மயிலணி அந்தாதி
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
மயிலணி அந்தாதி · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
நூல்
1✓
வாவியுங் காவியும் மாண்புசெய் சுன்னை மயிலணிவாழ்
தேவியுங் காமுறு தேசிக னாய்வரு சீர்க்குமர!
ஆவியுங் காயமும் ஆக்கமும் ஈந்துநல் ஆர்வமொடு
மேவியுன் காலிணை வேண்டுவன் நாளும் மிகப்பணிந்தே.
2✓
பண்டே அறந்தனை நால்வருக் கோதிய பாண்டரங்கன்
தொண்டே அளித்துநற் சுன்னையிற் றோன்றிடுந் தோமறுதீங்
கண்டே அனையநங் காங்கேயன் தூய கழல்சிரமேற்
கொண்டே அவன்சொலக் கேட்டனன் கோதில் குடிலையையே.
3✓
குடிலை ட பாக் குரவன் தலைமிசை குட்டினை,தொல்
படியவ லந்தரு பள்ளையைப் பற்றினை, பாரதனில்
கொடியவ னாஞ்சிங்கன் கொன்னுயிர்மாயக் குமைத்தனைமெய்
அடியவர் உன்புகழ் ஆய்ந்திடு வாரோ அருநிலத்தே.
4✓
அரும்பு மலர்பறித் தர்ச்சனை ஆர்வமொ டாற்றகிலா
இரும்பு மனத்தினன் எவ்வா றிறையருள் எய்திடுவேன்
சுரும்பு மருவிடுஞ் சோலைகள் சூழ்தருஞ் சுன்னைதனில்
விரும்பு மறியிவர் வேலா விரைந்தருள் வீட்டினையே.
5✓
வீட்டை அகன்றுயர் விண்ணினை மேவிடும் வேட்கையொடு
காட்டை அடைந்து கடிமனம் ஆளுங் கடுந்தவத்தீர்
ஆட்டை அருவா கனமாக் கிடுஞ்சுன்னை ஆறுமுகன்
பாட்டை அசைத்துநற் பத்திகை கூடுவீர் பாரினிலே.
6✓
பாரினை யேமிகப் பாழ்த்திடும் பண்பிலப் பாதகனாம்
சூரினை யேவென்று சொர்க்கத்தைப் போற்றிடத் தோல்வியுறு
போரினை யேபுரி வேலவன் பொற்றலம் பூதலத்தில்
பேரினை, யேநனி பெற்றிடுஞ் சுன்னைப் பெருந்தலமே.
7✓
பெருகி அணிபெறுஞ் சுன்னை மயிலணிப் பேர்த்தலத்தின்
அருகில் அமருமெய் அன்பர்கள் அண்டிநல் ஆர்வமுடன்
உருகி அடல்மிகும் ஊழ்வினை ஓவி உயரமிர்தம்
பருகி அமர பதந்தனைப் பற்றுவர் பண்புடனே.
8✓
பல்லுங் கழன்றுகட் பார்வையும் அற்றுப் பலங்குறைந்து
பொல்லுங் கரமுறப் போக்கியம் போகப் பொலிவிழந்து
சொல்லுங் கரந்திடச் சோபையும் மங்கச் சுடுநிலந்தான்
செல்லுங் கதியிலி சித்தியைச் சேர்ந்திடச் செய்குவையே.
9✓
செப்போதும் பூட்கை புரத்திடுஞ் சீதரன் தென்மருகற்(கு)
அப்போதும் பூணுநல் ஆரமும் பூண்டுநல் அன்புடனே
முப்போதும் பூசை முறைதவ றாதுசெய் மூதறிஞர்
இப்போதும் பூஞ்சுன்னை ஈண்டுவர் இன்புற எங்கணுமே.
10✓
எழில்பல பாவிடுஞ் சுன்னையில் வாழ்வுசெய் எங்குகனை
மொழிபல பாடிக்கும் முத்தமிழ் மூழ்கிய மூதறிஞர்
பொழிபல பாடலைப் போற்றிப் புகன்று புரையுளவாம்
பழிபல பாற்றிப் பரந்தாள் பரவுவர் பாங்குடனே.
11✓
பாவார மாகிய பைந்தமிழ் மாமறைப் பாணிமிகு
தேவார மாதிய தோத்திரப் பாக்களைத் தேற்றமுற
நாவார மாசற ஓதிடும் ஞானிகள் நானிலத்தில்
தேவார மாற்றவொண் சேவடி சேருவர் சீலமொடே.
12✓
சீல மிகுதொண்டர் சீருடன் சுன்னைத் திருத்தலத்தில்
நீல மிகுத்தொளிர் மஞ்ஞை இவர்ந்திடும் நிர்மலர்க்குக்
கோல மிகுநல் விழவினை யேசெய்து கோமளஞ்சேர்
ஞால மிகுபுகழ் நாட்டித் துதிப்பர் நலம்பெறவே.
