முருகன் App
இரத்தினகிரிப் பால முருகன் அலங்காரம்
வி. அண்ணாமலை முதலியார்
கட்டளைக் கலித்துறை2 / 2
இரத்தினகிரிப் பால முருகன் அலங்காரம் · வி. அண்ணாமலை முதலியார்

கட்டளைக் கலித்துறை

1✓
பூமேவு பொன்மகள் மார்பிற் புணர்ந்திடும் பூரணனும்
பாமேவு நங்கையை நாவினிற் கொண்டியல் நான்முகனும்
கோமேவு தேவனும் ஏத்திடும் ரத்தினக் குன்றனெங்கோன்
தூமேவு தாள்சிவ ஞானப்பூ என்றலை சூட்டினனே.
2✓
அஞ்ஞானத் தேன்செய் பிழைதன்னை ஆறாத அன்பதனால்
மெய்ஞ்ஞானத் தாயாய் எனதுள்ளம் மேவி வினையதனைப்
பஞ்சுமுன் பட்ட கனலெனத் தீர்ப்பன் பழமறைகள்
தஞ்ச மெனச்சேர்ந்த ரத்ன கிரியுறை தற்பரனே.
3✓
மெய்யென வேயெண்ணி வெவ்வினை வாழ்வினில் வீழுமெனைப்
பொய்யென உள்ளே புகுந்துண்மை செப்பிய பொன்னடியான்
துய்யவ ருள்ளும் இரத்ன கிரியினிற் றோன்றிமக்கல்
உய்யத்தன் நாமம் உணர்த்திய வேத ஒழுக்கத்தனே.
4✓
மகவிற்குத் தந்தை இனிமைகள் காட்டி மடியிருத்தி
அகமகிழ் வொப்ப இணைத்தாளை என்றன் அகமலரில்
செகமகி ழப்பதித் தாண்டான் கிரியுறை சேயவன்றான்
இகல்மிகு சூரனை யேவென் றருள்செய் இளையவனே.
5✓
என்னையு மோர்பொரு ளென்றே இதயத்தில் ஏற்றவனும்
மின்னிகர் செஞ்சடைக் கண்மா மணிதன் விறற்குமரன்
தன்னிகர் இல்லாத ரத்ன கிரியில் தனிப்பொருளாய்
நின்றவன் தன்னடி யானென்றே என்னை நிறுத்தினனே.
6✓
ஆறு சமயத்தோர் ஒவ்வாத வாதங்கள் ஆற்றியவர்
மாறு படவழக் காடும் சழக்கர்கள் மாற்றமுற
ஆறு முகமுடன் தோன்றிச் சமயங்கள் ஆறினுள்ளும்
வீறுடன் மேவிய ரத்ன கிரியுறை வேலவனே.
7✓
வானவர் தாமரைத் தாளினை போற்றி வணங்கிடலும்
தானவர் செய்யும் கொடுவினை போக்கத் தடிந்தவன்றான்
தேனமர் சோலைசூழ் ரத்ன கிரியில் திகழ்ந்திடுவன்
நானற ஏத்திடும் தொண்டரைக் காக்க நயந்தினிதே.
8✓
ஆசை முதலாய் அபிமான மீறாக அன்பனைத்தும்
பூசை தனிலே நிலைத்திடச் செய்யாத பொய்யனைச்சேர்
மாசைக் களைந்திட மாதுடன் ரத்ன மலையணைந்தான்
ஓசை முதலாம் பொருள்களெல் லாம்கடந் துள்ளவனே.
9✓
ஞான வடிவாய் நினைப்பவர் நெஞ்சின் நடுவணைந்து
மோன முதலாகி முத்திக்கு வித்தாம் முழுமுதல்வன்
கானவர் கன்னி யுடன்கிரி தன்னில் களிப்புடனே
தானமர்ந் தான்அன் பருக்கே அருள்செயும் சண்முகனே.
10✓
பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றாய்ப் பெரும்புணையாய்
நற்றவர் தோற்றமாய் ஞாதுரு ஞேயமும் ஞானமதும்
அற்றவர் தம்பால் அருளைச் சுரக்கும் அறுமுகன்றான்
பற்றுடன் ரத்ன கிரியில் அமர்ந்தான் பரவுதற்கே.
11✓
கற்றதால் என்பயன் கற்றதை யொப்பவே கண்ணுதலான்
நற்றவச் செய்கழல் ரத்ன கிரிதனில் நாடியென்றும்
நிற்றலால் உண்டாம் சுகபோகத் தோடு நிருவிகற்பம்
பெற்றிடப் பேசாப் பெருவாழ் வதுவும் பெருகிடுமே.
