முருகன் App
திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை
முருகைய பங்கஜாக்ஷி
பூச்சூட்டல்2 / 2
திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை · முருகைய பங்கஜாக்ஷி

பூச்சூட்டல்

(பெரியாழ்வார் திருமொழி - 'ஆனிரைமேய்க்க')
ராகம்: அடாணா
1✓
விண்மணியே நித்திலமே வெற்றிவடி வேலவனே
தண்மதியே என்றனுளத் தாபமற வந்தவனே
பண்மொழியே பேசிவரும் பாவலனே என்றனுயிர்க்
கண்மணியே குழல்முடித்தே கடம்பமலர் சூட்டவாராய்.
2✓
நீலமயில் தேரமர்ந்தே நெடுந்தூரம் சென்றுவிட்டாய்
பாலனுனைத் தேடியுள்ளம் பதைத்துமிகச் சோர்ந்துநின்றேன்
கோலமுடன் திலகம்வைத்தே கொஞ்சுமணி இடையிற்கட்டி
பாலகனுன் குழல்முடித்தே பன்னீர்ப்பூச் சூட்டவாராய்.
3✓
இமயமலை வந்தவளும் எடுத்தணைக்கும் தேன்மலரே
குமரசிவச் செங்கனியே கோமகனே ஓடிவாராய்
அமரருனைப் போற்றிசெய ஆடிவரும் பேரொளியே
சமரபுரிச் சண்முகனே சண்பகப்பூச் சூட்டவாராய்.
4✓
கண்ணுதலான் கண்டுவக்கும் கண்மணியே கனிரசமே
தண்ணருளே வானவர்கோன் சிறைதவிர்த்த சண்முகனே
பண்ணிசையே பார்வதியாள் பரிந்துழைக்கும் பாலகனே
விண்ணமுதே குழல்முடித்தே வெட்சிமலர் சூட்டவாராய்.
5✓
சேவலனே திருமடந்தை சீர்மருகா மயிற்பரியிற்
பூவலனே புரிசுடரே புண்ணியனே புலவர்புகழ்
பாவலனே பாவைவள்ளி பணிந்துமகிழ் நாயகனே
காவலனே குழல்முடித்தே காந்தள்மலர் சூட்டவாராய்.
6✓
என்னவனே எழிற்குமரா ஏற்றமிகு கரிமுகற்குப்
பின்னவனே பிறைமுடியோன் திருச்செவியில் மறைமுடிவைச்
சொன்னவனே சோதிமணிச் சுந்தரனே சுடர்வடிவேல்
மன்னவனே குழல்முடித்தே மல்லிகைப்பூச் சூட்டவாராய்.
7✓
ரத்தினமே அன்பர்குல ரட்சகனே நன்மணியே
முத்தமிழே மோனவொளி முத்திரையே மும்மலந்தீர்
வித்தகனே வெற்றிவடி வேலவனே வேதாந்த
குத்திரமில் கோமளமே குராமலர்நீ சூட்டவாராய்.
8✓
அருமணியே கறைமிடற்றன் கந்தாவென் றழைக்கமயில்
வருமணியே அன்பர்மன வாட்டமற ஞானசுகந்
தருமணியே தன்மயனே தஞ்சமென்றோர் மருளகற்றும்
குருமணியே குழல்முடித்தே கொன்றைமலர் சூட்டவாராய்.
9✓
மருண்டலையும் மனதையுன்பால் வயக்குவித்த மாமணியே
உருண்டலையும் பவப்புணரி ஒழித்தெனையாட் கொண்டவனே
திரண்டலையும் மணியுதிர்க்கும் திருச்செந்தில் தேனமுதே
சுருண்டலையும் குழல்முடித்தே தும்பைமலர் சூட்டவாராய்.
10✓
மருமலரே மாதவமே வானவர்சே னாபதியே
அருமறையே ஆறுபடை வீடமரும் அயிலரசே
திருவருளே எனதுவினை சிந்துவித்த தேசிகனே
பெருநிதியே குழல்முடித்தே பிச்சிமலர் சூட்டவாராய்.