முருகன் App
ஸ்ரீ தேவசேனாபதி கவசம்
ஸ்ரீ முருகதாசன்
நூல்2 / 2
ஸ்ரீ தேவசேனாபதி கவசம் · ஸ்ரீ முருகதாசன்

நூல்

✓
சேவடி தொழுவோர் சென்ம வினைதனைப்
பூவடி யாலே போக்கிப் புரந்திடும்
கூர்வடி வேலா குமரா வருக!
சூர்முதல் தடிந்த சுதனே வருக!
பார்முழு மைக்கும் பதியே வருக!
ஆர்வ முடன்எனை ஆண்டிட வருக!
கடம்பனை வதைத்த கந்தா வருக!
இடும்பனை அழித்த இறைவா வருக!
உடன்படும் பக்தர் உறவே வருக
திடம்பட ஞானம் தரவே வருக!
கார்த்திகை மைந்தா கந்தா வருக!
பார்த்திடும் வேளையிற் பறந்தே வருக!
வள்ளி மணாளா வருக வருக!
பிள்ளையென் முன்னே பேசிட வருக!
தொல்லைகள் எல்லாம் தோல்வி அடைந்திட
அல்லல்கள் யாவும் அழிந்து மறைந்திட
உன்னடி தொழுவோர் உயர்ந்து சிறந்திட
இன்னருள் சுரக்கும் ஏந்தலே வருக!
ஓங்கிய மணிமுடி ஒளியுடன் துலங்கிடத்
தேங்கிய அருளினை விழிகள் வழங்கிட
ஆறிரு காதிலும் குண்டலம் அசைய
நீறிடும் நெற்றியிற் புருவம் வளைந்திடப்
பழகிய கழுத்திற் பல்வகை ஆரம்
அழகுடன் மார்பில் அசைந்தே ஆடப்
பன்னிரு கரத்திலும் பலவா யுதமும்
மின்னிடும் அழகுடை வேலா யுதமும்
என்னிடர் நீக்கிட இனிதே வருக!
உன்னிரு தேவியர் உடன்நீ வருக!
மயில்மீ தேறும் மணியே வருக!
பயில்வோர் மனத்தினிற் பாவகி வருக!
சூரனை வதைத்த சுடரே வருக!
மாரனை நிகர்த்த மதியே வருக!
காரியம் நிகழ்த்தும் கரிமுகற் கிளையோய்!
காரணம் உணர்த்தும் கலையுணர் பாவல!
வேலிறை வாநீ விரைந்து வருக!
மாலிருஞ் சோலை மலையோய் வருக!
குறைகள் காணாக் குகனே வருக!
மறைகள் பேசிடும் மகிபா வருக!
சலங்கைகள் ஒலித்திடச் சண்முக வருக!
கலங்க விடாமற் காத்திட வருக!
ஆறு முகத்துடன் அழகாய் வருக!
தாருகற் செற்றோன் தயவுடன் வருக!
செந்தூர்ப் பதிசேர் சேந்தா வருக!
எந்தாய் நீயும் இசைவுடன் வருக!
குமர குருவின் குறைதீர்த் தருளி
அமரர் இடரை அழித்தோய் வருக!
உன்னைத் தொழுதே உன்னடி பணியும்
என்னைக் காத்திட இனிதே வருக!
வெற்றி வேலுடனே விரைந்துநீ வருக!
சுற்றிய பகையைத் தொலைத்திட வருக!
நலம்பல புரிந்திடும் நாரணன் மருக!
சிலம்பொலி முழங்கிடச் சீக்கிரம் வருக!
அழகு மயில்மேல் ஆடியே வருக!
குழகா குமரா குகனே வருக!
அடியவன் அங்கம் அனைத்தும் காக்கும்
படியருள் புரிந்திட பாவகி வருக!
கற்றை முடித்தலை கதிர்வேல் காக்க!
நெற்றிப் பரப்பினை நீள்வேல் காக்க!
சிலைபுரு வங்கள் செவ்வேள் காக்க!
சலியா இமைகளைச் சண்முகர் காக்க!
விழிகள் இரண்டினை வேலவர் காக்க!
எழில்நா சிதனை இறையவர் காக்க!
ஆடும் மயிலோன் அறுமுகன் புகழைப்
பாடும் வாய்தனைப் பரிவுடன் காக்க!
சொற்களைத் தெளிவாய்ச் சொல்லிட உதவும்
பற்களை உன்றன் பரிவேல் காக்க!
ஆவியென் உடலில் அடங்கிடும் வரையில்
நாவினை உன்தன் நல்லருள் காக்க!
இதழ்கள் இரண்டும் இனியவேல் காக்க!
பதமுடன் முகவாய் பருவேல் காக்க!