12✓
கரையிலா இன்பக் கடலமு தேயுட் கனிந்துரத்ந
வரையி லுறைமுரு காவுனைப் போற்றி மனத்திருத்தேன்
உரையிலா ஊமைய னாக முயல்வேன் உலகினிலே
விரைவினில் நின்றாளி லொன்ற அருளாய் விருப்புடனே.
13✓
வினையேன் இழைத்த பிழையைப் பொறுத்திடும் மெய்ப்பொருளே
நினையேன் புகலிடம் நின்றனை யன்றியான் நின்மலனே
எனையே தொடரும் பிறவிய றுத்தெனை யேற்றருள்வாய்
அனையே கிரியுறை செவ்வே லரசே அருட்கொழுந்தே.
14✓
மாறிநின் றென்னை மயக்கும் புலன்கள் வழியடைத்தே
ஈறிலா வுன்னருட் செந்தேன் பொழிந்திடாய் என்னுளத்தே
ஊறிய அன்புறு ரத்ன கிரிமேல் உறைபவனே
சீறிய நாயடி யேன்உய்ய வந்த சிவக்களிறே.
15✓
இந்திரி யங்கள் வயமாய்த் திரியும் இழிவுடையேன்
முந்தை வினைகளை முற்றுறுத் தாளும் முழுமுதலே
சிந்தை யுறுதுரை யும்சிதைத் தங்கே சிவமுறுத்தும்
எந்தை அறுமுகன் ரத்ன கிரிமேல் இருந்தனனே.
16✓
பொன்னார் அடிகட்கே என்முறை யீட்டைப் புகன்றிடுவேன்
மின்னார் சடையன்சேய் ரத்ன கிரியுறை மின்னயிலான்
என்னாவி காக்க உருவாய்க் குருவாய் எழுந்தருளிக்
கன்னார் உரித்தென்ன ஆண்டானென் னுள்ளம் கலந்தினிதே.
17✓
ஆற்றுதற் கில்லேன் அறுமுகத் தெய்வமே ஐம்புலனாம்
சேற்றினில் வீழ்ந்து பெருந்துயர் வாரியில் சிக்குமெனை
ஊற்றெனப் பாயு முனதருள் வெள்ளந்தோய்த் துன்கரத்தால்
ஏற்றிடு வாய்கிரி வாழ்சேயே ஏழையேன் இன்புறவே.
18✓
தினைத்தனை யாயுறும் இன்பத்தை நாளெலாம் தேடுநெஞ்சே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந் தொறுமருள் நீர்பெருக்குஞ்
சுனையென ரத்ன கிரிவாழ் முருகனைச் சூழ்ந்திடுவாய்
வினைகெடுத் தானந்த வெள்ளம் பொழிவான் வினையிலனே.
19✓
நினைந்தளிக் கும்தாயின் சாலப் பரிவுடன் நின்னடியேன்
உனைநினை யாமுன் செவியில் எழுத்தாறும் ஓதுமெந்தாய்
வினைசெய் பிறப்பறுக் கும்கிரி வேளே விடுத்தலின்றித்
தினையள வும்பிரி யாதேற்பாய் உன்றாளிற் றேங்கிடவே.
20✓
உலகினை ஓர்நொடி யில்வலம் வந்திட்ட உத்தமனே
அலகிற் கலையாவும் நேடியுங் காணா அறுமுகனே
இலகு கரியமர்ந் தேயருள் காட்டும் எழிலரசே
கலங்கரை தன்விளக் கென்றேநீ காட்டாய் கழலிணையே.
21✓
உள்ளத் தழுக்கை அறவே அகற்றி உனதருளாம்
வெள்ளத் திலெனை அழுத்தி இருத்திட வேயருள்செய்
கள்ளவி ழும்கிரி பால முருகா கருணையனே
கொள்ளி எறும்பென ஏங்குமிப் பேதை குலவிடவே.
22✓
முன்னை வினையால் உனையான் நினைய முயலகில்லேன்
பின்னை உணர்ந்து பிதற்றுவ தென்னையிப் பேதையனும்
அன்னை அனைய இரத்ன கிரியாய் அறுமுகனே
உன்னை எனதுள் இருத்த வழங்கும் உனதருளே.
23✓
வினையாற் றொடர்ந்த பிறவி அடைந்தேன் வினையிலியாய்
உனையே தொழுவன் திருவருள் நல்கிடும் ஒண்சுடரே
கனைமா பிறவிக் கடலில் அழுந்தாமுன் கைகொடுத்தே
எனையே எடுத்துக் கரைசேர்த் திடுவாய் எழிலரசே.
24✓
சிந்திப் பரிய அறுமுகங் கொண்ட சிவகுமரா
பந்தித் திடுமென் பழவினை போக்கும் பழம்பொருளே
முந்திப் பொழிவாய் அருளமு தென்னுள் முருகையனே
அந்திப் பிறைசேர் அரனார் மகனே அருட்கொழுந்தே.
