கதிரேசன் பேரில் அனுதின களிப்பு
ஆனந்தக்களிப்பு2 / 2
கதிரேசன் பேரில் அனுதின களிப்பு
ஆனந்தக்களிப்பு
✓
தானந்த னாதந்த னானா-தந்த
தானாத னாதந்த னாதந்த னானா
சீர்மேவுங் கதிர்காமம் வாழும்-வள்ளி
தெய்வானை மணவாளன் மீதிலெந் நாளும்
பார்புகழ வேதுதி சிறக்க-எங்கள்
பாரமதை யானைமுகன் தன்னருள் பெருக்க
தானந்த நடனமயி லேறுஞ்-சுவாமி
சரஹண பவானந்தன் மீதிலருள் சேரும்
ஆனந்தக் களிப்பிதனைப் பாட-கைலை
யாளிமல ரடியைநா னனுதினந் தேட
சதுர்முகன் தேவிநயந் தரவே-யிந்தத்
தாரணியி லுகந்தகவி வாணர்ஜெயம் பெறவே
கதிர்காம மாநகர் சிறப்பாம்-எங்கள்
கண்ணரரு ளால்சொன்ன ஆனந்தக் களிப்பாம்
திசைமெத்த புகழ்கொண்டு நாளும்-நல்ல
செல்வமிகு வியாபார தர்மமது வாழும்
வசியகுல நகரத்தார் தானே-வந்து
வணங்குமெங்கள் கதிரேசன் சந்நிதியில் நானே
சொன்னகவி தன்னையரங் கேற்ற-வதனில்
சொற்பிழைகள் வாராம லென்னையுமே காத்த
நன்னய மிகுந்த தெய்வானை-யம்மான்
நற்கமல ரடியிணையை நான்துதிப் பேனே
அருமறைகள் புகழ்துதிகள் பூணும்- வள்ளி
யம்மையென் கவிதனக் கருள்தரவும் வேணும்
குறுமுனியைப் பணிந்து கவிகூற-அதற்கு
குறைகளொன்றும் வாராமல் சபையிலரங் கேற்ற
சீதையால் ராமனு முன்னாலே-வந்து
தெர்ப்ப சயனஞ்செய்த திருப்புல் லாணியிலே
நாதனருள் கங்கைகுல சீலன்-தங்கம்
ராமசாமி சொன்ன கவிக்குகந்த வேலன்
எச்சரிக்கை யென்றிடும்பன் கூற-வந்து
இருபுறமுங் காவடிகள் நின்றுவிளை யாட
பச்சைமயி லேறியருள் சீலன்-நித்தியம்
பக்ஷம்வைத் தென்கலி யகற்றும் வடிவேலன்
தென்கதிர் மாநகர் விளங்க-வந்த
தேவாதி தேவர்ஜெயங் கூறியே முழங்க
அன்பான சன்னதி யிலங்க-கதிரை
ஆறுமுக வேலருட மாபதி துலங்க
முன்னாலே கோபுர முகப்பும்-எங்கள்
முருகேசன் கோவில்முழுச் செம்பால் வகுப்பும்
அன்னமெனும் தெய்வானை மாடம்-வள்ளியம்மை
யவள்பந் தடித்துவிளை யாடிடுங் கூடம்
மூதண்ட யோகபதி யேறும்-கதிரை
முத்துலிங்க சுவாமியுட சன்னதியைப் பாரும்
நாதமொடு கீதமு முழங்க-வசிய
நகரத்தார் கட்டிவைத்த சத்திரம் விளங்க
காணிக்கை கொண்டு வெகுகோடி-மக்கள்
கதிரேசன் சன்னதிக்கு வருவார்கள் தேடி
மாணிக்க கெங்கைநீ ராட-இங்கே
மாதவரும் மனிதர்களும் வந்துநிதங் கூட
பொன்னலங் காரநகர் வாசம்-எங்கும்
புகழ்பெற்ற நவரத்ன மேவிளையுந் தேசம்
சொர்ணமிகு கதிரைவள மெத்த-தோழி
சொல்லுகிறேன் நாட்டுவளம் வானுல குதித்த
இந்திரனுட யேவலதி னாலே-வந்த
ஏழுமேகமு மொன்று கூடியே மேலே
சந்திரனென வாகவுமே வோங்கி-சத்த
சாகர மதில்தாவி தண்ணீரை வாங்கி
மாலென விசும்பிடை படர்ந்து-முகில்கள்
மண்டியே கெர்ச்சித்து மின்னலு மடர்ந்து
நாலுதிசை நாடியே தெளிந்து-கதிரை
நகர்பூமி யெங்கும்மழை மாரிகள் பொழிந்து
ஏரிகுளம் வாவிகள் நிறைந்து-வயல்க
ளெங்கெங்கு மேகன்னல் செந்நெலும் வளர்ந்து
வீரிய மிகுந்தமு தத்தின்-நல்ல
வெண்கமுகு சோலைமலை மேலெங்குந் தோண
தனியே பழுத்துதிரு வாவும்-அதனில்
தாவியொரு கொம்போடே கொக்குகளு மேவும்
இனியமலர் வாசனைகள் தேடும்-விறுவிறென்
றிருபத்து நாலுகால் வண்டினங் கூடும்
நாகமது நாகமதி லேறும்-துய்ய
நாகமே புனைந்தசில மாதரையும் பாரும்
நாகமல ரசோகுமலர் முல்லை-யிந்த
நாட்டினிலே கலைபகடுக் கொருகொம்பு மில்லை
முல்லையிரு வாட்சிக ளெடுத்து-அந்த
முல்லையிலே யிதழில்லா மடவார் தொடுத்து
வல்வினை தீரவெனத் தேடி-மாது
வள்ளி தெய்வானைக் கிடுவார்கள் கோடி
சதுர்மறையும் புகழ்தேவ ரிங்கே-வந்து
தான்வாசஞ் செய்கதிரை மாணிக்க கெங்கை
இதிலே நீராடுவது சித்தி-ஜென்மம்
ஈடேறுஞ் சாயுச்சிய பதவியிலே முத்தி
கோலமா மலையழகைப் பாரும்-கதிரை
குமரேச னருளாலே வல்வினைகள் தீரும்
மூலகண பதிக்கிறைய வாகன்-கதிரை
முத்துலிங் கேசருக் கருள்செய்த யோகன்
மாமேவும் புவிபுகழுந் தேட்டான்-கதிரை
மகிமைகளைச் சேடனா ளளவிட மாட்டான்
பூமேவுங் குழல்வள்ளி நேயன்-சுவாமி
புண்ணியன் தேவருக்கும் மனிதருக்கும் நாயன்