13✓
நலமுறை வந்தனை நாடிப் புரிந்துயர் நானிலத்திற்
குலமுறை வண்ணிக்குங் கோதையர் நித்தமுங் கூடிமகிழ்
தலமுறை வன்பொழில் தாவளஞ் சார்ந்திடுஞ் சண்முகனை
வலமுறை வந்து வரம்பல வேண்டுவர் மண்ணகத்தே.
14✓
மண்ணும் பரவும் மயிலணி வாழுரன் மாமகற்குப்
பண்ணும் பயனும் பழுத்த புராணத்தைப் பாவலர்கள்
எண்ணும் பரிசுடன் ஏமமொ டோதி எழில்பொலிய
நண்ணும் பரமத்தை நாட்டுவ ரேயிந்த நானிலத்தே.
15✓
நிறையருள் வேட்கை நிலவுநல் நெஞ்சுடன் நித்தியமும்
பிறையருள் வேணியன் பெற்றருள் பாலகன் பீடுறுமெய்
இறையருள் வேலவன் இன்கழல் எய்திட ஏத்திடுவோர்
பொறையருள் வேடம் பொலிந்து பொருந்துவர் பொற்றலத்தே.
16✓
தேறாத வல்லரக் கன்தனைத் தேற்றிய சேயினையே
பாறாத வல்லிசை பண்ணொடு பாடிப் பணிந்திடுவோர்
மீறாத வல்வினை வேதனை வீட்டியம் மேலுலகில்
மாறாத வல்லபத் தோடின்பம் எய்துவர் மன்தலத்தே.
17✓
மன்னா மகிதல வாழ்வினி லேயுயர் மாண்பிழந்த
என்னா மயம்மிகு யாக்கையை ஏற்றிவிட் டேகுதற்கு
முன்னா மலத்தெழு மும்மல மாசதன் மொய்ம்பகற்றி
பொன்னா முலகம் நிகர்த்திடச் செய்சுன்னைப் புண்ணியனே!
18✓
புண்ணிய மேமிகு பூம்பதி புக்குப் பொலிந்துநிதம்
எண்ணிய மேடம் இவர்ந்திடுஞ் சேயை இராப்பகலாய்த்
திண்ணிய மேலவர் தேற்றும் மயிலணிச் சீர்த்தலத்தில்
நண்ணிய மேதையர் நல்லருள் நாடுவர் ஞாலத்திலே.
19✓
ஞாலம் நவிலுமெய் அன்புடைக் கண்ணப்ப நல்லடியார்
போலம் பலவனைப் போற்றா எமைத்தான் புகல்மறலி
காலம் கடுகக் கயிறெறிந் தாவி கவருமுனம்
வேலம் பிகைசேய் வினைதவிர்த் தோம்ப விரைகுவனே.
20✓
விருந்து விரைந்து மிகுத்திடும் சுன்னை விசாகனையே
திருந்து முறையில் தியான சமாதியிற் சீருடனே
இருந்துன் திருவடி என்னகத் தேவைத் திரும்பிறவிப்
பெருந்துன் பினைநனி போக்கிடும் பண்பினைப் பெற்றிலனே.
21✓
பெற்றேன் அளவில் பிறவிகள் பெற்றுப் பெருந்துயரை
உற்றேன், அவனியில் ஒன்றா தொழுக உபாயநனி
கற்றேன், அடியிணை அன்றி எதையுங் கனவிலும்நான்
பற்றேன், அடைவதற் கொன்றிலை வேல!இப் பாரிடத்தே.
22✓
தேய்மை அகற்றிடுந் தேசார் மயிலணித் தென்பதிசார்
மாய்மை அடக்கிய பைந்தமிழ் வேலவன் பாதமலர்
வாய்மை அகத்தொடு வாழ்த்தி வணங்கி வழுவிலவாந்
தூய்மை அதிமிளிர் தொண்டர்கள் என்றிடத் தோன்றுமினே.
23✓
தோரண மும்மலர்த் தொங்கலுந் தோமறத் தொங்கவிட்டு
ஆரண முஞ்சொலும் பூரண கும்பம் அமைத்தொளிரும்
வாரண முஞ்செறி மாதவன் மாண்புசெய் வான்குகன்றன்
பூரண மும்பொலி பூங்கழல் போற்றுவிர் பொற்புறவே.
24✓
பொன்னிடம் பெண்ணிடம் மண்ணிடம் பூண்டிடும் பொற்பிலிச்சை
உன்னிடம் பெட்டுநர் உள்ளன்பிற் கூறினை உய்க்குமென்றே
என்னிடம் பெய்திடும் ஐயமென் நெஞ்சினை ஈர்க்கின்றதால்
மன்னிடம் பெற்றிடும் வான்சுன்னை வாழுரன் மாமகனே!
