மாவை முருகன்
க. சச்சிதானந்தன் பண்டிதர்
அடியவர் முருகனைத் தொழுதல்2 / 2
மாவை முருகன் · க. சச்சிதானந்தன் பண்டிதர்
அடியவர் முருகனைத் தொழுதல்
வேறு✓
கோடி சூரியர் கூடிவந் தென்னத்
தேடும் மனத்தோர்ச் செஞ்சுடர் மேனியைக்
காயா கண்மலர்ந் தன்ன சாயல்
மணிநிற மஞ்ஞை அணிபெறக் கொண்டனை
அந்தி வானத்துச் சிந்திய செக்கர்
தோய்ந்தனைய செவ்வேல் ஏந்திய கரத்தோய்
மழலைக் குறுமூரல் மலர்வாய் விரிய
இளமை பூத்த அழகொழுகு நோக்கினை
அவிழ்ந்த வாசத் தரும்பிய கடம்பிற்
றிகழும் மார்பினை சேவற் கொடியினை
தொழுவார் விழுமந் துடைக்கக் குளிர்ந்து
அருளொழுக நோக்கும் திருவிழி யரசே
மங்கையர் நீங்கா மணவா ளாவென்
ஆருயிர்த் தலைவா அழகின் நிதியே
பேரொளிப் பிழம்பே பெரியோர் மனத்தோய் “யாமே,
அண்டம் பறப்போம் அணுவூடு துளைப்போம்
எண்டிசை யாவும் இக்கணம் அழிப்போம்
ஆழிக் கடியினில் ஆழ்ந்து வசிப்போம்
கோளெலாம் சுற்றும் கோளமும் மாற்றுவோம்
பெண்ணா ளின்றிக் கண்ணாடிக் குழலிற்
பண்ணுவோம் குழவியை எண்ணுவோம் வானும்
வானிற் சிதறிய பானிரை மீனும்
உயிரென்ப தில்லை உடலின் அசைவே
உடல் மாய உயிரும் மாயும்
அடலே நீதி. அருளென்பது நோய்”
என்பன கூறும் புன்மதி யாளரொடு
அன்பிலா மேலை அஞ்ஞானி களோடு
பூதத் திறனன்றி நாதனை யறியா
வம்பரொடு சேர்ந்து மாய்ந்தனம்
உம்பரும் காணா ஒளியே, முதலே,
கோணக் கணக்கும் கோள்நிலைக் கணக்கும்
பூத இயல்பும் வேதி நூலும்
புலன்களா ளளக்கும் பொருட்குண மன்றி
அணுவி லண்டமாய் அண்டத்துக் கப்பாலாய்
கற்பனை கடந்த அற்புத ஒளியாய்
நின்ற நின்னை அறிவரோ! மன்ற
அன்பு கண்ணாகநின் அருளே ஒளியாய்
இன்புற நோக்கின் எழுந்து வருமலையே
மணியே மனத்தில் ஊறும் தேனே
பிணியெலா மறுக்கும் பேரமுத மருந்தே
இல்லா மனமிடி அறுக்கும் செல்வா
எல்லா மளிப்பாய் ஏழையர் தாயே
உடலோ டழியும் உயிரும் என்ற
மடமை யாளர் வலைப்பட் டதனால்
தீமை நன்மை சிறிது மில்லை
யாவும் புலனின் நுகர்ச்சி யென்று
செய்வ தறியாது திசைதெரி யாது
உய்வழி காணாது ஒளிகாண் கிலாது
சித்தம் மயங்கித் திகைத்து நின்றோம்
அத்தா, அமரா, அடியார் கனியே,
சித்தத் தினித்த தேடாக் கரும்பே,
கேளா துடல்தந்த போளா மணியே.
மாளாதெனை யாண்டாய் மன்னவா மன்னவா
பாதப் பதுமலர் பற்றிக் கொண்டோம்
நாதா, இனிநாம் நண்ணுவ தெங்கே
குறிஞ்சித் தலைவா, நறுஞ்சிலைக் கடம்பின்
ஆரந் தாழ்ந்த மார்பின் அழகா,
குளிர்ந்து தெளிந்து குதித்துக் கல்லிழிந்து
துளும்பி வழிந்து தவழ்ந்த தூநீரருவி
சலசல ஒலியுடன் தனிப்பண் ணிசைத்தல்கண்
டுன்குளிர் வதனத் தருளின்குளிர் காண்போம்
மலைதீப் படுவதேபோல் மலர்க்காந்தள் விரியநின்
கொலைவேற் குருதிநிறம் காண்போம் மலையோனே
மலைஒளித்த மதியம் கலைநிறைந் தொளிர்ந்து
நிலைநின் றசையா வெண்முகில் நிரையின்
கரையினைத் தொடுத்தொடக் காலும் முத்தொளியில்
அரும்பிய முறுவல் அழகு கண்டோமே
உடைந்த தேனின் ஊற்றருவி யூரக்
கடைந்த அமுதக் கன்னித் தமிழ்ச்சுவை
அடியார் வாயில் வடிவது காண்போம்
பிளந்து சரிந்த பிலத்தொடு மலைகண்டால்
விழுந்தசூரன் புரண்ட மார்பென வியப்போம்
பச்சைப் பிஞ்சுத் தளிரின் அழகிலும்
கொச்சைக் குறவர் குழவிகள் தமிழிலும்
மோப்பக் குழையும் அனிச்சம் போலுறுத்துப்
பார்ப்பிற் குழையும் பச்சினந் தினையிலும்
முருகா நின்றன் முற்றா இளமைகண்டு
உருகா நின்றோம் உரோமம் பொடித்தோம்
கண்கண்ட தெய்வமே விண்கண்ட முதலே
குன்றக் குறவர் குடிசை நடந்தவனே,
என்றன் மனக்குடியில் எழுந்தருள்க இனியே
கார்த்திகை மங்கையர் கரந்தொட் டணைக்கச்
சீர்த்திய தாமரைத் தவிசு கிடந்த
செல்வத் திருத்தாள் சிவப்ப என்கல்
உள்ளம் நடந்தால் உருகுமே யன்றி
யாவது செய்யினும் கனியாது முருகா,
முருகா எனுமொழி செவிசென் றடைதலும்
பயமும் பகையும் பவமும் பறக்கும்
நயமும் நகையும் மலரும் முகத்தே
உள்ளம் இனித்துத் தேனாய் உருகும்
கள்ளம் போகும் கண்ணீர் சுரக்கும்
மணக்குங் கடம்பின் மலர்த்தா ரோனே!
வணங்குந் தலையே கரங்கள் குவியும்
அரைகுறை யர்க்கினும் அரகரா அமுதம்
ஆதியைத் தொட்டெனுள் சோதியிற் கலந்து
உள்ளம் கிளர்த்தி உவகை வெறியேற்றி
விள்ளக் கண்ணீர் மேனிமயிர் பொடித்துப்
பதமலர் சிக்கெனப் பற்ற வைக்கிறதே
வள்ளி மணாளா, வருக வருக
உள்ளம் கொண்ட கள்வா வருக
குறிஞ்சித் தலைவா குமரா வருக
மாயோன் மருகா மாவிட்ட புரத்து
மன்னா வள்ளி மணாளா வருக
மனக்குடில் வந்து எனைப்பெரி தாண்டென்
உள்ள வறுமை நீக்குவாய்
வள்ளலே கடம்பா வடிவே லோனே.