பச்சைமால் தனக்குமரு கோனே-சுவாமி
பழனிமலை மீதினிலே மேவுமுரு கோனே
வச்சிரா யுதன்தம்பி மருகா-உந்தன்
மலரடி யெனக்குநிதந் தரவேணு முருகா
நவவீரர் துணையான குகனே-நம்பி
நாராயணன் றங்கை யபிராமி மகனே
நவமணி யணிந்த வொளி மூவா-நின்று
நடனமிடு மயிலேறி யெனைவந்து காவா
கனககுண் டலமிட்ட நீதா-சுவாமி
கார்த்திகே யாலட்சம் படைவீரர் தானே
தனமேரு பாக்கியமருள் வேலா-எங்கும்
சர்வபரி பூரண னந்தசிவ பாலா
ஓராறு மங்கையர்கள் சேயன்-பவனி
ஒய்யார மாகமயில் மீதுலவு தூயன்
ஈராறு பன்னிருகை யாண்டி-புவன
மெங்கெங்கு மேதுதி மிகுந்த மெய்யாண்டி
ஆண்டிபொன் னாண்டிசிவ னாண்டி-பழனி
யாண்டிமலை யாண்டி சிலையாண்டி யிவனாண்டி
ஆண்டிமக னாண்டியிவ னாண்டி-நதிகள்
அழகான சாமிமலை திருப்பரங்குன் றாண்டி
சிக்கல்புர வச்சேரி யாண்டி-சுவாமி
திருச்செந்தூ ரெட்டிகுடி குன்றைக்குடி யாண்டி
மிக்கதிரு வேரகத் தாண்டி-கதிரை
மேவிவளர் வேல்முருக னாறுமுகத் தாண்டி
சோலைமலை கழுகுமலை யாண்டி-நல்ல
தோகைமலை விராலிமலை சென்னிமலை யாண்டி
வாலையருள் பெற்றவடி வேலா-முனிவர்
மாதவர்க் கேயெந்த நாளுமனு கூலா
விடவரவு படமும்விசை கெடவும்-படியே
வடவரைகள் கிடுகிடென கெஜமுமசை படவும்
கடல்சுவற கதிர்மதி கலங்க-தாவி
கனவேக மாகவரு மயில்மீ திலங்க
மேலாகி விளையாடு மெய்யா-வெற்றி
காலா யுதத்தையு மெறிந்த முருகையா
சாலோக சாமீப மென்னும்-சுவாமி
சாரூப சாயுச்ய பதவியிலே முன்னும்
ஆகவே நின்றபர நாதா-என்னை
ஆதரித் தாளவர வேணுங்குரு நாதா
தாகமா யிருக்குதுனைக் காண-வந்த
சுவாமி வருவாயெனது கண்ணெதிரே தோண
அரகரா வேலனே நமாவோம்-சுவாமி
ஆறுமுக மாய்வந்த வடிவே நமாவோம்
அரகரா முருகா நமாவோம்-வாலை
யம்பிகை பாரசக்தி மைந்தா நமாவோம்
அரகரா குகனே நமாவோம்-சுவாமி
அன்பருக் கன்பான பொருளே நமாவோம்
அரகரா தேவா நமாவோம்-சுவாமி
அகிலபுவ னத்திலும் நிறைந்தாய் நமாவோம்
மயிலேறு மொயிலா நமாவோம்-பொதிகை
மலைமேவுந் தமிழ்முனிவன் குருவே நமாவோம்
மயிலேறும் கந்தா நமாவோம்-வட்ட
வடவாலில் மேவுமால் மருகா நமாவோம்
மயிலேறும் நாதா நமாவோம்-சுவாமி
மலைமேவும் பரமனுட குருவே நமாவோம்
மயிலேறு கின்றாய் நமாவோம்-தங்க
வடிவான வேலது வுகந்தாய் நமாவோம்
திரிபுர பவாவா நமாவோம்-வாலை
சேயனே திகழொளி பவாவா நமாவோம்
பரிபுரி பவாவா நமாவோம்-வள்ளி
பாகனே பவனொழி பவாவா நமாவோம்
சரகண பவாவா நமாவோம்-கந்த
சுவாமியே சயலொளி பவாவா நமாவோம்
தருமதுரை யேநீரு மென்னை-நல்ல
தருணமிது காணிந்த வேளையிலே யென்னை
காவாவுன் னீரடிகள் தன்னை-நான்
கண்டெனது கலிதீர வந்துமென் முன்னை
வாவென்று சொல்லமன மிலையோ-உமக்கு
வள்ளிதெய் வானைவிடை தந்தனுப்ப விலையோ
தஞ்சமென் றேனே யுனக்கு-எனது
சஞ்சல மெனுங்கலியைத் தீர்ப்பா யெனக்கு
அஞ்சறிவு மானதா யகனே-சுவாமி
அகிலாண்ட கோடி பிர்ம்மாண்ட நாயகனே
உன்கிருபை தந்துமேகண் பாரும்-இந்த
உலகமுழு தாள்பவனே யென்கலியைத் தீரும்
அன்புபெரும் வரைராஜன் பேரா-சுவாமி
அடியேனுன் னடியிணையைக் காணநீ ராரா
வாவாயென் றேவாநீ யென்றே-சுவாமி
வடிவேலா வாவாவெனத் தொழுது நின்றே
எவன்றே டினாலுந் தேடட்டும்-நமக்
கென்சொல்லிக் கவிபாடி னாலும் பாடட்டும்
நமக்கென்ன வென்றிருக்கி றீரோ-சுவாமி
ஞாயமோ நானுமுறை யிட்டதறி யீரோ
உமக்குமன திரங்காத தேது-எங்க
ளுத்தமி துரந்தரியின் பாலா யிப்போது
ஐயாநீ கிருபைசெய்த தாலே-இந்த
அகிலாண்ட கோடிபூ மண்டலத்தின் மேலே
மெய்யான சரியையி லனேகர்-அதற்கு
மேலான கிரியையி லிருப்பவ ரனேகர்
தவயோகக் காரர்வெகு வெள்ளம்-அங்கு
தங்கியே யிருப்பவர்க ளோமகா வெள்ளம்
அவர்களைப் போல்நான்பிறந்த திலையோ-சுவாமிக்
காளாக வெனக்குவிதி வயனெழுத விலையோ
அன்னையவ ளீன்றெடுத்த கெதியோ-எனக்கு
ஆதியிலே முன்னவர்கள் செய்துவந்த சதியோ
என்னகுறை யிருந்தாலுந் தீர்த்து-உந்தன்
இணையடி களாக வென்னையுமே சேர்த்து
ஆளாக்கி யாளலா காதோ-எந்த
னகந்தனிலே நீயிருந்து வாழலா காதோ
