கதிரைச் சிலேடை வெண்பா
க. சோமசுந்தரப் புலவர்
கதிரைச் சிலேடை வெண்பா · க. சோமசுந்தரப் புலவர்
நூல்
4✓
பூமருவு தண்டலையும் பொன்னனையார் பூங்கரமுங்
காமருவண் டார்க்குங் கதிரையே—ஓமருவும்
அத்தமறை தந்தா னறியா னனுங்கமுடி
யத்தமறை தந்தா னகம்.
5✓
பாவலருங் கண்டும் பணிமொழியா ருஞ்சுரும்புங்
காவலரைக் கூடுங் கதிரையே—தேவ
னுருக்குளத்து வந்தா னொருமுருகா காவென்
றுருக்குளத்து வந்தா னுறை.
6✓
பூப்பயிலும் பொன்னன்னார் பொன்புனைவார் பூங்கரத்தைக்
காப்பணியுஞ் செல்வக் கதிரையே—மாப்பிறவி
யாறக் கரத்தா னணைத்தெம்மை யாள்குமரன்
ஆறக் கரத்தா னரண்.
7✓
மங்கலிமார் வாண்முகமும் வண்டலைபூந் தண்டலையுங்
கங்கண மேவுங் கதிரையே—வெங்கலிதீர்
காசரவ ணத்தன் கமலத்தன் கைகுவிக்கு
மாசரவ ணத்தன் மலை.
8✓
உண்ணேய மிக்கோரு மோங்குமிளங் காவுமலர்க்
கண்ணீர் சொரியுங் கதிரையே—யெண்ணுமறை
பன்னிருகை யாரின்பம் பாவமறுத் தீயுமருட்
பன்னிருகை யாரின் பதி.
9✓
பாயிருள்சீக் கும்பகலும் பண்ணைவாய்ப் பைங்கூழூங்
காய்கதிரைக் காட்டுங் கதிரையே—மேயசடை
ஆறா னனத்தனவ னத்தற் கிறைமைதரும்
ஆறா னனத்த னகம்.
10✓
விற்கொண்ட காளையர்கண் மெல்லியலார் தோண்மொழியிற்
கற்கண்டங் கூறுங் கதிரையே—அற்பார்
உறுவர்பய முண்டாண் டொருவாவின் பீந்தான்
அறுவர்பய முண்டா னகம்.
11✓
வாசமடத் தேழையரும் வாவியிடைத் தாமரையுங்
காசிலன முண்ணுங் கதிரையே—மோசக்
கருவிளையாட் டம்மாயக் காமருல கெல்லாந்
திருவிளையாட் டம்மான் சிலம்பு.
12✓
அற்பூரு மன்பர் சிரத்து மலையகத்துங்
கற்பூர மேவுங் கதிரையே—பொற்பூரு
மஞ்சத்தான் றோற்று மறுகவரு வானடியே
மஞ்சத்தான் றோற்று மரண்.
13✓
மேயகொடி மாளிகையு மெய்யடியார் கூட்டமுமா
காயங் கடக்குங் கதிரையே—தீய
மடக்குஞ் சரத்தானை மாமுகனைப் போரின்
மடக்குஞ் சரத்தான் மலை.
14✓
மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்
கைக்குறி பார்க்குங் கதிரையே—கைக்குங்
கடமலையு மையற் கடமு மழித்துப்
படமலையு மையன் பதி.
15✓
அஞ்சுநடை யார்கதுப்பு மம்மவிணை யுஞ்செயிரில்
கஞ்சனை கடுக்குங் கதிரையே—விஞ்சுபல
மாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமு
பாயத்தா னாடற் பதி.
16✓
வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டினிலுங்
கண்ணி வளைக்குங் கதிரையே—நண்ணுங்
கருமாயச் சூரறுத்துக் காப்பான்சூர் வேலாற்
கருமாயச் சூரறுத்தான் காப்பு.
17✓
இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்
கந்துகத்தே ரோட்டுங் கதிரையே—முந்தும்
பவமா வினையிடித்தான் பாதனலை மேலுற்
பவமா வினையிடித்தான் பற்று.
18✓
மன்னுகா ரிற்கடம்பு மாமணத்தி லாடவருங்
கன்னிகையை யேற்குங் கதிரையே—முன்னமலை
மாவர சத்தியத்த மால்கொளசூர் மைந்தடக்கு
மாவர சத்தியத்தன் வாழ்வு.
