முருகன் App
திருப்போரூர் அலங்காரம்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
நூல்2 / 2
திருப்போரூர் அலங்காரம் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

நூல்

2✓
பூமேவு நாபனும் நான்முகத் தோனும் புரந்தரனுந்
தாமேவு வாழ்வும் அதிகார மும்பெறத் தார்புனைந்த
கோமேவு வேல்கொண் டவுணரை மாய்த்த குமரனெங்கோன்
தூமேவு தாள்மலர் போரூரி லென்முடி சூடினனே.
3✓
தெய்வப் பிடிவந்து சேருந் துகிர்க்கிரி செந்தளிர்போல்
மெய்வைத்த வள்ளிக் கொடிபடர் தாரு வியனுலகிற்
சைவப் பயிரை வளர்க்குந்தண் மேகந் தகைமைசெறி
நெய்வைத்த வேல்கொண்டு போரூரி லென்றும் நிகழ்தெய்வமே.
4✓
கருதார் புரங்கொன்ற சேவக னார்க்குங் களிப்புறவே
ஒருதா ரகப்பொரு ளோதிய வாவுன தன்பரைப்போல்
தருதா ரணிசொலும் நாயேனும் அன்புளந் தானுளனோ
விருதாசெஞ் சேவற் சமரா புரிவரு வேலவனே.
5✓
சிற்றறி வொன்று நினைப்போடு நித்திரை சேர்ந்தியங்கு
மற்றிவை நீங்கி லதுதா னெவைகளு மாகிநின்ற
அற்றமில் பேரறி வூடே கலந்திடு மாயவிதே
பற்றறு முத்தியென் றான்சம ராபுரிப் பண்ணவனே.
6✓
எல்லார்க்கு மேலவன் நீயென் றறிந்துனை யேத்தியன்பாய்ப்
பொல்லாக் கருமலந் தீர்ந்தான் பொதியப் புகழ்முனிவன்
சொல்லாற் புனைதொங்கல் நக்கீரன் சாத்தித் துனிகடந்தான்
நல்லார்க்கு நல்லவ னேசம ராபுரி நாயகனே.
7✓
தோட்குங்குமநக்குங் கோக்குழை மாதர்க்குந் தொல்லைமத
வேட்கும் உளங்குலைந் தேனைவி டேல்விண்டு மாமலர்க்கை
வாட்குங் கொடிய மருப்பார் மகிடன் வளைப்பிலுறா
தாட்கொண் டருளுகண் டாய்போரி வாழும் மயிலவனே.
8✓
அண்டஞ் சராசரம் எண்திசை யாவும் அளித்தவளுங்
கண்டங் கரிய சிவனுந் தமஅங்க ரங்களின்மேல்
மண்டன்பின் ஏந்தி முறைமுறை தந்து மகிழ்மதலாய்
தொண்டன் பெனக்கு முளதோதென் போரிச் சுராதிபனே.
9✓
கொங்கணர் ஆரியர் ஒட்டியர் கோசலர் குச்சரராஞ்
சிங்களர் சோனகர் வங்காளர் ஈழர் தெலுங்கர்கொங்கர்
அங்கர் கலிங்கர்கன் னாடர் துருக்க ரனைவருமே
தங்கள்தங் கட்கிறை நீயென்பர் போரிச் சரவணனே.
10✓
மான்சூட் டிறைச்சிசெந் தேன்தோய்த் தருந்தும் வனசரர்மான்
கூன்கோட் டிளம்பிறை நெற்றிக்கும் வேலிணைக் கூர்விழிக்குங்
கான்கூட்ட மாமலர்க் கூந்தற்குங் கொங்கைக்குங் காதல்கொண்டோன்
தேன்கூட்டம் வாழ்பொழிற் போரூர னென்குரு தேசிகனே.
11✓
கோக்குஞ் சரமத நாற்றந் தவிர்த்துக் குலநரந்தந்
தேக்கும் புழுகு மணம்வீசும் போரியெந் தேவன்செவ்வேள்
நோக்கும் விழியருள் போக்கும் பிணியினை நூபுரத்தாள்
காக்கும் பவம்புக வொட்டா தெமக்கென் கவலைநெஞ்சே.
12✓
ஆயன் குழலிசை கேட்கும் பணாமுடி யாடரவம்
வாயையங் காந்து மணிகா லுதல்வள்ளல் பாடல்கொண்டு
தூய கொடைகொடுத் தாங்குறும் போரிச் சுராதிபனை
நாயக னைக்கும ரேசனை நாடுவர் ஞானிகளே.
13✓
இடமுறச் சூழும் முழைதோறும் நாகம் எரிபுரையும்
படமணிச் சென்னி யெடுத்தாள்தன் மங்கலப் பந்தரிலே
சுடர்மணித் தண்டினைச் சூழ விளக்கிட்ட சோதியொக்குந்
தடவரைப் போரிச் சரவண நாயகன் தஞ்செனக்கே.