25✓
சிந்தனை நின்பதத் தென்றும் திளைத்திடச் சீரடிக்கே
வந்தனை செய்து திருப்புகழ் ஓதநல் வாக்கினையும்
தந்தனை வெற்பமர் பால முருகனே தற்பரனே
எந்தையின் மிக்க இளையாய் மயில்மீ திவர்ந்தவனே.
26✓
உள்ளத் தொளித்திருந் துண்மை உணர்த்தியும் வந்தெனது
கள்ள மனத்தி லுறுது ரகற்றிக் கருணையினால்
மெள்ள எனதுட் புகுந்திடு முன்னருள் மேவலெந்நாள்
எள்ளத் தனையும் நினையா திருந்த எளியனுக்கே.
27✓
பரவிப் பணிபவர் தம்வினை பற்றறப் பன்னிரண்டு
கரங்கொடுத் தேற்றிடும் ரத்ன கிரியாய் கதிர்மணியே
பிரமன் அறியாப் பொருளை உணர்த்தும் பெரும்பொருளே
சிரத்தில் உனதருட் பாதம் பதிப்பாய் சிவகுகனே.
28✓
திருவுளங் காணாத் திகைப்புறு கின்ற சிறியவனும்
கருவினுள் வீழ்ந்து கருத்தழி யாமுன் கடையருளால்
திருவருள் செய்தெனை அஞ்சவென் றேற்பாய் திருக்குமரா
மருவணி ரத்ன கிரியாய் மயிலேறு மன்னவனே.
29✓
பெற்றதம் பிள்ளைக் குணங்கள் அறிபவர் பெற்றவரே
மற்றவர் தாம்அறி வாரோ சொல்ரத்ன மலையுறைவோய்
செற்றவெஞ் சூரனை வென்றநற் செவ்வேலே செஞ்சுடரே
நற்றுணை நீயென நின்றாளைப் பற்றினேன் நன்றினிதே.
30✓
இப்பாரில் என்னுடல் ஆவியெல் லாம்உனக் கீந்தளித்தேன்
அப்பா அருட்கட லேரத்னக் குன்றுறை ஆறுமுகா
ஒப்பாரு மில்லாத கண்ணுதல் மைந்தா ஒருபொருளே
துப்பாய உன்னடி சேர்ப்பாய் கடையேன் துலங்கிடவே.
31✓
போக்கும் வரவும் இரவும் பகலற்ற புண்ணியனே
வாக்கும் பொருளற என்னுள் உவப்புடன் வந்தினிதே
தாக்கும் தருவே மனவொடுக் கந்தந்து தன்வயமே
ஆக்கும் பரனே இரத்ன கிரிவாழ் அறுமுகனே.
32✓
நேற்றிருந் தாரின் றுழிந்தன ரென்றோர்ந்தும் நின்பதமே
போற்றிலன் வாய்த்தற் கரியநல் வாய்ப்பினைப் போக்கியிவண்
ஆற்றிலன் ரத்ன கிரியுறை செல்வனே ஆழ்ப்பிறவிச்
சேற்றினில் வீழா தருளுவாய் உய்ந்திடச் சின்மயனே.
33✓
கொள்ளேன் உளத்துன் னருட்கோல மன்னநீள் குன்றுறைவோய்
நள்ளேன் உனதடி யாருறை கூட்ட நடுவுளன்றி
விள்ளேன் அருளாய உன்நாம மன்றியான் விண்ணவனே
கள்ளே சொரியுமி ரத்ன கிரியுறை கண்மணியே.
34✓
எனக்கென வோர்செயல் இன்றி அனைத்தும் இணையடியான்
தனக்கெனச் சொல்லும் உடல்பொரு ளாவியைத் தந்தடைந்தேன்
மனத்தகத் தொன்றி மறைந்தும் மறைக்கின்ற மாயிருளைக்
கனத்தரு ளாற்றவிர்த் தாளரத்னக் குன்றக் கதிரொளியே.
35✓
அண்ட முதலாகக் கண்ட பொருள்கள் அனைத்துமுன்றன்
பண்ட மெனவுந் தெரிதலால் உன்றாட் படைக்கவொன்றும்
கண்டில னிவ்வடி மைத்தொண்டை ஏற்பாய் கதிர்மணியே
அண்டி நினதடி சார அருளாய் அயிலரசே.
36✓
அஞ்ஞானத் தாலறி யாதுசெய் குற்றம் அருளுடனே
மெய்ஞானத் தால்போக்கி யென்னைத் தடுத்தருள் மேலவனே
விஞ்சையர் காணரும் முக்க ணருட்செல்வன் விண்ணவனே
தஞ்சமென் றேயடைந் தேன்றாள் அருளாய் தயையுடனே.
