முருகன் App
குறுக்குத்துறைக் கொச்சக்கலிப்பா
தி.சு. ஆறுமுகம்
நூல்2 / 2
குறுக்குத்துறைக் கொச்சக்கலிப்பா · தி.சு. ஆறுமுகம்

நூல்

1நாலடித்தரவு கொச்சகக்கலிப்பா✓
பூதலத்தே யென்னைப் பிறப்பித்த தேனறியேன்
ஓதலற்றே னுந்நாமம் உன்னுகிலே னுன்னுருவம்
காதலற்றே னுன்பாற் கனிந்தடையே னென்றுமனக்
கூதலற்றே வாழ்வேன் குறுக்குத் துறையானே.
2✓
வாழும் பதமறியேன் வல்வினையா லென்னையிவண்
சூழும் பரிசனர்க்குஞ் சூழேன் நலமெதுவும்
பாழும் பிறவியிதால் பாரில் பயன்காணேன்
கோழும் பரேற்றுங் குறுக்குத் துறையானே.
3✓
நீதமுடன் போத நெறிநின்று நின்னரிய
பாதமலர் போற்றிப் பணிந்துருகி வாழ்வேனேல்
வேதனெனை யாக்கும் வினையிழப்பான் என்றென்றும்
கோதறுசீர் விஞ்சுங் குறுக்குத் துறையானே.
4✓
பொன்னை விரும்புவேன் புகழ்விரும்புவேன் பேதமுடன்
என்னை விரும்பா திடர்சூழ்வார் செய்மாயந்
தன்னை விரும்புவேன் தடுத்தருள வேண்டுகின்றேன்
கொன்னை விரும்புவேன் குறுக்குத் துறையானே.
5✓
ஆட்டி யெனைப்படைக்க ஆண்மை படைத்தவன்நீ
போட்டி யுனக்கதனிற் புல்லர் சிலர்முளைத்தார்
காட்டிக் கொடாதே கயவ ரவர்பிறகே
கூட்டி விடாதே குறுக்குத் துறையானே.
6✓
தப்பவர்பாற் செய்யேன் தனித்தேயான் வாழுகின்றேன்
எப்படியு மின்னல் எனக்கவரோ சூழுகின்றார்
இப்படிநீ ஏனோ எனைவிடுத்தா யன்னவர்பால்
கொப்படரும் மாவார் குறுக்குத் துறையானே.
7✓
என்னெனக்கு நேர்ந்தாலும் ஏதவத்தை பட்டாலும்
நின்னருளென் றெண்ணியான் நெஞ்சுரங் கொள்வதுடன்
அன்னவையெ லாம்நலத்திற் காமென் றறிந்திடவும்
கொன்னறவும் பாராய் குறுக்குத் துறையானே.
8✓
ஒதுங்கிநான் வாழ்ந்திடினும் ஓயா தெனைவிரட்டிப்
பதுங்குமா றாக்கிப் பதங்குலைப்ப தல்லாற்சீர்
எதுங்கொளாப் பேயரிடம் ஏனோ விடுத்தனையென்
கொதுங்கொளாய் வேலா குறுக்குத் துறையானே.
9✓
பாடுமிகக் காட்டிப் பயங்காட்டிப் பின்னரவர்
கோடுமனங் காட்டிக் குணக்கேடு காட்டியுன்றன்
பீடுமறந் தாட்டமிடும் புல்லரிடம் ஏனெனைநீ
கூடுமாறு விட்டாய் குறுக்குத் துறையானே.
10✓
காலமெல்லா முன்னைக் கரங்குவித்தும் என்னையிந்தச்
சீலமில்லார் பால்விடுத்துச் சீரழிப்ப தாமாமோ
வேலவனே மாந்தர் விரும்புகின்ற வாறுபல
கோலமெல்லாம் காட்டுங் குறுக்குத் துறையானே.
11✓
பெண்டுபிள்ளை கூட்டிப் பெருமிடியாம் பேய்கூட்டி
மண்டுகிளை கூட்டி மனச்சாட்சி யில்லவர்பால்
தொண்டுசெயக் கூட்டிச் சுகமளித்த என்விதியை
கொண்டுபுகழ் வேனோ குறுக்குத் துறையானே.
