இணுவை அந்தாதி
இ. திருநாவுக்கரசு
இணுவை அந்தாதி · இ. திருநாவுக்கரசு
நூல்
1✓
திருத்தங் கிணுவை திகழ்நொச்சி யம்பதி சேர்முருகன்
கருத்தங்கு போதென் கருத்தில் இனித்திடும் கந்தனையென்
வருத்தும் பிறவிப் பெரும்பிணிக் காய மருந்தெனக்கொண்
டருத்தியிற் றாளிணை கண்டேன் அவையெற் கருந்துணையே.
2✓
துணைநன் மலர்ப்பதம் சூடுவன் நாளும் துணைபுரிந்து
இணையில் மனிதப் பிறவியெடுத்த இணையிலின்பம்
அணையும் சிவநெறி பாலித் திடும்அருள் நல்லிணுவை
அணைமின் அறுமுகன் அம்பொற் பதங்கள் அநுதினமே.
3✓
அநுதினம் நாண்மலர் அங்கைக்கொண் டேத்தும் அடியவர்க்கே
அநுசிதம் நீக்கி அளவில்திருவும் அருள்நிதியும்
தநுகரணப் புவனம் பெரும்போகம் தழைக்குமின்பம்
அநவர தம்அருள் வான்நல் லிணுவை அறுமுகனே.
4✓
அறுமுகன் செந்தி யனைய திருவளர் நல்லிணுவை
நறுமலர்ச் சோலை நகுநொச்சி யம்பதி நண்ணியன்பர்
மறுவுறும் உள்ள மலர்மணிப் பீடம் மகிழ்ந்துறைவான்
பெறுவது வேண்டிற் பெருஞ்சாத் தொடன்பர் பெயர்மின்களே.
5✓
அன்பா லடிபணி வார்க்கின்ப வாழ்வு அருளுஞ்சுற்றம்
இன்பான செல்வ இருநிதிப் பேரருள் இன்பம்நல்கும்
நன்பான லன்ற னளிவிழி வள்ளிநற் றெய்வமகள்
தன்பால் மருவ இணுவை நகருறை சண்முகனே.
6✓
சண்முக நாதன் சரவணப் பூந்தடஞ் சார்ந்துவளர்ந்(து)
எண்முக மாறுயர் கார்த்திகைப் பெண்கள் உவந்தெடுத்து
உண்முக மாகநற் பாலமு தூட்ட உவந்தருந்தி
நண்ணி நயந்துறை வான்வந்திப் பார்க்கின்பம் நல்கிடவே.
7✓
வந்திக்கும் அன்பர் மருளொழித் தின்பம் மலர்கவென்று
புந்திக் கிலேசமும் முந்தை வினைமுழு தும்மழித்து
சிந்தைக் கினிய செவிக்கினியதாஞ் சொல்லும் வாய்க்கினிய
கந்தன் இணுவை நயந்தனன் கல்யாண வேலவனே.
8✓
வேலவன் கோல மயில்விளை யாடுங் குகன்அடியார்ச்(கு)
ஏல உயிர்க்குயி ராயுள் புகுந்தளித் தோங்குமின்பம்
சால அருள்பவன் சங்கரன் அம்பிகை தந்தசுதன்
சீல இணுவை முருகன் திருவடி சேர்மின்களே.
9✓
மின்னிகர் நுண்ணிடை வேல்விழி வள்ளி விரும்புங்குகன்
தன்னிக ரில்தகர் ஊர்ந்தவு ணர்குலம் சாய்த்துவைவேல்
கொன்னிலைச் சூர்முதல் வேறறத் தொட்ட குமரன்நெடும்
பொன்னிலை மாட மலியிணு வைப்பதிப் புங்கவனே.
10✓
புங்கவன் பொன்னடி போற்றமெய்ஞ் ஞானநற் போதமருள்
சங்கரன் சண்முகன் சங்கரி அம்பிகை சேய்குடிலை
ஐங்கரன் தம்பி அணிவள்ளி தெய்வ யானைமகிழ்
மங்கல நல்லிணு வைக்குகன் வாழ்வருள் மாணிக்கமே.
11✓
மாணிக்கக் கூத்தன் மகிழ்சிவ காமி மணாளனுயர்
ஆணிப்பொன் னம்பலத் தாடி யழகியார் மாமதுரை
மாணி யிருவர் வணங்கக் கால்மாறி மருவும்நடன்
வேணிப்பி ரான்மகன் வேள்இணு வைப்பதி மேவினனே.
12✓
மேவார் புரங்கள் அழித்தன் றருளினோன் விண்ணவர்க்குச்
சாவா மருந்தருள் சங்கரன் நெற்றி தனிலுதித்து
மூவா முகுந்தன் விரிஞ்சற் கருளவெஞ் சூர்தடிந்தான்
பூவார் பொழிலிணு வைப்பதி மேவிய புண்ணியனே.