பாழான மனங்குவியு திலையோ-என்ன
பாவமோ வதிலிருக்கும் பிசகுதெரி யலையே
வஞ்சக மில்லாமலே கண்பாரும்-முடிவில்
மறலியுட தூதரென்னை வருத்தாமல் காரும்
அஞ்சுதலை யாரருளுந் துரையே-உமக்கு
அஞ்சுதலை யால்வேத னிருந்ததுவுஞ் சரியே
ஆறுதலை கண்டரண்ட ரய்யா-பின்பு
ஆறுதலை யாய்ப்பதியை யாண்டாரே மெய்யா
ஆறுபடை வீட்டுக் கதிகாரா-வந்த
அசுரருட னஞ்சாத போர்புரியும் வீரா
சத்தியுமை பாலகனே சாமி-எந்தன்
தாசனுக்கு தாசனெனைக் காப்பதற் கேகு
சுத்த பரிபூரணா வுன்னை-ஓதி
துதிக்குமடி யார்க்குமடி யாகவரு.ளென்னை
பொய்யாத வாழ்வருள் வேலா-கதிரை
ஐயாவே யெனையாளுக் தேவாதி தேவா
ஒய்யார மானமுரு கோனே-வந்த
உற்பவ மெனுந்துதியைச் செப்புவே னானே
உரமான வசுரரிட ராலே-தேவ
ரோடிமுறை யிட்டாரே கைலைமலை மேலே
அரனசுரர் மேல்கோப மாகி-கைலை
யாளிவிழி தனிலே யொருபொரி சிதறியே
சரஹணப் பொய்கையி லமர்ந்து-அதுவுஞ்
சந்திரோ தயம்போலே பாலனென வந்து
உருவாகி மலர்மீதி லானார்-எங்கள்
ஓம்நமசி வாயரெனும் பரமனருள் மகனார்
அப்பவே சென்னியோ ராறாய்-மெத்த
வழகான செந்திரு புயங்களி ராறாய்
உற்பவ மானபனி ரண்டு-விழிகள்
ஒளிவாகி யோராறு பெண்கள்பா லுண்டு
அயனையுஞ் சிறையினில் விடுத்தான்-கந்த
னரனுக்கு வுபதேசஞ் சொல்லியே கொடுத்தான்
கயமுகா சூரன்முத லோரை-கந்தன்
கைவேலி னாலவர்கள் கருவறுத் தாரே
தங்கவடி வேலலங் காரன்-மாது
தையல் தெய்வானை மணமேவு சிங்காரன்
தென்கதிரை மாநக ரிலங்கும்-சுவாமி
சிங்கார மாயுனது வருள்கிருபை பொங்கும்
சித்தமு மகிழ்ந்துவரும் லோலன்-வள்ளி
தெய்வானைக் கிணையான சித்ரமயில் வேலன்
சத்திவே லாயுதமு முடையான்-பூண்ட
தண்டைகள் கலீரென்வே வந்தருளும் நடையான்
கடகமெனு மானதிங் களிலே-எங்கள்
கதிரேசன் திருவிழா பவனிவரு கையிலே
கடல்போல பேரிகை முழங்க-விருது
கட்டிய மிருபுரமு மருகே தயங்க
செங்காவிப் பட்டாலே கோடி-கொடிகள்
ஜெண்டாவு மாலவட்டக் குடைகள் பலகோடி
மங்காத சாமரைகள் கோடி-வீசி
வருவார்கள் நடனமிடு மடமாதர் கோடி
சேர்க்கையாய் முரசங் சங்கூத-நல்ல
செந்தீ வளர்ப்பவர்கள் நான்மறை யோத
பார்க்கவெகு மாமுனிவர் வரவே-கவிகள்
பாடியே வரகரா வென்றுபுகழ் பெறவே
ஆணிப்பொன் மாலைக ளிலங்க-மொய்த்த
அழகான வாலாத்தி தீபமே துலங்க
மாணிக்கப் பேழையி லுகந்தார்-கந்தன்
மதயானை மேலேறி யேபவனி வந்தார்
மதகரியோ வருகிறதைப் பாரும்-சுவாமி
மாணிக்கப் பேழையி லுகந்ததையும் பாரும்
கதிர்காமத் திருவிழா நேர்த்தி-எங்கள்
கந்தனு முகந்ததிரு வாபரணஞ் சாத்தி
கரியுலவு வனமூடு சென்று-சொல்லக்
கதிர்காமம் போய்வந்து நீரறுப் பென்று
சரியான பௌரணையை நாடி-கந்த
சாமிசங் கீதபரி வாரமுடன் கூடி
வாரிபோல் பெருகி நீரோடி-வார
மாணிக்க கெங்கையிலே வந்து நீராடி
கூரான வடிவேல் சுமந்து-எங்கள்
குமரேசன் வள்ளிதனை நாடியே யுகந்து
புள்ளிமயில் வேலர்விைர வாக-சென்று
பூவையெனுங் குறமாது கோவிலுக்குள் ளேக
வள்ளியம்மை சுவாமிதனைக் கண்டு-வாரு
மணவாள ரென்றடி பணிந்தன்பு கொண்டு
சித்ரமணி மலரணியில் தாவி-நல்ல
செங்கமலக் கரத்தா லணைத்திவர்கள் மேவி
கொத்துமுத்து நத்துகளை திருத்தி-யிவர்கள்
குளிர்ந்தகம கமெனமலர்வாசனைகள் பொருத்தி
இங்கித மணாளகுண தீதா-யெனக்கு
யினியசுக போகமத லீலா வினோதா
எங்கள்குலம் விளங்கவந்த நேசா-சுவாமி
யெனக்கிரங்கி யிதுசமயம் வந்தவிசு வாசா
அத்தைபெற்ற முத்தெயெங் கோனே-யென்ற
ஆரணங்கை யுபசரித்து தேனேயம் மானே
முத்திரையிட் டிலங்குகொங்கை யாளே-வள்ளி
மோகனமே யென்றந்த வேலவர்கை யாலே
கலந்தணைந்த சுகந்தமண வாசன்-எண்கள்
கட்டழகி வள்ளிதனைப் பார்த்துமத போஜன்
சலதரத்தைப் பழித்தகுழ லாளே-இந்திர
தனுவோவென் றதிசயிக்கும் புருவநுத லாளே
என்றனுக் கிசைந்த மனையாளே-வள்ளி
இந்திரன்மகள் தெய்வானைக்குகந்த துணையாளே
வந்துவெகு நேரமா குதடி-யெந்தன்
மாதுதெய் வானையெனைத் தேடிடுவாள் நாடி
போய்வாரேன் விடைதாடி யென்ன-வள்ளி