12✓
இன்மொழிகள் பேசும் எழிலார் குழல்சேரும்
பொன்மலரை என்மனத்தேன் போயடையா துன்னடியாம்
நன்மலரை நாடியமர் நற்பணியைச் செய்யுமெனின்
கொன்மயக்க முண்டோ குறுக்குத் துறையானே.
13✓
குன்றுருவ ஏமன் கொலைவேடன் என்னுயிர்ப்புள்
நன்றுகுறி வைத்துவரும் நாளெண்ணிக் காத்துநின்றான்
என்றவன்கை சேராமல் என்றனைநீ காப்பாயோ
குன்றுருவும் வேலோய் குறுக்குத் துறையானே.
14✓
வாளென்ன செய்யும் வலிந்தென்பால் வஞ்சமெண்ணும்
ஆளென்ன செய்யும் அலகையென் செய்திடுந்தீ
நாளென்ன செய்யும் நலமார்நின் வேல்தோன்றின்
கோளென்ன செய்யும் குறுக்குத் துறையானே.
15✓
ஆலமணி கண்டனருள் ஆறுமுகா வஞ்சகரென்
பாலமளி செய்யின் பலியா தெனைக்காக்கும்
வேலயிலாம் வன்னெருப்பில் வந்துபுழு பற்றிடுமோ
கோலமயி லானே குறுக்குத் துறையானே.
16✓
எல்லாமுன் தண்ணருளென் றெண்ணி யுலாவுகின்றேன்
பொல்லாரென் பாற்புரியும் பொல்லாங்கிற் கஞ்சுவனோ
கல்லான தூணைக் கரையா னரித்திடுமோ
கொல்லா தருள்வோய் குறுக்குத் துறையானே.
17✓
பல்லார் பகைமலிந்து பாரிலிடர் சூழ்ந்தாலும்
நல்லா யுனைப்பிரியேன் நாயகனே என்மயக்கம்
எல்லாம் அறிந்தவன்நீ என்னுயிரே மன்னுயிரைக்
கொல்லா வரந்தா குறுக்குத் துறையானே.
18✓
காமநெருப் பாலே கருகி யழிவேனுக்
கேமமெனத் தண்ணா ரினிய அருண்மழையை
நாமவடி வேலா நயந்து பொழியாயோ
கோமளம யூரா குறுக்குத் துறையானே.
19✓
பெற்றதுணை வித்தை புகட்டுதுணை தாரமென
உற்றதுணை பின்ன ருதித்ததுணை சுற்றமெனும்
மற்றதுணை யாவும் மதியேன் நிலைத்திருக்குங்
கொற்றதுணை நீயே குறுக்குத் துறையானே.
20✓
குண்டுவிழி யந்தகனின் கோரப் பிடியிலென்னைக்
கொண்டுவிடுத் தாலுங் கொடுங்கலிபாற் றள்ளாதே
கண்டுமொழி மானைக் கலந்தவனே நாயெனையாட்
கொண்டவனே நாதா குறுக்குத் துறையானே.
21✓
தீராதோ என்மிடியுந் தீர்த்துவைத்தா லாகாதோ
ஊராரோ காசுபண முள்ளவரை யேதுதிப்பர்
யாராரோ வாழுகின்றார் யானொருவன் தான்விலக்கோ
கூறாய்நீ வேலா குறுக்குத் துறையானே.
22✓
அமரநாட் டாவினிடம் அந்தோமோர் கேட்டவன்போல்
நமதுபாற் பொன்பொருளை நாடினனென் றெள்ளாதே
குமரனே வேலா குறுக்குத் துறையானே.
23✓
மற்றவரிம் மாநிலத்தே மாண்பொருளை யீட்டிமிகக்
கொற்றமுடன் வாழ்ந்தனரக் கூறெனக்கே காட்டாமல்
சுற்றமெலாந் தூற்றவெனைத் தோற்றுவித்த தேனறியேன்
கொற்றவனே வேலா குறுக்குத் துறையானே.
24✓
செந்திருவார் பெண்ணெனினுஞ் செப்புமுலை யில்லாளேல்
எந்தவிதம் பெண்ணாவாள் இன்பமவ ளாலுமுண்டோ
நந்தலிலாப் பொன்னிலையேல் நன்னடைக்குப் பீடுளதோ
கொந்தடர்க டம்பா குறுக்குத் துறையானே.