19✓
சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்
கற்பு மலருங் கதிரையே—வெற்புடனே
மாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச
மாமூல வேரறுப்பான் வைப்பு.
20✓
நல்லார் மதிமுகத்து நாடு முலைமுகத்துங்
கல்லாரம் பூக்குங் கதிரையே—மல்லாடி
வந்தே விழுந்தோரன் மாயவடி வேற்பணித்த
வந்தே விழுந்தோரன் வாழ்வு.
21✓
நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங்
கற்பங் கடக்குங் கதிரையே—வெற்பரிந்தோன்
துரவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த
மாவியா கத்தன் மலை.
22✓
மாலேறு சோலை மலையருகும் வண்டுகளுங்
காலாறு காட்டுங் கதிரையே—சேலேவை
மாவடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவு
மாவடுவை வேலை மலை.
23✓
துப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்
கைப்பிடியை யொக்குங் கதிரையே—செப்புமொழி
கண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்
கண்டடக்குங் கோலனமர் காப்பு.
24✓
தண்டைக்கால் கண்டவருந் தானோர்ந்து கொண்டவருங்
கண்ட மறுக்குங் கதிரையே—பண்டொருநாள்
மானிடமா னார்க்கு மறைமொழிந்து மானுக்காய்
மானிட மானார் வரை.
25✓
ஐயர்க் கிகுளை யடைந்தோருக் கில்வாழ்வோர்
கையடை யீயுங் கதிரையே—செய்ய
புலிமரமா னான்சேர் பொருப்பிடத்து முன்னாட்
புலிமரமா னான்சேர் பொருப்பு.
26✓
வைத்த படைப்பையிலு மாமணிநீர்ப் பாறையிலுங்
கத்தரி மேவுங் கதிரையே—நத்திச்
சிவவேட மாகித் திருந்திழையைச் சேர்ந்த
சிவவேட னாதிச் சிலம்பு.
27✓
கொண்டுபொருள் விற்போருங் கூறுசெபஞ் செய்வோருங்
கண்டிகையிற் சுற்றுங் கதிரையே—பண்டொருநாண்
மாப்பிடியை யுண்டநடை வள்ளியள்ளி யீந்ததினை
மாப்பிடியை யுண்டான் மலை.
28✓
சொற்கிளியை யோட்டுபசுந் தோகையரு மாய்ச்சியருங்
கற்கரத்தைச் சுற்றுங் கதிரையே—நற்புனமே
வாசுகமே வென்றவிழி வள்ளியைய டைந்தெனுடன்
வாசுகமே வென்றான் வரை.
29✓
நல்லார்கள் சுந்தரமு நாறுமலர்ப் பூந்தடமுங்
கல்லாரங் காட்டுங் கதிரையே—அல்லல்கெட
மாதேவா வென்றார் வினைதுடைத்து வள்ளிபின்போய்
மாதேவா வென்றார் மலை.
30✓
மட்டுவிரி தாழைகளும் வாய்த்தநடைத் தொண்டர்களுங்
கட்டுச்சோ றேந்துங் கதிரையே—யுட்டெளிவால்
ஐயவா வென்றார்க் கருளியொரு மான்பிடிக்க
ஐயவா வென்றா ரகம்.
31✓
கும்பமுலை மங்கையருங் கோதிலடி யாருமுருக்
கம்பிடித் தார்க்குங் கதிரையே—இம்பர்
வடக்கோடு வையகத்தன் மைத்துனன்மால் யானை
வடக்கோடு வையகத்தன் வாழ்வு.
32✓
கொட்டிக் குளத்தலவன் கூறுகற்பி னோர்கணவன்
கட்டளையில் வாழுங் கதிரையே—இட்டிடையாய்!
பூந்தழைசேர் கஞ்சப் புரிகுழலாட் கிவ்வரிய
மாந்தழைசே ரென்றான் வரை.
33✓
பேசுகா ணிக்கையிடும் பேருமலை வாணர்களுங்
காசறையிற் சேர்க்குங் கதிரையே—தூசங்
கொருகுருந்து கொண்டாண் டொழித்தான் தங்கச்சித்
தருகுருந்து கொண்ட தலம்.