14✓
பிடிபார்த் தலற எயினச் சிறார்கள் பிரிந்தகன்றைக்
கொடியாற் பிணித்ததன் மேலேறி யாடுங் குளிர்பொழில்சூழ்
அடிவாரப் போரிப் பதிவே லவனைவந் தண்டினனென்
குடியார்க்கு நல்ல கதிவாய்த்த தென்றுளங் கொண்டனனே.
15✓
தோகை நடித்திட வேடச் சிறாமுழைத் தோற்பறையை
நாகம் பறித்துலர் வாகைநெற் றாற்கொட்ட நாடியளி
ஓகை தரும்பண் ணிசைபாடுஞ் சந்தன வொண்பொழில்சூழ்
மாகர் தொழுந்திருப் போரூரன் தாளென் மதிவிழியே.
16✓
மேகங்கள் சூற்கொண்டு சாரற் படிந்து மிகக்குமுற
நாகங்கள் கோடிநப் பாயத் தெறித்த நகைத்தரள
மோகந் தருங்குற மின்னார்கள் மேலுற மொய்த்தெதிர்பார்த்
தாகந் தடவிய போரூர்க் குகனென் னருட்டந்தையே.
17✓
வரைமுத் தொளிரும் பளிக்கரா டரங்கின் மயில்நடித்தல்
புரையில் சரிமண் டலத்தாடல் மாதர் புரிவதொக்கும்
விரவுற்ற சாரலம் போரூர் விசாகன் விரைமலர்த்தாள்
உரையற் றுணர்வற் றுயரின்ப மாகிய வுள்ளொளியே.
18✓
பளிக்கறை யூடு தருக்குழைப் பாயலிற் பள்ளிகொண்டே
களிக்குறு மாகந் தருவார்தங் கீதமுங் காரையினால்
விளக்குறு மேனிலத் தோகையர் கீதமும் வேறறவே
கிளக்க லுறுந்திருப் போரூரன் அன்பர்தங் கேண்மையனே.
19✓
கருநாகத் தொண்டைக் கயமுனிக் கூட்டங்கள் கல்லுச்சில்லுப்
பொருநாசிக் கேழ லுடனாடுஞ் சாரலம் போரிச்செவ்வேள்
இருபாத தாமரை யேத்தி வணங்கியெந் நாளுநினைந்
தொருவா திருந்திலை நெஞ்சேயென் வீணி லுழன்றனையே.
20✓
அகிலேந்து நல்ல முகிலேய்ந்த கூந்தல் அரிவையர்தம்
நகிலேந்தும் ஆர வடம்போல் அருவி நகந்திகழும்
முகிலேந்தும் மாடநம் போரூர்க் குகன்பத முண்டகத்தைத்
தகிலேந்து நெஞ்சினர் மேல்மத வேளெய்யத் தானஞ்சுமே.
21✓
மதுவார்த் திடுகடம் போலே மயக்குறு மாதரையோர்
கொதுகாக் கருதுறுங் காலமுண் டோகொடி யேன்றனக்கே
விதுவாற் சலந்தருங் கற்களை யூடு விளங்குபிடி
சதுராக் குடைந்து விளையாடும் போரிச் சரவணனே.
22✓
அள்ளித் தெளித்தன்ன கள்ளிவெந் நீழ லணுகுழைதான்
நள்ளிப் புனலெனப் பேய்த்தேரை நாடி நலிவதுபோல்
உள்ளிப்பொய் வாழ்வினை யூர்தொறுஞ் சென்றுழ லாதெனையாள்
வெள்ளைப் பொருப்பினன் மைந்தாதென் போரியில் வேலவனே.
23✓
முடைமாற முல்லை குழல்சூடும் ஆய்ச்சியர் மூதளைதான்
கடைதோறும் ஆரத்தின் மார்பில் தெறித்திடக் கன்றுதுள்ளும்
புடையாய் உழுவை குமுறுமென் றிந்நிலப் போரியெங்கோன்
படைவேல் துணையுண் டெமக்கொரு நாளும் பயமில்லையே.
24✓
பூவையுங் கோவும் அசுணமும் நாகமும் பூம்பொறிக்கான்
சேவலுஞ் சித்திரம் போற்கேட் டுறங்கச் சிறார்ப்பொதுவர்
தூவருந் தீங்குழ லோசை வளர்க்கின்ற தொல்லைமுல்லைத்
தேவருந் தேடும் பொருள்போரி வேலன் திருவடியே.
25✓
கட்டான் நிரம்பி யகவிதழ் கீண்டெழு கஞ்சமுடன்
முட்டா டுவைத்திட மேதி தெறித்தொளிர் முத்தையன்னப்
புட்டான் சினையென்ற ணைக்கின்ற போரிப் புனிதச்செவ்வேள்
மட்டாருஞ் சேவடி தொட்டா லெமக்குநல் வாழ்வுளமே.
26✓
மடுப்ப மயக்கிடை கொண்டேகு நெஞ்சினை மாற்றியென்னை
எடுப்ப துனக்குக் கடனைய னேயெழில் கூர்பழனத்
துடுப்பு முகக்கொழுச் செல்கின்ற சீதையி லூறியநீர்
கடுப்ப வனசப் பிழியூறும் போரியன் காங்கெயனே.