25✓
மகமா தனைப்பெறும் வச்சிர பாணி வணங்குசுன்னை
முகமா றுடைய முருகக் கடவுளை முன்னிநிதஞ்
சுகமா யுறழ்வில சுவர்க்கத்தை யேபெறச் சூக்குமமாஞ்
சகமா யையறச் சமாதியை கூடுவர் சற்சனரே.
26✓
சற்றும் பலனின்றித் தாரணி தன்னிற்பல் சாத்திரங்கள்
கற்றும் பழிசேர் கடையேன் கதிதனைக் காண்டலந்தான்
மற்றும் பதிகளுள் மாண்புகள் வாய்ந்து மகிதலத்தில்
முற்றும் பழமர மோங்குதண் சுன்னை முதுதலமே.
27✓
முதுமறை வாழ்த்தும் முதல்வனும் முன்னாள் முறைதவறிப்
பொதுமறை வாகப் புலவனைப் போற்றாது போகவவன்
புதுமறை வாசம் புகுத்தி நலியப் புடைத்துதைக்க
மதுமறை வாக மடுத்திடும் மாப்போல் மயங்கினனே.
28✓
மனமுறு வாதனை மாற்றிடும் மாண்புறு மாதலமாம்
புனமுறு வான்சுன்னை பொற்புற வாழ்வுசெய் புங்கவன்றன்
வனமுறு வார்கழல் வாழ்த்தி ஒருவுவன் மாசுதருந்
தினமுறு வாழ்க்கையில் தீவினை தேக்குஞ் சினத்தினையே.
29✓
சினக்கே டுறுமடி யார்மனத் தேநிதஞ் சேர்ந்திடுவெவ்
வனக்கே டுறுக்கும் வயமா வளர்சிவை மைந்தவினி
உனக்கே டுடைமலர் மாலையை நித்தம் உவந்தளிக்க
எனக்கே டுறுமந் திரம்நனி ஈக இறையவனே!
30✓
இறையவர் மாசில் குடிலையை வேண்டிட ஈந்தருளும்
பொறையவர் மாலினைப் போக்கிடுஞ் சுன்னையிற் புங்கவனாம்
நறையலர் மாலையை நான்றிடச் சாத்தி நலம்பெறவே
மறையவர் மாண்புசெய் மால்மரு கோனடி வந்திப்பனே.
31✓
வருமா முகில்தவழ் வான்தோய் மலையம் வதிந்துறையும்
ஒருமா முனிவனுக் கொண்தமிழ் ஓதிய ஒப்புயர்வில்
திருமா முருகனைச் சுன்னைத் திருத்தலத் தேயடைந்து
கருமா முறைகெடக் காதலித் தேத்து கதிபெறவே.
32✓
கதியினை யேதரும் நல்லை மயிலணிக் காப்பொலிசந்
நிதியினை யேசார் நிமல முருகனை நேர்ந்துபல
நிதியினை யேபெற்று நீள்புகழ் ஈட்டி நிலவுதற்கு
மதியினை யேநனி வாய்த்தில னேயிந்த மானிலத்தே.
33✓
மாலும் வரனும் வணங்குதண் சுன்னையில் மால்மருகன்
வேலும் வழங்கிவெவ் வெற்பினைத் தூள்செய்து விண்ணவரை
ஆலும் வரமயில் ஏறி அளித்தனன் அன்னவர்க்குப்
பாலும் வடிமது வுந்தினை மாவும் படைக்குவனே.
34✓
பண்ணீர் வயங்குநற் பாக்களைப் பாங்குறப் பாடிடுவோர்
உண்ணீர் வளமுள கூபங்க ளோங்குமிவ் வொண்தலத்தில்
மண்ணீர் வளிவெளி வன்னியென் றேநின்று மாண்புசெய்யும்
புண்ணீர் வடிவேற் புலவனைப் போற்றுவர் பூதலத்தே.
35✓
பூதலம் நீடிய பூஞ்சுன்னை மேவிய பொற்புளவாந்
தாதலர் நீபநற் றாரினைத் தாங்கிடுந் தண்கடல்சூழ்
மாதலம் நீல மணியணி மார்பன்றன் மாண்புநிறை
காதலம் நீவிக் கழலிணை ஏத்து கருமனமே!
36✓
கரும்பு மலிவுறுங் காப்பொலி சுன்னைக் கவின்தலத்தில்
இரும்பு மனமுடைச் சூரனை ஈறுசெய் எம்மிறைவன்
அரும்பு மலர்கொண் டருச்சிக்கும் ஆர்வம் அகத்துடையீர்
விரும்பு மருவரம் வேலோ னிடம்நனி வேண்டுமினே.
37✓
மின்போ லிடைவள்ளி தெய்வானை விள்ளும் விசாகனையே
பொன்போ லிலங்கும் உனதருள் பெற்றுப் புவியினிலே
என்போ லியரும் எழில்வாழ் வடைந்திட இவ்வுலகில்
உன்போ லிணையறு தெய்வமும் உண்டுகொல்? ஓதுதற்கே.