37✓
என்றுநீ தோன்றினை அன்று முதலாக இவ்வடியேன்
உன்றனை ஏத்தியும் ஆளாத தென்னோ ஒளிமயனே
இன்றுனை ஏத்திட என்வினை ஏய்ப்ப தினிதுணராய்
குன்றுறை மைந்தா குருவாய் வருவாய் குறைகளைந்தே.
38✓
ஊமன் கனவென நற்சிவ ஞானம் உணருகின்ற
காமரு ஞானிகள் நாடு முனதடி காண்பதென்றோ
தேமரு வுங்கூந்தல் தெய்வ மகள்சேர் திருப்புயத்தாய்
காமரு வும்ரத்ன குன்றமர்ந் தோங்கிடும் கற்பகமே.
39✓
தாகந் தணிக்கக் கடல்நீர் பருகும் தகவிலன்யான்
ஆகமங் காணரும் உன்னடி காண அகிலமுறு
போகத்தில் வீழ்ந்துழல் புல்லனைக் காத்தருள் புண்ணியனே
நாகத்தை ஏற்ற சிவநற் குமரா நயந்தினிதே.
40✓
அருவும் உருவும் அருவுரு வுந்தானாய் ஆருயிர்கள்
இருண்மலம் போக்கத் திருமால் புதல்வியும் இந்திரன்றன்
திருமகள் சேரவே ரத்ன கிரிவந்த செய்யனேயென்
கருத்துறை செஞ்சுட ரேசேர்ப்பாய் உன்றன் கழலிணையே.
41✓
புன்மலம் சேர்த்து மலபோகம் தன்னைப் பொருத்துதல்போல்
நின்மல நீள்ரத்ன குன்றுறை கின்ற நியதியனே
நின்மலம் சேர்த்துயி ருள்ளுறு மாமலம் நீக்கியென்றும்
உன்னல மாகிய வேறின்மை ஈவாய் ஒளிமயனே.
42✓
அறிவாகி ஆனந்த மாகிப் பொருள்கள் அனைத்தினிலும்
பிரியாமல் தண்ணருள் மல்கும் இளைய பிரானவனை
நெறியாக ஏத்தவே ரத்ன கிரிகுகன் நீக்கிடுவன்
செறிவான துக்க மனைத்தும் ஒடுங்கிடச் சிற்சுகமே.
43✓
கரையிலா இன்பப் பெருக்கை அளிக்கும் கனியமுதே
வரையிலா தங்குமுன் றாள்பெற அன்பர் வருவரிது
வரையிலே நானுனை நாடிக் கலந்திலேன் வானவனே
உரையிலா இன்ப மளித்தினிக் காத்தருள் உண்மையனே.
44✓
பாச பசுஞானத் தால்அறி யாத பரம்பொருளே
பாச பசுஅறி வுந்தான் பயிலப் பணிப்பவனே
பாச பசுஅறி விற்குந்தான் மேலாம் பரசிவமே
நேசனே ரத்ன கிரியானே சேர்ப்பாய் திருவடியே.
45✓
மண்ணினி லோசையு றும்ஒளி நற்சுவை மாமணமாய்த்
தண்ணிய நீரிற் சுவைமுதல் நான்காய்த் தழலிலொளி
எண்ணிய மூன்றாய் வளியினில் ஊறொலி என்றிரண்டாய்
விண்ணி லொளியாய் விளங்கிறை வாரத்ன வெற்பரசே.
46✓
வேதங்கள் ஐயா வெனவோங்கிக் காணா விகிர்தனுமாய்
வேத முடிவில் நடம்பயில் கின்ற விமலனுமாய்
நாத முடிவில் அமர்ந்திடு கின்ற நாதனுமாய்
போத முதலாய எண்குணத் தாய்கிரி போந்தனையே.
47✓
செய்யும் வினையின் முதல்வனாய் அவ்வினை செய்பொருளும்
ஐயம் இலாமல் கருமப் பயனை அளிப்பவனே
உய்யும் வினைப்பயன் காலத்தே ஊட்டி உணர்த்திடுவோய்
உய்ய உயிரெலாம் ரத்ன கிரிதனை உற்றனையே.
48✓
பந்தம் அகற்றும் அளவிலாப் பேரருட் பண்புடையாய்
எந்த உலகமும் தோன்றி ஒடுங்க இயக்கிடுவோய்
சந்த மறையா கமங்கலை யாவையும் தந்தவனே
இந்த இரத்ன கிரிபால னான இளையவனே.
49✓
உலக மனைத்துளும் நீங்காது நின்றுதான் ஒன்றெனவும்
உலக மனைத்துத் தொழிலிற் கலந்தும் உடனிருந்தும்
உலகத் தொழிலிற் கலந்துற்றும் வேறாய் உறைபவனும்
நலமுறும் ரத்ன கிரிதனிற் சேர்ந்திட்ட நாயகனே.