25✓
நாளமிலாப் பொய்கை நறுமணமில் லாதமலர்
தாளமிலாப் பாட்டு தயவளியி லாவீரம்
ஆளனிலாள் பேரழகோ டாஸ்தியிலான் கூர்மதியும்
கூளமன்றோ வேலா குறுக்குத் துறையானே.
26✓
உருக்கிடுமன் பேனோ உணர்வேனோ பன்னூலாற்
பெருக்குமறி வேனோ பிறர்புகழும் பண்பேனோ
நெருக்குமிடி தீர்க்கும் நிதிமிகவே யான்குவிக்கக்
குறுக்குவழி காட்டாய் குறுக்குத் துறையானே.
27✓
கற்பகம ரத்தடியிற் காஞ்சிரங் காய்விரும்பும்
அற்பனிவ னென்றே அறிஞர் எனைப்பழிப்பர்
பொற்புடையன் னார்வறுமைப் பேழ்வாயிற் பட்டிருப்பின்
குற்றமெனைக் கூறார் குறுக்குத் துறையானே.
28✓
ஆகூ ழொருநூறா யாக்கிவைத்த அக்கணமே
போகூ ழிருநூறாய்ப் பெம்மானே போக்கிவைத்தாய்
மாகூ ழெனக்குறுமோ மாளாக் கடன்சுமந்து
கோகூ ழடைந்தேன் குறுக்குத் துறையானே.
29✓
கருமாதி நோயிழவு கல்யாணம் என்றிவைக்கே
பெருவாரி யாய்ப்பொருளும் போய்விடுவ தாயினெனக்
குறுவாழ்வு நன்றுறுமோ உம்பரிடர் தீரரனின்
குருநாதா தேவே குறுக்குத் துறையானே.
30✓
விஞ்சுமிடி தன்னை விரட்டியரு ளல்லதுன்றன்
கஞ்சமலர்ப் பாதம் கடிதிலெனைச் சேர்த்துவிடு
பஞ்சமென மற்றவர்பாற் பற்காட்டிப் பட்டவெலாங்
கொஞ்சமல வேலா குறுக்குத் துறையானே.
31✓
ஆவி யடங்கியபின் அங்கிதனக் கிந்தனமாம்
பாவி யுடலமிதைப் பற்றியின்றே ஓர்கமனல்
மேவி யுணுமாறு விடுத்தனையே வேறெவர்பாற்
கூவி யழுவேன் குறுக்குத் துறையானே.
32✓
வெம்பிடுமென் நெஞ்சமுறு வேதனைதீர்ப் பாயுனையே
நம்பிடுமென் பாற்படர்ந்த நல்குரவை வேரறுப்பாய்
தும்பியருள் கொண்டுவள்ளி தோளணைந்த வேடனுனைக்
கும்பிடுதல் வீணோ குறுக்குத் துறையானே.
33✓
கழுத்தை முறிக்குங் கடன்சுமந்து கண்டவர்பால்
இழுத்து மொழிபேசி ஏற்கக் கரம்நீட்டும்
எழுத்தைத் திருத்தியமைத் தென்னிடஞ்சேர் நல்குரவைக்
கொளுத்த வருவாய் குறுக்குத் துறையானே.
34✓
நாய்புரைய வாழவென்னை நானிலத்தேன் நீவிடுத்தாய்
தாய்புரியு மன்பவள்தன் சேய்தனையே பேணாமல்
வாய்பிளந்த பின்னர் வயிற்றிலறைந் தேங்குவதோ
கோய்பிளந்த வேலா குறுக்குத் துறையானே.
35✓
உள்ளவதென் என்றே யுணர்வாயென் வேண்டுதலைத்
தள்ளுவையோ அல்லதிவன் தஞ்சமென வந்தவெறும்
வெள்ளைமதி யன்புகலும் வேறறியா னென்றிரங்கிக்
கொள்ளுவையோ தோணேன் குறுக்குத் துறையானே. 35
36✓
பூவேறு முன்றனிரு பொற்பதமே யல்லதென்றன்
நாவேறு போற்றி நயந்ததுண்டோ இந்நிலையில்
நீவேறு நெஞ்சுமுறின் நேயனுமென் செய்திடுவேன்
கோவேயென் வேலா குறுக்குத் துறையானே.
37✓
முருகாவென் றோர்கால் மொழிந்திடினு மென்வினைகள்
உருகாவோ என்புலம்ப லுன்செவியு ளேறாதோ
சருகாயு லர்ந்தேன் தரித்திரமாம் வெங்கதிரால்
குருகாருஞ் சோலைக் குறுக்குத் துறையானே.
