முருகன் App
முருகன் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார்
முருகன் பாட்டு2 / 2
முருகன் பாட்டு · சி. சுப்பிரமணிய பாரதியார்

முருகன் பாட்டு

✓
வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலு மயிலுமென், முன்னின்றே-எந்த
நேரத் திலுமெனைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
யோரத்தி லேபுணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை யென்னுள நாடுதே;-மலை
வாரத்திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.
2✓
வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே-முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
வென்றிட மெய்ப்புக ழேறுவான்.
3✓
தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;-மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;-மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;-தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரி லறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமு மூட்டுவான்.
4✓
தீவளர்ந் தேபழ வேதியர்-நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவளருஞ் செம்பொ னாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலற நாட்டினார்;-ஐய,
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னரு ளேயென்று நாடுவோம்-நின்றன்
(வீரத் திருவிழிப்)