13✓
புண்ணியம் முன்பல கோடிசெய் தேன்முப் புரங்கள்அட
மண்ணியற் றேர்வரு வான்திரி சூலிநன் மைந்தன்புனப்
பண்ணியல் வள்ளி பதம்பணி வேலன் பழமறையோர்
நண்ணிய நல்லிணு வைக்கந்தன் நற்பதம் நாடுமினே
14✓
நாடரி தாகுமுன் நல்லடித் தாமரை நாண்மலர்தூய்ப்
பாடவல் லார்க்கரு ளும்பத பங்கயம் பைஞ்செழுந்தேன்
ஏடலர் நீப மலர்த்தொடை யான்நொச்சி யம்பதிவாழ்
ஆடக நன்மணி மந்திரம் மேவும் அறுமுகனே.
15✓
அறுமுகன் சங்கத் தலைமை யனாய்த்தமி ழாய்ந்துணர
உறுபுல வோர்க்கரு ளீந்தவன் நல்லி ணுவைமுருகன்
மறுவுறு வள்ளிதெய் வானை மருவ மகிழ்சிறந்து
நறுமலர் நாட்பதந் தந்தெமை வாழ்விக்கும் நாயகனே.
16✓
நாயகன் நாரணன் நான்முகன் நாடரும் நன்மருகன்
வேயன தோள்வள்ளி தெய்வத மாது மணாளன்சிவ
மாய பரஞ்சுட ரான குமாரன் அறிவறிந்த
தூயவர் வாழிணு வைப்பதி மேய சுடர்க்கொழுந்தே.
17✓
சுடர்நெடு வேலன் சுரர்குல காவலன் தோகைமஞ்ஞை
படர்கும ரேசன் பழநிசெந் தூர்பரங் குன்றம்வைகும்
இடர்கடிந் தின்றமிழ் பாட இனிதுகந் தின்பருளும்
கடமலி யைங்கரன் வாழிணு வைப்பதிக் காவலனே.
18✓
காவலன் கோல மயிலழ கன்கடம் பங்குகன்கோ
தேவ குலாதிபன் குஞ்சரி வள்ளி மணாளான்உயர்
மூவரு மாகிய மூல முதற்பொருள் முற்றுணர்ந்த
பாவலர் வாழிணு வைப்பதி வேலோன் பரஞ்சுடரே.
19✓
சுடர்வடி வேலோன் துடியிடை வள்ளி துணைவன்தெய்வ
மடமகள் குஞ்சரி மங்கை மணாளன் மலைமகள்சேய்
படவர வேரிடைக் கார்த்திகை மங்கையர் பாலயின்றோன்
தடமதில் சூழிணு வைப்பதி வாழ்சிவ சண்முகனே.
20✓
சண்முகன் பன்னிரு கையினன் அன்பர்க் கருள்கருணைக்
கண்ணினன் கார்மயில் வாகனன் கற்பகம் காமவல்லி
பெண்ணமிர் தாகிய வள்ளிதெய் வானை மருவுதமிழ்ப்
பண்ணியற் பாவலர் சேரிணு வைவாழ் பரஞ்சுடரே.
21✓
பரஞ்சுடர் நெற்றியங் கண்ணிடைத் தோன்றிப் பவனன்அங்கி
வரந்தரு கங்கை சுமந்துய்ப்ப வான்சிமய விமயச்
சரந்திகழ் தெய்வச் சரவணப் பூந்தடஞ் சார்ந்தசெவ்வேள்
வரந்தர நல்லிணு வைப்பதி வாழும் அறுமுகனே.
22✓
அறுமுகன் அம்பிகை தன்சுதன் ஆரல் அரியகற்பின்
மறுவறு கார்த்திகை மங்கையர் பாலமு துண்டகந்தன்
இறுதிசெய் சூர்ப்பகை மாற்றி இமையவர்க் கின்பருளி
உறுதவர் வாழிணு வைப்பதி மேவி உறைந்தனனே.
23✓
உறைந்தென துள்ளத் துயிர்க்குயி ராயுணர் வுள்ளுணர்வாய்
நிறைந்தின்ப வெள்ளம் நிறைய வுள்கந்தன் நீலமஞ்ஞை
உறைந்தன்ப ருள்ள முவப்ப இணுவை உகந்துறைவான்
அறைந்து மறைநற் சிவாகமம் போற்றும் அருந்துணையே.
24✓
துணையும் துயர்துடைக் கும்வடி வேல்கொள் தொழுந்தெய்வமும்
கணையொன் றியவிழிக் கன்னி யுமையருள் கண்மணியும்
பணையொன் றியதனக் குஞ்சரி வள்ளி மருவுமின்பத்
தணையும் இணுவையிற் கல்யாண வேலர் அருட்குருவே.
25✓
குருபரன் மால்மரு கன்கய மாமுக னைக்கடிந்த
ஒருமருப் பானை முகற்கிளை யோன்உம்பர் நாடழித்த
வெருவரு சூர்தடிந் திந்திரற் கன்றவ் வுலகளித்த
திருமுரு கன்இணு வைப்பதி சேர்சிவ சண்முகனே.
26✓
முகமல ராயும்முந் நான்குயர் தோளும்நன் முண்டகத்தின்
அகவிதழ் நேரு மருவிழி பன்னிரண் டுங்கனகம்
தகதக வென்றொளி பாலிக்கு மாறு தனிமுடியும்
புகலிணு வைக்கந்த வேள்பத மும்என்றன் புந்தியவே.