27✓
பச்சைக் குடைதிருப் புந்தகைப் பாசடை யூடுருவ
மெச்சக் கடைசியர் சேல்பாயும் போரி விசாகனெங்கோன்
கொச்சைச் சிறியனை யிந்நாளும் பண்ணிய கோகனகத்
தச்சற் கினியெனைப் பண்ணக் கொடானிது சத்தியமே.
28✓
விருந்துண்டு பின்னைக் குபசாரஞ் செய்யும் விதத்தின்நத்துப்
பொருந்துஞ் சரோருகத் தேனுண்டு முத்தமிழ் போரியிலோர்
மருந்துண்ட தன்பெயர் செவ்வே ளஃதென் மலப்பிணியுந்
திருந்து முடற்பிணி தன்னையும் போக்கிடுஞ் சித்தமிதே.
29✓
தண்டா மரையில் அனப்பே டுறவது தன்னருகே
வெண்டா மரையிரண் டாலுதல் வாணிக்கு வெண்கவரி
கொண்டார வீசுதல் போலுறும் போரிக் குகனிருதாள்
கண்டாலும் இன்பக் கடல்வந்து கோக்குங் கருத்தினையே.
30✓
வண்டுகிண் டக்கஞ்சம் விண்டுதண் தேன்சிந்த வால்வளைகள்
கண்டயின் றின்புறும் போரூர் முருகன் கழலிணைக்கே
கொண்டுவந் தின்புறு வோர்பாத தாமரைத் தூளென்சென்னி
கொண்டுவந் தேன்மலம் விண்டேன் பரகதி கூடினனே.
31✓
கன்னிய ராடிக் கழித்தகத் தூரி கயல்மணக்கும்
மன்னிய வாவி திகழ்சம ராபுரி மாமயிலோன்
பொன்னியல் கிண்கிணித் தாளையுந் தோளையும் போற்றுவையேல்
உன்னிய யாவு முறுநெஞ்ச மேயுண்மை யுண்மையிதே.
32✓
வள்ளைக் கொடிச்செவி சைவல்க் கூந்தல் வனசமுகந்
தெள்ளுற்ற நீலக்கண் ணாம்பற்செவ் வாய்திக ழுந்திகிரிப்
புள்ளுக் குயமன்னப் பேட்டு நடையுடைப் பொய்கைமங்கை
நள்ளத் திகழ்கின்ற போரூர் விசாகனை நாடுள்ளமே.
33✓
கருப்புத் திரளை யறுத்துச் செறித்த கனைசகட
மருப்புப் பகட்டைக் கழையால் உழவர்கள் மாறுதொறும்
விருப்புற்ற முத்துத் தெறித்தொளிர் சாளர வீடுபுகுந்
திருப்பொற்ற போரிக் குகன்தா ளறிஞர்க்குத் தித்திக்குமே.
34✓
கரண்டம் அடிக்கடி நீர்மூழ்கி யாங்குக் கயலெடுத்தே
மருண்டமென் னோக்கியர் முன்காட்டல் நுங்கண் மலர்விழிக்கு
வெருண்ட கயலன் றிதுபார்மி னென்று விளம்பலொக்குந்
தெருண்டவர் சூழ்திருப் போரூரின் தேவர் சிரோமணியே.
35✓
காளைச் சலப்பெயர் நாயின மூழ்கக் கயமடுவில்
ஆளைப் பகட்டுறும் வாளைப் பகட்டினம் அம்பினிற்போய்ப்
பாளைக் கமுகின் மிடற்றப் பாய்ந்துநெற் பண்ணைபுகுங்
கேளொத்த போரிக் குகனன்ப ரேயென் கிளைஞர்களே.
36✓
கருக்கடல் நாயடி யேன்புகு தாவகை காத்துமுத்திப்
பெருக்குறு மின்பத் திருத்துகண் டாய்பெரு நீர்க்கரையின்
வருக்கை வெடித்தெழு செஞ்சாற்றுச் சேற்றில் வழுக்கிநத்துக்
குருக்கொளுங் முத்தமிழ் போரூர்ச் சடானனக் கோக்கொண்டலே.
37✓
வீட்டின்ப நாடி யிருப்போர் தமக்கும் விடயசுக
நாட்டங்கொண் டாங்கவர் போலிருப் போர்க்கும் நலனுறவே
காட்டும் உவமைய தாக்கொக்கு நீர்மடைக் கண்ணிலகுந்
தீட்டும் புகழ்கொண்ட போரூரன் வேல்சுரர் தேவதையே.
38✓
வாவிக் கரைக்கமு கேய்கொக்கு நீழல் வயங்குதெண்ணீர்த்
தாவிக் கயலதைக் கண்டே வெருவுதல் தன்கனவின்
மேவுற்ற காட்சி நனவிற்கண் டானின் விளங்கலுறும்
பூவிற் றிருத்திகழ் போரூர்க் குகன்பதம் போற்றுள்ளமே.