50✓
இடர்கள் அனைத்தையும் பஞ்சின் நெருப்பாய் எரித்திடுவோய்
தொடரும் பிறவிவேர் நீக்கி அருள்நிறை தொண்டனாக்கிப்
படரும் புகழினை உன்னடிக் கீழென்றும் பாடிநிற்க
அடரும் உனதருள் நல்காய் கிரியாய் அருட்குகனே.
51✓
மயங்கும் இடர்நீக்கும் பேரொளி யாய மலர்ப்பதத்தால்
வயங்குமுன் ஆனந்த வெள்ள மதனிற் படிவதெந்நாள்
நயந்துசீர் பாடும் அருண கிரிபால் நயந்தவனே
உயவுன்சீர் ஓத அருளாய் கிரியாய் ஒளிமயனே.
52✓
நாவற் பழந்தனை மண்ணினில் வீழ்த்தியிந் நானிலத்திற்
பாவலர் போற்றிடும் அவ்வைக் குணர்த்திய பாவலனே
சேவற் கொடியாய் ரத்னகிரி போந்த சிவகுமரா
தேவரும் தேடிடும் தெய்வமே சேர்ப்பாய் திருவடியே.
53✓
நின்பாத தாமரைக் கன்பேது மில்லாத நீசனென்றன்
புன்போத மாயப் புரைதன்னை இன்றே பொறுத்திடுவாய்
அன்பே உருவாய் அமரரைக் காத்த அறுமுகனே
என்பே உருக எளியனை ஏற்பாய் எழில்மணியே.
54✓
நற்கீரன் நன்முரு காற்றுப் படையை நயந்தினிதே
கற்குகை யிற்சேர்ந்த கற்றவர் துன்பமே காத்திடவுன்
அற்புத வேலேவும் ஆறு முகனே அருங்கனியே
பொற்புற என்னுள் உறைந்தே புரைதீர்ப்பாய் பொன்மணியே.
55✓
குமர குருபரன் நாவினிற் சேர்ந்த குருகுகனே
அமரரும் வேண்ட அழலுரு வாய்த்திகழ் ஆறுமுகா
சமரதைச் செய்தவெஞ் சூரனை யாண்ட சரவணனே
எமபடர் தோன்றுமுன் வந்தாள் மயிலே றிறையவனே.
56✓
மக்கட் பிறவி யெடுத்து முனையே வழுத்தலின்றித்
துக்கக் கடலி லழுந்தி அலைந்தேன் துரிசுடையேன்
நக்கன் மகனே மனத்துள் உறைந்தே நனிசுரப்பாய்
பொக்க மிலாவுன் கருணை யமுதையிப் பொய்யனுக்கே.
57✓
இப்போதே என்னுடல் ஞானங்க ளெல்லாம் இணையடிக்கே
தப்பாதே தந்தேன் தயாநிதி ஏற்றருள் தற்பரனே
ஒப்பாரு மில்லாவுன் ஞானம் அருளாய்வெற் போங்குகுகா
அப்பா அறுமுக னேகிரி தோறா டருட்கொழுந்தே.
58✓
சார்ந்தார்க் கருளிடும் சண்முகத் தெய்வமே தற்சிவமே
வார்ந்த பொழில்சூ ழரதன மாமலை யான்கழலை
ஓர்ந்துவெண் ணீறணிந் தாறெழுத் துள்ளத்தே உச்சரித்தால்
ஆர்ந்த சிவஞான மோங்க அலக்கண் அழிந்திடுமே.
59✓
பதியே அனைத்துள்ளும் ஒன்றியும் ஒன்றாப் பரஞ்சுடரே
கதியே அளித்திட ரத்ன கிரிவந்த கதிர்மணியே
நதிசேர் சடையான் குமரநின் நாமம் நயந்துரைப்பின்
சதிசேர் புலன்வழி தூர்த்தே அருளுவாய் சண்முகனே.
60✓
தீராத் துயர்க்கடல் வீழ்ந்தலை கின்றஇத் தீயவனைப்
பாராத் தென்னோஇப் பாவியேன் உய்யப் பரஞ்சுடரே
சீரார் கிரியுறை செல்வா உனதடி சேர்ந்தணைந்தேன்
ஏரார் நினதருள் நல்காய் எழிலாய் எளியனுக்கே.
61✓
சும்மா இருவென் றருண கிரிக்கோது தூமணியே
சும்மா இருக்கும் நெறியெனக் கோதாய் சுடர்க்கொழுந்தே
அம்மா இரவு பகலிலா நின்றன் அருள்வெளியில்
பெம்மான் அடியேன் திளைக்க அருளாயிப் பேயனுக்கே.
62✓
கருவிற் புகுநாள் முதலாய்க் கழலடி காண்பதற்கே
உருகும் எளியேனை ஏற்காத தென்னோ உமைகுமரா
திருமால் மருகா இரத்ன கிரியுறை தீந்தமிழாய்
உருவாய்க் குருவாய் வருவாய் முருகாம் ஒருபொருளே.