பூவையவள் கேட்டெந்தன் சாமிநீர் சொன்ன
வாய்ச்சம்பிர தாயம்வெகு வீச்சு-நான்
போய்வாரு மென்றுசொன்னவகை தானென்ன பேச்சு
அங்கேபோய் செலுத்துமதி காரம்-யெந்தன்
அரண்மனையி லிருந்தாக்கால் நடக்காதோ வீரம்
இங்கிரண்டு நாளிருந்து போனால்-சுவாமி
என்னகுறை வாகிவிடுங் காணுமுமக் கதனால்
என்மனையி லிருக்கையிலே யவளேன்-உம்மை
யேன்தேட வேண்டியது தாளேன்
உண்மையெனக் கின்னதென்று தானே-சுவாமி
உரையுமென வேலவரும் வள்ளியென் மானே
இங்கேவந்து நானிருப்ப தாலே-யென்னை
யெங்கேயோ வென்றுதெய் வானையொருக் காலே
மங்கையருந் தேடுவா ளின்று-யெனக்கு
வள்ளிநீ விடைதாடி போய்வாரே னென்று
இவர்கூற வள்ளிமின் னாளே-சுவாமி
யின்றிரவு யிங்கிருந்து போகலாம் நாளை
அவசர முமக்கென்ன யங்கே-சுவாமி
ஆனாலும்நீர் போக சம்மதியே னிங்கே
கூடாது உம்மைவிட மாட்டேன்-மூத்த
குடியாளுக் கஞ்சிநான் பயப்படவு மாட்டேன்
தேடியிங்கே தெய்வானை வரட்டும்-யென்று
செப்புவதும் யொப்பினையும் வள்ளிகை நீட்டும்
பார்த்தே தடிவள்ளி மானே-சற்றும்
பாராம லிம்மொழிக ளேன்சொல்லு வானே
ஆத்திர முனக்கென்ன போடி-தெய்வ
யானைக்கு நிகராவ ரோபெண்கள் கோடி
சொந்தமாய்க் கிருபை பாராட்டி-அந்தத்
தோகையரைப் பருவமதில் நான்மாலை சூட்டி
வந்தபடி யாலவ ளுக்கு-முந்தி
வந்தவளு மானதால் நானுமவ ளுக்கு
அடக்கமா யிருப்பதுவே சிலாக்கியம்-வள்ளி
ஆனாலும் இல்லறத்துக் கதுதானே யோக்கியம்
மடக்கொடி தெய்வானையவ ளிங்கே-நானும்
வந்தவகை தெரியாது தேடுவா ளங்கே
போகவிடை தாவென வதட்ட-யெங்கள்
பூவையெனுங் குறமாது கதிகோப மூட்ட
மாகனக மேடையி லிலங்கும்-உமது
மனையாட்டி மூத்தகுடி யாளென விளங்கும்
தெய்வானை சொந்தமாய்ப் போச்சோ-நானுந்
திருட்டுத் தனமாய்வந்த கள்ளிபோ லாச்சோ
கைமாயஞ் செய்தோமே நாங்கள்-ஒருவர்
காணாதே மாலையிட்டு வந்தீரோ உங்கள்
சாதியா ரேசுவா ரோகாண்-நீருந்
தலைமறைய யென்மனைக்கு வருவானே யேன்காண்
ஆதியிலே யெனையு நினைத்து-வந்த
தறியாளோ தெய்வானை யும்மை யழைத்து
கூட்டிவந்த நாரதரைக் கேளும்-வனத்தில்
குளத்தருகிலே மிகுந்த கரடிபுலி வாழும்
காட்டினி லுமக்குதவி செய்தார்-உங்களண்ணன்
கணபதியைக் கேட்டாலுஞ் சத்தியமாய்ச் சொல்வார்
சிவதலங்கள் செயசபைமுன் னாலே-வைத்து
தெய்வானை யைத்தாலி கட்டினதி னாலே
அவள்மாத் திரஞ்சொந்தக் கிளையோ-சுவாமி
ஆனாலும் நான்கிழக்கு முகமிருக்க விலையோ
வள்ளியிவை சொல்லவே திகைத்து-செந்நெல்
வளமான தென்கதிரை வேலனும் நகைத்து
கள்ளிபோல் வீணிலிரை யாதே-பொல்லாக்
கசடான குறவரிட சாதியொளி யாதே
இரண்டுசமு சாரமா காது-யென்று
நீணிலத்திற் சொல்லுவது சரியான தோது
வண்டர்குல மானேயுனை நாடி-வந்த
மணவாள னுக்கெதிர்கள் பேசலா மோடி
நில்லுநான் போய்வாரே னென்று-சொன்ன
நினைவறிந்து வள்ளியவள் சீறியெதிர் நின்று
வல்லப முமக்கென்ன காணும்-எனக்கு
வகைசொல்லி யப்பாலே நீர்போக வேணும்
என்சமர்த்தைப் பாருமினி யென்றே-வள்ளி
இடைதனிலே சேலையை யிறுக்கியெதிர் கொண்டே
அன்புற நெருங்குவது கண்டார்-வள்ளி
அப்பாலே நில்லென்று சொல்லுகிறே னென்றார்
சொல்லுகிற சமாச்சார மென்ன-உமது
தொழிலைநான் னெடுகிலு மறிந்துமினி யென்ன
நல்லதினி மேற்கொண்டு பார்ப்போம்-உமது
ஞாயமதை தேவசபையி லேசொல்லிக் கேட்போம்
தேவசபையி லேசொல்லிப் பாரு-அவர்க்கு
தெரியுமடி தினைப்புனத்தில் நீயிருந்த சீரு
ஓவியமே என்னுறுதி கேட்க-யெழுதும்
உடன்படிக்கை முறியுண்டோ கொண்டாடிப் பார்க்க
உடன்படிக்கை முறியெழுதித் தாரேன்-வள்ளி
யுனக்கேவல் செய்வதற்கு உன்பிறகே வாரேன்
கடக்கவனைத் தள்ளாதே மானே-யென்று
கட்டிமுத்த மிட்டது கசப்பேறு வானே
தனியே வனத்திலிரு பேருங்-கூடுஞ்
சையோக வேளையிலே பார்த்தென்னை நீரும்
இனியசெந் தேனோகற் கண்டோ-உந்த
னிதழென்று சொன்னதுவு மில்லையோ வுண்டோ
முன்னிருந்த யினிப்பென்ன போச்சோ-யிப்போ
மூத்தகுடி யாளுமகு சர்க்கரைபோ லாச்சோ
என்னைநீர் வசைசொல்வ தேனோ-சுவாமி