39✓
பச்சை நிறத்த நிறைநீர்க் குடங்கள் பலசுமந்தே
உச்சியி லுற்ற கதிரோனுக் கீயு முயாந்துளதெங்
கெச்ச மறச்செறி போரூர்ச்செவ் வேளை யிறைஞ்சிநினைப்
பிச்சநெஞ் சேயடு கின்றனன் பாரென்பிர தாபத்தையே.
40✓
சாறூற் றெழுந்து கணுவுடைத் தோடுந் தழைக்கரும்பை
வீறேற்று வாழைக் குலையொடு மாசினி வீழ்ந்தொடித்துச்
சேறாக் கியவயற் போரூர் முருகன்நந் தீதகற்றிப்
பேறாக் கருணைசெய் தேநெஞ்ச மேதரும் பேரின்பமே.
41✓
பவளக் கொடியிற் பிணித்துரசல் புன்னையிற் பார்வைமயற்
குவளைக்கண் கற்கு மடமாத ராடவக் கோடரும்பைத்
தவளத் தரள மழைபோ லவர்மெய் தனிற்சொரியுந்
திவளுற்ற போரிக் குமரேசன் என்குக தேவதையே.
42✓
வல்லைத் துரந்த முலைநுளை மாதர் வளையெறியப்
பல்லைத் திறந்துறு மிக்கவி தாலப் பழமிகுக்கு
தொல்லைத் திருத்திகழ் போரூர்க் குகன்பதஞ் சூடும்சென்னிக்
கில்லைப் பிரமன் துயருறக் கீறும் எழுத்துக்களே.
43✓
வாடைக் கொதுங்கிடப் பார்ப்புகள் வெள்ளை வனசங்கள்மேல்
தேடிப் பெடையனந் தன்பா லணைத்துறந் தீதில்நெய்தல்
நீடத் திகழ்கின்ற போரூர் விசாகன் நிமலபதம்
நாடிக் களிப்பவர்க் குண்டோ துயரெனும் நாமங்களே.
44✓
செக்கர்க் கிடையின் உடுக்கூட்ட மென்னத் திரைகளினால்
தொக்கப் படுந்துகிர் வண்டலின் மீது சுரிமுகங்கள்
கக்கப் படுமுத் தொளிருந்தென் போரியிற் காங்கெயனைப்
பக்கத் துடன்பணி வாரவ ரேகுக பாரணரே.
45✓
வண்டணை யாக்கொண்டு கண்தூங்கும் பூங்குழல் மாதரையே
கண்டனை யாயினுங் காலமுண் டோகடை யேன்றனக்கே
ஞெண்டினங் கேதகைத் தாதரித் துண்டறல் நீடுபொய்கைத்
தண்டுறை ஞெண்டுடன் ஆடிடும் போரிச் சரவணனே.
46✓
சந்திர காந்த மணிமாடத் தூடுதன் சாயைகண்டோர்
பைந்தொடி மாது தலைவனொ டூடப் பரிந்தவனே
சுந்தர ஆடி நிழற்காட்டி யின்புறு சொற்புகலுஞ்
செந்திருப் போரிக் குகனைக்கண் டார்க்குண்டு சித்திகளே.
47✓
ஏதங் கருதினர் செல்மினென் றேயும் இதங்கருதும்
போதஞ் சிறந்தவர் வம்மினென் றேயும் புகல்வனபோல்
வாதஞ் செறியக் கொடியாடும் போரி வரதன்தண்டை
நாதங்கள் யோகியர் யோகினிற் காண்குறு நாதங்களே.
48✓
தேரூர் இரவி வலவன்கை மீது செழுங்கொடிகள்
ஏராகத் தாக்குத லெங்கோன் அயிலொளிக் கெய்துமுன்கோல்
நேரோசொல் நில்லென்று போரூர்க்கைக் கொண்டு நிறுத்தலொக்குஞ்
சீரூரும் இந்நக ரேகயி லாயந் தெளிந்தவர்க்கே.
49✓
மனப்பரி சோர இறுமாந்து நாவி மதம்பொழியுந்
தனக்களிற் றன்ன முருகா குகாஎன்று தானுரைப்பப்
புனக்கிளி கற்கின்ற போரூர் இறையைப் புகழ்ந்தவரைச்
சினக்கனல் காமக் கனலும்விட் டோடுந் திசைப்புறனே.
50✓
மதிகொண்ட பூச்சக்ர வாளக் குடையின் வருநிழற்கீழ்த்
துதிகொண்ட யானைப் பிடர்மேல் வருமச் சுகந்தனிலும்
நதிகொண்ட பேரன்பி னாற்போரி வேலனை நண்ணியின்பக்
கதிகொண்ட மேலவர் கால்தலை தாங்கல் கனசுகமே.
51✓
அளகா புரியன்ன பட்டணத் தேசுதை யால்வனைந்த
களவார் முகில்படி மாடத்தி னூடு களித்தலினும்
உளகா டவியெழ மெய்ப்போரி வேலனை போற்றியுய்வார்
வளவார் புறந்திண்ணை வைகுத லேதமில் மாசுகமே.