63✓
கண்ணே மணியே கருத்துள் ஒளிரும் கருணையனே
விண்ணோர் வினையை அறுத்திட் டருளும் வியன்குருவே
மண்ணோர்க் கருள்செயும் ரத்ன கிரிவந்த மாதவமே
நண்ணேன் உனதடி யன்றி 'அருளாயென் நாயகமே.
64✓
உனது திருவடி நீழ லதனில் உறைந்திருந்தும்
உனது திருவரு ளாம்அமு துண்ணா துழல்பவனை
உனது கருணைப் பெருக்கால் உயர்கிரி உற்றெளிதில்
உனது பெருஞானம் நல்குவாய் என்னை உடையவனே.
65✓
உடையவ னேயுன் உடைப்பொரு ளன்றோ உமைகுமரா
கடையவ னேன்செய் வினைபோக்கி ஆள்வாய் கருணையினால்
விடையவ னின்விறல் மார்பிற் றவழும் விழுப்பொருளே
நடையைப் பயில்வாய் இரத்ன கிரியாய் நடுவுறைந்தே.
66✓
கண்டிலை யோயான் படும்பா டவற்றைக் கருணைவெற்பே
கண்கள்ஈ றாறுடை யாய்கண் ணுதலான் கதிரொளியே
மண்ணினில் சச்சிதா னந்தம் தனையாண்ட மாமணியே
நண்ணி யெனையாள் இரத்ன கிரியுறை நாயகனே.
67✓
நில்லா உடம்பை நிலையென்றே உன்னி நிலவுலகில்
பொல்லாச் செயல்கள் புரிந்தே அலையும் புலையவனை
நல்லார்பாற் சேர்த்தே மனவொடுக் கந்தனை நல்கிடுவாய்
எல்லாமாம் ஓங்கார ரூபன் கணேசற் கிளையவனே.
68✓
ஆசைக் கடலில் அகப்பட் டுழலும் அறிவிலியேன்
பாசம் பறித்தே சிவஞானத் தேன்பொழி பாதபத்ம
வாச மலரென் றலைசூட்டாய் ரத்ன வரையுறையும்
தேசச் சுடரொளி யேதெய்வ யானையுண் தெள்ளமுதே.
69✓
பண்டுசெய் பாழ்வினை போக்கி அருளும் பழம்பதியாய்
கண்களால் உன்றன் அருட்கோலங் கண்டேன் கருணையினால்
தொண்டர்தம் உள்ளிருந் துண்மை உணர்த்திடும் தூமணியே
இண்டைச் சடையான் குமரா அருளாய் இளையவனே.
70✓
எண்ணிலா எண்ணஞ்சேர் நெஞ்சேநின் துன்பங்கள் இற்றிடவுன்
கண்களும் தூங்கக் கிரியுறை செவ்வேள் கருத்தொன்றிடத்
தண்ணார் மவுனமே கூடினால் முத்தியைத் தான்பெறலாம்
விண்ணோரும் காணா விகிர்தன் அருளால் வியனுலகே.
71✓
கண்ணின் மணியென்றே யேத்திடும் அன்பர் கருத்தினுள்ளே
நண்ணி யுறையும் அருளெனக் கெய்துநாள் நண்ணிடுமோ
பெண்ணுமா ணாகியல் லானே கிரிசேர் பெரும்பொருளே.
72✓
அருள்சேர் பழத்தின் சுவையே அமுதே அரிதெனுநற்
பொருளினைத் தந்தருள் புண்ணிய னேஎன் புலத்துறைந்து
கருதரும் காலமும் தேசம் வகுத்துக் கருவிமுதல்
இருவினை கூட்டி உயிர்களை ஆட்டும் இளையவனே.
73✓
தெள்ளுவெண் ணீறக்க மாலை யணியத் தெளிமனத்தி
னுள்ளேஉன் நாமம் துன்னிட உண்மை உணர்பவர்தம்
கள்ளமில் கேண்மை அருளாய் பரசிவன் கண்ணொளியே
வள்ளலே தொண்டர்தம் உள்ளுறை கின்ற மலைத்தெய்வமே.
74✓
சும்மா இருக்கல் சுகமென்றே கூறச் சுருதியெலாம்
அம்மா அதன்பொருள் ஓராத பேதை அறிவிலியேன்
வெம்மாய ஞாலத் துழன்றலை கின்ற வினையினை
எம்மானே ரத்ன கிரியாய் இரங்கிவந் தேற்றருளே.
75✓
வாயிலோர் ஐம்புல வேடர்கள் ஈர்த்து வலியவின்பத்
தீயினில் வீழ்த்திட மெய்சோரச் சிந்தை தெளிவகன்று
தாயிலாச் சேய்போல் அலைந்தேயான் கெட்டேன் தயாபரனே
நாயினேன் உய்ய அருளாய் கிரிவாழும் நாயகனே.