27✓
புந்திக் கிலேசமும் மாயப் பிறவியும் போக்கவுன்றன்
சிந்தைக் கினிய திருவடி தந்தின்பச் சீர்தருவாய்
அந்திப் பிறையணிந் தம்பலத் தாடி அருட்குமரா
செந்திற் பதிநிகர் சீரிணு வைச்சிவ சண்முகனே.
28✓
சண்முகங் கொண்ட தனிவடி வேல சரவணத்துக்
கண்ணுதல் நெற்றிக் கனலிடைப் பூத்தவென் கண்மணியே
பண்முகன் நான்மறை யுண்மகிழ்ந் தோதப் பவந்துடைப்பாய்
பண்ணவர் போற்றிணு வைப்பதி வேல்கொண்ட பாலகனே.
29✓
பால குமரன் பகீரதி தாங்கும்பா சைக்குழந்தை
வால கிராதன் மகள்வள்ளி காந்தன் வலம்புரிசூழ்
கோல வெழிற்செந்தி வந்தெமை வாழ்விக்க கோலமிகு
நீல மயின்மிசை வந்திணு வைப்பதி நிற்பவனே.
30✓
நிற்கு மெனவெண்ணி நில்லாத வற்றை நினைவிற்கொண்டு
அற்ப அறிவால் அருட்பதங் கள்மறந் தேன்அறுகால்
நிற்கும்பொன் னாண்மலர் சேரும் பழமுதிர் சோலை நின்று
பொற்பதி நல்லிணு வைக்கோயில் கொண்டருள் பூரணனே.
31✓
பூரண சந்திரன் போன்முக மாறுடைப் புங்கவன்றாள்
ஆரண வேதவண் டோலிட்டும் காணற் கரியனவாம்
காரண னாய்ப்பரி பூரண னாய்அயில் கையிற்கொண்டு
தோரண வாயி லிணுவைப் பதிமேய செங்குன்றனே.
32✓
குன்றொடு தாரகச் சூர்முதல் சாடிச் சுரர்பதங்கள்
அன்றம ரர்க்கருள் செய்த அறுகரு வேலுமுண்டாம்
மன்றமர் தாதை மகிழப் பிரணவ மாண்பொருளை
அன்றுப தேசித் திணுவை நகர்கொண்ட அற்புதற்கே.
33✓
கொண்டல் தவழ்சிம யக்கந்த வெற்பினிற் கோவில்கொண்டு
தெண்டிரை சூழ்செந்தில் மேவி மகேந்திரஞ் சென்றவுணர்
பண்டுரை வீர மகேந்திரம் அட்ட பரம்பொருளே
எண்டிசை போற்றிணு வைப்பதி மேய எழிற்கந்தனே.
34✓
கந்தன் கடம்பன்நற் காங்கேயன் கார்த்திகை மங்கையர்கள்
வந்தமு தூட்ட வளர்கார்த்தி கேயன் மயிலழகன்
சுந்தரத் தேவநற் குஞ்சரி காந்தன் சுடர்வடிவேல்
மைந்தன் இணுவை வளநகர் சேர்சூர் பயங்கரனே.
35✓
சூர்இனம் மாளத் தொடுவடி வேலன் துணைமலர்த்தாள்
சீர்தரும் செல்வம் தரும்இன்ப வாழ்வு சிறக்கநல்கும்
ஏர்தரும் செந்திநின் றெண்டிசை போற்ற இணுவைநகர்
சேர்சிவ சண்முகன் பன்னிரு தோள்கொண்ட சேவகனே.
36✓
சேவகன் செந்தில் திருப்பரங் குன்றம்நற் சோலைமலை
மேவு பழநி திருவாவி னன்குடி ஏரகஞ்சேர்
பாவகன் அங்கி பகீரதி தாங்கிய பாலகுகன்
நாவலர் வாழ்இணு வைப்பதி மேவிய நாயகனே.
37✓
நாயக மான மலர யனைச்சிறை செய்துலக
நாயக னாக உலகளித் தோன்நவை தீர்த்தெமையாள்
நாயகன் வேல்கொண்டு வெஞ்சூர் தடிந்த வளரிணுவை
நாயகன் மாயன் மருகன் சிவமகிழ் நற்சுதனே.
38✓
மகிழ்கொன்றை பாதிரி மல்லிகை முல்லை மகிழ்துளவு
முகிழ்சண் பகம் கடம் பார்நொச்சி வில்வம் முகிழ்மலர்கள்
நெகிழ்மந்த காச மருமலர்ச் சோலை நிலவிணுவை
மகிழ்கந்த வேள்பதஞ் சூட வொழியும் மறுபிறப்பே.
39✓
பிறந்து மொழியபின் றுன்திருப் பாதம் பிணித்தஅன்பின்
சிறந்த திருப்பணி செய்து வணங்கிடச் சிந்தைகொண்டேன்
மறந்தும் மறுபிற வித்தளை பூணா வகையருள்வாய்
சிறந்து விளங்கிணு வைப்பதி மேய சிவகுருவே.
40✓
குருபர னேவடி வேல்கரங் கொண்ட சிவக்கொழுந்தே
இருவர்நன் மாதர் இருபுடை மேவ எழுந்தருளும்
திருமுரு காசெந்தில் வந்தெமை யாளிணு வைக்குமரா
கருவிடை மீண்டும் புகுதா வகைவந்து காத்தருளே.