38✓
கந்தா முருகா கதிர்வேலா என்றுனையான்
நந்தா விருப்புடனே நாடோறுங் கூவிடினும்
இந்தா வருந்தாதே என்றிரங்கி வந்திலையே
கொந்தார் கடம்பா குறுக்குத் துறையானே.
39✓
தஞ்சமென வுன்றனிணை தாட்டா மரையடைந்தும்
அஞ்சலென வந்தெனைநீ ஆதரிக்கக் காணேனே
கஞ்சமலர் வேதன் கனமழித்த சேயவனே
கொஞ்சமிரங் காயோ குறுக்குத் துறையானே.
40✓
பட்டவெலாம் போதும் படமுடியா தின்னுமிடர்
அட்டமத்துக் காரியெனை யாட்டி யலைத்திடுங்கால்
எட்டவிருந் தாலுன் இனியவருள் என்னாம்அக்
கொட்டமடக் காயோ குறுக்குத் துறையானே.
41✓
வாராத வல்வினைகள் வந்தாலு மோர்நொடியில்
தீராவோ உன்பெயரைச் செப்பி னொருமுறையே
சீராக வாழவெனைச் செப்பனிட லென்றோசொல்
கூராரும் வேலா குறுக்குத் துறையானே.
42✓
விரும்புகிலே னாயிடினும் வீண்கடனே கொண்டதனால்
எறும்புகளின் வாய்ப்பட் டிழுபடுமோர் மண்புழுவாய்ப்
பெரும்படரே கொண்டேன் பிணைக்குறத்திக் காகவொரு
குறும்பனெனச் சென்ற குறுக்குத் துறையானே.
43✓
நீருங் குறைய நிலைகுலைந்த தாமரைபோல்
சீருங் குறைந்தேன் திரவியங்கு றைந்ததனால்
யாருங் குறையாய் எனைமதிக்கு மாறிவண்யான்
கூறுங் குறைந்தேன் குறுக்குத் துறையானே.
44✓
கணப்பொழு தேனுங் கலங்காத நெஞ்சமுடன்
பணப்பொரு ளாசை படர்வழியிற் செல்லாமல்
மணப்பொருள் மூழ்குன் மலரடியெண் ணேனேநிர்க்
குணப்பொரு ளானே குறுக்குத் துறையானே.
45✓
மக்கள் நலம்நாடி மல்குபொருள் தான்நாடிப்
ஒக்கல் துணைநாடி உற்றநண்பர் தாம்நாடிப்
பக்கம் வளருமென் பாழ்வயிற்றுக் கூண்நாடிக்
குக்கலு மானேன் குறுக்குத் துறையானே.
46✓
ஒன்றினைநி னைப்பேன்மற் றொன்றாகு மென்வாழ்வில்
என்றெனினு மேழையென் எண்ணம்போ லாவதுண்டோ
நன்றெனினுந் தீதெனினும் நாயகனுன் கட்டளையே
குன்றுருவும் வேலோய் குறுக்குத் துறையானே.
47✓
வேலா யுடனே வியனுலகில் நொந்துழல
ஏலா தினியும் இரக்கமிலை யோவுமையின்
பாலா குமரா படுகிழமாய் வள்ளிமுன்செல்
கோலா கலனே குறுக்குத் துறையானே.
48✓
பிறந்தநாட் கொண்டுனது பொற்பதமே போற்றுதற்கு
மறந்தநான் நின்னரிய மாணருளைக் கொள்வேனோ
இறந்துபோ மன்றேனும் என்பா லிரங்காயோ
குறந்தம ரானோய் குறுக்குத் துறையானே.
49✓
ஆட்டிவைத்த வாறடியேன் ஆடா திருப்பனோநீ
நாட்டிவைத்த வாறே நடந்திடுமென் றாலுமிடர்
ஒட்டிவைத்தா லாகாதோ உன்றன் திருவருளைக்
கூட்டிவைத்தா லுய்வேன் குறுக்குத் துறையானே.
50✓
புத்திவித்தை மாடுமனை பொன்பொருளிவ் வாறெதினுஞ்
சித்தியுற்று மென்னேசொல் சேதமவை யாகாவோ
பத்தியுற்று வாழ்வதுவே பண்பாம் கொடுந்துரைக்
குத்தியபொன் வேலோய் குறுக்குத் துறையானே.