52✓
உள்ளக் கவலை யெலாமொழிந் தேன்ஒழி யாதுசெய்யுங்
கள்ளக் கருமங்கள் யாவும்விண் டேன்மலை வாணியுடன்
வள்ளக் கமல மலர்மாது தந்தருள் வாழ்வடைந்தேன்
தெள்ளத் தெளிந்தனன் போரூர் முருகனைச் சேவைசெய்தே.
53✓
பூதர விற்கொண் டவுணரை மாய்த்த புராரிமைந்தன்
ஆதர வாலணிப் போரூ ரிருந்திங் கவனருளாற்
சீதரன் நன்மரு காமுரு காஎன்று செப்பினன்பின்
தாதரம் போலுறுந் தீவினை யாவுந் தணந்தனவே.
54✓
வட்டாடல் போலப் பிறப்பதுஞ் சாவது மாக்கியென்றும்
ஒட்டாரஞ் செய்கின்ற மாயை யுணர்ந்தும் உணரவொட்டா
தட்டாவ தானஞ்செ யுஞ்சீவ ரைப்பொய்மை யாயிருத்துங்
கட்டாணி யானமுத் தேசம ராபுரிக் காங்கெயனே
55✓
ஆள்வேட்டம் ஆடும் அயில்விழி மாதர் அமைகடந்த
தாள்வேட்ட புன்னெஞ்ச மேயது சீவரைச் சூழ்ந்துகொண்டே
வேள்வேட்டம் ஆடுவ தாங்கேகல் போரி விசாகன்இரு
தாள்வேட்டு நாடுதி மேல்வீட்டின் இன்பந் தழைத்துறுமே.
56✓
ஆறு சமயருந் தம்மிலொவ் வாதிங் கலைவதென்னே
தேறும் அறிவின ரெல்லாம் அறிந்துந் தெளிந்திலரே
பேறு தருந்தெய்வம் யாவைக்கும் யான்பெருந் தேவனென்றே
வீறு முகங்கொண்டு போரூர் முருகன் விளங்கியதே.
57✓
மற்றவர் நிற்கமெய்ஞ் ஞானிகள் வம்மின் வகுத்துரைக்கேன்
உற்றது கேண்மினெம் போரூர் முருகன் உயர்கதியை
நற்றமிழ்க் காழிவந் தெண்ணிலி யோர்க்கு நயந்தளித்தான்
கொற்றம் அவனதல் லாலெவர்க் குண்டிணிக் கூறுமினே.
58✓
கரும்பாற்செய் வேலி சுரும்பார்க்கும் போரியங் காங்கெயன்போல்
திரும்பாச் சுகந்தரு வீடவ தற்குஞ் சிறப்புடனே
பெரும்பாற் றிருத்தரு பெற்றிக்குந் தேவர் பிறரிலையென்
றிரும்பாற் கடற்றுயின் றோன்நெய்யி னூடுகை யிட்டனனே.
59✓
வேதனெங் கேயவன் தாதையெங் கேவிண்ணின் நண்ணுபுரு
கூதனெங் கேமிகு தேவரெங் கேகுறை யாததவப்
போதரெங் கேயற மாதியெங் கேதிருப் போரியில்வாழ்
நாதனெங் கோனவ ரைப்போலச் சூரையும் நாடிடிலே.
60✓
திருநீல கண்டம்வெந் தீவினை தீண்டப் பெறாஎனவே
கருநீல கண்டனைப் பாடி யடியரைக் காத்தவன்எம்
உருமே லிருந்த பிணியையும் மாற்றுவன் உண்மைநெஞ்சே
இருநீல வாவிநம் போரூ ரனைப்பணிந் தேத்துவையே.
61✓
அஞ்ஞானத் தாலடி யேன்பிழை செய்யினு மாரருள்சேர்
மெய்ஞ்ஞானத் தாய்பொறுத் தாட்கொள்ள வேண்டும் வியன்மறைதேர்
செஞ்ஞானத் தார்புகழ் போரூர் முருக செகமுயிராம்
பொய்ஞ்ஞானக் கூட்டத்துக் குட்புற னாகிய பூரணனே.
62✓
புரங்கொன்ற தேவெள்ளி மாமலை நீலப் புயமலைமேல்
உரங்கொண் டெடுத்தவன் ஈரரைந்து சென்னியும் ஊடுறவே
கரங்கொண்ட வாளியி னாலெய்த மாயன் கனமருகா
திரங்கொண்ட போரி முருகாஎன் தீவினை தீர்த்தருளே.
63✓
நெஞ்சைக் கலக்குறுஞ் சேலோ ரிரண்டை நேரிழையார்
வஞ்சக் கலவிமெய் யென்றே மயங்கினை வன்னெஞ்சமே
துஞ்சற்கும் வந்து பிறத்தற்கும் ஏதது சொற்கதிசேர்த்
துஞ்சற்கு நீதிருப் போரூர்க் குகனை யுறப்பணியே.
64✓
கொலையாதி செய்தவ ராயினும் அன்பு குணம்பொறுமை
இலையாம் உளத்தின ராயினும் போரி யிசைந்தகுண
மலையோ லிருந்த வடிவே லனைவந்து வாழ்த்தினரேல்
தொலையாமெய்ஞ் ஞான மடவார்முன் மேவுந் துயரிலரே.
