முருகன் App
செல்வச் சந்நிதி சுப்பிரமணியசுவாமி நிந்தாஸ்துதி
மு. செல்லையா
நிந்தாஸ்துதி2 / 2
செல்வச் சந்நிதி சுப்பிரமணியசுவாமி நிந்தாஸ்துதி · மு. செல்லையா

நிந்தாஸ்துதி

2✓
பொன்னமருந் தொண்டைமா னாற்றிற் பொலிந்த செல்வச்
சந்நிதியில் மேவுந்த யாநிதியே — நின்னப்பன்
எப்பொழுதும் நட்டமுற எம்மவர்க்கி லாபம்நீ
தப்பாது செய்குவையோ தான்.
3✓
நங்கையர்க்கு நான்குவிழி நாதனுக்கீ ராறுவிழி
தங்குமயிற் காயிரங்கண் தானமைந்தும் — எங்குறைகள்
கண்டொழிக்க வன்மையிலாக் கந்தாநின் சந்நிதிசேர்
தொண்டருக்கு யாதோ சுகம்.
4✓
வாழும் பதிசெல்வச் சந்நிதியாய் மன்னுமன்பர்
ஆளும் பெயர்செட்டி என்றமைந்தும் — நாளுமுனை
வாழ்த்து மடியார் வறுமையுறக் காரணமென்
சூழ்த்தமங்கை மார்தடையோ சொல்.
5✓
சட்டியிலே கொக்கவித்துச் சாறாக்கி நீ தரலால்
பெட்டியிலே அன்னம் பெருகினதென் — றிட்டமுடன்
சிந்தைகளித் தார்வழியார் சேர்ந்துபசித் தாரடியார்
முந்துந் துலாமதியில் முன்.
6✓
ஓங்குங் கடைமகனாய் உன்தந்தைக் கோதுவித்து
வீங்குசிறை நான்முகனை நீ விடுத்த — தீங்கையெண்ணிப்
பெண்தருவா ரின்றியோ பேசுமும்பர் யானையொடு
மண்தருமா னைமணந்தாய் மன்.
7✓
செட்டியெனும் பேருடைநீ செல்வர்களே. உன்பாதங்
கிட்டி யுரைப்பவற்றைக் கேட்பதன்றி — எட்டிநின்றே
ஏழை உரைப்பதனை ஏற்காயென் றெண்ணாமல்
நாளைவீ ணாக்கினனே நான்.
8✓
அஞ்சுதலை நானுடையேன் ஆறுதலை நீயளித்தால்
விஞ்சுதலை பாரமெனை மேவாதோ — துஞ்சுதலை
விட்டளிகள் மூசுமலர் மேவுசெல்வச் சந்நிதியில்
இட்டசித்தி ஈஎந்தை யே.
9✓
பன்னிருகைச் செல்வன்நீ பாழும் பிணிவருத்தும்
என்னொருதைத் துன்பத்தை யெண்ணாயேல் — சந்நிதிவாழ்
கந்தா அபய வரதக் கரமுடைய
மைந்தா எனல்வீண் மதி.
10✓
அக்கினியி லேயுருவாம் ஆனவன்றன் மேனியிலே
இக்குநிக ரரன்பால் இறைத்தாலும் — மிக்க அனல்
ஆறிநெஞ்சு நீகுளிராய் ஆனதினால் என்துயரம்
மாறமனம் கொள்ளாய் மதி.
11✓
வன்மைமிகு சூர்முதலை வாட்டியநீ கானம்வாழ்
மென்மைமிகு வள்ளிக்குத் தோற்றதுமேன் — உன்னிடத்தில்
நம்பிக்கை கொள்ளவொரு ஞாயமுண்டோ சந்நிதிவாழ்
தும்பிக்கை யான்தம்பி சொல்.