41✓
அருக்க னொளிகண் ணொளிக்கலந் தாங்குன் அருட்கருணைத்
திருக்கடைக் கண்ணல்கு தேன்நல்கு வாய்செந்தி யம்பதியும்
திருத்தகு மாளிகை சூழிணு வைநொச்சி யம்பதியும்
திருக்கெழு மிச்சிந்தை யுங்குடி கொள்சிவ சண்முகனே.
42✓
சண்முக லிங்கம் சரவணம் மேவும் சகளலிங்கம்
எண்முக மாம்பத மெண்பத்து நான்குக்கொண் டிழிபிறவி
மண்ணுறக் கொண்டஎன் காயக் கிலேசமும் மாற்றியுன்றாள்
நண்ணுதற் கென்னை நயந்தருள் நல்லிணு வைக்கந்தனே.
43✓
கந்தனைக் கார்மயில் வாகன னைக்கடம் பாடவித்தோன்
உந்து மருமலர் மாலை தவழுந் திண்ணிய புயத்(து)
எந்தை யறுபடை வீடுடை யான்எழிற் செந்திவளர்
மைந்தனை நல்லிணு வைப்பதி வாழ்வை வழுத்துநெஞ்சே.
44✓
நெஞ்சம் புகுந்த குகன்நெடு மான்மக ளைப்புணர்ந்த
கஞ்ச மலர்ப்பதக் கண்ணுதல் மைந்தனைக் கற்பகநா
குஞ்சர மாம்பிடி தாங்கி யுயர்செந்தி யுற்றுகந்த
மஞ்சனை நல்லிணு வைப்பதி கண்டு வழுத்துமினே.
45✓
வழுத்துமின் நுங்கள் வருபிற விக்கு மருந்ததுவே
மழுத்தரித் தம்பலத் தாடி நுதலிடை வந்தருளி
முழுத்தழ லாகிச் சரவணம் புக்க குகனைமுன்னி
அழுத்தும் வினைகெடுப் பீர்இணு வைக்குகற் கன்புசெய்தே.
46✓
அன்புசெய் துன்னடித் தாமரை போற்றும் அருணகிரி
தென்பொதி கைக்குறு மாமுனி தெய்வப்பொய் யாமொழிநல்
தென்றமிழ்ச் சங்கத் தலைவன்நக் கீரன் கவிக்குகந்தோன்
என்றனிப் புன்கவி ஏற்குங்கொல் நல்லிணு வைக்கந்தனே.
47✓
குகனே குமரா குழகா குறிஞ்சிக் கிழவசிவன்
மகனே மலைமகள் மைந்தா கடம்பா மயிலழகா
நாக நா டுடைய மகவான் பதமருள் மால்மருகா
சுகமே தருவாய் இணுவை வளர்சிவ சண்முகனே.
48✓
சிவஞான சற்குரு கிண்கிணி தண்டை கிளர்மலர்த்தாள்
தவஞான பூபதி சங்கரி அம்பிகை தன்சுதனே
பவமாய வல்வினை பாறவை வேல்கொள் பரம்பொருளே
தவமாக வந்திணு வைப்பதி மேவும் சரவணனே.
49✓
மேவிநன் மெய்யடி யார்போல் நடித்து வினைநலியும்
பாவியென் நெஞ்சிற் பரிபவம் தீரும் பரிசருள்வாய்
தூவியந் தோகை மிசைவரு தெய்வத் துணைமலர்த்தாள்
ஆவியுள் நிற்பநல் லானந்த முற்றுற அருள்பரனே.
50✓
பரனே சிமய இமயப் பராபரை பாலகனே
அரனே அறுமுக னேயல ரம்புயத் தோன்தெருள
உரனே தரும்சிறை செய்தருள் நல்கிப்பின் உய்யத்தந்த
வரனே இணுவை மருவுதெய் வானை மணவாளனே.
51✓
மணவாளக் கோலத்து வந்துவள் ளிக்கன்று மால்செய்துபின்
கணநாத ரான கணபதி தன்றுணை கொண்டணைந்தோய்
பணமா சுணப்பள்ளிப் பார்மகள் கேள்வன்நன் மால்மருகா
தணியாத பேரன்பு தந்தெனை யாள்இணு வைக்கந்தனே.
52✓
கந்தனை வாசக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சிந்தனை செய்யச் சிவபதம் சித்திக்கும் தீமைதரும்
பந்தனை பாறும் பராபரை பாலற் பராவிநிதம்
வந்தனை செய்வீர் வளரிணு வைப்பதி வம்மின்களே.
53✓
வம்பணி பூண்முலை வள்ளி தெய்வானை மகிழ்நகரிக்
கொம்பணி பூண்முலைக் கார்த்திகைப் பெண்கள் குலவுமன்பால்
நம்பணி யீதெனப் பாலூட்ட வுண்டு நனிவளர்த்த
வெம்பணி பூணிறை தன்சுத நல்லிணு வைக்குகனே.
54✓
குகனே குறமகள் கொண்க கொடிய குலவவுணன்
சகமே லழியவை வேல்தொட்டுத் தேவர்க் கருள்துணைவா
அகமே மணிபொன் னருஞ்செல்வம் தேடி அவலமுறா(து)
இகமே பரசுகம் நல்காய் இணுவைவை வேற்கரனே.