34✓
வேட்டுவனாய்க் கேட்டதுநீர் வேட்டுவினாய் வேண்டியதுங்
காட்டுவா வாகுங் கதிரையே—நாட்டமுடன்
தாமரையா மத்துத் தனித்துவள்ளி யைக்கொளும்பொற்
றாமரையா மத்தர் சரண்.
35✓
செம்பொனளிப் போர்கரமுஞ் சேயிழையார் கந்தரமுங்
கம்பொருவுஞ் சீர்சால் கதிரையே—பம்புவலி
போகத் திருந்தார் புரமழித்தார் வள்ளியுடன்
போகத் திருந்தார் புரம்.
36✓
அச்சங்கத் தாமரைவா யன்பர்மலர்த் தாமரைவாய்க்
கைச்சங்க மூதுங் கதிரையே—மெச்சுதிருக்
கோலங்கை யானமரர் கோனுதவு வாரணத்தின்
கோலங்கை யானமருங் குன்று.
37✓
பாலனசொல் லாரிடைமுன் பக்கமுமைக் காவுமறு
காலரவங் காட்டுங் கதிரையே—நீலநிற
மானபரங் குன்றத்தான் மன்னுங் கருணைவடி
வானபரங் குன்றத்தான் வாழ்வு.
38✓
செப்புமறை யோர்சுடர்க்குந் தேற்றிஞர் மங்கையர்க்குங்
கைப்பதிகங் காட்டுங் கதிரையே—மெய்ப்பொருளை
ஏரகத்தார்க் கொன்று மிடரிருக்கா தாளுமரு
ளேரகத்தார்க் கொன்று மிடம்.
39✓
பொற்கொடியார் நெஞ்சகமும் புன்னகையுங் கந்தரமுங்
கற்பணியைக் காட்டுங் கதிரையே—வெற்பிற்
பழநிமலை மைந்தன் பணிந்தார்க் கருளும்
பழநிமலை மைந்தன் பதி.
40✓
செல்வர்களுங் கானடையிற் செல்வோரும் வந்திரவிற்
கல்வீடு சேருங் கதிரையே—வல்லியொரு
பாலாவி னன்குடிலை பன்னுகென முன்பகரும்
பாலாவி னன்குடியான் பற்று.
41✓
பூண்டவடி யார்சிரத்திற் போர்புரிவோர் செங்கரத்திற்
காண்டப மேந்துங் கதிரையே—யாண்டுமனக்
கோதணிகை யாளரிடங் கூடாக் குருபரனெங்
கோதணிகை யாளன் குலம்.
42✓
சொற்புலவர் தூக்கினிலே தோழியறத் திற்றலைவி
கற்பனைபா ராட்டுங் கதிரையே—சுற்றுதிரை
தெள்ளிமுத் தங்கொடுக்குஞ் சீரலைவா யானணைத்து
வள்ளிமுத் தங்கொடுத்தான் வாழ்வு.
43✓
தூயதவத் தார்மனமுந் தோகையர்கள் சேல்விழியுங்
காயம் பழிக்குங் கதிரையே—மாய
மலையு மலைவாயா மாமரமு மாய
மலையுமலை வாயான் மலை.
44✓
மெய்யன்பர் செய்யுளிலும் வேடுவர்கள் சாணையிலுந்
கையம்பு தீட்டுங் கதிரையே—துய்ய
மழமுதிருஞ் சொல்லமுதம் வள்ளிதா வென்ற
பழமுதிருஞ் சோலையான் பற்று.
45✓
வித்தார் வயல்வரம்பில் வேடர் சிறுகுடியிற்
கத்தூரி வாழுங் கதிரையே—பத்துடைய
மாவடியார் கந்த மலர்தூவி வாழ்த்துகச்சி
மாவடியார் கந்தன் மலை.
46✓
தொண்டர் திருவுருவிற் றொல்வீரர் கச்சுடையிற்
கண்டகம் மேவுங் கதிரையே—அண்டுபவங்
குன்றக் குடிமுழுது மாளுங் குமரகுரு
குன்றக் குடிமுருகன் குன்று.
47✓
சீலமுறு யோகியருஞ் சேவடியைப் பூணுநருங்
காலங் கடக்குங் கதிரையே—நேயமுள
வாச வனத்தன் மடவார் மணவாளன்
வாச வனத்தன் வரை.
