முருகன் App
திருப்போரூர் முருகன் மாலை
சிதம்பர சுவாமிகள்
நூல்2 / 2
திருப்போரூர் முருகன் மாலை · சிதம்பர சுவாமிகள்

நூல்

1✓
பூவார்ந்த கற்பகப்பூம் பொங்கரிடத் திற்சிறந்த
தேவாய்ந்த செல்வமுதற் செல்வமெல்லாம்-தூவாய்ந்த
வேள்பணிந்த பேரழகா மேதகுபோ ரூராநின்
தாள்பணிந்தார்க் குண்டாகுந் தான்.
2✓
காழியிலே வந்து கணக்கிலாச் சீவரைநீ
டூழியின்பத் துய்த்த வொருவனே - யாழியெனுந்
துன்பத் திருந்தேனைத் தூக்கித்தென் போரூரா
இன்பத்துள் வைப்பாய் இனி.
3✓
இருட்டறையை நோக்குவிழிக் கேற்றுவிளக் கென்றூழ்
பொருட்டனையே காட்டும்அது போல - மருட்டனையும்
மாயையினாற் பேரருளால் மாற்றி யறிவளிக்குந்
தாயனையான் போரூரன் தான்.
4✓
நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
பேயேன் இழைத்த பெரும்பிழையை - நீயே
பொறுத்தாள்வ துன்கடனாம் போரூரா என்னை
ஒறுத்தா லெனக்கார் உறவு.
5✓
ஐம்பொறியாற் கண்டுபின்னர் அற்பித்தால் நாயடியேன்
எம்பெருமான் மிச்சிலுனக் கேறுமோ - வம்பனேன்
நீகாட்டக் காண்பதென நேயமுறப் போரூரா
நாய்காட்டி தற்புதமே யாம்.
6✓
விதிவழியே நின்றுன் மிளிர்கமலத் தாளை
மதிதழையும் அன்பால் வணங்கிக் - கதிதழையும்
அன்பரைப்போல் வேடம் அணிந்துநின்றேன் போரூரா
வன்பருக்குள் வன்பனேன் வந்து.
7✓
இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன் உயர்ந்ததிருப் போரூரா
என்றேநான் ஈடேறு வேன்.
8✓
இன்போ ரணுவாய் இடரதற்கு மாமலையாம்
புன்போகம் வேண்டிப் புலம்பாதே - என்போடே
உள்ள முருகவரும் ஒண்போரூர் ஐயன்அருள்
வெள்ளமுற நெஞ்சே விரும்பு.
9✓
மயக்கமெலா நீங்கியுன்றன் மாமலர்த்தாட் கீழே
இயக்கமறு வாரிதிபோ லென்றே - தியக்கமறு
பேரானந் தம்பெறுவேன் பேணுதிருப் போரூரா
சீராரும் தேவா தெளிந்து.
10✓
அளகையர்கோன் வாழ்வும் அனங்கன்போல் ஏரும்
அளகவட மீன்போல் அணங்கும் - உளமதனில்
உன்னாது கைவிட் டுனைப்பிடித்தார் போரூரா
என்ஆ தரவுகொண்டேன் யான்.
11✓
வள்ளிக் கொடிபடரும் மாகற் பகதாரு
தெள்ளிப் புகழ்தேவச் சிந்துரமே - உள்ளிக்
களித்துவிளை யாடுங் கனகமலை போரூர்
அளித்துவிளை யாடும் அரசு.
12✓
மெய்ப்பொருளாம் நின்னை விரும்பியின்ப மேவாது
பொய்ப்பொருளை நாடியிடர்ப் போந்தேனைச்-செப்பரிய
மட்டழகார் சோலை மலிந்ததிருப் போரூரில்
கட்டழகா காத்தாள் கடன்.