யென்குலத்தை நீரிகழ்ந்து பேசுவது மேனோ
தந்தையுங்கள் தேட்டையெடுத் தாரோ-யெங்கள்
சாதியார் வந்துநிதந் தின்றுகெடுத் தாரோ
எந்தனாற் குறைகளே துண்டோ-சுவாமி
இழுக்கெந்த சாதியிலு மில்லாம லுண்டோ
மங்கைகல் யாணமதில் நல்லாள்-அந்த
மணவரையி லெந்தகப்ப னிட்டநகை யல்லால்
உங்களிடம் வந்தநாட் கொண்டோ-யெனக்கு
ருத்ராட்ச வடத்துக்கொரு நவமணியு முண்டோ
மாதிவை யுரைக்கமுத் தையன்-வள்ளி
மங்கைதனைப் பார்த்தேது சொல்வார் மெய்யன்
ஏதடிநீ பேச்சதிகங் கொண்டாய்-வள்ளி
யென்னுடைய சாதியி லிழுக்கென்ன கண்டாய்
குபேரன்மகள் போலநீ பேசாதே-உன்தகப்பன்
கொடுத்துவிட்ட வரிசைகளை வெளியே சொல்லாதே
சபையார்க ளென்ன வறியாரோ-யிந்தத்
தாரணியி லுள்ளவர்க ளெவருமறி யாரோ
உடுத்திவந்த துணிக்குவே றுண்டோ-களிம்பு
ஊறிய பித்தளை யோலைக்குவே றுண்டோ
தொடுத்திருந்த கருகமணி யோடே-யென்னைத்
தொடர்ந்துவரும் போதுனக் கேதுபட் டாடை
வண்ணார்கள் வெளுக்காத கலையுஞ்-சுத்த
வாணியர்கள் யெண்ணெயிட் டறியாத தலையும்
புண்ணாக்குப் போலிருக்கு மேலுங்-காட்டில்
புரண்டுசெடி முள்ளிமுத்து சுரண்டிவிட் டாலும்
எப்போதுங் காய்கிழங்கு தின்னும்-நீயும்
இருந்தகெதி தெரியாதோ வரும்போதென் பின்னும்
அப்பவே நானழைத்திடத் தந்து-நல்ல
வாபணர மானதையு மழகா யணிந்து
செம்பவள மாளிகை யமைத்து-உனக்கு
செங்கமலத் தாதிகளை யேவல்நே மித்து
நம்பிநான் செய்ததை மறந்து-வள்ளி
நாயகமே பேசுவது மென்னடி யிகழ்ந்து
மானேநீ பதறாதே வாடி-யெந்தன்
மனமுழுது மறியாமல் சொல்லாதே போடி
கோதையே யிதுவென்ன மூர்க்கம்-உங்கள்
கூறறிந்து சொல்லுகிறேன் குறவரிட மார்க்கம்
சாராயங் கள்ளுகள் குடித்து-குறவர்
சந்திக்குச் சந்தியே சண்டைகள் பிடித்து
பூராயம் தெரியாமற் கத்தி-கண்ட
பூனைகளை யெராவார முசலென்று குத்தி
தின்பதுவு முண்டதிக மாக-குறவர்
சேரியிலே நீபழகி வந்தவை போக
செம்பவள வாயாளே யென்று-சுவாமி
செப்பவே வள்ளியவள் வெஞ்சினங் கொண்டு
விண்ணாணம் பேசுவது சீரோ-சுடலை
மீதிலெலும் பானதுவை தின்றதுவு மாரோ
கண்ணப்ப னெச்சிலைதிங் கலையோ-சிவனுங்
கரிக்காகப் பாலகனைக் கொன்றதுவு மிலையோ
புத்தியுமக் கில்லாதே போமோ-சுட்ட
புனக்குறவர் பெண்ணைநீர் சம்மதிக்க லாமோ
யெத்திசையும் புகழ்பெற்ற நாதா-வென்று
யிவள்சொல்லும் வசைகண்டு கூறுவார் தோதா
அடந்தேகு வார்குடி மிகுந்தால்-குறவர்
அவர்தனக் கேசெலவுக் கில்லாதி ருந்தால்
கடன்வாங்கு வார்சம்ம தித்து-தாலி
கட்டிய பெண்டுகளை யீடாக வைத்து
கொடுத்துவிட்ட பணத்துக் கீடாக-வைத்த
குறத்திகளைப் பணங்கொடுத்த குறவன் வெகுகாக
அடுத்தவளை யனுதினமுங் கூடி-யிவர்கள்
அஞ்சாறு பிள்ளைகளைப் பெற்றபின் தேடி
பணங்கொடுத்து திருப்புகிற போது-பெற்ற
பாலரையுங் கூடவே கூட்டியவள் மாது
குணமாக முன்னீடு வைத்த-பழைய
குறவனுடன் போவதுங்கள் சாதி மெத்த
இதுபுதுமை யிவ்வுலகி லுண்டோ-வள்ளி
யேந்திழையே யிதைவிட லெச்சவே றுண்டோ
கதிகொண்ட மயில்வா கனத்தார்-இந்தக்
கதைசொல்ல வேவள்ளியவ ளெதிருரைத் தாள்
குறத்தியென்று யெனக்குவசை புரியுஞ்-சுவாமி
கும்பமுனி யாலுங்கள் சேதிகொஞ்சந் தெரியும்
மறந்தீரோ நீரறிந்த திலையோ-நொப்பன்
மலைவேடன் மகளைப்போய் மாலையிட்ட திலையோ
சிந்தைமகிழ்ந் தொருபெண்ணைத் தூக்கி-உங்கள்
சிவந்தலையில் வைத்துமே சுமந்ததுக்குச் சாட்சி
நந்திகேசு வரர்சொல்லக் கேட்டேன்-சுவாமி
ஞாயநிச மில்லாமல் நான்சொல்ல மாட்டேன்
ஆட்டுக்கா லதூதனை யெடுத்தார்-உங்க
ளப்பனென் றவனிமுழு தெங்கும் பழித்தார்
கேட்டுபா ருமதுதாய் ஐயோ-ஒற்றை
மாட்டுக் காரனைவைத் திருந்ததுவும் பொய்யோ
கண்ணாயிரங் கொண்ட நேத்தி-நொம்மான்
பெண்ணாசை கொண்டல்லோ வந்தவப கீர்த்தி
பெண்ணொருவர் கொடுக்காத தெதினால்-நொண்ணன்
பெருவயிறு கொண்டுவழிக் கரையிலிருந் ததினால்
அண்ணனுமே மத்தளங் கொட்ட-சொந்த
அருமைமரு மகனின்று கைதாளந் தட்ட
விண்ணவர்கள் கூடியே நகைக்க-வந்த
வேதியரும் மாதவருங் கண்டு பிர்மிக்க