48✓
ஒண்டொடி நல்லா ருரைநடையு நெல்வயலுங்
கண்டனங் காட்டுங் கதிரையே—கண்டபடி
பாவையான் பாடப் பரிந்துகேட் டின்பருளு
மாவையான் பாடன் மலை.
49✓
சீர்முகம்பூ வன்னார் திருநுதலுந் தாழ்குழலுங்
கார்முகங் காட்டுங் கதிரையே—சேரு
மயில்வாக னத்த னருமருக னேறு
மயில்வா கனத்தன் மலை.
50✓
தூவியிள மஞ்ஞைகளுந் தொண்டர்களு மாவின்பாற்
காவடிவைத் தாடுங் கதிரையே—தாவுமடல்
அஞ்சே வலத்தனங்கை மாங்கனிக்குப் பூவலஞ்செய்
அஞ்சே வலத்த னகம்.
51✓
ஆராம முல்லை யணிவரையி லாவணத்திற்
காரா மணிசேர் கதிரையே—சேரு
மகரமுதல் வன்னங்க ளாயினான் வாரி
மகரமுதல் வன்னன் வரை.
52✓
வாய்ச்ச தருநிரையும் வண்டமிழோர் வெண்கவியுங்
காய்ச்சசீர் விரவுங் கதிரையே—ஓய்ச்சலிலாப்
பந்தத் திருக்குடையப் பார்த்ததெனையாள் பன்னிரண்டு
பந்தத் திருக்குடையான் பற்று.
53✓
மண்மீ தணிநதியு மாதர்முகத் தாமரையுங்
கண்மீ னுலாவுங் கதிரையே—யுண்ணெகிழ்வாற்
பாற்கா வடியாடும் பத்தர்க் கருளுமறை
பாற்கா வடியான் பதி.
54✓
முட்செறியுஞ் சாரலிலு மொய்குழலார் வாண்முகத்துங்
கட்செவி யோடுங் கதிரையே—அச்ச
மறுத்தாழாத் தாளார்தம் மாயவஞ் ஞான
மறுத்தாளாத் தாளார்தம் வாழ்வு.
55✓
நம்பனுறை பேடகமு நல்லாவி னெய்விளக்குங்
கம்பமா வேறுங் கதிரையே—கும்பிடுவோர்
சங்கடம்ப னாளுஞ் சிதைத்தருளைத் தந்தகந்தன்
செங்கடம்ப னாளுஞ் சிலம்பு.
56✓
தந்தமணிப் பேடகத்திற் சார்புனத்துப் பாத்திகளிற்
கந்தமு லஞ்சேர் கதிரையே—தந்தமணி
கைக்கும்ப கம்பக் கடகளிற்றை யேறியு
கைக்கும் பகவனுறை காப்பு.
57✓
பேணிப் பணிகுநரும் பெட்பார் மதவேளுங்
காணிக்கை யேந்துங் கதிரையே—பேணித்
திருவோண தீர்த்தன் றிசைமுகன்சே விக்குந்
திருவோண தீர்த்தன் சிலம்பு.
58✓
வைத்தமணிப் பந்தர்களு மானமலி வீரர்களுங்
கத்திகை தூக்குங் கதிரையே—குத்திச்
செருப்பா லடித்தானைச் சேர்வித்தான் துரைச்
செருப்பா லடித்தான் சிலம்பு.
59✓
நிட்டைபுரி வோர்பிறவி நீர்ப்பெருக்கம் நெற்கழனிக்
கட்டங் கழிக்குங் கதிரையே—உட்டெளியப்
போதமருந் திட்டிப் புருடோத் தமர்க்கன்று
போதமருந் திட்டான் புரம்.
60✓
குட்டமலர் தாமரையுங் கோதிலடி யார்மலமுங்
கட்டவிழக் காலுங் கதிரையே—யுட்டெளிவில்
அஞ்சத்தா னானுன் னடைக்கலமென் றேத்தவருள்
அஞ்சத்தா னானுன் னகம்.
61✓
பொற்பார் கழகத்தும் போகும் வழியகத்துங்
கற்பா ரிருக்குங் கதிரையே—நற்புலவன்
வேன்முட்டை யென்றூழ் மிகுசுரத்துப் பேர்வினவு
நான்முட்டை யென்றா னகம்.