65✓
இமையாக் கருங்கண் முலையானை மாதரை யெண்ணியெண்ணிச்
சுமையாகப் பாவஞ் சுமக்குநெஞ் சேயிது துன்புகண்டாய்
சமையாதி யாறும் உடையோர்க்கு வீடு தரும்பெருமான்
நமையாட்கொள் போரிக் குமரேசன் சேவடி நாடின்பமே.
66✓
சடையாம் பவளக் கொடிபடர் பேரின்ப சாகரத்தே
கடையா தெழுந்த சுகவா ரமுதினைக் கஞ்சம்ஒன்று
புடைதோன்றும் உந்திப் புணரி மருகனைப் புண்ணியனை
மிடைதீரப் போரியிற் கண்டேன் கதியின்ப மேவினனே.
67✓
மேருப் பொருப்பினைச் சென்றே வியன்அண்ட கூடமுட்டுஞ்
சூரப் பொருப்பைத் தொளைத்தவை வேலவன் துங்கன்எங்கோன்
போரிப் பிரான்எம் பிழைபொறுத் தாலன்ன பூதலத்தே
யாரிப் படிபொறுப் பார்சொல்க நீயிங் கறிந்துள்ளமே.
68✓
அண்டப் பரப்பினைக் கண்டோர் நொடிவரும் ஆய்ந்தபச்சைக்
கொண்டற் சிறைப்பெரு மாமயி லோன்குகன் எங்கள்ஐயன்
தண்டைத் திருப்பதம் போரூரில் வானவர் தம்முடிமேல்
தொண்டுற்ற பேர்முடி மேல்மறை மேலென்றுந் தோன்றிடுமே.
69✓
தரைபகச் சீத்துத் திசையதி ரச்சிறை தான்புடைத்தே
எரிநிறச் சென்னி நிமிர்த்து வளைத்ததெண் புலிநகவாய்
விரைவுறத் தோன்றத் திறந்தூழி மேக மெனத்தொனிக்கும்
பொருகொடிச் சேவலன் போரூர னாரினும் புண்ணியனே.
70✓
நதிபிறை கொன்றை செறிசென்னி மூன்றுகண் நான்குபுயந்
துதியிரு தாள்நிகர் மாணிக்க வெற்பைத் தொடர்ந்துபடர்
கதிதரு பச்சைக் கொடிதோன்றும் இன்பக் கனிஅளகை
அதிவளம் மேவிய போரூரில் வந்தெமை யாட்கொண்டதே.
71✓
நன்மை நினைத்துன் திருவடி சேர நயக்குமென்னைப்
புன்மைநினைத் துளங்கொண்டேக நொந்தனன் பொய்மையினேன்
மும்மை யழிக்குறும் இன்பன்நம் போரி முருகப்பிரான்
செம்மை யளிக்கும் நினைவினி வேண்டுஞ் சிறியனுக்கே.
72✓
அவுணக் கருங்கடல் செங்கட லாக்கு மணிநெடுவேற்
சிவணுற்ற தோட்கிரிச் சேவகன் தன்னைச் செழுங்கொடிக்காற்
கவணுற்ற கைக்குற மானைத் திருடிய கள்வன்தன்னைக்
குவடுற்ற சாரலம் போரியி லேகண்டு கொண்டனனே.
73✓
கோலக் கருங்குயி லேமயி லேயென்று கொஞ்சுமலை
வாலைப் பருவமின் தந்தருள் ஆனந்த மாமுகிலைச்
சோலைப் புயல்மலர்த் தேன்பொழி போரிச் சுராதிபனை
மாலைக் கடந்த மனத்திற்கண் டார்க்குண்டு வாழ்வுகளே.
74✓
நீரிற் கயலெனக் கண்ணீர் துலங்கிநெஞ் சைக்கவற்று
நாரிச் சமனையும் நம்புவ ரோநல னேகொடுக்கும்
போரிப் பதியெங் குமரேசன் தாட்கன்பு பூண்டுநித்தஞ்
சீரிற் பெரிய கதிமேவி யின்பஞ் செறிபவரே.
75✓
சூரன் கிளைகளைந் தெண்ணிலி தேவர் துயர்களைந்து
வீரஞ் சிறந்த நவவீரர் முன்னவன் வேலையில்மேய்ந்
தாரம் புயல்துயில் போரூர் முருகன் அருளெனக்குச்
சீருங் குணமும் மருவுந் தவமும்நற் செல்வமுமே.
76✓
இருகோட் டொருமதி சூடும் பிரான்மகிழ்ந் தின்புறவே
திருகோட் டுபோதம் உரைசெய்த தேசிகன் செங்குழையாற்
குருகோட்டி மாதர் விளையாடும் போரிகைக் கூப்பினரைப்
பொருகோட் டெருமையன் கண்டாலும் அஞ்சிப் புறஞ்செல்லுமே.