38✓
ஓடுந் திருவை உலப்புடைத் தாமென ஓர்ந்துநிதந்
தேடுந் திருத்தான் சிவனார் அருளிய சிற்பரனாய்
ஆடுந் திருவுடைத் தோகையின் மீதமர்ந் தன்பருளங்
கூடுந் திருமைக் குகனவன் என்றுகை கூப்புதுமே.
39✓
புதுமைக் குடிநிறை பொற்பார் மயிலணிப் பூம்பதிசார்
பொதுமை குலவிடும் போந்தார் தலத்தினிற் புண்ணியஞ்சேர்
பதுமை குறவள்ளி தெய்வானை பண்புசெய் பண்ணவனை
மதுமை குறைத்திட மாண்பொடு நித்தமும் வாழ்த்துவமே.
40✓
வாடி அலைந்துன் வடிவுடை மேனியென் வன்மனத்தே
தேடி அறிந்திலன், தேயங்கள் யாங்கணும் தேம்பலுடன்
ஓடி அலுத்ததும் ஓர்ந்திலை; சண்முக! உன்கழலைக்
கூடி அணைகுவ தென்றுகொ லோவென்று கூறுதியே.
41✓
கூறு முகமா றுடையதண் சுன்னைக் குமரனையே
பேறு முடைய பெருஞ்செல்வு மென்றுநற் பீடுடனே
தேறு முகம்பெறு வாய்சுரர் தந்துயர் தீர்த்தளித்த
ஆறு முகனல தில்லையென் றென்றே அறைகுமினே.
42✓
அல்லும் பகலும் அறுமுக வேலவன் அட்சரத்தை
வெல்லும் பரிசில் முறைபட வேயதை வேட்கையொடு
சொல்லும் பணியினில் துன்னுவர் வானுயர் தூயனசெந்
நெல்லும் பலித்திடுஞ் சுன்னைக் குகனடி நேசமொடே.
43✓
நேச மனமொடு நித்தமுஞ் சுன்னை நிலவுமுரு
கேசற்குச் செய்யுநற் பூசனை சேர்ந்திடுங் கீர்த்திசெறி
கோச மதிற்றிகழ் தீவளி அப்புக் குவலயமா
காச மெனவொளிர் கங்கைமைந் தன்கவின் காலிணையே.
44✓
காலன் றருக்கிக் கயிறெறிந் தாவி கவருமுனம்
நீலன் றருகுற வள்ளிதெய் வானையை நீவிவரும்
ஆலன் றருந்தி அமரரைக் காத்திடும் ஐம்முகன்றன்
பாலன் றகவொடு பாலித் தருளுவன் பண்புடனே.
45✓
பண்டு மறிதரு பண்புடை வள்ளியைப் பாங்குடனே
கண்டு மயங்கிக் கடுவிழை வுற்ற கவின்முருகன்
மிண்டு மசுரரை வீட்டியங் கேகய மீதமர்ந்தென்
மண்டு மலத்தெழு வாதனை நீக்குவன் மண்ணினிலே.
46✓
மந்தாரை மல்லிகை செந்தா மரையிரு வாட்சிநிறை
நந்தா நலமிகு சுன்னையை நாடிடும் நன்முருகா!
எந்தாயும் எந்தையு மாயெமக் கின்னருள் ஈந்திடுபொற்
சிந்தா மணிக்கொரந் தாதியைச் செப்புவன் தென்மிகவே.
47✓
தென்பால் அமர்திருக் கேதீச் சரன்பெறு சேயினையே
அன்பால் அடியிணை ஆர்வமொ டர்ச்சித் தவர்தமக்கு
இன்பால் அமுதம் இனிதளித் திம்மையில் எக்கணமும்
என்பால் அரும்பும் மலத்தினை நீப்பன் எழுமையுமே.
48✓
எல்லார் வளமுற ஏந்தி இரங்கிடும் எம்மிறையின்
நல்லார் வனச மலரடி நாடிடும் நல்லடியார்
சொல்லார் வமுடன் துதிக்கவி சோர்வறச் சொல்வதன்றிக்
கல்லார் வடுவுடைக் காவியம் ஒன்றையுங் காதலொடே.
49✓
காமரம் விம்முறப் பாடும் பிரமரங் காமுறுநன்
மாமரம் விஞ்சுதண் சோலை வளஞ்சால் மயிலணியில்
தோமரம் வில்வாள் அரவிந்தம் ஆதிய தோன்றினவே
பூமரம் விள்ளிடப் பொற்புற வாழ்வுசெய் புண்ணியனே!
50✓
புள்ளும் வருடையும் மேவு மயிலணிப் பொற்றலம்வாழ்
கள்ளும் வழியுங் கடம்பணி வேலவன் காத்தெமையாட்
கொள்ளும் வரையவன் கோலக் குரைகழல் கொண்டுநிதம்
உள்ளும் வகைபெற ஓவா தவன்புகழ் ஓதுதுமே.