55✓
வேலுண் டெமது வினைதீர்க்க மேலைப் பிறப்பறுக்க
ஆலும் பிணிமுக வூர்தியுண் டன்பர் அகங்குளிர்ப்ப
நூலும் கடம்பும் புரள்பன் னிருதோட் குமரனிரு
காலுண் டிணுவையிற் கந்தவே ளுண்டு கருணையுண்டே.
56✓
கருணைத் திருவுரு வாய்வந்து தோன்றிக் கருதுசிவ
அருணைத் திருப்பதி யாண்டினு வைப்பதி வாழ்முருகா
சரணம் பணிந்துய்யச் சாரும்பல் கோடி அடியருய்ய
அருணன் ஒளிசேர் அருட்பதந் தந்தெமை ஆண்டருளே.
57✓
ஆண்டுபல் கோடி யருச்சித் தடிமுடி தேடியன்று
காண்டலி லாதார் கவலுறும் மாலயன் கற்பவெல்லை
மாண்டு மடிவார் அவர்பதம் வேண்டேன் மதுதுளிக்கும்
ஈண்டு புகழிணு வைக்கந்த வேள்தாள் எமக்கினிதே.
58✓
இனிது கனிகன்னல் கற்கண் டதனில் இனிதமிர்தம்
இனிது மலர்த்தே னதனி னினிதுபஞ் சாமிருதம்
இனிது மலரணை இன்மனை மக்கள் இனிதரசு
இனிதி னினிதிணு வைக்கந்த னின்னருள் தேனமிர்தே.
59✓
தேன்துளிக் கும்மலர்க் கற்பகச் சோலைகொள் செல்வமலி
வான்பனிப் பெய்த வளரெரி யூட்டி வயங்குசெல்வம்
தான்பெற வன்றம ரச்சிறை செய்த தனிநெடுஞ்சூர்
ஊன்கெட வேல்தொட் டிணுவை மகிழ்ந்திங் குறைந்தனனே.
60✓
மகிழ்நகை வள்ளிதெய் வானை மருவ மயிலின்மிசை
முகிழ்நகை நன்மதி நேர்முக மாறும்முந் நான்குகையும்
அகிலமெல் லாம்பர வும்கிண் கிணிதண்டை யார்பதமும்
முகில்தவழ் சோலை யிணுவை பணிபவர் முன்னிற்குமே.
61✓
முன்செய் தவப்பய னாற்றன் னிருபத முண்டகங்கள்
இன்பம் பெறப்பணிந் தேத்தச் சிறந்தந் திணையடிகள்
அன்புற் றிடமனந் தந்து பரவக் கரங்கள்தந்து
என்சற் குருகுகன் இன்புற் றிணுவை இருந்தனனே.
62✓
இருந்துய ரங்கெடுத் தென்றும் அமரர் இனிதுறையப்
பெருந்திரு வும்தரு வும்பத மும்கொடுத் தென்றும்வையம்
விருந்தும் விழவும் பொலிய அறுபடை வீடுகொண்ட
குருந்தை இணுவைக் குமரனை வந்திக்கக் கூடுமின்பே.
63✓
கூடுமின் மெய்யடி யார்பதம் வந்திக்கக் கூடுமின்பம்
பாடுமின் பண்டை வினைகெடப் பந்தனை வீடுபெறத்
தேடுமின் செஞ்சுடர் வேலனைச் செல்வ மலியிணுவை
நாடுமின் நாடநல் லானந்த வாழ்வென்றும் நல்குவனே.
64✓
நல்குர வென்னும் நவையிடைப் பட்டு நலிவுபெறார்
மல்குறு செல்வம் வளர்மக்கள் நன்மனை வாழ்வுறுவார்
செல்வமெல் லாம்மலி நல்லிணு வைக்கந்தன் நாண்மலர்த்தாள்
அல்குறு பேரருட் செல்வம் பெறவந் தடையின்களே.
65✓
பெறலரும் கண்டா மணியொலி யோடியல் பேர்மழவம்
உறவுகொள் நல்லடி யார்பண் ணொலியொடு கீதவொலி
அறமலி பூசை மலியொலி அர்ச்சகர் கீதவொலி
பெறலரும் சீரிணு வைப்பதி தன்னொலிக் கும்பெரிதே.
66✓
ஒலிதெங்கு வாழை உயர்கமு காசினி ஓங்குபலா
மலிதுங்க வான்பயிர். சேர்தெய்வ வாழ்பதி வான்கங்கைபோல்
கலியுறு கூவல்நன் னீர்மலி நல்லிணு வைதொழவே
நலிதரு நோயில்லை நல்குர வில்லை நவையில்லையே.
67✓
நவையில் நவமணி நக்கொளி காலும் நளிமுடியும்
சிவையின் னொளிர்வெற்றி வேலும் ஒளிசேர் தினகரரின்
குவையன்ன மாமுக மாறுமீ ராறு புயமுந்தண்டை
கவைகொள் சிலம்படி யும்தந் தருள்இணு வைக்கந்தனே.
68✓
கந்தன் கடம்பன் களிமயில் வாகனன் கானவள்ளி
கொந்துண் குழற்றெய்வ யானை மணாளன் கொலையவுணர்
நந்தும் படிவடி வேல்தொட்டுத் தேவர்க்கு வாழ்வளித்த
மைந்தன் இணுவை வளர்நொச்சி யம்பதி வாழ்குகனே.