13✓
வள்ளையார் ஓடை மலிபோரூர் ஆறுமுகப்
பிள்ளையார் பாதம் பிடிநெஞ்சே - கொள்ளையார்
வன்பிறப்பு நீக்குநமை வாரிதிபோல் வந்தடருந்
துன்பிறக்குங் கூடுஞ் சுகம்.
14✓
இருளிற் கிடந்த எனையன்றே தூக்கி
அருளைத் தரத்தனுவே யாதி - தெருளுற்றுத்
தந்தவன்நீ மற்றவையைத் தந்ததுபோல் நிற்கீதல்
எந்தவகை போரூ ரனே.
15✓
இடர்களையும் இன்பக் கரும்பை யெமது
தொடர்பிறவி நீக்குந் துணையைத் - தொடர்பாகி
உள்ளும் புறம்பும் ஒளிவீசும் போரூரில்
தெள்ளுமணி யைநெஞ்சே சேர்.
16✓
சேர்ந்து நமதுசெய லற்றமுடி மேற்சேர்த்தி
ஆர்ந்தகளி மேன்மேலும் ஆக்கியே - சார்ந்தெவனும்
பொங்கி மணக்குமின்பப் போரூரன் தாட்பூவைத்
தங்கி மனமே தருக்கு.
17✓
முடித்தேன் களித்தேன் முசிப்பெல்லாம் மாறிக்
குடித்தேன் ஆனந்தக் கொழுந்தேன் - நடித்தேன்விண்
ஆரூரர் போற்றி யடிபணிந்து நின்றுதொழும்
போரூரன் பாதம் புயம்.
18✓
அருளே வடிவாகி ஆனந்த வாரிப்
பொருளாய்யான் என்னதெனல் போமோ - மருளேதும்
இல்லானே போரூர் இறைவனே நாயேற்கு
நல்லானே சொல்லாய் நயந்து.
19✓
என்னை விழுங்கி யிருக்கநீ ஆனந்தந்
தன்னை விழுங்கி தருக்கநான் - அன்னையிலுஞ்
சால அருள்புரிந்த சற்குரவா போரூரா
ஏலமருள் செய்யேல் இனி.
20✓
படல முரித்தவிழி பானுவைக்கண் டாற்போல்
உடலமுத லானவநோ யோட்டி - அடியிணையைக்
காட்டியநீ மீட்டுங் கனமயக்கிற் போரூரா
கூட்டியெனை யாட்டாதாட் கொள்.
21✓
எனதபிமா னம்பிடித்த இந்தவுட லாதி
உனதபிமா னம்பிடித்தாய் உற்றே - எனதாகக்
கொண்டேன் மயக்கங் குலையுநாள் எந்தநாள்
கண்டபோ ரூரா கழறு.
22✓
எனக்கவலம் வாராமல் எந்நாளுங் காத்து
மனக்கவலை மாற்றும் மருந்தாம் - புனச்சிறுமி
முத்துவடக் கோடுழுத முந்நான்கு தோளுடையான்
தத்துபுனற் போரூரன் தாள்.
23✓
பொருப்பெனவே பஞ்சின் பொதியெனினுஞ் சின்ன
நெருப்பணுகில் நீறாகு மாப்போல் - விருப்பமுடன்
உன்னைத் தொடர்வார்க் குறுபவநோய் போரூரா
பின்னைத் தொடரா பிறந்து.
24✓
கண்ணிற் கருமணியே கற்பகமே கற்றோர்கள்
உள்ளிற்கும் ஓரொளியே ஓர்பொருளே - எண்ணிற்கும்
போரூர் இறையே புனிதநிறை ஆனந்தச்
சீரூரில் நாயேனைச் சேர்.
25✓
வேல்கண்டேன் தோளில் வியன்சதங்கை மொய்த்திருந்த
கால்கண்டேன் ஆறுமுகங் கண்டேனே - நீல்கொண்ட
மாமயூ ரங் கண்டேன் வளமைதரு போரூரிற்
போயூரங் கண்டேன் புகுந்து.