51✓
ஓதும் இறைவன் ஒளிநெறி யேநின் றொழுகுமன்பர்
துதும் இடர்தரு வாதுந் துடைத்துத் துகளிலவாம்
போதும் இலையும் புனலுமிட் டேநிதம் பூசைசெய்வோர்
ஏதும் இடும்பையும் எய்தலுண் டோ?எம் இறையவனே!
52✓
இறையவன் பாணியை யாங்கணும் ஓங்க எடுத்துரைக்கும்
மறையவன் பாடுற வான்சிறை வைத்திடும் மாமுருகன்
நிறையவன் பாலின் நிமல னெனவைகி நித்தியமும்
உறையவன் பாடி எனமிளிர் தண்சுன்னை ஒப்பிலதே.
53✓
ஒப்புயர் வில்பல உத்தமர் வாழ்ந்துநல் ஊக்கமொடு
தப்புக ளில்லாத் தகைபெறு நூல்களைத் தந்ததனாற்
செப்பும் புலவர் திகழ்பதி என்றித் திருநகரை
இப்புவிச் சான்றோர் இசைபட என்றும் இயம்புவரே. 53
54✓
இயம்பல வேங்கும் விழவினைச் செய்யுநர் இன்புறவே
நயம்பல வேதரும் நல்வரங் கன்தனை நன்களித்துச்
சயம்பல வேபெறு சூரரைச் சாய்த்திடுஞ் சண்முகன்தான்
கயம்பல வேயொளிர் காப்பொலி சுன்னையின் காவலனே.54
55✓
காவலர் சேவைசெய் காப்புடைச் சுன்னைக் கவின்தலத்திற்
பாவலர் சேறுகொள் கந்த புராண படனமதில்
நாவலர் சேடுறக் கூறுரை கேட்டு நயப்புடனே
சேவலர்ச் சேயடி செவ்விதிற் கண்டு தெளிகுவரே. 55
56✓
தெண்ணீர்ச் செறுவளச் சுன்னை மயிலணிச் சீர்த்தலத்திற்
பண்ணீர் செறிபதிப் பாடலைப் பண்ணொடு பாடிமகிழ்
கண்ணீர்ச் செயிரியர் காதலித் தேத்திடுங் கண்ணியரே!
நண்ணீர் செயிருடை மார்க்கங்கள் ஒன்றையும் நன்னிலத்தே.56
57✓
நன்றே ஒளிவளர் சுன்னையில் மேவிடும் நற்றளிவாழ்
குன்றே ஒளித்திடுஞ் சூரனைக் கொன்ற குமரனுக்கு
ஒன்றே ஒருமொழி ஊழ்வினை ஓட்ட உளமதனில்
நின்றே ஒருவா தருள்தனை நீட்டுவை நீணிலத்தே. 57
58✓
நீடு மயிலணி நீப நிழலினில் நித்தியமும்
ஆடு மயிலினில் ஆர்வமொ டேறி அழகுறவே
பீடு மணியும் பெறுவே லவன்புகழ் பேசிடுவோர்
வீடு மடைய விரைவினில் ஏகுவர் விண்ணுலகே. 58
59✓
விண்ணவர் எய்திடும் வெந்துயர் நீங்க விரைவினிலே
பண்ணவ னென்னுநற் பாண்டரங் கந்தரு பாலனையே
மண்ணவர் என்றென்றும் மாண்பொடு சுன்னை மயிலணியிற்
புண்ணியம் எண்ணிப் புரிகுவர் பொற்புறு பூசனையே.59
60✓
பூசனை யேபுரி பொல்லா வரம்பெறு புன்மைமிகு
நீசனை யேமுன் நிலைகுலைத் தாண்டருள் நின்மலனாம்
தேசனை யேதினஞ் சேவைசெய் திவ்விய சேத்திரந்தான்
வாசனை யேமிகு சுன்னை மயிலணி வண்தலமே. 60
61✓
வஞ்சம் புரிந்திடும் மானிடர் வாழ்ந்திந்த மானிலத்தில்
நஞ்சம் புதைந்த நலமறு சொற்களை நாணமின்றி
நெஞ்சம் புரைபடக் கூறுவர் சுன்னை நிமலனது
கஞ்சம் புரையடி காதலொ டெண்ணார் கனவிலுமே. 61
62✓
கரணம் நனிகத்தி எய்திக் கருது கதிபெறவே
அரணம் நசித்த அரன்மக னைச்சுன்னை ஆலயத்திற்
சரணம் நயந்து சகமாயை நீத்துச் சகத்தினிலே
மரணம் நணுகுமுன் மாண்டடி சேர்குவர் மண்ணினிலே.62
63✓
மண்ணிய பாவ மனைத்துங் குவிந்த மனத்தகத்தே
நண்ணிய பாவகம் யாவையும் நீக்கி நலந்தருவாய்
தண்ணியற் பாணி தயங்கு மயிலணி சார்தலத்திற்