62✓
மாமயல்கூர் காமுகரில் வண்பொருளி லன்பருருக்
காமனம்பு தைக்குங் கதிரையே-தேமருவு
நன்னா வலங்கனி நாவலத் தாட்கீந்த
நன்னா வலங்க னகம்.
63✓
மல்லனீர் மூழ்குநரு மாசிறவ ருங்காவிக்
கல்லுடை தோய்க்குங் கதிரையே—சொல்லிறைவர்
மாவின் பழப்போரில் வண்பழனி போயெவர்க்கு
மாவின் பளப்போன் மலை.
64✓
பட்டா ரிடையார் பருவிழியு மேம்பாலுங்
கட்டா ரிவருங் கதிரையே—கட்டிளமைக்
கும்பமுனி யத்தனத்துக் கொம்பனையாட் கின்பமருள்
கும்பமுனி யத்தனத்துங் குன்று.
65✓
பொங்கு மணிநதியும் பூட்கைக் கொடிச்சியருங்
கங்கங் கிடிக்குங் கதிரையே—சங்கப்
பலகையுடை யார்க்குப் பனுவலுரை தேற்றும்
பலகை யுடையார் பதி.
66✓
மால்விழியார் வாண்முகத்தின் மைந்தர்வலச் செங்கரத்திற்
காலயில் காட்டுங் கதிரையே—சேலறுக்குங்
கண்ணா றிருங்கூந்தற் கண்ணியரோ டாடுமலர்க்
கண்ணா றிரண்டுடையான் காப்பு.
67✓
கொம்பாற் கொடிச்சியருங் கோபமத யானைகளுங்
கம்ப மிடிக்குங் கதிரையே—கொம்பெருமை
மாட்டானென் பான்வாள் வயவீரர்க் கஞ்சிவர
மாட்டானென் பான்வாள் வரை.
68✓
செய்யமட வாரணியுஞ் செல்வத் திருவடியுங்
கைவலமே காட்டுங் கதிரையே—செய்ய
கருப்புரச் சோதிதலைக் காட்டினார் மாட்டு
விருப்புரச் சோதிதலை வெற்பு.
69✓
வஞ்சியர்கள் மார்பகத்து மாமலையின் சார்பகத்துங்
கஞ்சுகச்சீர் மேவுங் கதிரையே—கொஞ்சுமொழி
மஞ்சோதி வள்ளி மணவாள னாகியப
ரஞ்சோதி வாழு மரண்.
70✓
எண்ணுநருக் கின்னருளால் ஞாலத்துக் கோர்முகத்தாற்
கண்ணிருள் சீக்குங் கதிரையே—எண்ணி
யுருவேற்று மையர்க் குளமாசு தீர்த்தின்
னுருவேற்று மைய னுறைவு.
71✓
ஆற்றாச் சிறுவர்களு மம்மான் றிருமகனுங்
காற்றே ருருட்டுங் கதிரையே—போற்றியே
ஓங்குமா ராயநம வென்றார்க் குளந்திருத்து
மோங்குமா ராயனம ரூர்.
72✓
ஓதரக ராவொலியு மொண்டொடியார் கூர்விழியுங்
காதம் பரியுங் கதிரையே—மோதுபவம்
ஏழுமலை யாவா றெமக்கருள்வா னெஞ்ஞான்று
மேழுமலை யாள்வா னிடம்.
73✓
இட்டிடையார் வாய்மொழியி லின்பமலி யும்விழவிற்
கட்டியங் கூறுங் கதிரையே—கட்டமழி
நீற்றுமலை யாள நியமமலை நீள்பிறவி
யாற்றுமலை யாள னகம்.
74✓
ஆண்டுமலை யேறுநரு மாபரணம் பூணுநருங்
காண்டம தேந்துங் கதிரையே—ஈண்டிவரக்
கோக்குவித்துக் காக்கக் குடைபிடித்த கோன்மருக
னாக்குவித்துக் காப்பா னரண்.
75✓
செய்யு மணத்தினிலுஞ் சேயிழையார் கூடலிலுங்
கையாழி கூட்டுங் கதிரையே—மெய்யாகக்
காலையிலா லத்திகொளுங் கன்னியர்கள் வாழுமொளி
காலயிலா லத்திகொள்வான் காப்பு.