77✓
ஆரணன் நாரணன் இன்னமுங் காண்டற் கரியபரி
பூரணந் தோன்றிய பூரண னேதிருப் போரியில்வாழ்
காரண னேயொரு நாள்நீ யளித்த கரையில்சுக
பாரணம் என்றருள் வாய்கடை யேற்கெம் பரம்பொருளே.
78✓
மெய்வேடம் பூண்டவர்க் குள்ளும் புறனும் விளங்கும்பிரான்
பொய்வேடம் பூண்டனன் என்றாலுங் காத்தனை பூங்கணையால்
எய்வேட னால்வருந் தாதெனை யாளினி யேய்ந்ததினை
கொய்வேட மானை மணந்தோய்தென் போரிக் குணக்கொண்டலே.
79✓
அருண கிரிப்பெயர் மெய்ஞ்ஞான நாதன்சொல் லால்வனைந்த
பொருநை நதிக்கிரி யான்புகழ் மாலை புனைபுயனே
கருணை மிகுத்தென்னை யாண்டாய்க்கும் ஈண்டுகைம் மாறுளதோ
தருண வளத்தின னேசம ராபுரிச் சண்முகனே.
80✓
மாலோன் விருந்தையை யுண்டாக்கிக் கொண்டிலன் மாமலரோன்
மேலான நன்சிரம் ஒன்றாக்கிக் கொண்டிலன் மீதுயர்ந்த
நாலா மறைபுகழ் போரூரன் சம்பந்த நாமங்கொண்டே
நூலாம் இடைமயி லாக்கினன் என்பை நொடியினிலே.
81✓
சகல மதங்களை யெல்லா முணர்ந்த தவமுனிவோர்
புகலும் இலக்கம்எண் ணாயிரம் பேரைப் பொருகழுவில்
இகலுற வைத்தும் வரும்ஏத மொன்றின்றி யேயிருந்தான்
திகழுறும் போரியன் சம்பந்த நாமஞ் சிறந்துகொண்டே.
82✓
எண்ணற் கரிய சமணக் களைகளைந் தேதமிலாத்
தண்ணுற்ற பேரருள் நீர்பாய்ச்சிச் சைவப் பயிர்வளர்த்து
நண்ணச் சிவானந்த போகம் விளைவிக்கும் நல்உழவன்
விண்ணுற்ற தேவருஞ் சூழ்போரி வாழ்கின்ற வேலவனே.
83✓
தாருகன் கோளரி மாமுகன் கொக்கின் தனதுபெயர்க்
காருறு மால்வரை சூதம்வெஞ் சூரகங் காய்ந்தவைவேல்
பேருறு வோர்தமைக் காலனுந் தீண்டப் பெறான்எனிலே
போரியென் நாயகன் தாட்கே சரணம் புகுநெஞ்சமே.
84✓
ஆருயிர் யாவைக்கும் ஆனந்தத் தேனை யளிக்குமுக்கண்
தாருவி னாற்கவி மாமழை யேபொழி தண்முகிலே
காரிருள் மாமலந் தீர்த்தெனை யாளக் கடனுனக்கே
சீறுரு தேசிக னேபோரி மாநகர்ச் சிற்பரனே.
85✓
வீரத் தவுண ருயிர்களை மேய்ந்து விரைவின்அவர்
சோரிக் கடலிடை யாடிக் குடர்த்தொங்கல் சூடிவெற்றிக்
கூருற்ற வேல்கரங் கொண்டோன்தென் போரிக் குமரன் என்மேல்
சீருற்ற பேரருள் வைத்தான் இஃதென் தெளிந்திலனே.
86✓
தேவரும் நாகரும் யாவரும் மும்முறை தெண்டனிட
மேவரும் மாமகு டத்தின் இராசிகள் மீதொளிருந்
தூவரு மாமணி ராசிகள் மேவித் தொடச்சிவந்த
பூவரு தாளினன் போரூர்க் குகனெனும் புங்கவனே.
87✓
கொக்கரித் தேவருந் தானவர் சேனயைக் கொன்றுழக்கி
மிக்கரத் தக்கட லாடிப் பிணமலை மீதிவர்ந்து
செக்கரில் தோன்றுங் கணநாதர் சேவிக்குஞ் சேவடியான்
இக்கரிச் குஞ்சரும் பார்க்கின்ற போரிக் கிறையவனே.
88✓
மணிகொண்ட சேடன் படர்முடி தூக்கி மணியுதறித்
திணிகொண்ட மால்வரை மாடே பறந்துறச் சேண்பறந்தங்
கணிகொண்ட தேவர் தொழச்சென்று மீண்டிங் ககவுமும்மைக்
குணில்கொண்ட பேரிகை யார்க்கின்ற போரிக் குகன்மயிலே.
89✓
வாரி சுழல வடவரை யாதி வரைசுழலக்
காரொடு சந்திர சூரியர் மீன்கறங் காச்சுழலக்
கூரிருள் யாக்கை அரக்கர் சுழன்றிடக் கோதில்பச்சைத்
தேரென வட்டம் வரும்போரி வேலன் சிறைமயிலே.