புண்ணியம் பாரிக்கும் பூசுரர் போற்றிடும் புண்ணியனே.63
64✓
புரந்தான் எரித்த புரந்தகன் பொன்னடி போற்றிலனாய்ப்
பரந்தான் எனமுனர்ப் பன்னிச் செருக்கு பகவனது
சிரந்தான் எறிந்த சிவனார் அருளுஞ் சிலம்பனையே
கரந்தான் எடுத்துக் குவித்து வணங்கிடக் கற்பியுமே. 64
65✓
கற்பக லாதநற் கன்னியர் சூழுங் கவின்தலமாம்
பொற்பக லாததண் சுன்னையில் வாழ்ந்துயர் பூதலத்தில்
வெற்பக லாதவெஞ் சூரனை வீட்டிய வேலனுக்கே
அற்பக லாதநல் அர்ச்சனை ஆற்றுவர் ஆவலொடே. 65
66✓
ஆளுந் திறனில் அவுணனை வீட்டி அமரர்தமை
வாழும் படியருள் மாலோன் மருகனை மாண்புடனே
பாழும் மனனே! பணிகிலை மேற்கதி பற்றுதற்குத்
தாழும் சிரத்துட னேதுதி சுன்னைத் தலத்தினிலே. 66
67✓
தக்கவன் பாலின் கடவுள ராகுந் தக்குகன்வாழ்
பக்கவன் பாலினில் ஓங்கு மயிலணிப் பைந்தலத்தில்
மிக்கவன் பாலினார் மாலையை ஏந்திநல் வேட்கையொடு
புக்கவன் பாதத்தைப் போற்றிவெம் மாயையைப் போக்குமினே. 67
68✓
போக்கும் வரவும் புகாத அறுமுகப் புங்கவனைத்
தேக்கும் வளஞ்செறி சீர்சால் மயிலணித் தென்தலத்தில்
தாக்கும் வலியுடைத் தாபத்தைப் போக்கித் தகைமைபெறக்
காக்கும் வரையவன் காலிணை ஏத்து கவியுடனே. 68
69✓
கவிநனி உட்கொளுங் கற்றவர் போற்றுங் கவினுறுநல்
திவிநனி உட்குந் திருவார் மயிலணித் தீந்தலத்திற்
சவிநனி உற்றிடுஞ் சண்முகன் சாற்றினிற் சார்ந்துநிதம்
அவிநனி உண்டுநல் ஆக்கத்தை அண்டுவர் ஆசையொடே.69
70✓
ஆயாமற் போகம் அனைத்தையும் அன்படை அண்டர்தமக்(கு)
ஈயாமற் போக்கிடும் ஏழைமை யேமிகும் ஈனரையே
ஓயாமற் போற்றிடும் ஒல்லாமை ஒழியிவ் வொண்புவியில்
வீயாமற் போதம் விளைக்குதி சுன்னையில் வேலவனே!70
71✓
வேலா! சரணம்! விசாகா! சரணம்; விமலனருள்
பாலா! சரணம்! பரனே! சரணம்; பவனிவரு
சீலா! சரணம்! சிலம்பா! சரணம்; சிகண்டியுயர்
காலா! சரணம்! கடம்பா! சரணம்; கவின்தலத்தே. 71
72✓
தேம்பா மலர்த்தொடை சேடுறக் கட்டுந் திவிமகளைக்
கூம்பா மலைப்பரங் குன்றினில் வேட்ட குமரனுக்குத்
தீம்பா மலிந்திடுஞ் செந்தமிழ் நூல்களைச் செய்துநிதம்
ஓம்பா மனிதரை எவ்வா றுரைப்பன் உலகினிலே. 72
73✓
உலவாத பேரின்பம் ஒன்றிட வேண்டிடில் ஊழ்வினைதான்
கலவாத பேரருள் கைவரப் பெற்றுக் கரும்புலன்கள்
நிலவாத பேற்றினைப் பெற்றுயர் சண்முகன் நீள்கழலைப்
பலவாத பேதத்தைப் பண்ணா தடைகுவிர் பாரினிலே.73
74✓
பாரினி லேகொடும் பாவ மலத்தினைப் பாற்றிலனாய்த்
தாரினி லேவிழுந் தோன்தனைப் போலுந் துணையிலிக்கு
நேரினி லேயுன்தன் நீள்கழல் காட்டி நிறையருள்செய்
ஏரினி லேமிகு சுன்னையில் வாழ்வுசெய் எம்வரனே! 74
75✓
வடமொழி யான்றவர் தென்மொழி நாவலர் வாழ்ந்துநிதம்
இடமொழி யாததண் சுன்னையில் ஈண்டிய எம்புலவன்
மடமொழி யாவல் லசுரனை மாய்த்து மகிதலத்தில்
அடமொழி யாவண் டரைநனி காத்தனன் அன்புடனே.75
76✓
புறந்தனை யேமொழி புன்மையைப் போக்கியிப் பூதலத்தில்