26✓
தாயாம் எனக்குரிய தாதையாஞ் சற்குருவாந்
தேயாக் கருணைபொழி தெய்வமாம் - மாயப்
பொருள்நீக்கும் அன்பர் புனிதவீ டேற
இருள்நீக்கும் போரூர் இறை.
27✓
கேட்டதெல்லாம் பாலிக்குங் கேடிலாத் தாதாவும்
வீட்டுநெறி காட்டும் வியன்குருவும் - நாட்டமென
உள்நின்று நாயேற் கொளிகாட்டுஞ் சிற்பரனும்
எண்நின்ற போரூர் இறை.
28✓
ஐம்பொறியாற் போகம் அயின்றாலும் நாயேனுன்
செம்பதுமத் தாளினையே சிந்திக்க - உம்பருக்குங்
காணஅரி தாம்இன்பங் காணத்தென் போரூரா
பூண அருளே புரி.
29✓
அன்பெலாம் நின்பாலே யாக்கி யடியேனுன்
இன்பெலாம் உண்டிங் கிளைப்பாறக் - கொன்புனைவேற்
கையாதென் போரூரிற் காங்கேயா வீடுதவும்
ஐயாநீ கண்பார்த் தருள்.
30✓
நீலக் கடல்முகட்டில் நேருதய சூரியன்போற்
கோலக் கலாபக் குரகதமேல் - சாலவும்நீ
தோன்றி யடியேன் துயர்தீரப் போரூரா
ஊன்றியடி யென்முடிமேல் ஓது.
31✓
மலையரையன் ஈன்றபிடி வாழ்ந்துதவும் யானை
கலையரைய னைப்புடைத்த காளை - சிலையரையன்
மாப்பிளைதென் போரூரின் மாணிக்கச் செஞ்சதங்கைக்
கால்பிடிநா யேனார் கதி.
32✓
ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறுநீ பேசு.
33✓
முக்கரணத் தாலும் முசியா துணைப்பணியுந்
தக்கவர்கள் தாள்தா மரைமீது - புக்கபொடி
ஒன்றினும்என் சென்னிக் கோரணியாற் போரூரா
சென்றுறுவேன் வீடு தெளிந்து.
34✓
மூவாசை கொண்டு முசிக்குநெஞ்சே போரூரில்
தேவாசை கொள்ளத் தெரியாதோ - தேவாசை
கொண்டாயேல் நம்தங் குறைகளெல்லாம் இக்கணமே
விண்டாயே கண்டாயே வீடு.
35✓
குழவி யழுத குரல்கேட்ட தாய்வந்
தழுதகண்ணீர் மாற்றிஅமு தூட்டுங் - கெழுதகைபோல்
நாயேன் இடர்களைந்து நல்லருளுட் டும்போரூர்ச்
சேயேநம் தாயாகுந் தேர்.
36✓
கலங்கினேன் கண்ணீருன் கையால் துடைத்தே
அலங்கிலைவேல் ஆறுமுகத் தையா - புலன்கரணங்
கண்டறியா இன்பங் கடையேற்குப் போரூரா
உண்டறியத் தந்தாள் உவந்து.
37✓
மலைமுழையில் உற்றாலென் மாமருந்துண் டாலென்
கலைமுழுதுங் கற்றாலென் காணார் - இலைநிலவு
வேல்பிடித்த கையான் வியன்போருர் ஐயன்இரு
கால்பிடித்தால் காண்பார் கதி.
38✓
விருப்பமுட னேபணியும் மெய்யன் பனையும்
இருப்புநெஞ்ச என்போ லியையுங் - கருப்பிறசக்
கட்டியார் தீஞ்சுவைபோற் காதலர்க்கீ யும்போரூர்ச்
செட்டியார் தாம்அறிவார் தேர்ந்து.
