சுப்பிரமணியர் அகவல்
க. சரவணமுத்து
சுப்பிரமணியர் அகவல் · க. சரவணமுத்து
பாடல்கள்
✓
சீர்தரு ஞானச் செழுஞ்சுட ருருவே
கார்நிற மேனிக் கணபதிக் கிளையவா
பொன்னங் கிரியுடைப் பூங்கொடி யுமையவ
ளன்புடன் பயந்த வருமைக் கண்மணி
நஞ்சணி கண்டர் நட்புட னெமக்குத்
தஞ்சமென் றளித்த சற்குரு நாதா
மாயவன் தனக்கு மருக னாகியே
ஆயபல் லுயிருங் காத்திடு மமலா
அன்றுநஞ் சிவனார்க் கன்புடன் குருவாய்
நின்று பிரணவப் பொருளுரைத் தவனே
✓
அருணகிரி நாத ரன்பாய் வேண்டவே
கருணைகொண் டவரைக் காத்திரட் சித்தவா
நற்பொருள் விளக்க ஞானதே சிகனாய்
வெற்புறு முனியால் விரும்பி நின்றவனே
அறுமீன் மகிழ வாறுருக் கொண்டே
சரவண வாவியிற் றங்கிய குழந்தாய்
மும்மல மாய வசுரரை வதைத்த
செம்மலர்ப் பாதச் சிறியபா லகனே
குடிலையின் பொருள்சொலாப் பிரமனைக் குட்டிக்
கொடியவெஞ் சிறைதனி லமர்த்திய குமரனே
✓
அன்புறு மணியே யரியபே ரமுதே
இன்பம் விளைக்கு மினிய தோற்றமே
உறுதுயர் நீக்கு முலகநா யகனே
அறுமுகங் கொண்டர யையனே யவற்றுள்
உலகத் திருளைக் கெடுத்த தொருமுகம்
உலகத் தவர்க்கருள் கொடுத்த தொருமுகம்
மறையவர் வேள்வியைக் காத்த தொருமுகம்
மறைபொருள் திசைதொறும் விளக்கிய தொருமுகம்
பகைவரா மசுரரை வதைத்த தொருமுகம்
மகிமைசேர் வள்ளியை வேட்ட தொருமுகம்
✓
இவ்வண மாகிய முகங்கட் கிசையவே
செவ்விய கரமும் பன்னிரண் டாயின
இடமகல் பூமியி லென்று மிளைஞனாய்
நடைபயில் கொள்வதும் நட்பாய்ப் புவிகளை
யொருநொடிப் பொழுதி லோடியே வலமாய்
வருவதும் வள்ளிவாழ் தினைப்புன மீதிலே
திரிவதும் முனிவர்க் குரிமைய தாகிய
வாரிய தபோபல மாகி யிருப்பதும்
மறைமுத னடுவொடு கடையிலு மேவியே
யறைதர நின்றது மன்றி யெனக்கயன்
✓
விதியினால் விளைந்த வெலற்குரு மெழுத்தையோர்
மதியினா லழிக்க வல்லது மாகிய
மலரடி கொண்டனை மன்னவுன் வேலாற்
பலவிடை யூறுக ணீக்கினை பக்தியாய்
வழிபடு வோற்குறும் வன்பிணி முழுதா
யழியவுஞ் செய்தா யன்றுநக் கீரருக்
குறுதுயர் போக்கினை யுலகுள திசைக
டோறுமுன் கைவே றோன்றிப் பெருஞ்சீர்
படைத்து முன்னாட் பகைவனாஞ் சூரனை
யடக்கியே விட்டதென் னறியாமை நோய்துயர்
✓
துடைக்கவுன் வேலினை யனுப்புதற் குன்றிருக்
கடைவிழிப் பார்வையாற் கருத்தது கொள்ளென
நின்றுநின் றிரந்து நித்தமுந் தொழுதே
னின்றே யென்னைநீ யடிமை கொள்ளையா
தொண்டைமா னாற்றிற் சோதியாய் விளங்கியே
கண்டவர் மனதினைக் கவர்ந்திடும் வேலாய்
கந்த வனந்தனிற் கருணைகொண் டெழுந்தே
வந்தனை செயவருள் வானவர் முதலே
நல்லைமா நகரில் நமக்கருள் குருவாய்