தேவடியாள் போலுமது அன்னை-கூடுந்
தேவசபையி லேநின்று ஆடலையோ முன்னை
பாவலருக் கருள்பரியுஞ் சீலா-யிதையும்
பார்த்தவர்கள் செரியாரோ தங்கவடி வேலா
பத்மாசுரனுக்கு மிகப் பயந்து-உங்கள்
பரமசிவ னோடலையோ காட்டுவழி நடந்து
கைப்பொருளு மில்லாமல் தேகி-யென்று
கைப்பிச்சை வாங்கலையோ பரமசிவ யோகி
கும்பமுனிக் கருள்புரிந் தோரே-யென்று
கூவியேவள்ளி சொல்லுமொழி களறிந் தாரே
தென்பாக யென்மோக வள்ளி-யிந்தச்
சீமையிலே திருடிவருங் குறவர்குலக் கள்ளி
குதிகொண்ட வனுக்குறவர் சாதி-வகையைக்
கூறறிந்து சொல்லுகிறேன் கேளுமவர் சேதி
சதிர்பெருகுந் திருவிழாக் கடையில்-சனங்கள்
சந்தடிக ளாகவே சயனிக்கு மிடையில்
கூசாமல் கூடவே படுத்து-தூக்கம்
குலையாமல் பணிதிகளைக் கழற்றியே யெடுத்து
பேசாம லோடுவது கண்டு-குறத்தி
பெரியதனக் காரர்களு மேபிடித்துக் கொண்டு
வம்பிலே தலைமயிரைக் கட்டி-குறத்தி
மார்பிலே போடுவார் சொல்லென்று கிட்டி
செம்பாணி கொண்டுமே யிருத்தி-அவர்கள்
சேலையை யுரிந்தம்மண மாகவே நிறுத்தி
அடிதண்ட மாகவே யடிப்பார்-குறவர்
அப்பவு மெடுக்கவிலை யென்றுமே துடிப்பார்
தடியடிக்கு யசையாத சாதி-குறவர்
சங்கைகெட்டு நிற்பார்கள் தெரியுமவர் சேதி
என்றிவ ருரைக்கவுமே மாது-சுவாமிக்
கெதிராக நின்றேது சொல்வாளாப் போது
தொண்டர்தொழு கின்றமயி லேறுஞ்-சுவாமி
சொல்லுவே னுங்கள்குல வளமகளைப் பாரும்
அடையாளஞ் சொல்லுகிறேன் கேளும்-நல்ல
ஆவினங்கள் கூடிவரு மாயர்பாடி வாழும்
இடையருட வளவிலெந் நாளும்-உறியி
லிருந்தவெண்ணெய் திருடினதை யாரென்று கேளும்
அன்றுடன் யசோதை யறிந்து-வந்து
ஆவினங்கள் கட்டுகிற கயறால் வரிந்து
ஒன்றாக மாதரொரு பக்கங்-கூடி
உரலோடே கட்டினதைச் சொன்னாலும் வெட்கம்
கட்டுண்டதும் ரோச மிலையோ-பெண்கள்
கட்டிய சேலைகளைக் களவாண்ட திலையோ
வெட்டிய சமர்க்களத்தி லேரும்-கிருஷ்ணன்
விசயனுட குதிரைகளை மேய்க்கலையோ பாரும்
ஊத்துகிற கஞ்சிகளை யேத்தார்-கிருஷ்ணன்
ஊர்க்காலி மாட்டையெலாங் கட்டியங்கே மேய்த்தார்
கூத்ததிக முண்டின்னம் ரொம்ப-சொல்லக்
கூசுதே யென்மனமு மென்றிவ ளியம்ப
கேட்டவடி வேலர்கை நீட்டி-வள்ளி
கேளடி யுங்களுட வீடுமலை நாட்டில்
நீட்டியிரு கால்களை நிறுத்தி-அதனில்
நெடுமுட் டாகவளை கூட்டியே பொருத்தி
நத்திய கயிற்றால் வரிச்சு-மழைக்கு
நனையாமல் மூங்கிலிலை யால்மேய்ந்த குச்சு
சுத்திவைத்த சுவரெல்லா மோட்டை-யசந்து
தூங்கவும் விடாதங்கே முணுமுணுத்த மூட்டை
ஆடேறி மேயுமதில் தொல்லை-வீட்டில்
அஞ்சுபேர் தமக்கதிக மிருக்க விடமில்லை
மூடாத வாசல்களைக் கண்டு-பார்த்து
மூடினா லுசரவொரு முகட்டொழுக்கு முண்டு
தேடாத பொருள்சிலவு காணும்-வைத்த
தீபமுந் தெரியாது தோணாமல் தோணுங்
கூடாது குறவீட்டை நம்ப-சற்றே
குந்தவைக்க முடியாது நசநசப்பு ரொம்ப
குறம்பாடிக் கஞ்சிகளை வாங்கும்-உங்கள்
குறவருட பக்கியெல்லாங் கூரையிலே தூங்கும்
வரம்பேது மில்லையெந் நாளும்-யென்று
வடிவேலர் சொல்லவே வள்ளிமின் னாளும்
தமக்கென்று சிறுகுடிசை கட்டி-குறவர்
தானிருப் பதுவேவசை யில்லாத கெட்டி
உமக்கொரு தலத்தினிலும் நாடி-சுவாமி
ஒண்டயிட மில்லாமல் மலைக்குமலை யோடி
கையிலரைக் காசுமே யில்லாமல்-வீடு
கட்டியே குடியிருக்க வகையு மறியாமல்
வெய்யலிலும் வேனிலிலும் காய்ந்து-சுவாமி
மெத்தவரு ஷித்தமழை பனியால் கனிந்து
இருப்பதைக் கண்டுமனம் வாடி-உமக்கு
யிவ்வுலகி லுள்ளவர்க ளெல்லோருங் கூடி
சிறக்கவே கோயில்க ளமைத்து-உமக்கு
செம்பொன்மணி யாபரணம் விருதுகள் சமைத்து
வடிவேல வாவென்று யெண்ணி-உமக்கு
வரிசையிட்டு வைத்தார்கள் பிரதிஷ்டை பண்ணி
அடியவர்கள் புண்ணியமீ தய்யா-நீரும்
அழகான கோவில்களி லிருக்கிறது மெய்யா
தேருமக கரிபரியு மிரவல்-உமக்கு
செயமேள பேரிகையுங் கோவில்களு மிரவல்
ஏறுமயில் வாகனமு மிரவல்-உமக்கு
யிட்டநவ ரத்னமணி யாபரண மிரவல்
இத்தனையு முமக்கிரவல் தானே-குறவர்