வதனம் முழுவதும் வடிவேல் காக்க!
நிதம்என் செவிகளை நெறிவேல் காக்க!
சிறந்தனைத் தாங்கும் சின்னக் கழுத்துடன்
குரல்வளை யதனைக் குகனார் காக்க!
மூங்கில் தோள்இணை முருகனார் காக்க!
வீங்கிடும் முலைமார் வேலவர் காக்க!
அடர்முடி நெஞ்சினை அருள்வேல் காக்க!
பிடரிப் பகுதியைப் பெருவேல் காக்க!
முதுகைத் தணிகை முரண்வேல் காக்க!
உதரம் பரிவுடன் உறுவேல் காக்க!
முற்றும் விலாப்புறம் முனைவேல் காக்க!
சிற்றிடை தன்னைச் சிவன்மகன் காக்க!
உந்திச் சுழிதனை உக்ரவேல் காக்க!
விந்துக் குறிதனை வேலவர் காக்க!
குதந்தனை முருகன் குறையறக் காக்க!
அதன்புறப் பிட்டம் அருள்வேல் காக்க!
இணைத்தொடை யதனுடன் இருகுதி கால்களும்
கணைக்கால் உடனே கந்தனார் காக்க!
மூட்டுகள் எல்லாம் முறையுடன் காக்க!
நீட்டிடும் தாள்களை நிமலனார் காக்க!
முழங்கால் தன்னை முனைப்புடன் காக்க!
முழங்கை யதனை முருகவேள் காக்க!
இருமுன் கைகளை இணைவேல் காக்க!
இருபின் கைகளை இறைவேல் காக்க!
கால்விரல் பத்துடன் கைவிரல் பத்தையும்
வேல்கரம் கொண்ட வித்தகர் காக்க!
மெய்ப்பொருள் ஆகியே மேவும்நின் புகழைச்
செப்பிய நேரம் சேந்தனார் காக்க!
செப்பா மல்நான் சிந்தித் திருப்பினும்
தப்பா மல்நீ தகவுடன் காக்க!
சந்தி வேளையிற் சண்முகர் காக்க!
அந்தி வேளையில் அறுமுகர் காக்க!
முற்பகல் தன்னில் முனைவேல் காக்க!
பிற்பகல் தனிலே பிணைவேல் காக்க!
இரவு வேளையில் இறையவர் காக்க!
பரவும் ஒளியினிற் பாவகி காக்க!
சாமங் களிலே சரஹணர் காக்க!
தாமதம் இன்றிச் சண்முகர் காக்க!
எல்லா இடத்திலும் என்றன் எதிரிகள்
நில்லா வண்ணம் நீள்வேல் காக்க!
பொல்லா வினையும் பொல்லாப் பழியும்
இல்லா தொழித்தே இணைவேல் காக்க!
வேர்க்க வேர்க்க வினைகள் ஓடிடப்
பார்க்கப் பார்க்கப் பாவகி பார்க்க!
காக்கக் காக்கக் கந்தனார் காக்க!
போக்கப் போக்கப் பொல்லா வினைகள்!
பில்லி மற்றும் பெருஞ்சூ னியமும்
கொல்லையில் நிற்கும் குறுமுனி தனையும்
சொல்லிடும் உன்றன் தோத்திரத் தாலே
கெல்லி யெறிந்திடக் கேட்டேன் அருள்வாய்
பிள்ளை இரத்தம் குடிக்கும் பேய்கள்
கொள்ளிக் குறளை குமுறும் சாத்தான்
காடன் மாடன் காட்டே ரிகளும்
வேடனுன் அருளால் விலக்கிட வருவாய்!
பெண்டிரைப் பிடிக்கும் ……… ராட்சதர்
அண்டிடா வகையினில் அருள்வாய் ஐயா
ஆசைக ளுடனே ஆண்களைப் பிடித்து
மோசம் செய்யும் மோகினி வகையும்
எல்லாப் பேயும் இரிசி மண்ணரும்
நில்லா தோட்டிட நீயெனக் கருள்வாய்
மண்டை ஓட்டுடன் நகமும் மயிரும்
கொண்டே புதைத்த ஒருகல சத்தில்
பிள்ளையின் எலும்பும் பூனையின் மயிரும்
கொள்ளத் திணித்த குறும்பா வையுடன்
வீட்டினுள் புதைத்த வஞ்சனை தன்னை
ஓட்டிட நீயும் உவந்தே அருள்வாய்
கூற்றின் தூதுவன் கண்டாற் குறுகிட
மாற்றான் கண்டால் பதறி வணங்கிடக்
காற்றும் கருப்பும் கலங்கி நடுங்கிட
ஆற்றல் எனக்கே அருள்வாய் ஐயா!