69✓
குகனே அடியர் குறைதவிர்த் தாட்கொள் குருபரனே
அகனே குழையுநல் லம்பிகை பாகன் அளித்தசிவ
மகனே சரவணப் பூந்தடம் மேவி அருளும்அறு
முகனே வடிவேற் கரனேமெய்ஞ் ஞான முழுமுதலே.
70✓
முழுமுத லேமுத்தி சித்தி தரும்ஞான சக்திவைவேல்
அழுதடி சேரும்மெய் யன்பர்உள் ளத்துறை அற்புதனே
இழுதென உள்ளம் உருகிநின் னாமம் உவந்துரைப்போர்
பழுதறுத் தாண்டடித் தாமரை தந்தருள் பண்ணவனே.
71✓
பண்ணும் தவத்தடி யார்தம தேழ்பிற விக்கும்அருள்
நண்ணும் படியருள் மெய்ஞ்ஞான பண்டித நாயடியேன்
கண்ணும்அக் கண்ணி லுறைமணி யும்மணி யின்ஒளியும்
விண்ணும் புவியும் விரிசுடர் யாவும்நீ மேலவனே.
72✓
மேலவ னேவெள்ளை வாரணம் போன்ற அருள்கரந்த
வேலவ னேதெய்வ யானை குறமகள் மேவவருள்
நூலவ னேநுவ லுந்தொறும் பேரின்பம் ஞானசுகம்
பாலக னேஅருள் சண்முக நாத பரம்பொருளே.
73✓
பரம்பொரு ளேபங் கயற்சிறை செய்துபல் லண்டசரா
சரங்களைப் பண்டுள வாறு படைத்தருள் பாலகனே
உரந்துணி யாய்விழ ஒள்வடி வேல்துரந் தும்பருய்ய
வரம்பெறு சூர பயங்கரம் மாற்றிய மாணிக்கமே.
74✓
மாணிக்க மேனி வயங்குயர் சேவற் கொடியுடையாய்
ஆணிப்பொன் அம்பலத் தாடி யருளும் அறுமுகனே
பேணிப் பணியு மடியர் தமதிடர் சொல்லிநைந்தால்
பாணித் திடாதருள் பாலிக்க வேண்டும் பரைசுதனே.
75✓
பரைசுத னேபர மானந்த மெய்ஞ்ஞான பாஸ்கரனே
உரைஉணர் வாதி ஒழிந்த நெறியருள் உத்தமனே
கரையிறந் தோடு கடலிற் பரந்த கடுவினையாம்
வரைபக வைவேல் விடுத்தெமை யாள்மயில் வாகனனே.
76✓
மயிலியல் வள்ளி மணாள மரகத மாமலைமேல்
அயிலோடு தோன்றி அடியார்க் கருளும் அறுமுகனே
பயில்தொறும் நூல்நயம போலினி தாமருள் பாலித்திட
வெயிலெறிக் கும்வடி வேல்முரு காவரு வாய்விரைந்தே.
77✓
விரைவொடு வந்து மிருககந் தந்தெமை யாண்டருள்வாய்
வரைமகள் தந்த வரைபக வேல்எறி வள்ளிமகிழ்
விரையொலி யும்கடம் பார்தடந் தோள்முரு காஅடியர்
புரைதவிர்த் தாண்டருள் நல்லிணு வைப்பதிப் புண்ணியனே.
78✓
புண்ணிய மொன்றுசெய் தேன்என தேழேழ் பிறவியிலும்
கண்ணிய துன்புகழ் கற்றன கேட்டன காதல்செய்து
நண்ணிய துன்திருத் தாமரைத் தாளிணை நல்லவர்வாழ்
பண்ணயந் தேர்புல வோர்வதி நல்லிணு வைக்குகனே.
79✓
குகனே சரவணப் பூந்தொட்டில் மேவிக் குதலைமொழி
தகவே பயின்றுமை மென்முலைப் பாலமிர் துண்டுகளி
மிகவே யுயர்தவத் தோருறை நல்லிணு வையுகந்த
மகனே யறுமுக னேபகத் தேயுறை மாமணியே.
80✓
மணிவண்ண மேனிநன் மாயன் மருகா மகிழ்வுடம்பி
னணிவண்ணப் பன்னிரு தோளழ காமலை யாள்சுதனே
மணிவண்ண நல்லடி யாருறை நல்லிணு வைக்குகனே
பிணிநண்ணி மூப்படை யாமுன் பருள்கநின் பேரருளே.
81✓
பேரா தரத்தொடு பெம்மான்தன் பொன்னடி பேணுபவர்க்
காராத செல்வம் அருளும் அறுமுக அன்பருள்ளம்
ஊராகக் கொண்டுறு சித்தியும் முத்தியும் சேர்க்கும்நின்னை
நேராகும் தெய்வமு முண்டுகொல் ஞான நிருமலனே.
82✓
மலபந்த மாசறுத் தாண்டுநின் மாண்பத மேதுதிக்க
உலகம் உனதருள் நோக்கிநின் றேயுரு கும்ஒருசூர்
அலமந்து சேவல் மயிலாய்ப் பணிசெய்ய ஆண்டுகொண்டு
நலமுந்து நல்லிணு வையெம் பதிவளர் நாயகனே.