76✓
செற்ற அரக்கன் அலறிடத் தன்காற் சிறுவிரலால்
கற்குன் றடர்த்தான் செவியில் மறையைக் கழறிடுவோய்
மற்றினை யில்லா இரத்ன கிரிவாழ் மறைமுதலே
உற்ற துணையென் றடைந்தேனீ நல்காய் உனதடியே.
77✓
உய்ந்திட உன்னருள் தன்னையே நல்காய் உடையவனே
பொய்யும் அழுக்கா றவாவும் உடைபட்டுப் போயழியும்
மெய்யும் அறிவும் அடியார் பணிகளும் மேவிவரும்
துய்ய இரத்ன கிரியான் எனதுள் துலங்கிடவே.
78✓
உள்ளத்தி னுள்ளொளித் தோங்கி அருள்தனை ஊட்டுகின்ற
கள்ளக் கருணை தனையே கசடனென் காணுமதோ
வெள்ளந் தரித்துநஞ் சுண்டோன் குமரனே வெற்பமர்ந்தோய்
பள்ளத் துறுமீனொப் பேனுக் கருளாய் பரம்பொருளே.
79✓
சொல்லால் பொருளால் அளவையாற் காணரும் தொன்மையனே
நல்லார் அவையில் நணுகிடச் செய்வாயென் நாயகனே
கல்லாலின் கீழே உணர்த்திடும் கண்ணுதற் கான்முளையே
எல்லாமாய் ஒன்றாகி வேறாகும் எந்தாய் எழிலரசே.
80✓
எங்கேனும் எப்பொரு ளாகிப் பிறந்தாலும் இன்னருளே
தங்கு தயாநிதி ரத்ன கிரியுறை சண்முகனே
அங்கே இனிதுடன் வந்தா ருயிர்க்கே அருளிடுவோய்
இங்கே உனதடி என்னுள் இருத்தி இனிதருளே.
81✓
சிந்தையில் உள்ள மணலூற்றாய்ப் பாய்ந்திடும் தெள்ளமுதே
புந்தியில் ஒன்றிப் புலன்கள் அவாவினைப் போக்குகின்ற
எந்தையே எழிலார் இரத்ன கிரியுறை என்னரசே
கந்தமார் ஞானம் பெருகுதல் என்றோ கருத்தழிந்தே.
82✓
அங்கிங்கு மென்னாமல் எங்கும் நிறைந்துள்ள அற்புதமே
பங்கயத் தேன்மாந்தி ஆர்க்கும் சுரும்பெனப் பாதமெனும்
செங்கம லத்தமு துண்டு மயங்கிடச் செய்வதென்றோ
பொங்கலர் சோலைசூழ் ரத்ன கிரியுறை புண்ணியனே.
83✓
உன்னை நினைந்துன் உளத்தினில் ஒன்றி உறைவதற்கே
என்னை உனதடி நாளும் வழுத்தும் எளியவனை
அன்னை வயிற்றில் புகச்செய் திடாதே அறுமுகனே
பின்னை உனையே பொருளெலாம் கண்டு பிதற்றுவனே.
84✓
உய்யும் படிக்குன் அருளை அருளாய் உடையவனே
பொய்யும் அவாவும் அழுக்காறும் மற்றவும் போயகலும்
மெய்யும் அறிவும் அருட்பே றனைத்தும் விரைந்துவரும்
செய்யும் பணிகள் உனையே அடையும் சிவகுகனே.
85✓
சிந்தனை ஒன்றாய் நிறுத்திப் புலன்களும் சீரடியில்
வந்தனை செய்திடச் சிற்சுக மாயென்னுள் மன்னுகின்ற
கந்தனை காமரு ரத்ன கிரியின் கதிரொளியை
நிந்தனை யின்றி வழுத்த அருளுவன் நின்மலனே.
86✓
அன்னை யிலாச்சே யெனவே அலந்தேன் அறுமுகனே
என்னே! உனதருள் இன்றுயான் கண்டேன் இரத்னகிரி
மன்னும் மதலாயென் உள்ளத்தே யுற்ற மலங்கடிந்தே
என்முதற் றாயென்றே ஆண்டருள் செய்வாய் எழிலரசே.
87✓
எண்ணிட உன்நாமம் சேயடி யென்றலை ஏத்திடவும்
நண்ணரும் ஞானி நடுவுளே நாடுவேன் நாயகவுன்
தொண்டர்தம் தொண்டனாய் ஏற்றிடாய் தீர்வேன் தொழும்புபிறப்(பு)
அண்டரும் காணா சிவநற் கனியே அருட்கொழுந்தே.