அறந்தனை யேவிளை ஆறக் கரத்தை அகத்திருத்தி
மறந்தனை யேதவிர் மாசறு மானந்த வாழ்வுதருந்
திறந்தனை யேநிதம் சேர்த்திடு வாய்சுன்னைத் தெய்வமே!76
77✓
மேன்மை மிகுசைவ மெய்நெறி யேநிதம் மேம்படச்செய்
பான்மை மிகுபண் ணவர்தமைக் காத்துப் பகர்சுவர்க்கக்
கோன்மை மிகுத்திடக் கோபதிக் கீந்த குமரனையே
யான்மை மிகவிட ஏத்த இசைகுவன் இம்மையிலே. 77
78✓
இம்மை இருவினைப் போகம் புசித்தே இளைத்துநிற்கும்
எம்மை இரும்பிற விக்கடல் நீந்த இசைந்திரங்கி
அம்மை இருளகல் ஆனந்த வாழ்வினை அண்மிமலச்
சும்மை இரும்பொறை நீக்கிடு வாய்சுன்னைத் தூமணியே!78
79✓
தூய மறைதனைச் சொற்றிடுந் தோமறு தொண்டரினங்
காய மனமொழி ஆதிய வற்றினைக் காணிக்கையாய்
நேய மரபுடன் அர்ப்பணித் தேயவன் நீள்கழலை
மாய மலமறுத் தேயுளத் தேத்துவர் மாண்புடனே. 79
80✓
மாண்ட மயிலணி மாதலத் தேவலம் வந்துவரம்
வேண்ட மயல்தொலை வேலவன் மென்பதம் வேட்கையொடு
பூண்ட மனிதர் புகல்சென்ம சாகரம் பூரணமாய்த்
தாண்ட மதிவலி தந்திடு வாயித் தலத்தினிலே. 80
81✓
தற்பதி யாகிய சுன்னை மயிலணி சார்தலமாம்
புற்பதி ஓங்கிடும் பூம்பொழில் சூழ்ந்து பொலிந்தொளிரும்
பொற்பதி வாழ்ந்திடும் பூர்விக வேலனைப் பூசைசெயும்
அற்பதி றந்திகழ் எம்மையும் ஆளுவன் அன்புடனே. 81
82✓
அன்பே உருவுகொள் ஆன்றவர் வாழ்ந்துநல் ஆர்வமுடன்
இன்பே உதவும் உடல்பொருள் ஆவியை ஈந்துபெருந்
துன்பே உறைந்திடுந் துட்டப் புலன்களின் துப்பறுத்து
முன்பே உளவினை முற்றையும் நீக்க முயலுவனே. 82
83✓
முயலகன் என்றிடும் பூதனை முன்னர் முதுகொடித்து
மயலகன் றென்றும் வணங்கிடச் செய்யு மரன்மகனாம்
அயிலகல் எற்கண் குறவள்ளி காந்தன் அடிமருவ
வயலகல் எட்டி வழிபடு மின்கள் வரமுறவே. 83
84✓
முத்தித் திறம்பெற முட்டில்லை நெஞ்சே! முருகனுக்குப்
பத்தித் திறமுடன் பால்பழம் வெற்றிலை பாக்குடனே
தித்தித் திடுஞ்செந் தினையிடி தேனொடு தேக்கியருள்
சித்தித் திடும்வரை சேவடி யைத்தினம் சிந்தியுமே. 84
85✓
சிந்தனை அற்றிரு திட்டியும் அற்றுச் செவிடுபடும்
மந்தனை அண்டி மரணம் வருந்தறு வாயினிலே
வந்தனை அன்பொடு மாலற வாற்றி மலத்திலெழு
பந்தனை அற்றிடப் பண்ணுக சுன்னைப் பரதெய்வமே!85
86✓
தென்னை மரமுயர் தீம்பொழில் தேங்கிடுஞ் சீர்த்தலம்வாழ்
சுன்னை மயிலணிச் சுப்பிர மண்ய சுவாமியையே
முன்னை மலவினை முற்றும் மொசித்துயர் முத்திபெற
என்னை மயலற நோக்கியென் நெஞ்சில் இருத்துவனே.86
87✓
இருவினைப் புண்ணிய பாவத்துக் கூடாய் இனிப்பிறவிக்
கருவினைப் புக்கவக் காயம் எடாது கவினுறுநல்
திருவினைப் புல்லுந் திருவடி யைத்தினஞ் சேர்ந்திருந்தால்
வருவினைப் புன்கண் வருத்திடு மோசுன்னை வாழ்குகனே!87
88✓
குகனே! சரணம்! குமரா! சரணம்;வெங் கூற்றுதைத்தோன்
மகனே! சரணம்; உமைசேய்! சரணம்; வலவன்மரு
மகனே! சரணம்; வனவள்ளி தெய்வானை மால்கொளறு