76✓
ஏந்துசிலை வீரர்களு மின்றமிழ்ப்பா வாணர்களுங்
காந்தம் பராவுங் கதிரையே—போந்த
கரும்பனைக்கைக் குஞ்சரத்தான் கண்ணுதித்தா னூருங்
கரும்பனைக்கைக் குஞ்சரத்தான் கண்.
77✓
கொண்டநிய மத்தினருங் கூறுமகா ரின்மொழியுங்
கண்ட மறுக்குங் கதிரையே—தொண்டர்க்
கறமறைந்த சேய னருளிலா வண்டர்க்
கறமறைந்த சேய னகம்.
78✓
ஐயர்புகழ் நாணு மரிவையரும் போதகமுங்
கையமுகங் காட்டுங் கதிரையே—மெய்யன்பர்
செந்தீக் குளமடைந்து தெய்வந் தெரிக்குமிறை
செந்தீக் குளமடைந்தான் சேர்வு.
79✓
அஞ்சமலி வாவியிலு மன்பர்துதி பாணியிலுங்
கஞ்ச மலியுங் கதிரையே—நஞ்சத்தாற்
கண்டங் கறுப்பாற் குரைத்தான் கடியவினை
கண்டங் கறுப்பான் கடம்.
80✓
அக்கோக் குரவையரு மாறியங்கு மன்பர்களுங்
கைக்கோப்புக் கொள்ளுங் கதிரையே—இக்குவளை
வேளைக் கடைக்கணிப்பால் வென்றவன்சே யஞ்சியழும்
வேளைக் கடைக்கணிப்பான் வெற்பு.
81✓
மாமயிலன் னார்குழலில் வண்டலைகைத் தண்டிலிசை
காமரம் பாடுங் கதிரையே—மாமயல்செய்
தண்ணவா வென்றா ரகத்தரொரு மாவாக
அண்ணவா வென்றா ரகம்.
82✓
வாரிரும்ப லாவின் மகோததியில் வந்துபயன்
காரினம்வீழ்ந் துண்ணுங் கதிரையே—நேரம்பு
சம்பந்த னுக்குகந்த சந்தமுலை யாள்பயந்த
சம்பந்த னுக்குகந்த சார்பு.
83✓
பேசுபிறப் பஞ்சுநரும் பீதகவி னையரும்பொற்
காசுபறி யென்னுங் கதிரையே—நேசமுடன்
பாவடியிற் சிந்தினாற் பாடவருள் வோன்பகையைத்
தாவடியிற் சிந்தினான் சார்பு.
84✓
மாயாவே யான்வடிவு மங்கைநல்லார் மென்றோளுங்
காயாவே யொக்குங் கதிரையே—தூயவுமை
மாதிட மீவான் மகன்மறலிக் கஞ்சாத
மாதிட மீவான் மலை.
85✓
வேயார் நதிக்கரையும் வெற்பாருஞ் சாரல்களுங்
காயாமா மேவுங் கதிரையே—ஓயாமல்
வேலவா வாவென்று வேண்டிப் பணிகுநர்க்கு
மாலவா வாட்டுவோன் வாழ்வு.
86✓
நீலாறு காமலரு நீள்வீதிச் சாருமணி
காலாறு பாயுங் கதிரையே—மாலான
நெஞ்ச மறுப்பான் நினையுமன்பர் மூலமல
வஞ்ச மறுப்பான் மலை.
87✓
மாவிரத மாதவரும் வண்ணமலர் வாவிகளுங்
காவி யணியுங் கதிரையே—தூவி
யணிமயிலான் சேவலா னன்பிலார்க் கென்று
மணிமையிலான் சேவலா னன்பு.
88✓
போதகங் கொம்பாலும் பூங்கொடியார் வாயாலுங்
காதன்முத் தீயுங் கதிரையே—ஓது
மருவார்க டம்பகையை வாட்டுமணி வைவேல்
மருவார் கடம்பன் வரை.
89✓
இட்டபாற் சட்டியினி லேந்துகின்ற காவடியிற்
கட்டளை மேவுங் கதிரையே—முட்டியமர்
ஏற்றினான் வாழ விரங்கியடி யீந்துகரை
யேற்றினான் வாழு மிடம்.