83✓
நாயக மான மரைமலர் நாட்டத்தன் வேதனும்பர்
நாயக னான மகபதி யாகிய நல்லிமையோர்
தாயக மாக அறிஞர் வதிநல் லிணுவைவந்து
நாயக னேநினை நாடினர்க் கின்பம் நயந்தருளே.
84✓
அருள்தவ மும்கடைக் கட்சிவ காமி யருள்குகனே
இருள்தவழ் நீலகண் டத்திறை நெற்றியில் வந்துலகின்
மருள்கெட ஞானச் சிவசக்தி வேல்கொண்ட நாயகனே
பொருளறம் இன்பம் புகல்வீடு தந்தருள் பூரணனே.
85✓
பூரணப் பொற்குடம் நேரும் கனதனப் பூவையர்கள்
நாரணன் தந்த அமிர்தவல் லீயருள் சுந்தரிதன்
காரண மாக உதித்தான் திருமுக மாறுகொண்டு
ஏரண வும்இணு வைக்கிறை கல்யாண வேலவனே.
86✓
வேலுண்டு பச்சை மயிலுண்டு குக்குட வெல்கொடியுண்
டாலும் அபய வரதமுண் டன்றயன் சென்னிமொத்தக்
கோலும் அழகிய பன்னிரு கையுண்டு மெய்யுமுண்டு
மாலும் துயரும் வரலுமுண் டோவென்றி வானவனே.
87✓
வானவன் காண்குற மாமகள் மேல்மயல் நோய்கதுவக்
கானவ னாகித் தினைப்புனம் மேவிய கற்பகங்காண்
தானவர் வேரொடு சாடத் தனிநெடுஞ் சூர்முடங்க
மானவை வேல்தொட்டு மங்கைதெய் வானைக்கு வாய்த்தவனே.
88✓
வாயாரப் பேசுவ துன்திரு நாமங்கள் மன்னுநெஞ்சில்
தாயாக நின்று தலையளித் தாட்கொண்ட சண்முகனே
காயா புரிநெடுங் கோட்டை தகருமுன் காத்தருளே
காயா மலர்நிகர் கண்ணன் மருகாகந் தாகுகனே.
89✓
கந்தனைக் கார்மயில் வாகன னைக்கடம் பார்தடந்தோள்
மைந்தனை வேதன் சிரமிசை தாள்வைத்த வானவனை
வந்தனை செய்து வழிபட நில்லா வருவினைகள்
சிந்தனை செய்துய்ந் திடுமின் பரகதி சித்திக்குமே.
90✓
சித்திக்கும் முத்தி திருவள ரும்செல்வம் நின்றிலங்கும்
சித்திக்கும் புத்தியும் தெய்வநல் வாழ்வு சிறந்தொளிரும்
பத்திக்கும் ஞான பராபரன் மேவிய நல்லிணுவை
முத்திக்கு வித்தாந் தலம்நொச்சி யம்பதி முந்துமினே.
91✓
முந்தும் பிறவிகள் எத்தனை யத்தனை முண்டெழுந்து
பந்தித்து நின்ற பழவினை அத்தனை பாறவருள்
வந்திப்ப வர்க்கருள் வான்வடி வேல்கொண்டு மாதவத்தோர்
சிந்திக்கும் யோகு பயிலிணு வைப்பதி சேர்ந்துய்ம்மினே.
92✓
உய்திகண் டாய்நெஞ்ச மேயுனை நானிரந் தேன்பிறவி
எய்திட வேண்டா இனிநின் னடியிணைக் கீழிருந்து
மெய்திகழ் ஞான சிவானந்தத் தேன்மிக மாந்தியன்பின்
உய்தி பெறவருள் வான்இணு வைப்பதி உத்தமனே.
93✓
உத்தமன் தாள்பணிந் தேனுயர் கந்தபு ராணம்சொன்ன
மெய்தவ மான விரதம் புரிந்தேன் மிகுகருணை
அத்த னருள்சேர் அறுமுகன் மெல்லடித் தாமரையென்
சித்த மிசைநிறை வாய்நின்ற ஆனந்தத் தேன்சொரிந்தே.
94✓
தேனைப் பழித்த மொழிவள்ளி காந்தன் சிறந்தவைவேற்
கோனை கொடுவினை தீரவந் தித்தேன் குளிர்ந்துசெந்தேன்
ஊனை உயிரை உணர்வையென் உள்ளத்தி லின்பருளும்
கோனை அவனென்று கண்டேன் எனக்கோர் குறையுமுண்டே:
95✓
குறைமதி செஞ்சடை மேல்வைத்த தெய்வ குமரகுரு
மறையயில் வேதியன் வந்தனை செய்ய வரமருளும்
நிறைமலி செல்வ வளநகர் நல்லிணு வைக்குகற்கே
பொறைமலி சிந்தையி னார்க்கரு ளும்பரி பூரணமே.
