திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை
முருகைய பங்கஜாக்ஷி
முத்தம் வேண்டல்1 / 2
திருச்செந்தில் முருகன் சந்நிதிமுறை · முருகைய பங்கஜாக்ஷி
முத்தம் வேண்டல்
('பற்றற் றார்சேர்' என்னும் தேவாரப்பண்)
பண்: பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்)
1✓
எந்தந் தவமே எழிற்குமரா
இணையே துமிலா இன்னமுதே
பந்தந் தவிர்க்கும் பரஞ்சுடரே
பரையின் சுதனே பாவலனே
உந்துந் திரைகள் சிதறுமுத்தால்
ஒளிரும் செந்தில் உத்தமனே
கந்தங் கமழும் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
2✓
மலையே நிகரென் மயல்மாய்த்து
மகவாய் வந்தே மலர்வித்தாய்
சிலையே டர்குலக் கொடியுடனே
சிறக்கும் செந்திற் சிவபாலா
விலையே இலதோர் விண்மணியே
வேத நாலின் முடிமணியே
கலையே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
3✓
பெரும்பே தையெனை உன்தாயாய்ப்
பேணி யாண்டாய் பிரியமுடன்
அரும்பே என்றன் அகத்தமர்ந்த
அழகே ஆடும் மயில்வீரா
பெரும்பே ரரசே பெறற்கரிய
பிள்ளைப் பெருமா னெனும்மணியே
கரும்பே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
4✓
அங்கை மழுவோ டனல்மானும்
அணைந்த சிவனா ரிடப்பாக
மங்கை மகிழும் மாமலரே
மகனே என்றன் மாதவமே
செங்கை திகழ்வே லுடனோடிச்
செல்வா வருவாய் சிறப்புடனே
கங்கை சுதனே கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
5✓
விண்ணா டவர்சே னாபதியே
விரிசெங் கதிரே விறல்வேலா
தண்ணா ரமுதே தகைசான்ற
தண்சீ ரலைவாய்ச் சண்முகனே
மண்ணா டவர்க்கோர் மாமருந்தே
மன்னே மணியே மயிலேறும்
கண்ணே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
6✓
நிதியே குலையா நிலையருளும்
நிமலா என்னுள் நிலவிடுமோர்
மதியே வண்ண மயிலேறி
வாராய் வான மகள்மகிழும்
பதியே என்றன் பாலகனே
பவளச் சிறுதே ருருட்டிவரும்
கதிரே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
7✓
வினையே மேவி மிகவாடி
விதிர்த்தே மாளா மேனிலையில்
எனையே வைத்த என்னுயிரே
எழிலோ வியமே இசைவடிவே
அனையே எனவே அழைத்தென்றன்
அகமே குளிர ஆடிவரும்
கனியே கந்தங் கமழ்வாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
8✓
சிந்தா குலங்கள் சிந்திடப்பூஞ்
சிரிப்பா லென்னைச் சிறப்பித்தாய்
மந்தா கினியும் மகிழ்வுறவே
மணிவாய் ஆறில் மலர்முத்தம்
தந்தா யன்றோ சண்முகனே
தாயென் உள்ளத் தாபமறக்
கந்தா கனிவாய்த் தேனொழுகும்
கண்ணே முத்தந் தந்தருளே.
9✓
உடலே எனதாய் உழன்றிடுமென்
உள்ளத் திருளை ஒழித்தென்னுள்
நடமே செய்யும் நல்லொளியே
ஞானப் பொருளே நற்றவரின்
இடரே தொலைக்கும் இன்னருளே
இறைவன் நுதற்கண் எழுஞானக்
கடலே உன்றன் கனிவாயால்
கந்தா முத்தந் தந்தருளே.
10✓
கந்தா கடம்பா கருத்தொளிரும்
கண்ணே மணியே கதிர்வேலா
செந்தா மரையாள் திருமருகா
திருச்சீ ரலைவாய் திகழ்ஞான
நந்தா விளக்கே நான்மூன்று
நளினக் கரங்கள் கொடுதழுவி
இந்தா எனவே என்குகனே
எனக்கோர் முத்தந் தந்தருளே.