39✓
கோழிப் பதாகையுஞ்சீர்க் கோலமயில் வாகனமும்
ஆழிப் பெருக்குறிஞ்சி யார்வேலும் - வாழியெனத்
தோத்திரஞ்செய் போரூரிற் சுந்தரனார் பேரருளோர்
மாத்திரையில் நெஞ்சே வரும்.
40✓
அயிலேந்து தோளானை ஆறுமுகத் தானை
மயிலேந்து தாளானை வாழ்த்திப் - புயலேந்து
தண்டலையார் போரூர்ச் சரவணனை நெஞ்சமே
கண்டலையா துற்றார் களி.
41✓
புயல்போற் கருணை பொழிவிழியாள் தன்னை
மயல்போக்கு மாமருந்தை வந்தெஞ் - செயல்போக்கும்
போதானந் தச்சுடரைப் புண்ணியனைப் போரூரில்
நாதாந் தனைமனமே நாடு.
42✓
உரகபடந் தூக்கி உதறுபசுந் தோகைத்
துரகமிசைத் தோன்றுஞ் சுடரே - பரகதியில்
வாழ்ந்துய்ய நாயேன் வளமைதரும் போரூரா
சூழ்ந்தருளாய் சாலத் தொடர்ந்து.
43✓
கடலைச்சே றாக்கிக் கடுவரைநீ றாக்கி
மிடலுற்ற சூரனுரம் வீட்டி - அடலுற்ற
வேல்கொண்டார் தெய்வத்தை மெய்யாகப் போரூரின்
பால்கண்டார்க் குண்டோ பவம்.
44✓
மறப்புநினைப் பாகி வருதிரையெந் நாளும்
புறப்படா இன்பப் புணரி - உறப்புகுந்தே
ஆடிக் களிக்கும் அருட்போருர் ஐயனடி
கூடிக் களிக்குங் குழாம்.
45✓
முத்துச் சிவிகையராய் மூரிமத யானையராய்த்
தத்துபரி மான்தேரில் தங்குநராய் - மெத்தும்
அரியா தனத்தாராய் ஆளுவர்பூம் போரூர்ப்
பிரியாதான் நீறணிந்த பேர்.
46✓
பேய்போம் துயரம்போம் பித்தம்போம் போகாத
நோய்போம் மிடிபோம் நுவலுங்கால் - தாய்போல
நன்னிதியைப் போல நயந்திருப் போரூரன்
சன்னிதியைக் கண்டளவே தான்.
47✓
குமரா நமரென்று கூறினார் ஓர்கால்
அமரா வதியாள்வ ரன்றி - யமராசன்
கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாயுதரப்
பைபுகுதார் சேரார் பயம்.
48✓
குற்றமிழைத் தாலுங் குணமாகக் கொண்டுநம்மேல்
பற்று விடாத பழம்பொருளாம் - முத்தமழைக்
காரூர் அரையனுக்குக் கற்பகநீ முற்கொடுத்த
போரூர் அரையன்நெஞ்சே போற்று.
49✓
வேலும் மயிலும் விளங்குஞ் சிறுசதங்கைக்
காலும்ச ராறு கனதோளுஞ் - சால
அருளுதவும் ஆறு முகமும்உள போரூர்ப்
பொருள்நமது நெஞ்சமே போற்று.
50✓
சரவண வாவிச் சலமூழ்கி யன்பால்
குரவணிதாள் நாடிக்கை கூப்பிப்- பரகுருவே
என்றோதி வாழ்த்தி விரும்போரூர் சூழ்ந்தவரை
நின்றோதி நெஞ்சே நினை.
51✓
வேலைநினைந் தாயோ வியன்கிண் கிணிசூழ்ந்த
காலைநினைந் தாயோ கனபோரூர்- வேலையாச்
சூழ்ந்துதொழு தாயோநீ சூரியா காரிருளைப்
போழ்ந்திடுவான் ஏதோ புகல்.