51✓
கள்ளமனப் பேயேன் கதறித் துடித்துமுன்றன்
உள்ளமிரங் காதோ வுனதருளுங் கிட்டாதோ
வெள்ளமென நாடும் வியனடியார் தம்முளெனைக்
கொள்ளமனங் கொள்வாய் குறுக்குத் துறையானே
52✓
கிட்டும் வினையறியேன் கேடுவரும் போழ்தறியேன்
பட்டு முணர்வறியேன் பாழ்பணத்தின் பீடறியேன்
எட்டும் படியிருந்தும் ஏனோ வுனையறியேன்
கொட்டுங் கருணைக் குறுக்குத் துறையானே.
53✓
பொய்யை வளர்த்துப் பொறாமையை வாவளர்த்துக்
குய்யம் வளர்த்துக் கொடுஞ்சினமோ டென்னுடலாம்
மெய்யை வளர்த்தேன் முருகா இவையாவுங்
கொய்ய வரந்தா குறுக்குத் துறையானே.
54✓
மண்டுமிடி காமம் மயக்கம் மடிசெருக்கும்
உண்டுறங்கு மென்னை ஒழித்திடுமே நீவருமம்
கொண்டுருத்த லேனோ கொசுதனையி ழிக்கஅணுக்
குண்டுமெறி வாரோ குறுக்குத் துறையானே.
55✓
பாருக்குள் யான்படும் பாடுதனைப் பார்த்திருந்தும்
யாருக்கோ வந்தவிருந் தென்றிருப்ப தேனோநீ
பேருக்கோர் நன்றெனினும் பேதையெனக் கீந்திலையே
கூருக்கோர் வேலோய் குறுக்குத் துறையானே.
56✓
தொழுதேனுன் முன்னர்த் துடித்தே னிரங்கிலைநீ
பழுதால் வரும்படரும் பார்த்தழுதால் நீங்கிடுமோ
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும்
கொழுகொம்பு நீயே குறுக்குத் துறையானே.
57✓
திருவினைக் காணேன் தினந்துயரே கொண்டுழன்றேன்
வருவினைகள் வந்தால் மடியேந்த வேண்டாமோ
ஒருவினையுந் தப்பிடுமோ உத்தமனே சங்கரர்க்குக்
குருவெனவு யர்ந்த குறுக்குத் துறையானே.
58✓
நெல்வா ளளவும் நிதிசேர்க்க மாட்டாமல்
வல்வாய் வறுமை வயப்பட் டுழல்வேற்கும்
இல்வாழ் வெதற்கோ இரும்பொருளைத் தாவலது
கொல்வா யெனையே குறுக்குத் துறையானே.
59✓
ஏயும் வினையால்யா னிவ்வுலகில் வந்துழன்றும்
போயும் பிறந்தும் பெருவாழ்வு வாழ்வதினால்
தாயும் எமனுஞ் சலித்தார்நீ யோசலியாய்
கோயும் பிளந்த குறுக்குத் துறையானே.
60✓
தின்றுகொழுத் தேன்யான் திரைப்படம் பார்த்தழிந்தேன்
ஒன்றுமிவை யல்லால் ஒருநற் பணிபுரியேன்
நின்றுனது பாதம் நினைந்தறியேன் பாழ்விருப்பைக்
கொன்றுவிடு வாய்நீ குறுக்குத் துறையானே.
61✓
புலனைந்தும் மீறித்தம் போக்கினிலே சென்றிருக்கப்
பலநைந்த பாழ்வழியிற் பாவிமனஞ் சென்றோடி
நலனின்றிக் கெட்டலையின் நாயடிய னுய்வேனோ
குலனொன்று தேவே குறுக்குத் துறையானே.
62✓
தேடிவைத்த ஒண்பொருளாய்த் தெள்ளமுதாய் நீயிருக்க
நாடிமெத்த நானலைந்தேன் நாசமுறும் பொன்பொருளை
பாடியத்த னுன்புகழைப் பாதமலர் பற்றிநின்று
கூடிநித்தம் வாழ்வேன் குறுக்குத் துறையானே.