96✓
பரிவொடு நாரதன் பண்ணிய யாகத்திற் பாய்ந்தெழுந்து
விரிதிரை ஞாலமோர் மூன்றும் படர்தகர் ஏறிவந்து
அரிமுகன் தார்கன் சூர்பட வேல்கொண்ட ஆறுமுகன்
பரிவுசெய் தாண்டிணு வைப்பதி வாழும் பரம்பொருளே.
97✓
பரம்பொரு ளேபண்டு நால்வர்க் கறம்சொல் பரமன்தந்த
பெரும்பொரு ளாய பிரணவ மெய்ப்பொருள் பேசியசீர்
வரம்பல வெய்த மகிழ்ந்தருள் பாலிக்கும் மால்மருகன்
கரம்படு வேல்துணை யுண்டென் எழுமையும் காப்புறவே.
98✓
காத்தும் படைத்தும் கரந்தும் திருவிளை யாடல்புரி
தீர்த்தன் சரவணப் பூந்தடத் தேவந்த சேந்தன்மகிழ்
பூத்த கடம்பணி தோளழ கன்திருச் செந்திநின்று
நீத்தெமை யாண்டருள் வான்இணு வைப்பதி நின்றனனே.
99✓
நின்றும் இருந்துங் கிடந்தும் நினைநெஞ்ச மேகொடிய
கன்று சினமிகு காரவு ணப்படை கட்டழித்து
வென்றி யமரர்க் கருளிய வேற்படை மேலவனை
ஒன்றி யிருந்து நினைபவர்க் கில்லை உறுதுயரே.
100✓
உறுபுனற் கங்கை சுமந்தகாங் கேயன் உயர்கயிலை
குறுநடை கொண்டறு மங்கையர் பால்சுரந் தூட்டமகிழ்
அறுமுகன் அம்பிகை ஆர அணைக்க அருளுகந்தன்
நறுமலர்ச் சோலை செறிஇணு வைப்பதி நண்ணினனே.
101✓
நண்ணிப் பணிமின் நலிந்திடும் தீவினை ஞானசெபம்
பண்ணிப் பணிபவர் உள்ளக் கமலத் துறைந்தருளும்
பெண்ணிற் பெருமை படைத்த குறமகள் பேதைமகிழ்
ஒண்ணித் திலநகைத் தெய்வத் யானைசேர் உத்தமற்கே.
102✓
உத்தம ஞானியர் புத்தியில் மேவுறும் ஞானசக்தி
சித்த மலம்அறச் செங்கதிர் வேல்விடு தெய்வபதி
பத்தர்கள் முத்தர்கள் சித்தர்கள் மேலவர் சேர்ந்தபதி
பத்திமை சேர்இணு வைப்பதி சார்மின் பயனுறவே.
103✓
பயனுறு வாழ்க்கையிற் பண்புற வாழ்ந்துபின் பக்குவத்தால்
நயனுறு தெய்வச் சிவசதி சேர நயந்திடுவீர்
கயமுகத் தாரக னைக்கடுஞ் சூரைக் கடந்ததெய்வ
வயமுறு வேற்படை வானவன் றாள்கள் மருவுமினே.
104✓
மருவு மறுகரு வேல்கொண்டு வந்தனை செய்பவர்தம்
இருவினை வேரறுத் தாண்டருள் பாலிக்கும் எங்கள்தெய்வம்
மருவளர் சோலை வளமலி நல்லிணு வைப்பதிவாழ்
குருபரன் சண்முக நாதன் பதந்தொழக் கூற்றஞ்சுமே.
105✓
அஞ்சுகம் வாய்திறந் தன்ன மொழியியல் வள்ளியெனும்
கிஞ்சுக வாய்மங்கை தன்சர ணம்நறுங் கேழ்கிளரும்
பஞ்சினும் மெல்லடிப் பாவைதெய் வானை பதம்பணியும்
செஞ்சுடர் வேலவன் செஞ்சர ணங்கள்என் சிந்தையவே.
106✓
`ந்தைக் கினியன வந்திப் பவர்க்குத் திருவுமின்பும்
முந்தித் தருவன முத்தி தருவன மூண்டவினைப்
பந்தம் அறுப்பன பால முருகன் பதமலர்கள்
புந்திக் கினிய பரமசு கானந்தம் பூப்பனவே.
107✓
பூவிற் பொலிதரு பொற்புறு தாண்மலர்ப் போதுமன்பர்
நாவிற் பொலிதரும் நல்லுப தேசமாம் ஆறெழுத்தும்
தேவிற் பொலிதரும் செஞ்சுடர் வேலோன் திருக்கண்களும்
பாவிற் பொலிதர நின்றருள் வாய்கங்கை பாலகனே.
108✓
பாலக னேபர மானந்த நற்சுகம் பாலித்திடும்
நூலவ னேயறு மாமுகம் கொண்ட நிருமலனே
மாலவ னேமுத லோர்வினை தீர்த்தெமை யாண்டருளும்
மேலவ னேஇணு வைப்பதிக் கல்யாண வேலவனே.
109✓
வேல்கொண்ட கையும் விளங்குநுண் ணூல்பொலி மார்பழகும்
பால்வெள்ளை நீறுறு பன்னிரு தோளும்முந் நான்குகண்ணும்
மால்கொண்ட வள்ளிதெய் வானை மகிழ்வும் வரமருளும்
கால்தந் தருளும் கருணையும் அன்பர்க் கருந்திருவே.