52✓
அம்புலியே போரூர்வந் தாறுமுகங் கண்டாயோ
நம்பும்அடி யார்சபையை நண்ணினையோ - எம்பரனைப்
பண்அளியாற் பாடினையோ பாற்கடல்போ லேவிளங்குந்
தண்அளிநிற் கேதுகாண் சாற்று.
53✓
கடவுட் படிக்கோர் களிப்பாகும் வள்ளிக்
கொடிசுற்றத் தானுங் குலாவும் - அடியர்க்கே
எண்ணுதொறும் உள்ளத்தில் இன்பூறும் போரூரில்
கண்ணுதலான் தந்த கரும்பு.
54✓
வாளைப் பகுடு மடைவாய் அடைக்கவரும்
ஆளைப் பகட்டும் அணிபோரூர் - நீளிடத்தில்
ஐவண்ணம் உண்டங் கதிலோர் அரசிருக்கும்
நைவண்ணம் போகநெஞ்சே நாடு.
55✓
என்போதம் நின்பாலே யீதலே நல்லறனாம்
உன்போதங் கைகொள்வ தொண்பொருளாம் - உன்பாதத்
தானந்தம் இன்பமாம் ஆறுமுதே போரூரா
மோனந்தான் வீடாகும் மொய்த்து.
56✓
சூக்குமையாம் வாக்குந் துனிஆ ணவவுடலும்
நீக்கரிய என்போத நெஞ்சமே - போக்கி
இருந்த படியிருக்க என்றுபோ ரூரா
திருந்தவரம் பாலிப்பாய் செப்பு.
57✓
ஐவாய் அவாவையும்உன் னாரடிக்கே வைப்பதலர்
மெய்யான அன்பே வியன்சலமாம் - பொய்யாத
உன்போதத் தாலறிவ தொண்சுடராம் போரூரா
என்போத நைவேத்தி யம்.
58✓
அமரர்க்கின் பாகும் அவுணர்க்கே கைப்பாம்
இமையப் பிடிகரத்தில் எய்துஞ் - சமயத்
தலைவனார் மோந்துகொளச் சாரும்போ ரூரில்
கலைவலா ரேத்துங் கனி.
59✓
மரகத மாமலைமேல் மாணிக்க வெற்புத்
திரகதமாய்த் தோன்றுந் திறம்போல் - வருமுனது
காட்சியினை நாயடியேன் கண்டுதொழத் தந்தருளாய்
மாட்சிதரு போரூரா வந்து.
60✓
ஆணிப்பொன் என்கோ அருளாழி தானென்கோ
மாணிக்கம் என்கோ மதியென்கோ - பேணிப்
பணிவார் இருள்போக்கும் பானுஎன்கோ போரூர்க்
கணியாகுந் தெய்வத்தை யான்.
61✓
ஆனந்த மாகடலே யாரா அமுதமே
மோனந் தருஞ்சுடரே முத்திவித்தே - தேனந்து
கஞ்சமலர் வாவிக் கனபோரூர் ஐயாஉன்
தஞ்சமெனைக் காத்தாள் சரண்.
62✓
பாம்பாகத் தோன்றிற் பழுதைசற்றுந் தோன்றாதாம்
பாம்பின்றாத் தோன்றிற் பழுதையே - மேம்பாடாய்ப
பொய்தோன்றின் மெய்தோன்றா போரூரா நின்னருளால்
மெய்தோன்றிற் பொய்தோன்றா வீடு.
63✓
கானலைநீ ரன்றென்று காட்டக்கண் டானொருவன்
மாநலநீ ரென்று மயங்கல்போல் - நீநலமாய்ப்
பொய்யுலகம் பொய்யாகக் காட்டியும்போ ரூரானே
மெய்யெனவுள் நைந்தேன் மிக.
64✓
கும்ப முனிக்குக் கொடுமலங்கள் மூன்றுறுத்துச்
செம்பதுமத் தாள்கொடுத்த தேசிகா - நம்ப
அறியேன் மலமறுத்தாய் அற்புதம்போ ரூரா
சிறியேன்மேல் என்னருளோ செப்பு.