முகனே! சரணம்; சரணந்தண் சுன்னை முருகையனே! 88
89✓
முருகா! வடமலை மாமகள் மைந்தா! முராரியினன்
மருகா! வடிமலர் வான்சுன்னை மன்னிய மாமணியைப்
பெருகா வலொடு பிறவிப் பிணக்கதன் பீழையுடைத்(து)
அருகா வனந்த சுகத்தினை அண்டுவர் அன்பர்களே. 89
90✓
அஞ்சம் புகுந்திடும் அன்பர்கள் சூழ்தரும் ஆலயத்தில்
நஞ்சம் புசித்து ஞயம்படத் தேவரை நன்களித்து
பஞ்சம் புரந்திடுஞ் சுன்னைப் பதிசூர்ப் பகைவனையே
தஞ்சம் புகுந்தனன் தாள்பெற வேயித் தரணியிலே. 90
91✓
தரமோங்கு மாடங்கள் சார்ந்திடுஞ் சுன்னைத் தளியினிலே
மரமோங்கு மாதலம் வாழ்ந்திடும் நஞ்சுடை மாசுணத்தின்
குரலோங்கு மாவொலி கேட்டுக் கதறும் குருகினங்கள்
சிரமோங்கு மாறுநின் றேங்கிப் பயந்து திகைத்தனவே.91
92✓
வேண்டும் வரங்களை மெத்த வழங்கிடும் வேலனையே
மீண்டும் வழிபட்டு வெம்பவங் கூர்பிற விக்கடலைத்
தாண்டும் வகையினைத் தானறிந் தன்னவன் தாளிணையைப்
பூண்டும் வணங்குமின் புண்ணியம் பூரித்துப் பொங்கிடவே.92
93✓
வேதங் களைத்தான் விளங்குதல் வேண்டி விரைவினொடு
பாதங் களைத்துதி பாண்டரங் கந்தரு பாலகன்தான்
பூதங் களைக்கொடு சூரனைப் போக்கிப் புலவர்தமக்(கு)
ஏதங் களைகளைந் தேந்திப் புரந்தனன் ஏமுறவே. 93
94✓
வேதிய ராய்ந்திடும் வேதங்கள் நான்கும் விரைந்தளித்த
ஆதிய ராயொளிர் ஆயிரநாமன் அருள்குகனைப்
பூதிய ராய்நிதம் பூசித்துப் போற்றிடும் பூரியரும்
ஓதிய ராகி ஒளிருவ ராமென ஒருமினே. 94
95✓
ஒருரும் ஓர்குல முந்தா னிலாந்தரும் ஒண்புதல்வன்
தேருரும் ஓவியச் சீரினைக் காண்குபு செல்லுமுயர்
பாருரும் ஓதியர் பாங்குடன் சேர்தலம் பாரினிலே
காருரும் ஓடைகள் காமுற ஓங்குங் கவின்தலமே. 95
96✓
மேகத்தை யேநிகர் மென்குழ லேயுடை மெல்லியலார்
போகத்தை யேநிதம் போற்றி அலைந்திடும் புல்லியர்கள்
சோகத்தை யேநனி துன்னுவர் அம்மைச் சுகந்தருநல்
ஏகத்தை யேயினி தெய்தில ரேயிறை எண்ணுதற்கே. 96
97✓
எல்லா மனிதரும் என்றுங் குமரனை ஏத்திநனி
சொல்லா மறைநெறி சோர்வறத் துன்னித் துகளுளவாம்
பொல்லா மறவினை போக்கித் திவிதலம் போவதற்கு
வல்லார் மதித்திடும் வான்பதி தான்சுன்னை வண்பதியே.97
98✓
பத்தித் திறஞ்சேர் பழமுனிக் கேமுனர்ப் பைந்தமிழைத்
தித்தித் திடச்சொலுஞ் செவ்வயிற் சேந்தனைச் சேமமுறு
முத்தித் திரத்தை முடிக்குமும் மாசினை முன்பகற்றிச்
சித்தித் திடும்வரை சேத்திரத் தேசென்று சேவியுமே. 98
99✓
சேவற் பெருங்கொடி யுஞ்சிகி ஊர்தியுஞ் செவ்வயிலுந்
தேவப் பெதும்பையுஞ் சேல்விழி வள்ளியுஞ் சேர்ந்துனக்கு
ஏவல் பெரிதுயர் ஏரினைக் காணுற எந்தனுக்கு
ஆவல் பெரிதுண்டு சுன்னையில் வாழும் அறுமுகனே! 99
100✓
கரங்கள் எடுத்துக் குவித்து வணங்கிக் கணப்பொழுதிற்
புரங்கள் எரித்த புரந்தகன் பெற்ற புலவனையே
மரங்கள் எழில்செய் மயிலணிப் பேருடை மாதலத்தில்
வரங்கள் எமையடை யும்வகை வேண்டுவன் வாழ்க்கையிலே. 100