இருப்பிடத்தைப் பழிக்கிறீ ரெண்ணாமல வீணே
வெற்றிவே லதுதானே சொந்தம்-உமக்கு
வேறேயொரு ஆஸ்திகளின் மேலென்ன சொந்தம்
மச்சமுனி மறைபொருள்க ளாலும்-உங்கள்
வங்கிஷ வகுப்புகளைச் சொன்னாரே கேளும்
மச்சானோ மறையோதும் வேதன்-உமக்கு
வாய்த்ததொரு மாமனும் அளவளந்த தாதன்
ஆத்தாளோ பாலுருப் பறைச்சி-அவளுக்
கருமையுள்ள தமையனையும் வளர்த்தவளு மிடைச்சி
தாத்தாவோ மீன்காரக் கறவவன்-உமக்குத்
தளகர்த்த னானவனும் நல்லகுல மறவன்
அரனாரென் றுமையீன்ற தய்யா-சங்க
மாண்டியல்லோ சாதியிலே சொல்வார்கள் மெய்யா
வரமுறைக ளில்லாத நாட்டம்-உங்கள்
வங்கிஷங்கள் தெரியாதோ பலசாதிக் கூட்டம்
இதற்குமுன்னே நானறிந் தாலும்-உமக்கு
இசைவேனா நீர்குட்டிக் கரணம்போட் டாலும்
அதற்கென்ன செய்யலா மையா-நாங்க
ளானாலும் குறச்சாதி யென்பதும் பொய்யா
பண்டாரம் நானென்று கத்தி-யெந்தன்
பரணெதிரே வந்தீரே யதுவென்ன புத்தி
கொண்டுகுலம் பேசுவது போச்சோ-சுவாமி
கொய்த்தினை மாவுக்கெனைக் கெஞ்சினதும் போச்சோ
பேருதெரி யாமலுரு மாறி-வந்து
பிசகுசெய்த மதகரியி னாலேமத மீறி
பாரமத யானைவரா விட்டால்-உமது
பாசாங்குக் குள்ளாக மாட்டேனில்லா விட்டால்
வழகியிந் தாடிகுற வஞ்சி-யென்று
வனவேடன் போல்வந்து யென்னெதிரே கெஞ்சி
களையாகு தெனவந்து முட்டி-நீரும்
காரியங்கள் கொண்டபின் பேசுகிறீர் கெட்டி
வலியநான் வந்தேனோ தொட்டு-நீரும்
வஞ்சகம் பேசுகிறீ ரிதுவென்ன செட்டு
சலியாமல் நீருறுதி சொன்ன-மொழிகள்
தவறுவரோ கலிகால மானாலு மென்ன
பொன்னடி துலங்கியென் மாமி-பெற்ற
புண்ணியனே யனுதினமு மகலாமல் சாமி
யென்னருகி லிருமென்று கேட்டால்-சுவாமி
யென்குலத்தை நீர்பழிக்க வுமக்குவிளை யாட்டா
வையகத்துக் கேற்காது யென்னை-நீரும்
வஞ்சகமா யிகழ்ந்து பேசுவது தன்னை
தெய்வானையோ சொல்லி விட்டாள்-எந்தச்
சிறுக்கியுமக் கிவ்வளவு சூதுசொல்லி தொட்டாள்
எப்படியோ நானறிய வில்லை-லோக
மெங்கும்நீர் போகாத விடமொன்று மில்லை
இப்படியு மருந்திட்ட தாரு-உமக்கு
யேலாதோ சொல்லவந்த மங்கையர்கள் பேரு
வருந்திவிருந் தளித்தவளைச் சொல்லு-அவளை
மயிர்பிடித்துக் கொண்டாறேன் சற்றேயிங்கே நில்லு
மருந்திடு மயக்கமில்லா விட்டால்-எனக்குப்
பதில்சொல்ல மாட்டீரோ நானெதுவுங் கேட்டால்
முருக்குவளை தாதிகளே வாடி-நம்ம
முத்துலிங்க சுவாமியைநீ கூட்டிவா போடி
கருதுகமருந் திடுபிசகு தோணும்-எந்தன்
கணவனெனுங் கந்தருக்கு கைபார்க்க வேணும்
மின்னாரே யென்றிவளுஞ் சொல்ல-எந்தன்
வேலரிது புதுமையெனக் கேட்டவரு மெள்ள
யென்னடிவீண் யோசனைகள் கொண்டாய்-நானும்
யெவள்வீட்டி லேவிருந் துண்ணதைநீ கண்டாய்
என்னுடைய சொல் வுறுதிமீறி-நீயும்
எதிர்பேசி னதினாலே யுன்னைநான் சீறி
சொன்னவகை யல்லாது கண்ணே-சும்மா
தோகையை நானுமுனைப் பேசுவேனோ பெண்ணே
மயங்காதே நீவள்ளி மாதே-உந்தன்
மனமறிய நான்சொன்ன தல்லாதிப் போதே
ஜெயமாக நான்போயி வருவேன்-வள்ளி
தினமுமுனைப் பிரியாமல் தெரிசனமுந் தருவேன்
உனைவிட் டகல்வேனோ மானே-யென்று
வுபசாரஞ் செய்தங்கி ருக்கையிலே தானே
கந்தனையுங் கோவிலுக்குள் தேடி-அங்கே
காணாமல் தெய்வானை யம்மன்மனம் வாடி
மங்கையரே சுந்தரப்பிர காசன்-அந்த
மாணிக்க கெங்கைக்குப் போனமுரு கேசன்
யெங்கேயென வேலவரைத் தேடி-நீங்க
ளிதுநிமிஷம் வரவேணு மென்றிடவே யோடி
தாதியர்க ளெல்லோருஞ் சென்று-யெங்கள்
சண்முக வேலாயுதனைத் தேடினா ரென்று
ஆதிசிவ மாணிக்க கெங்கை-தீர்த்த
மாடவந்த வேலவரைக் கண்டீர்களோ யிங்கே
பாதிபிறை நுதலழகி யாளே-அவள்தன்
பர்த்தாவைக் காணோமென்று தேடுவதி னாலே
கதித்துபுகழ் கொண்டுமுனி வோரே-யெங்கள்
கந்தனையுங் கண்டதுண்டோ சொல்லுவீர் நீரே
காணிக்கை கொண்டுவந் தோரே-எங்கள்
கட்டழகி தெய்வானை மணவாள னாரே
மாணிக்க கெங்கைநீ ராட-யிங்கு
வந்தவரைக் காணீர்களோ யினியெங்கே தேட
பாங்கியர்கள் நதியெங்குந் தேட-கோவில்
பணிவிடைக் காரர்தெரு வீதிவழி நாட
ஏங்கியவர் தேடுவது கண்டு-சுவாமி