சிங்கம் புலியுடன் சினமிகு கரடியும்
இங்கெனைக் கண்டால் இடிந்து கலங்கிட
நாயுடன் வஞ்சகம் செய்திடும் நரியும்
பாயும் சிறுத்தைப் பல்வகை மிருகமும்
சேயெனைக் கண்டதும் சிதறித் திரும்பிட
நீயெனக் கின்றே நிலைபெற அருள்வாய்
சர்ப்பம் பூரான் சலமண் டலியுடன்
விர்ச்சிக விடமும் விரைவினில் இறங்கிட
விடமிகு குளவி வெறிநாய்க் கடிவிடம்
திடமுடன் இறங்கிடத் தேவா அருள்வாய்
ஒற்றைத் தலைவலி ஒளிப்பும் சுளுக்கும்
மற்றைய வாதம் வலிப்புகள் எல்லாம்
உருக்கிடும் க்ஷயத்துடன் உதறிடும் வலிப்பும்
சுருக்கிடும் சூலை கைகால் சிலந்தி
பித்தம் குடைச்சல் பிளந்திடும் தலைவலி
இரத்தம் கெட்டிட வந்திடும் சொறிகளும்
கண்டவர் வெறுக்கும் கருமத் தொழுநோய்
கண்டச் சளியுடன் நெஞ்சுச் சளியும்
மார்வலி தோள்வலி மலச்சிக் கல்களும்
பார்வை மறைக்கும் பல்வகைக் கண்ணோய்
கைகால் உளைச்சல் கட்டி பிளவை
கைகாற் சுளுக்குடன் காதில் வலியும்
உதரக் கடுப்பும் உதிரப் போக்கும்
பதறச் செய்யும் பல்வலிக் குத்தும்
காசம் குன்மம் கர்ப்பச் சிதைவும்
பேசும் போதினில் பிறழ்ந்திடும் வாயும்
மேகவெட் டையுடன் மேவுஅரை யாப்பும்
தேகம் முதிர்ந்த திரையும் நரையும்
எல்லாச் சோகையும் இருகா மாலையும்
எல்லாப் பிணியும் ஏகிட அருள்வாய்!
அண்டம் முழுவதும் அடியவர்க் குறவாய்க்
கொண்டுன் புகழைக் குறையறச் சொல்லி
நன்னலம் பெற்று நயமுடன் வாழப்
பன்னிரு விழியாற் பார்த்தே அருள்வாய்!
சரஹண பவனே சண்முக குகனே!
திரிபுரம் எரித்த தேவனின் மகனே!
என்குறை தீர்த்தே எனையாட் கொண்டே
உன்பதம் அருளி உயர்ந்திடச் செய்வாய்!
கன்னல் தமிழ்ச்சுவை காத்திடும் கீரன்
இன்னல் களைந்த இறைவன் நீயே!
வானவர் தலைவனின் அமரர் பதியைத்
தான்அவர் பெற்றிடத் தயைபுரிந் தவனே!
ஓமெனும் மந்திரத் துட்பொருள் தன்னைச்
சோமனை யணிந்தவர்க் குரைத்தவன் நீயே!
செந்தூர் மேவும் சேந்தனும் நீயே!
கந்தா கருணைக் கடலும் நீயே!
எந்தை நீயே எந்தாய் நீயே!
சொந்தமென்று எனக்குச் சொல்லிலும் வகையில்
பந்தம் பாசம் பரிவுடன் நேசம்
தந்துஎனைக் காத்திடும் தலைவனும் நீயே!
திருப்பரங் குன்றினில் திகழும் மணியே!
பருப்பதம் அளிக்கும் பழனியின் வாழ்வே!
தணிகை மலையில் தங்கிடும் வேலா!
பிணிகள் போக்கிடும் பீடுடைக் குமரா!
கதிர்கா மத்துறை கந்தன் நீயே!
எதிர்ப்பினை நீக்கும் இறைவன் நீயே!
சென்னி மலைதனில் திகழ்ந்திடும் முருகா!
குன்னக் குடிதனில் உறையும் குமரா!
ஆர்த்திடும் அசுரர் ஆணவம் அழித்த
கார்த்திகை மைந்தன் கடம்பன் நீயே!
பார்த்திடும் பணியிற் பகைமை நீக்கிச்
சேர்த்திடு நிம்மதி செங்கதிர் வேலா!
கல்வி ஞானம் கருதிடும் செல்வம்
பல்வகை வாகனம் பாராட் டுக்களும்
செல்வாக் குடனே சொல்வாக் கினையும்
வெல்வார் இல்லா மிகுநனி நிலையும்
கலைமக ளுடனே அலைமக ளிடமும்
மலைமக ளன்னை மருங்கினிற் கேட்டு
என்றனுக் கருள என்முன் வருவாய்
குன்றுடைக் குமரா குகனே முருகா!