65✓
அஞ்ஞான வல்லிருள்போய் அன்பர்குணக் குன்றின்மிசை
மெய்ஞ்ஞான பானுவெளி தோன்றச் - செஞ்ஞான
நாதத் தொனிகூவும் நற்கொடிப்போ ரூரன்இரு
பாதத்தை நெஞ்சே பணி.
66✓
பவளக் கொடியுடற் பன்னிரண்டின் மீதே
இவருற்ற சூரியர்போல் ஏய்ந்து - திவளுற்ற
குண்டலங்க ளாடவரு கோவைப்போ ரூரனைப்போல்
கண்டிலன்பொய் யாக்கருணைக் கார்.
67✓
மூதண்ட கூட முகடுதொடத் தாள்நீட்டுங்
கோதண்ட பாணி குலமருகன் - தீதண்டா
வண்ணமெமை யாண்டான் மகிழ்போரூர் ஐயன்இனி
எண்ணமெனை நெஞ்சே யெமக்கு.
68✓
ஆம்பல்வாய் விள்ள அடியார் கரகமலங்
கூம்ப வுதிக்குங் குளிர்மதியே - தேம்பி
அழுதபிள்ளைக் காய்போல் அருட்போரூர் ஐயா
தொழுததற்கு நீயே துணை.
69✓
என்செயலாய்த் தோன்ற இருள்திரோ தம்புரிந்தாங்
குன்செயலாய்த் தோன்ற வொளிஅருள்செய் - துன்செயலால்
என்போதந் தோன்றாதுன் இன்பாரப் போரூரா
உன்போதந் தந்தாள் உவந்து.
70✓
உள்ளந் தனிலே உவமையிலா ஆனந்த
வெள்ளந் துளும்ப விளையாடும் - பிள்ளைகளே
சூழும் திருப்போரூர்ச் சுந்தரனால் என்பிறவி
ஏழும்போம் நெஞ்சே யெமக்கு.
71✓
ஒளியாற் கதிரவுணர் ஊனடலாற் காலன்
அளியாற் குளிர்மதியே யாகும் - எளிதில்நனி
தூரம்போய் மீளுதலாற் சொல்மனமாம் போரூரில்
வீரன் கரத்தேந்தும் வேல்.
72✓
கைக்குரிய கஞ்சமாங் கண்ணுக்கோர் காட்சியாம்
மெய்க்குரிய சென்னிக்கே மென்முடியாம் - பொய்க்காதென்
நெஞ்சத்துள் இன்பம் நிறைக்கும் பரஞ்சுடராந்
தஞ்சுற்ற போரூரன் தாள்.
73✓
வள்ளலளச் செம்முளரி மாளிகையின் மீதிருந்து
பிள்ளைமட அன்னப் பெடைநோக்க - உள்ளலொடு
செவ்வாய்ச் சிரலாடும் தேன்வயற்போ ரூராளன்
எவ்வாய்ப்பும் ஆகும் எமக்கு.
74✓
வீதி மணக்கும் விரைச்சுகுங்கு மச்சேறே
ஓதி மணக்கும் உயர்மடந் - தாதுசெறி
பூமணக்குஞ் சோலை புகழ்மணக்கும் போரூரிற்
பாமணக்குஞ் செவ்வேள் பதம்.
75✓
மயிலடையுஞ் சந்த மலைச்சாரல் எங்கும்
குயிலடையும் பூஞ்சோலைக் குள்ளே - புயலடையும்
பொன்மாட மெங்கும் புகழ்போரூர் வாழ்தெய்வந்
தன்மா டடைவார் தவர்.
76✓
தன்னை மறந்துகண்ணீர்த் தண்தரள மார்பணியும்
பின்னைமுரு காவென்று பேசுமுளத் - துன்னும்
குயிலாலுஞ் சோலைக் குளிர்போரு ரானை
மயில்மேல் வரக்கண்ட மான்.
