முருகன் App
மாவை முருகன்
க. சச்சிதானந்தன் பண்டிதர்
அடியவர்கள்1 / 2
மாவை முருகன் · க. சச்சிதானந்தன் பண்டிதர்

அடியவர்கள்

1குறள்✓
தம்பி முருகவேள் தாள்மேற் கவிபுனையத்
தும்பி முகனே துணை.
2அடியவருள் முதியவர்:✓
சரணீர் கதிரோன் முளைத்தனன் செங்கதிர்
தொடத் தொடப் பொன்கரை பட்ட தெங்கின்
இலையும் குலையும் இலங்குதல் காணீர்!
மாவும் தெங்கும் வாழையும் கமுகும்
யாவும் ஈண்டி இன்முகங் கொண்டனள்
பார்மகள் என்னப் பசுமை பூத்துக்
காலைக் கதிர்கள் கரந்தீண்டக் காட்சியாய்
மேல்பால் தோன்றும் வியன்பதி காணீரோ.
3அடியவருள் இளையவர் ஒருவர்:✓
அடியவர்களே, சுருள்முகில் போல அங்குப்
படிகுவது மெதுவெனப் பகருவீ ரின்னே.
4முதியவர்:✓
புக்கென்று புகைக்கக்கிப் பூமி யதிர்வாக
மிக்ககரி யுண்டு குளமொண்டு பசிமேவி
மக்களையு முள்ள டக்கும் புகைவண்டி
கக்குபுகை காங்கேயன் துறையிலே காணீர்
5இன்னொரு அடியவர்:✓
பள்ளிசெலக் கள்ளமுறு பையனென வாயில்
தள்ளுபுகை வெண்சுருட் டொன்று தான்வைத்து
மெள்ள வறியாது பதியீது புகைக்கின்ற
கள்ள மறியேன் சொல்லுவீர் கந்தனடியீர்
6முதியவர்:✓
சீமெந்து செய்கின்ற சாலையிது வாகும்
மேல்வந்த புகைகனலி வேகுகையி னாலே.
7வேறு✓
காற்று வந்து கலகல வென்னவே
கன்னிப் பெண்ணகை யோடொரு நாணமாய்
ஏற்ற பாரம தாக விறைஞ்சல்போல்
எங்கும் பாரிளஞ் செந்தினை சாயுதே.
மின்னி லங்கிடு வேலவன் தாள்தொழும்
மெய்கொ ளன்பரின் தாளிணை பட்டதோ
பொன்னி னாயது மாவைப் பதியினிற்
பூமி யாவும் பொலிந்துநன் றாகவே!
காவி வஸ்திர மாதவத் தோரெலாம்
கந்தன் கோயிலைச் சூழ விரும்பியோ
பூமி யானவ ளாடைகொண் டோர்க்கெலாம்
பொன்னை யள்ளிப் புழுதி யென்றாக் கிற்றே.
10வேறு✓
தினையின்குரல் அசையுந்தொறு மிசையொன்றிது கேளீர்
சிறுகன்னியர் நகையின்குரல் இடைவந்தது கேளீர்
பனையின்தலை கலசம்நிறை பதனித்துளி சொட்ட
பருவச்சிறு குதலைத்தமர் சுவைகொள்வது காணீர்
.
11✓
நாகத்தணி யாகத்தணி பாகத்துமை யாளன்
நாடித்திரி தருவானெனத் தோளிற்கயி றோடு
வேகத்தொடு கூபத்திடை, தண்ணீர்மொள வேகும்
வீரச்சிறு காளைக்குல மேகும்நிரை பாரீர்.
12வேறு✓
மடைபாய்வன நீரே மலர்பாய்வன தேனே
விடைபாய்வன மாடே விருந்தாவன தினையே
கொடையாளர்கள் போலே குலையானவை நீட்டிச்
சடைவாழைகள கூவும் தணியாவருள் பாரீர்.
13✓
வாழைச்சிறு பூவின் மதுவின்துளி சிந்திக்
கீழிற்குனிந் தேநீர் கிறிச்சிறை யிடுவோர்
தோளிற்பட வோடித் துடைமேனியோ டெல்லாம்
சூழப்பட லுள்ளான் தொகையேறுவ காணீர்.
14வேறு✓
தொங்குவன கொடிகள் தூங்குவன கதிர்கள்
தங்குவன காய்கள் தாழுவன கிளைகள்
பொங்குவது மடைநீர் பூணுவது பூக்கள்
எங்கணுமே பசுமை எங்கணுமே பயிர்கள்.
கதலியின் குலைகள் சாயக் கமுகினம் பாக்குத் தூக்க
மதுமலர் மரங்கள் தூவ வள்ளிகள் வளைந்து நின்று
புதுவித மண்ட பங்கள் புனைந்திட முருக்கு நீட்டி
விதம்வித மான பச்சை வெற்றிலை அளித்து நிற்க.