புத்தி குறைந்தே பொல்லா வினையால்
எத்தனை குற்றம் ஏதுசெய் தாலும்
இந்திரன் மகளொடும் எழில்வள் ளியொடும்
எந்தன் பிழைகளை இனிதே பொறுப்பாய்!
அன்னையர் இருவரும் அருகினில் இருக்க
என்னை நீயும் இசைவுடன் காப்பாய்!
உன்னருட் பாதம் ஒன்றையே நம்பிடும்
என்னைக் காத்திட இன்றே வருவாய்!
உன்னை வணங்கி உன்புகழ் உரைப்போர்
உன்னை நினைந்தே உருகிடும் அன்பர்
அன்னவர் வாழும் இல்லங் களிலே
கன்னம் இட்டிடக் கள்வர்கள் வாரா
வகையருள் செய்வாய் வடிவேல் முருகா
குகனே உன்னிடம் கும்பிட் டுரைத்தேன்
கந்தநின் பெருமையைக் கருதிடும் அன்பர்
சந்ததி தழைக்கச் சண்முகன் அருள்வாய்!
உலகினை ஆட்டிடும் ஒன்பது கோளும்
நலம்பல செய்திட நன்றே அருள்வாய்!
எட்டுத் திக்கில் இருந்திடும் பெரியோர்
இட்டமு டன்என் செயல்களில் உதவிடக்
கெட்ட நோக்குடன் கிளம்பும் பகைவர்
பொட்டுப் பொடியாய்ச் சிதறிட அருள்வாய்
சொல்லா தொழிந்த சுகங்கள் பலவும்
எல்லாம் அருளிட இன்றே வருவாய்
தேவ சேனாபதி நின்கட் டளையால்
தேவ சேனாபதி கவசம் உரைத்தேன்!
முன்னாள் தவத்தால் முருக தாசன்யான்
இன்னாள் இதனை ஏற்றுடன் நீயும்
படித்தவர் கேட்டவர் பார்த்தவர் எவர்க்கும்
துடித்துவர் இடையிதழ்க் குறமக ளுடனே
வானவர் கோன்மகள் வாரணக் குஞ்சரி
தானுடன் இருந்திடத் தருவாய் பலவரம்
இந்நூல் தன்னை இருமுறை தினமும்
பன்னாள் படித்துப் பாரா யணம்செயும்
அடியவர் துயரை அழித்திடு வேலால்
கொடிய பிணிகளைக் குலைத்திடு காலால்
வறுமை ஒழித்து வளங்கள் செழித்துப்
பெருமைகள் மிகவே பெற்றிட அருள்வாய்!
பிறந்தும் இறந்தும் பேரிடர்ப் பட்டும்
துறந்தும் ஒழியாத் துன்பப் பிறவியை
மாற்றி யமைத்தே மாண்புடன் மோட்சப்
பேற்றினை யருளிப் பிறவி தவிர்ப்பாய்!
எடுத்த பிறவியில் எல்லா நாளிலும்
படித்துன் பதம்பெறச் செய்வாய் ஐயா!
கந்தா போற்றி! கடம்பா போற்றி!
எந்தாய் போற்றி! இறைவா போற்றி!
திருப்பரங் குன்றின் தேவா போற்றி!
செருப்பகைச் செந்தூர் வேலா போற்றி!
பழனிப் பதியில் பாங்குடன் நிற்கும்
குழந்தை முருகா குமரா போற்றி!
ஏரகந் தன்னில் இசைவுடன் மந்திரச்
சீரகம் உரைத்த செல்வா போற்றி!
குன்றுதோ றாடிடும் குமரா போற்றி!
என்றும் மயில்மேல் இறைவா போற்றி
அழகர் மலையில் அழகுடன் விளங்கும்
பழமுதிர் சோலைப் பரமா போற்றி!
பாவம் போக்கிடும் பாவகி சரணம்!
தேவ யானையின் திருவடி சரணம்!
குறமகள் மலரடி கூறினேன் சரணம்!
மறைகள் போற்றும் மணியே சரணம்!
கந்தா சரணம்! கடம்பா சரணம்!
எந்தாய் சரணம்! இறைவா சரணம்!
ஆடும் மயிலோய் அடியவன் சரணம்!
வீடும் அருள்வாய் வித்தக சரணம்!
✓
சரணம் சரணம் சங்கரன் மைந்தா!
சரணம் சரணம் சண்முக வேலா!
சரணம் சரணம் சத்துரு சங்காரா!
சரணம் சரணம் சர்வமும் சரணம்!