யெங்கோனுஞ் சிந்தையி லறிந்தன்பு கொண்டு
நினைவில் மறக்காததெய் வானை-யிந்த
நிமிஷமே கூட்டிவா வென்றேவுஞ் சேனை
எனையழைக்க வேணுமென்று தேடி-வாரார்
ஏந்திழையே நான்போய் வரவும்விடை தாடி
தாடியென்று சொல்லவே திகைத்து-வள்ளி
தையலருஞ் சுவாமிதனைப் பார்த்துமே நகைத்து
தேடிவந்த பேர்களையநா னடிப்பேன்-அந்த
தெய்வானை வந்தாலுமே சண்டை பிடிப்பேன்
என்னுடைய கணவனையுந் தேட-அவளுக்
கென்னவதி காரம்விடை கேள்க்குறீ ரோட
மன்னவா யிதுவென்ன வென்றே-சொன்ன
வள்ளிதனை யுபசாரஞ் செய்தருகில் நின்றே
யெனக்குரிய மானேநீ கோபம்-இப்போ
யென்பேரில் வைக்காதே வீண்மனஸ் தாபம்
உனக்குநான் பிசகுசெய் வேனோ-பெண்ணே
யோசனைகள் செய்யாதே நான்மறப் பேனோ
போய்வாரேன் வள்ளி தயவாக-யெனக்குப்
புகழ்ந்துவிடை தாடிதெய் வானையிட மேவ
வாய்திறந்து சொல்லுமென மகிழ்ந்து-யென்று
வடிவேலர் கேட்கவே வள்ளியு முகந்து
மறைபுகழு கின்றவடி வேலா-சுவாமி
மனவருத்த மில்லாமல் போய்வாருஞ் சீலா
இறையவருக் குகந்தமக னாரே-யென்று
யிவள்சொல்ல வேலர்வழி கூடிநடந் தாரே
சித்திர வடிவேலர் நடந்தார்-இங்கே
தேடிவந்த தாதியர்கள் கண்டடி பணிந்தார்
வெற்றிமயி லோனன்பு கொண்டு-கோயில்
மேவியதெய் வானையையுங் கண்டெதிரே சென்று
மங்கையரே யெனைத்தேடு வானேன்-நம்ம
வள்ளியம்மை தன்னுடைய கோவிலுக்குப் போனேன்
செங்கமல மாதேயென் கண்ணே-யிப்போ
தேடினது மென்னவகை சொல்லாயோ பெண்ணே
தெய்வானை யென்றார் துணிந்து-அந்த
தேவிசெவ் வேள்பாத மலரடி பணிந்து
வைபோக மானவடி வேலை-உடைய
மணவாளா உனக்குநித மிதுதானோ வேலை
இளையாள்மே லிருக்கிற பாசஞ்-சுவாமி
யென்பேரி லேனில்லை யுமக்குவிசு வாசம்
அழையாத விருந்தோநீர் காணும்-வள்ளி
யவள்மனைக்கு நிதம்வலியப் போகவா வேணும்
முழுக்கவே யும்மாலே யேச்சே-சாதி
முறைதவறிக் குறவருட சம்பந்த மாச்சே
இழுக்கான சாதியி லேகி-மாலை
யிட்டாலு மேன்மையது தவறுவாரோ யோகி
அடிக்கடிநீ ரவள்மனைக்குப் போனால்-மெத்த
மனக்களிப் பாவே சொல்லுவா ளானால்
குடிதனி லுயர்ந்தவளு மில்லை-வள்ளி
குறவர்குல மானதால் சொன்னேன் சொல்லை
நிசமென்று நீரெண்ணு வீரோ-உமக்கு
நேர்ந்ததுவும் வள்ளியுட மோகமறி வீரோ
அசையாம லானந்த மீறி-வள்ளி
ஆசைகொண்டு பேசுகிறீர் நானுமக்குப் பாரி
யாகிநா னெடுத்ததென்ன கோட்டை-புவியில்
அறியாரோ நீரெனக்குத் தேடிவருந் தேட்டை
தேகியென வாண்டிபோ லானீர்-வள்ளி
தேவியவள் தினைமாவு தின்னப் போனீர்
திரிபுவனை யருள்பெற்ற பாலா-உமது
சித்தமது எப்படியோ கதிரைவடி வேலா
அரிமருக ரேயென் றுரைக்க-யெங்க
ளாறுமுகன் சொல்லுவார் தெய்வானை மெய்க்க
மானேநான் உன்வருதி பெற்றேன்-பின்பு
வள்ளிதனை மாலையிட்டு கூட்டிவந்து வைத்தேன்
தேனேயென் மேற்பிழைக ளில்லை-உனக்குத்
தெரியாதோ வீணாகப் பேசுவது தொல்லை
கோவிலுக்கு நீபோடி யென்று-யெங்கள்
குமரேசன் சிம்மா சனத்திலே சென்று
சேவலொரு கையினி லிருக்க-யெங்கள்
சித்திரவடி வேலவரு மேகொலு விருக்க
சூடதீ பாரா தனைக்கு-வந்து
சூழ்ந்தார்கள் கோடானு கோடியன் றைக்கு
அடியவர் பணிந்துதுதி பாட-கதிரை
ஆறுமுகன் மீதினில் கவிமாலை சூட
சிம்மா தனத்திலி ருக்க-யெங்குஞ்
ஜெயஜெயென வந்தவர்கள் சூழவே பெருக்க
அம்மா பரஞ்சோதி பாலன்-நல்ல
அன்புட னருளுவா ராறுமுக வேலன்
துன்பவினை யணுகாமல் தானே-நீங்கள்
சுகமாக வாழ்வீரென் றெல்லார்க்குந் தானே
தென்கதிரை வேல்ரரு ளாக-வந்த
தேவர்களு மனிதர்களுந் தங்கள்பதிக் கேக
சித்தர்களும் வந்துநிதம் பணிய-யிந்த
செந்தமிழ் தனக்குதவி செய்சுப்பிர மணிய
கர்த்தனரு ளாலேகுறை வில்லை-ஆருங்
கதிர்காம மென்றாலும் வறுமைகளு மில்லை
தேவர்களு முனிவர்களுங் வாழி-யெங்கள்
திருமாலு மயனரனு முமையவளும் வாழி
நாவலரும் பாவலரும் வாழி-வள்ளி
நாயகன் மேற்கவியி தெந்நாளும் வாழி
புள்ளிமயில் வடிவேலும் வாழி-யிந்தப்
புவியெங்கும் நகரத்தார் புகழ்பெறவே வாழி
வள்ளிதெய் வானையுடன் மேவி-யோக
வாழ்வுபெறுங் கதிரேச னெந்நாளும் வாழி.