பச்சறு கணிந்த பாங்கர் பாகுறு குதலைச் செவ்வாய்க்
கச்சறு கொங்கை மாதர் காதலிற் கனிந்து நிற்ப
நச்சிய காளை வீரர் நங்கையர் மீது காதல்
இச்சையே தாலி யாக இனமணம் புரிதல் காண்பீர்.
பட்டியி லுறங்கு மாயன் பகற்பொழு தறியா னாக
குட்டிகள் சென்று எம்மைக் கூட்டியே செல்க என்று
முட்டியும் முரணி நின்றும் முதுகினைத் தடவிக் கேட்டும்
கட்டியு மணைந்தும் நிற்கும் காட்சியைக் காணு வீரே.
வள்ளியாம் மகளைச் சேர மகன்மர வள்ளி பாங்கர்
சொல்லிய வாழை யாகும் சோதிடர் தமக்கு ஏழு
மெல்லிய விரற்கை நீட்டி விதியினைப் பார்க்குங் காட்சி
நல்லது காண்மின் காண்மின் நாதனின் அடியீ ரெல்லாம்.
19வேறு✓
அள்ளிய புதுப்புதைய லென்ன அடிகல்ல
வள்ளிகள் கிழங்குதரு வள்ளன்மை காணீர்.
20வேறு✓
தூங்கு கமுகின் குலைகள் சொல்லு தமிழ்வாணர்(க்)கு( )
ஆங்கு முடியிட்ட பொன் னாகுவது காணீர்.
21வேறு✓
முள்ளுறு பலாக்கனி வெடித்தசுளை முந்திப்
பிள்ளையணில் கிள்ளைபிரித் துண்ணுவது காணீர்.
22வேறு✓
நாகரிக மங்கையர்கள் காதணிகள் நாண
மாமர முலுப்புகிற வாசகனி காணீர்.
23வேறு✓
வாழைகுருத் தாங்குழலை வாயின்மிசை வைத்துக்
கேளென விசைக்குமே கீதப்புகழ் மாலை.
24வேறு✓
அப்பப்ப னையனென ஆண்டமுறை சொல்லிக்
கப்பப் பணங்கேட்கு மூப்பனிவர் காணீர்.
25வேறு✓
சங்கத் தமிழ்வடித்துச் சாகாத தேன்கவியாய்
எங்கும் மணக்க இசைகூட்டித் தந்தமுன்றில்
விருந்து புரந்தந்து வேறுண்ட தென்றுமில்லா(து)
அருந்துவது கூழெனினும் அன்புட்டு மில்லமீஃதே
மணிவாசகன் சொன்ன மாமறைகோர் மந்திரம்போல்
அணியான நல்லுரைகாண் பாரதியும் ஆங்குளன்காண்.
ஐம்மொழி யுணர்ந்த அந்த ணாளன்
பொய்ம்மொழி யறியாப் புரிநூல் மார்பினன்
பாலசுந் தரத்தின் கோல முன்றிலில்
மேலைப் பரீட்சைக்கு வேண்டிய தாகலின்
இருக்கு வேதமும் தருக்க நூலும்
குருக்கள் முறையும் கோயில் விதியும்
ஆசிரி யர்கள் அமைவுறப் பயில்தலின்
காசினி முழுவதும் கவின்பெற எழுந்த
வேத வொலியுங் கீதமுங் கேளீர்
உள்ளம் தொட்டு ஊனும் உருக்குதே!
கடைந்த குழலிற் கரந்தொடு வதனாற்
கடைந்த அமுதம் காற்றில் வந்து
நாதஸ் வரமெனக் காதிலு மினிக்குதே!
குழலேந்து வாயினர் குரலோங்கு நாவினர்
மழலையா ழேந்து மலர்ச்சிிறு கரத்தினர்
பட்டில் போலக் கட்டிய கலப்பையர்
கொட்டு மேளக் கூடுபடு மெல்விரல்
காளான் நுதியெனக் கவின்பெற வுடையோர்
எங்கள் பெருமானுக் கிசைபாடு மரபினர்
வாழும் வீதியும் மறுகும் காணீர்.
இறைப்போர் பாடும் இன்னிசைப் பண்ணும்
துறைநீர் மோதிய சோவென் னிசையும்
மறையோர் வேதம் அறைந்த ஓதையும்
பள்ளிச் சிறுமியர் பண்பயில் மிடற்றோர்
மெள்ளத் தடவிய வீணையி னொலியும்
முற்றா மழலை மிடற்றெழுந் திசைக்கும்
நற்றே னிசையின் நடந்த சரிகம
ஓதையும் காளைகள் ஒன்றினை ஒன்று
முந்திட முட்டிய கூவிளி ஓதையும்
வந்தொருங் கிசையும் சந்தமிது நன்றே.
26வேறு✓
கட்டி முடியாத மேல்கோபுர நிமிர்ந்து
கார்முகிலை யுந்தொடும் காட்சியிது பாரீர்
கொட்டிய குரக்கன் புட்டினை நிகர்த்த
கோபுரமுன் வாசலிடை தோன்றுவது பாரீர்.