90✓
மின்னல் சுடர்விழு தோட்டு மணிக்குழை மெல்லியலார்
பொன்னுற்ற பூண்முலை வேட்டநெஞ் சேயிது பொய்ம்மயக்கே
தன்னைத் தலைவனை யாராய்ந் தடையுந் தகைமையின்புக்
கென்னப்ப னாகிய போரூர்ச்செவ் வேளை யிறைஞ்சுவையே.
91✓
முகடிடித் துச்சக்ர வாளத்தை முட்டிவெம் மூரியெட்டுப்
பகலுகுத் திக்கனல் சிந்திடப் பார்த்துப் பரவையெல்லாம்
அகமுறத் தேக்கி விடுத்துறத் தாவி யரைக்கணம்போய்க்
ககனமுற் றும்வரும் போரூரன் ஏறுங் கனதகரே.
92✓
மகுடங்க ளாறுங் குழையோர் பனிரண்டும் வானவரும்
புகழுங் கடகங்கள் ஈராறும் ஆழியும் பூதப்பொன்
திகழும தாணியுஞ் செந்துகிர் ஆடையுஞ் செஞ்சிலம்பும்
நிகழும் படிதரித் தோர்தெய்வம் போரி நிலாவியதே.
93✓
நின்பாத தாமரைக் கன்பேது மின்றிய நீசன்பொல்லேன்
புன்போத மேலிட்ட பொய்யேன் பிழையைப் பொறுத்தருளாய்
அம்போ ருகமலர் ஓரா றலர்ந்த அருட்கடலே
செம்போரி வேலவ னேயிமை யோர்கள் சிகாமணியே.
94✓
செப்புக் கவித்தன்ன வன்குரத் தால்மண் சிதைத்தெறியுந்
துப்புற்ற மாவிற் கிணையாக வோதினர் தொல்கணத்தே
ஒப்பற்ற மூவுல கும்போய்த் திரும்பு மொருமனத்தே
எப்பொற்றி யாலுரைத் தார்சம ராபுரி எண்குணனே.
95✓
மெய்யாம் நெறிக்கண் அடியேன் செலுத்த விலங்கிமிகு
பொய்யாம் நெறிக்கண் எனைக்கொடு போமுளப் போர்க்களிற்றை
ஐயா நினதரு ளாங்கயிற் றாற்பிணித் தானதண்டைச்
செய்யாருந் தாட்கந்து சேர்ப்பாய்தென் போரியஞ் சேவலனே.
96✓
உள்ளுறு புல்நினை வெல்லா மொழிந்திங் குணர்வரிய
நள்ளிரு ளன்னஅஞ் ஞானமுந் தீர்ந்து நலனுதவுந்
தெள்ளிய பேரரு ளூடே கலந்தின்பு சேர்ந்திருப்பக்
கள்ளநெஞ் சேற்கும் வருமோதென் போரியங் காங்கெயனே.
97✓
எல்லாப் பொருள்களுந் தானாகித் தானொன்றி லேய்வதின்றாய்ச்
சொல்லாற் கருத்தத னாற்சென்று கூடருஞ் சோதியதாம்
மல்லா ரணப்பொருள் நாயேற்கும் ஈய மதித்திகொல்லோ
நல்லார்க் கினிய குகனேதென் போரியென் னாயகனே.
98✓
எண்ணிய எண்ணிய வாறே சிறியனுக் கீந்தருளும்
புண்ணிய னேநின் மகிமையை யோர்ந்திலன் பொய்யவனேன்
கண்ணுறு மாமணி யேகருத் தூறுங் கனிரசமே
தண்ணளி மாமுகி லேபோரி மேவிய சண்முகனே.
99✓
உள்ளத் தழுக்கினை யெல்லா மகற்றி யுனதுபத
வள்ளக் கமலத் தெழுநற வானந்த வாரியிலே
கள்ளச் சிறியனை வைத்தாள வேண்டுங் கழனிமடை
அள்ளத் திறந்திடும் வாளைகள் போரி அயிலவனே.
100✓
மலஞ்சோர் கடத்தைப் பிணிக்கூட்டை ஒன்பது வாயிற்பையை
நலஞ்சால எண்ணிக் கடையேன் களித்தன னாய்ப்புலையேன்
திலஞ்சார் தயில மெனஎங்கு மானசி வானந்தத்தேன்
கலந்தே களிப்பதென் றோசம ராபுரிக் காங்கெயனே.
101✓
எண்ணிலி காலத்தின் பின்னரிக் காயம் இனிதளித்தாய்
நண்ணுறும் ஈதினும் மெய்ப்பத்தி யீந்திலை நாயடியேன்
பண்ணிய பாவமென் றேகும் பரகதி யென்றடைவேன்
விண்ணுறு தேவருஞ் சூழ்போரி வாழ்கின்ற வேலவனே.
102✓
திரவணி நீடிய போரூர்கை கூப்பிச் செழுங்கமலச்
சரவண வாவியில் நீராடித் தங்கச் சதுங்கை கொஞ்சுங்
குரவணி பாதம் பணிவோர்க் கினிமை கொடுக்கும்பிரான்
அரவணி வோன்கும ராவடி யேனுன் அடைக்கலமே.