அல்லல்க ணீக்கு மருட்பிர காசா
✓
அணுவணு தோறு மந்தரி யாமியா
யிணுவையி லுறைதரு மெம்மிறை யீஸ்வரா
மாவையில் முன்னாள் மாருதப் புரவியைத்
தாவிய வருத்தந் தணித்த பிரானே
மயிலினி லிவர்ந்தே மனமகிழ் வோடும்
மயிலையி லுறைதரு மாணிக்க மணியே
பரங்கிரி யுறையும் பால குமரனே
திருச்செந் தூர்வாழ் தேவ தேவே
ஆவினன் குடியுறை யன்புடை யமலா
பாவலர் போற்றிசெய் பழனிப் பதியாய்
✓
என்று மருள்செய்யுஞ் சுவாமி மலையாய்
குன்றுதொ றாடலை நன்றென மகிழ்ந்தாய்
பழமுதிர் சோலை யறுமுக வீசா
அழகுறு கதிர்கா மத்துறை நாதா
எட்டி குடிவா ழெண்கண் வேலோய்
கட்டுறு சமரா புரியமர் கடவுளே
யன்ப ருளத்தே யாநந்தத் தாண்டவ
மின்புற நடமிடு மெம்பிறை வள்ளலே
ஆவின் பாலத னுடம்பெலாஞ் செறிந்து
மேவி முலையா லதுவரும் பான்மைபோ
✓
லெமையா ளன்பனே யெங்குநீ இருந்து
எமக்கருள் செய்திடக் கோவில்கள் கொண்டனை
நாட்டினிற் பழகிய நற்குஞ் சரமதைக்
காட்டியே காட்டுக் குஞ்சரம் பிடித்தல்போல்
மானுட வடிவாய் மானிடர்க் கருள்செய
ஞானதே சிகனே நினைத்திங் கேகினை
எத்தனை யோபல வன்பரைக் காத்திட
எத்தனை யோஉருக் கொண்டனை யதனால்
ஊர்க ளனந்தம் பெற்றனை யையா
உற்றா ரில்லா வொருவனா கியநின்
✓
நற்றா டொழுவார் நாதனே நின்னை
யன்னையே தந்தையே யாருயிர்த் துணைவனே
என்குரு மணியே யிறைவா யென்ன
எத்தனை யோபே ரினமுறை கொள்ளுவ
ரத்தனே யதனை யறிவைநீ யன்றே
அலகிலா ஞான வமுதபே ருணவே
பளபளென் றொளிதரு பாலசொ ரூபமே
கலையெலாங் கடந்த கருணையங் கடலே
விலையிலா மாணிக்க விளங்குநற் குவியலே
அற்புதானந்த வருள்மழை வெள்ளமே
✓
தற்பரன் தந்த சண்முக வடிவே
கண்ணினுள் விளங்குங் களங்கமில் கண்மணி
விண்ணவர் தொழுவருள் வேதநா யகனே
கோடை காலத்துக் குளிர்தரு தருவே
வாடிய முகத்தினர்க் கருள்தரு நிதியே
அடியார்க் கெளியனா யருள்கொடுப் பவனே
மிடிமைக ணீக்குமோர் மெய்த்தவ முதலே
எண்ணிலாக் காலமா யான்படுந் துயரங்
கண்ணினாற் கண்டுமேன் கடாட்சம் வைத்திலை
பட்டது போதுமுன் பதமினித் துணையென்
✓
றிட்டமாய்ப் போற்றினே னிரங்குவை யையா
இந்தியா இலங்கையி லெழுந்தருள் செய்யுங்
கந்தவே டலங்களைக் கண்டு தரிசனஞ்
செயவிரும் பினனாற் சிறியே னெண்ணஞ்
செயம்பெறச் செய்வாய் திருவுங் கல்வியுஞ்
சீர்பெறு மக்களுஞ் சிறந்தநற் சுகமு
மாண்பு மடக்கமு மறிவும் பொறுமையு
மின்புறு பக்தியு மெனக்களித் திடுவாய்
கல்லா மூட நாயே னின்னைப்
புல்லறி வாற்சில போற்றிசைத் தனனரு
ளெல்லா முன்னரு ளென்றே யிருக்க
நல்லா யுன்னருள் நாட்டந் தருவையே.