரா போற்றி
அரனருள் சரவ ணத்தோய்
அநுரையாய் போற்றி போற்றி.