63✓
அத்துணை நாடி அழிபொருளை யேவிரும்பின்
பித்தனிவ னென்றெனையே பேசாரோ மெய்யறிவர்
சித்தமதி லென்புன்மை தேர்ந்தேன் தெளிவடைந்தேன்
கொத்தடர்க டம்பா குறுக்குத் துறையானே.
64✓
துடியே ரிடையார் சுகம்நாடிப் பொன்நாடிப்
படிமே லலைந்து பதங்குலைந்த தின்றுணர்ந்தேன்
அடியே னினியுன் னடிமலர்கள் விட்டகலேன்
கொடியே னெனையாள் குறுக்குத் துறையானே.
65✓
பொழிகின்ற துன்பப் பெருங்கடல்விட் டேற்றியெனை
இழிகின்ற நற்புணையுன் னீரடிக ளென்றுணர்ந்தேன்
அழிகின்ற நெஞ்சத் தடியவர்பால் நற்கருணை
கொழிகுன்ற வாநற் குறுக்குத் துறையானே.
66✓
பாவையர் தாம்விரிக்கும் பாசவலை யாற்பெருகும்
நோவைய கற்றிலவுன் நேசவலை யுட்புகுந்தேன்
மாவைய றுத்து மயிற்சேவ லாக்கியணை
கோவைய றிந்தேன் குறுக்குத் துறையானே.
67✓
நெக்குருக நின்று நினைப்பணிந்துன் பாதநிழல்
புக்குமகிழ்ந் தாடியபின் பொன்னொடுபெண் ணாசையினால்
சிக்குவனோ பந்தமதில் சேரவெனைத் தள்ளுவையோ
கொக்குபடுத் தோனே குறுக்குத் துறையானே.
68✓
அப்பாவென் னாரமுதே ஆறுமுகச் செஞ்சுடரே
இப்பாரில் யானுழல எண்ணுவனோ நீகருணை
தப்பாதென் மேற்காட்டித் தாராயுன் னீழலுடற்
குப்பாயம் வேண்டேன் குறுக்குத் துறையானே.
69✓
இந்திரிய மைந்து மெனதுவச மாகாமல்
குந்தகமே செய்த கொடுவினையாற் பூவுலகப்
பந்தமதே கொண்டேன் பறித்தருளப் பாழ்வினையை
கொந்தலர்க டம்பா குறுக்குத் துறையானே.
70✓
சோதிமுரு காவுனது துய்யஅடி யார்காட்டும்
நீதிநெறி நின்றொழுகி நின்நாமச் சீர்பாடி
மேதினியி லுன்தொண்டு மேன்மையுடன் செய்பவருள்
கோதிலமு தானே குறுக்குத் துறையானே.
71✓
நாடுமெனக் குற்றபெரும் நற்றுணைநீ தானெனவே
ஈடுமில னாக இறுமாந் திருப்பனிவண்
தேடுமடி யார்தம் திருக்கொழித்தன் னாருளத்தே
கூடுமிறை யோனே குறுக்குத் துறையானே.
72✓
வேண்டேன் புகழே விரும்புகிலேன் மண்ணொடுபெண்
வேண்டேன் பொருளே விரும்புகிலேன் சூழ்தமரும்
ஆண்டே யுனைமறவா ஆசையுளேன் என்ஆவிக்
கூண்டே யொழிப்பாய் குறுக்குத் துறையானே.
73✓
வேண்டுவதும் நீயறிவாய் வேண்டுவஎல் லாந்தருவாய்
வேண்டுவதெ னக்கென்றே வேறுளதோ வுண்டுமெனின்
ஈண்டுவறி யேனெனையான் ஏந்தால் என்துயர்ப்புள்
கூண்டுவர லோய்ப்பாய் குறுக்குத் துறையானே.
74✓
நாயினேன் என்பால்நீ நல்கிய பேரருளைப்
பேயினேன் எவ்வாறு பேசுவேன் பேச்சறுத்தேன்
வேயினேர் தோளிமண வாளா உவகையினாற்
கூயினேன் கோவே குறுக்குத் துறையானே.
75✓
தங்கமதால் நற்பயனத் தங்கமடைந் தார்க்குளதாம்
அங்கவரால் நன்மை அதற்குண்டோ? பேயனுக்கும்
புங்கவனே நின்னால் பெரும்பயனாம் நிற்குண்டோ?
கொங்கலர்க டம்பா குறுக்குத் துறையானே.