90✓
நச்சுமட மின்னாரு நந்துபொரு ளீட்டுநருங்
கச்சவட மேற்கொள் கதிரையே—வச்சிரத்தன்
கைப்பிடியாக் கொண்டானக் கானக் குறத்திதரு
கைப்பிடியாக் கொண்டான்றன் காப்பு.
91✓
மன்னிய தோன்றி மலருமதி நூலினருங்
கன்னியத்தங் காட்டுங் கதிரையே—துன்னுபல
கோட்டுவரி மாவுருவங் கோதினான் கொண்டநெடுங்
கோட்டுவரி மாவுருவன் குன்று.
92✓
பாற்பாப்பு ளொன்று படைவீர ரோர்நான்கு
காற்பா டலஞ்சேர் கதிரையே—போற்றியருள்
என்னத்தா னென்பா லிடர்களைவா னிக்குவே
ளென்னத்தா னென்பா னிடம்.
93✓
விண்ணுறை சோலை வியன்மலரும் வேண்டினருங்
கண்ணறை போக்குங் கதிரையே—கண்ணருளி
வாகா முருகா வரிமருகா பன்னிரண்டு
வாகா வெனவருவான் வைப்பு.
94✓
ஆசை மறந்தவரு மண்டிவந்து வேண்டுநருங்
காச மறுக்குங் கதிரையே—ஆசை
விடக்குஞ் சரிக்கும் வினையுமுறுத் தாளுங்
கடக்குஞ் சரிமகிழ்நன் காப்பு.
95✓
நல்ல தவரு நடந்து வருவோருங்
கல்லறையிற் றங்குங் கதிரையே—அல்லன்மிகு
கண்டீதி வைத்தென் கரும மலமுடியக்
கண்டீதி வைப்பான்றன் காப்பு.
96✓
ஓதுவார் நாவி லுயர்ந்ததே மாமரத்திற்
காதம் பரிவாழ் கதிரையே—போதலரும்
பன்னிரண்டு கண்ணான் பழநிப் பழம்பதியான்
என்னிரண்டு கண்ணா னிடம்.
97✓
பாலமரும் பூங்காவிற் பாலிடையர் முன்றில்வயிற்
காலச மேவுங் கதிரையே—ஏலுமுடற்
போக்கும் வரவும் புரிவினையும் பொல்லாப்பும்
போக்கும் வரதன் புகல்.
98✓
செவ்வைப் புனத்திற் றிருவிழாக் காலத்திற்
கவ்வை மலியுங் கதிரையே—யெவ்வமறப்
பார்ப்பா னமர்ந்துவிழி பன்னிரண்டாற் பார்த்தவற்றைத்
தீர்ப்பா னமருஞ் சிலம்பு.
99✓
சாந்த நிலைத்தொண்டர் தாலுஞ் சிறுகுடியுங்
காந்தாரம் பாடுங் கதிரையே—ஏந்துமுச்சங்
கத்த னமாதிக் கடவுள் பரமசு
கத்தனமா வென்பான்றன் காப்பு.
100✓
வாய்ச்ச கணியில் வனவேடர் வாழ்குடியிற்
காய்ச்சுரை மேவுங் கதிரையே—வாய்ச்சமுதன்
மாக்குஞ் சரவணத்தன் மாமனத்தன் மாறிலின்ப
மாக்குஞ் சரவணத்தன் வாழ்வு.
101✓
முட்டுவழிச் செல்வோரு மூதறிஞ ருந்தலையிற்
கட்டிறக்கி யாறுங் கதிரையே—முட்டு
மிருமலச் சிக்கறுத்தே யென்னையாண் மும்மைக்
கருமலச் சிக்கறுப்பான் காப்பு.
102✓
மேல்கீழ்ப் பிறவிகளில் வீழ்குநரை வேர்த்தோரைக்
காலாறு தல்செய் கதிரையே—நாலாறு
மேழுமைஞ்சி னீங்கி யினிதருள வெம்பிறவி
நாளுமைஞ்சி நீங்கு நகம்.
103✓
தெய்வப் பணியுந் திருத்தல யாத்திரையுங்
கைவல்லி யஞ்செய் கதிரையே—செய்யதமிழ்
முன்பாட்டுங் கேட்டான் முதிர்வினைகண் மாற்றவுவந்
தென்பாட்டுங் கேட்டா னிடம்.