77✓
எத்திக்குந் தானா யிருந்தடியேன் உள்ளத்தே
தித்திக்குந் தேனளிக்குஞ் செட்டியாங் - கொத்தி
அரவமணிப் பையரக்கி யாடுமயி லேறிக்
குரவமணி போரூர்க் குகன்.
78✓
அன்புந் தருநல் லருளாழி யுந்தரும்பேர்
இன்புந் தருமெண் ணியதருமே - மன்பதையைக்
காக்கும்போ ரூரான் கடையோனைத் தன்னடியான்
ஆக்கும்போ ரூரான் அறிந்து.
79✓
நோவஉரை யான்எம்மை நோவக்கண் பார்த்திடான்
சாவ நினையான் தளரவிடான் - பாவனைய
சொல்வாய்க் குறத்தி துணைபிரியாப் போரூரன்
நல்வாய்ப்ப ரையன்நெஞ்சே நாடு.
80✓
திருவடிக்கே தோன்றுஞ் சிறியேன் துயரம்
ஒருவருக்குந் தோன்றாதென் னுள்ளே - சருவிஎனை
எந்நாளும் வாட்டும் இடர்களையப் போரூரா
நன்னாளிந் நாளா நயந்து.
81✓
ஆசையும் அன்பும் அபிமான மும்உனது
பூசையிலே வைக்காது பொய்க்காளாய்ப் - பேசரிய
பெண்ணாசை யாதி பிடித்துழன்றேன் போரூரா
எண்ணாது நின்னை யிருந்து.
82✓
தீயவனென் குற்றந் திருவுளத்தில் நாடாதென்
தாயனைய போரூர்ச் சரவணா - தூயசுக
வீட்டுக்குள் வைப்பாய் வினையோனைப் பொய்க்காயக்
கூட்டுக்குள் வைக்கேல் குறித்து.
83✓
வேல்விடலா யென்றுமணி வீரக் கழல்புனைந்த
காலுடைய சூரடுகா ளாயென்று - மாலின்
மருகனே யென்று மடநெஞ்சே போரூர்
முருகனே யென்று முயல்.
84✓
காதலித்த வாறுதவுங் காங்கெயனார் தாளினையை
ஆதரித்து நன்றாய் அனுதினமும் - நீதரித்துக்
கள்ளமெலாம் போகக் கருதுநெஞ்சே போரூர்வந்
துள்ளமெலாம் இன்பம் உறும்.
85✓
கருப்புச் சிலையானுங் கைகூப் பழகா
பொருப்புச் சிலையான் புதல்வா - விருப்புற்ற
என்னெண்ணத் தின்படியே யீந்தருளாய் போரூரா
உன்னெண்ணத் தின்பாய் உவந்து.
86✓
நாடுதனி லேயுழலும் நாயேனை வாவென்று
வீடுதனில் வைக்க விரும்புவாய் - பீடுதரு
காட்சியே போரூரிற் கற்பகமே ஆருயிர்க்கோர்
சாட்சியே உன்தாள் சரண்.
87✓
ஆரியனாய் வந்தும் அறிவுக் கறிவாயுங்
கூரியநூல் தந்துங் கொடியேற்குப் - பேரறிவு
தந்தாய் மறந்து தளர்கின்றேன் போரூர்வாழ்
எந்தாய்என் செய்கேன் இனி.
88✓
என்றும் அபிமானம் ஏழையேன் மீதுவைத்து
நன்றுபுரி யுங்குமர நாயகா - இன்றுசுக
பூரணத்தில் நாயேன் புகவைப்பாய் போரூர்வாழ்
காரணத்தாய் உள்ளே கலந்து.
89✓
கைவிட்டால் நாயேனைக் காப்பா ரொருவரில்லை
பொய்விட்டார் போற்றும் புனிதனே - மையிட்ட
கண்ணா ரிருவர் கலந்த புயத்தழகா
தண்ணார்போ ரூரா தரித்து.