76✓
பிறவா திருக்கவரம் பெற்றேன் பிறந்தாலும்
இறவா திருக்கவழி யானறிவே னஃதுனடி
மறவா திருப்பதுவே மான்மகள்பால் மாலடர்ந்த
குறவா திருவார் குறுக்குத் துறையானே
77✓
ஒளிவளரு முன்வதனம் ஒராறும் தொண்டரிடம்
அளிபொழியுஞ் செவ்விழிகள் ஆறிரண்டு மஞ்சேலென்
றளிவகற்றும் நீள்கரங்கள் ஈராறும் போதடியும்
குளிசமெனக் காமே குறுக்குத் துறையானே.
78✓
நீத்துகந்தார் சாற்றும் நெறிநில்லேன் இல்லையென்பார்க்
கீத்துகந்தே னில்லை எனையும் மனமிரங்கிக்
காத்துகந்தாய் உன்றன் கருணைதனை யென்சொல்வேன்
கூத்துகந்தான் பிள்ளாய் குறுக்குத் துறையானே.
79✓
பற்றதிக மோடு பரவுமென் நெஞ்சமுனை
“நற்றவனே ஞானமிலா நான்முகனைச் சென்னிகுட்டிச்
செற்றவனே எங்குஞ் செறிந்தவனே யாவருக்கும்
கொற்றவனே” என்று குறுக்குத் துறையானே.
80✓
நிலையாப் பிறவி நெடுங்கடலுள் தள்ளுண்டிங்
கலையா திருக்க அருள்புரிவா யஃதுனக்கோர்
மலையா முருகா வடிவேற் கரத்திறைவா
குலையா வளமார் குறுக்குத் துறையானே.
81✓
அடலிழந்தேன் வீணாய் அலைந்தலைந்து பாரினிலென்
உடலகத்தே நீயிருக்கும் உண்மை யுணராமல்
கடலணிசெய் செந்திலவா காவாய் பருவரையின்
குடலடுத்த வேலோய் குறுக்குத் துறையானே.
82✓
தீதுகளை யாயெனினுஞ் சீறிவிழு வாயெனினும்
நீதுகளென் றென்னை நினைந்தொதுங்கிப் போயினുമുன்
போதுகளை விட்டே புறம்போகே னென்றென்றுங்
கோதுக ளற்ற குறுக்குத் துறையானே.
83✓
பிறப்பாய நோய்தீர் பெருமருந்தே தொண்டருக்குத்
திறப்பாய வீடே தெரிவரிய மெய்ப்பொருளே
சிறப்பாய வேதத் தெளிவே உனைப்பிரியேன்
குறப்பாவைக் கேள்வா குறுக்குத் துறையானே
84✓
தொண்டரெம் வாழ்வு துலங்கிடப்பொன் வாரியிட்டோ
பெண்டார் தமக்குப் பெரும்பணிகள் செய்தளித்தோ
பண்டார மாயினைநீ பண்ணவருந் தாட்பணிந்து
கொண்டாடுந் தேவே குறுக்குத் துறையானே.
85✓
அடியார்க் கரும்பே றளித்தருளு மாண்டியப்பா
நெடிதார் பிறப்பிறப்பு நேரா இளஞ்சேயே
குடிசேர் குலபேதங் கொள்ளாக் குறவனேமா
கொடியேற் கருள்வாய் குறுக்குத் துறையானே.
86✓
விட்டாவி செல்வதுவும் வெற்றுடலைச் சூழ்ந்தழுது
கொட்டார்ப்பக் கொண்டு கொளுத்துவதுங் கண்டிருந்தும்
மட்டார்ந்த இன்பமிந்த மாநிலவாழ் வென்றிருந்தேன்
கொட்டார்ந்த பூவார் குறுக்குத் துறையானே.
87✓
முப்பொழுதும் உண்டு முடம்போல் படுத்துறங்கித்
துப்புநிகர் செவ்விதழார்ச் சேர்ந்துமயற் கண்ணியிற்பட்
டெப்பொழுதும் பிறந்திறந்தா லென்றுனையான் வந்தடைவேன்
கொப்படரும் மாவார் குறுக்குத் துறையானே.
88✓
இடும்புடையேன் வம்புரைக்கும் ஈனமுளேன் காமுகனாய்
நெடும்பனைபோல் நின்றழிந்தேன் நீர்மூட னாய்ப்பிறர்பால்
கடும்புதமே கூறிடுமிக் காதகன்யா னுய்வேனோ
கொடும்பவமே செய்தேன் குறுக்குத் துறையானே.