88✓
கேட்டறி யாதாய் கிளையேதும் அற்றவா கேடிலியே
வேட்புடன் வேண்டுவார் வேண்டுவ ஈந்திடும் வேலவனே
நாட்டவர் முன்சச்சி தானந்தத் துள்ளே நகைத்தவனே
மீட்டும் பிறவா தெனைக்கா கிரியுறை மேலவனே.
89✓
செந்தழல் ஒத்தசீர் மேனியாய் செல்வச் சிவகுமரர்
அந்தமில் ஆரமு தேஅண்டர் அண்ணல் அருந்துணையே
வந்தென் னுளம்புகுந் தாள்வாய் இரத்ன வரையுகந்த
கந்தா கடம்பா கருணை மலையே கதிரொளியே.
90✓
பிறப்பெனும் ஆழ்கடல் வீழ்ந்திட்டே காமப் பெரும்பிடியாம்
சுறவின் பகுவாய்ச் சுழன்றலை மோதிடும் சூழ்வினையேன்
கறவைகாண் கன்றென நின்பேர் பிடித்துக் கதறுகின்றேன்
இறப்பும் பிறப்பும் இறுத்திட் டருளாய் இளையவனே.
91✓
வாரா வழியை அருள்வாய் குருவாய் வருபவனே
ஆரா அமுதே அருட்பெருங் குன்றே அறுமுகனே
சீரார் இரத்ன கிரியுறை கின்ற சிவகுமரா
நேரார் உனக்கே மறைகளும் காணாத நின்மலனே.
92✓
பொன்னும் புகழும் திருவுடன் யாவும் புணர்ப்பவனே
என்பிழை தன்னைப் பொறுத்தே அருளும் எழிற்குகனே
முன்னம் எனையே உனதடி சேர்த்தேன் முழுமுதலே
என்னே உனதருள் இன்னும் அருளா திருந்ததுவே.
93✓
கருணை உருவே இருகண் ணொளியே கடலமுதே
செருவினிற் சூரன் றனக்குருக் காட்டிய செஞ்சுடரே
கருவேர் அறுத்தே திருவருள் நல்கிடக் காலனவன்
வருமுன் கழலிணை காட்டாய் மயிலுடன் வந்தினிதே.
94✓
புத்தி யெனும்பாம்பின் வாய்தேரை யொத்திடும் புன்னெறியேன்
சித்தம் கலங்கித் திருவருள் காணாத் திகைத்திடுமென்
தத்துவம் நீக்கும் இரத்ன கிரியானே தற்பரனே
சுத்த பரபோகம் துய்க்க அருளாய் தூமணியே.
95✓
பொல்லாத ஆசைப் பிடிதனில் சிக்கிப் புலனறிவு
செல்லாமல் நன்னெறி காட்டும் கிரியானே செய்யவனே
கல்லாதேன் உன்கழல் சிக்கெனப் பற்றிக் கதறுகின்றேன்
எல்லாமாய் நிற்கும் பரனே அருளென் எழிற்குருவே.
96✓
தத்துவங் கள்முப்பத் தாறையும் தப்பிறத் தாண்டியபின்
நித்திய மாகவே பற்றும் நியதியை நின்மலனே
சித்தத்தே ஓதி யருள்வாய் சிவகுகா சின்மயனே
சுத்தமாம் ஆன்மாவும் உன்றானில் தோய்ந்து சுடர்ந்திடவே.
97✓
உன்னருந் தாளினைத் தம்தலை சூடிடும் உத்தமர்கள்
பன்னரும் நின்புகழ் பாமாலை பண்புடன் பாடியதில்
துன்னரும் ஞானநீர் பெய்து நயந்தேத்தித் தூவிடுவர்
சொன்னறும் பூம்புகழ் தோற்றுதல் என்றோ சுடர்க்கொழுந்தே.
98✓
பொய்யான இத்தரை கானல் உறுநீர் போல்வதென
மெய்யாய் உணர்ந்தபின் மௌனம் மிடைந்ததோர் மெய்யுணர்வால்
துய்யவுன் றானில் மனத்தை ஒடுக்கிடும் தூநெறியார்க்
குய்ய அருளுவோய் ரத்ன கிரியாய் ஒருபொருளே.
99✓
எனக்கென் றிடவோர் உரிமையும் இல்லா எளியவனின்
மனத்தின் மலமற நின்றாட் கமலம் மலர்ந்திடவே
தனக்கே உரிய அருளுடன் அன்புநீர் தான்பெருக்கி
உனக்கே உரியதாய் ஏற்றருள் யான்இன் றொடுங்கிடவே.
100✓
செய்யும் தவம்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
உய்யும் படிக்குத் தொடுத்த அலங்காரத் தொண்மலரில்
துய்யரத் நாசலம் ஒன்றியிப் பாவால் துதிப்பவர்க்கே
மெய்மைநல் வாழ்வு விளைத்தருள் செய்வடி வேலவனே.