90✓
ஆனைமுகத் தாற்கிளைய ஆறு முகத்தானை
மானையிடத் தில்வைத்தோன் மாமகனை - மானுதவு
வேடிச்சி தோள்சேர்ந்த மெய்ப்புயனை நெஞ்சமே
நாடிச் சீபோரூர் நயந்து.
91✓
மெய்யடியார் போல மிகநடிப்பேன் மெய்யடியார்
செய்யடிமைத் தொண்டேதுஞ் செய்திலேன் - பொய்யடியேன்
உன்னாட் கமலபதத் துள்நிறையப் போரூரா
எந்நாட் கிடைக்கும் எனக்கு.
92✓
நோயுற் றடராமல் நொந்துமனம் வாடாமற்
பாயிற் கிடவாமற் பாவியேன் - காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கியெனை யொண்போரூர் ஐயாநின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.
93✓
குறைகளையுங் கோவே குணமளிக்குந் தேவே
மறைமுடிவு காட்டு மணியே - இறையவனே
போரூரா என்று புகழ்நெஞ்சே யெந்நாளுங்
காரூர் மயக்கமறுங் காண்.
94✓
கோது படாத குணஞான சாரமே
ஏது படிறேன் இழைத்தாலுந் - தீதாகக்
கொள்ளாது போரூர்க் குமரவேள் நாயேனை
எள்ளாது காத்தாள் இனி.
95✓
மருளுடையேன் செய்தபிழை வண்போரூர் ஐயா
அருளுடைய நீபொறுத்திங் காளாய் - தெருளுடையாய்
வேறுதுணை காணேன் வினையேன் தனக்குரிய
ஆறுதுணை ஆறா னனம்.
96✓
பஞ்சரத்தின் மூடிவைத்த பைங்கிளிபோல் நாயேனை
அஞ்சிரக்கக் கூட்டி லடையாதே - விஞ்சும்
அருளொளியிற் சேர்த்தி யமுதூட்டி வைப்பாய்
தெருளொளியே போரூரா தேர்ந்து.
97✓
எப்போதும் என்முடியுன் இன்பொன் திருப்பாத
மெய்ப்போதின் கீழிருக்க வேண்டுமே - மெய்ப்போத
வேதா வணங்கவரும் வித்தகா போரூரில்
நாதா மயில்வாக னா.
98✓
கன்றழைக்கும் முன்னே கருதிவரு மாப்போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர்தோன்றி - ஒன்றினுக்கும்
அஞ்சாதே வாவென் றழைப்பாய்தென் போரூரா
எஞ்சாத பேரருளா லின்று.
99✓
ஊழுக்கா ளாகி யுறுபோக மேகருதிப்
பாழுக் குழைத்த படிறேனை - ஏழுக் குள்
போகா வகைபுரியாய் போரூரா பன்னிரண்டு
வாகா வடிவே லவா.
100✓
உண்ணாத போகமில்லை யுற்பவியாக் காலமில்லை
நண்ணாத தேகமில்லை நாயினேன் - உள்நாடிப்
பண்டுவந்த துன்பமறப் பார்தொழுபோ ரூரானைக்
கண்டுவந்து நெஞ்சே கருது.
101✓
களங்கமெலாம் அற்றேன் கதிபுகுந்தேன் நாயேன்
உளங்குளிர ஆனந்த முண்டேன் - வளங்களெல்லாம்
உற்றேன் திருப்போரூர் உத்தமனார் சீர்பாத
நற்றா மரைதொழுத நான்.
102✓
ஆறு முகம்வாழி ஆறிரண்டு தோள்வாழி
தேறுபதம் வாழியிரு தேவிமார் - வீறுபுடை
வாழிவேல் வாழி மயில்வாழி போரூரர்
வாழிசுகம் வாழி மகிழ்ந்து.