89✓
போற்றி வணங்கிடும்யான் பொல்லாதா னாயிடினும்
ஏற்று நினதருளை யீவாய் எனதுதவம்
ஆற்றிற் கரைத்தபுளி ஆகாமல் ஆதரிப்பின்
கூற்றிற் கயரேன் குறுக்குத் துறையானே.
90✓
உண்டெனவே போற்றுபவர்க் குள்ளவனா யில்லையெனும்
வண்டருக்கோ இல்லானாய் வாய்த்த சராசரமாய்த்
தொண்டருக்கோ எட்டுந் தொலைவினனாய் நின்றொளிர்சீர்
கொண்டவனே கோதிற் குறுக்குத் துறையானே.
91✓
பலிகழுகு நாய்நரிகள் பைசாச மென்னுமிவை
கலித்தெழுந்து சுற்றுமிந்தக் காயம் சதமாமோ
ஒலிகடல்சூழ் பாரில் உனையே சரணடைந்தேன்
குலிசனிடர் தீர்த்தோய் குறுக்குத் துறையானே.
92✓
காடுமலைப் பள்ளம் கடற்கரை சொந்தமிலா
வீடுபுறத் திண்ணை வெளியிடம்மற் றெவ்விடமென்
கூடுவிழு மோநீ குதித்தன்று வந்தாள்வாய்
கோடுபடர் மாவார் குறுக்குத் துறையானே.
93✓
தொழுதறியே னின்றுவரை துள்ளுமயி லோனுனையே
பழுததிகஞ் செய்தேனுன் பன்னரிய பீடறியேன்
கழுதையறி தற்கொணுமோ கந்தப் பொடிமணமே
கொழுதருவார் காதுழ் குறுக்குத் துறையானே.
94✓
வேதாந்த னேயென் வெருள்மனத்தே நின்றொளிரும்
போதாந்த னேயிப் புவிமயக்கி யுள்ளடக்குங்
கீதாந்த னேயிக் கெடுமதியேன் பாற்படருங்
கோதாந்த மாக்குங் குறுக்குத் துறையானே.
95✓
பூமாலை நாலுகின்ற பொற்புயமுந் தொண்டரணி
பாமாலை யார்த்திடுமுன் பாதமிரண் டல்லதென்றன்
நாமாலைக் கொண்டுபிறர் நாமந் துதித்திடுமோ
கோமானே கந்தா குறுக்குத் துறையானே.
96✓
தென்றலுடன் சாந்தம் திசையனைத்து மோச்சுமணம்
ஒன்றரிய தென்மலையி னோங்கியெழுந் தோடிவரும்
பொன்றலிலா நீர்சேர் பொருநைக் கரையுமேவுங்
குன்றவநிற் சார்ந்தேன் குறுக்குத் துறையானே
97✓
கார்த்திகைநற் பெண்டிர் கரமலரார் தேனேவிண்
பார்த்திபனின் வஞ்சி படர்ந்தணையும் வேற்கொம்பே
ஆர்த்திடுமெய்த் தொண்ட ரணிதனிலே நாயெனையும்
கோர்த்திடுவாய் நாதா குறுக்குத் துறையானே.
98✓
அரவணியன் பிள்ளாய்வே ளாறுமுகா காங்கேயா
சரவணப வாகடம்பா சாமியெனும் வேல்முருகா
கரவடரும் நெஞ்சனெனக் கைவிடுதல் நீதியன்று
குரவனெனுந் தூயா குறுக்குத் துறையானே.
99✓
திருவுரு மாமலையாம் சீர்குமரக் கோட்டமிதில்
உருவெடுத்துச் செந்தி லுறைபவனே நின்னடைந்தார்
கருவடைத லுண்டாமோ கண்ணுதலான் போற்றியசற்
குருவெனுமெய்த் தேவே குறுக்குத் துறையானே.
100✓
பலகலைநூற் கல்லான் பதமறியான் ஆயினுமிச்
சிலகவிகள் சொன்னான் சிவதாசன் ஆறுமுகன்
உலகனைத்தும் பாடி யுனதருள்பெற் றுய்யவென்றே
குலவுபதம் போற்றி குறுக்குத் துறையானே.