முருகன் App
திருச்செந்தூர் அகவல்
சிற்றம்பல நாடிகள்
பாடல்கள்1 / 2
திருச்செந்தூர் அகவல் · சிற்றம்பல நாடிகள்

பாடல்கள்

✓
ஓம்எனும் தாரக ஒண்பொருள், சிவனுக்(கு)
ஆம்என மொழிந்தே அருள்குரு ஆனோன்;
பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு,
நற்பொருள் விளக்கும் ஞான தேசிகன்;
பொய்வழிச் சமணப் புலையிருள் நீக்கிச்
✓
சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி;
முருகன், குமரன், மூவிரு முகன்,மால்
மருகன், சிவனருள் மைந்தன், கந்தன்,
மலைமகள் பாலன், வயம்கிளர் வேலன்,
கலைபயில் புலவன், கார்த்தி கேயன்,
✓
வளைஒரு மருப்பு வாரண முகவற்(கு)
இளையவன், குகன், மயில்ஏறும் பெருமாள்,
சூரசங் காரன், சுப்பிர மணியன்,
வீரருள் வீரன், விரைகமழ் கடம்பன்,
சேந்தன், வள்ளி தெய்வ யானை
✓
காந்தன், செவ்வேள், காங்கேயன், சிலம்பன்,
ஆயிர நாமத்(து) ஐயன், துய்யன்,
சேய்,அருள் கோமான், சேவல் துவசன்,
வரம்கிளர் கருணைப் பரங்கிரி உறைவோன்;
மாஇனம் விளங்கும் ஆவினன் குடியோன்;
✓
நந்(து)ஊர் அலைவாய்ச் செந்தூர்க் கடவுள்;
பாரகம் விளக்கும் ஏரகத்(து) அமர்வோன்;
மால்அயன் இறைஞ்சும் சோலைமா மலையோன்;
குன்றுதோ றாடல் நன்றென மகிழ்ந்தோன்;
பாசக் கங்குல் பசையறப்பருகி,
✓
நேசர்க்(கு) இன்ப நிறையொளி பரப்பித்,
திருவளர் செழும்பொன் செந்தா மரைக்கு
மருவும்ஓர் சான்றாய் மலர்ந்தபொற் பதமும்;
நினைப்பொடு மறப்பு நீங்கிடும் அதீதம்
அணைப்பர நாத மறையொலி அலம்பும்
✓
பாந்தள்அம் சுடிகைப் பன்மணி இழைத்த
காந்துசெஞ் சுடர்க்கால் கழல்பரி புரமும்;
கண்குளிர் கனகக் கவின்கிடந்(து) இலங்கும்
கிண்கிணி இசைக்கும் கிளர்திரு அரையும்;
வட்டுடை வரிந்து தொட்டகூர் வாளும்;
✓
கட்டுறு யோகப் பட்டிகைச் சிறப்பும்
இந்திரவில் இரண்(டு) எதிர்பொருத் துவபோல்
சுந்தர ஆழி சூட்டும் அங்குலியும்
மன்இரு முகிலால் மணிதரு நிதிசேர்
பன்னிரு கமல பாணியும்; அவற்றிற்
✓
சூலமும், வேலும், துரோணமும், சரமும்,
பாலமும் குலிசமும், பரிசையும், வாளும்,
ஆழியும், மழுவும், அபயமும், வரதமும்,
சூழு(ம்)முன் கைகள் துலங்குபொன் கடகமும்
மந்தரம் தழுவும் வாசுகி அன்ன
✓
சந்ததம் மொய்ம்பு தழைத்தகே யூரும்
பரிதிமண் டலம்போல் பதக்க(ம்)முத் தாரம்,
தருசரப் பணிகள் தயங்குபூண் மார்பும்;
அட்டிகை பணி,நல் அக்(கு)இரும் குவளை
விட்டொளி விரிக்கும் வியன்கந் தரமும்;
✓
மூவிரு திங்கள் முதிர்ந்தபூ ரணம்போல்,
மேவுசண் முகங்கள் விளங்குநல் பொலிவும்;
முளரிமுந் நான்கு மூவிரு குமுதம்
வளர்மதி உதயத்(து) இடைவளர்ந் தனபோல்,
முகந்தொறும் கருணை உகந்தகண் களும்;சீர்
✓
உகந்தபொன் குதலை ஒழுகுவாய் வனப்பும்;
தொட்டபொன் குழைகள் தூக்குகுண் டலமும்;
சுட்டியும், நுதலில் இட்டவெண் ணீறும்,
மன்இரு மகளிர் மாட்(டு)அலால், வணங்காச்
சென்னிசேர்ந்(து) ஒளிரும் சேகரச் சிறப்பும்;
✓
மகபதி மகளும் வள்ளிஅம் திருவும்,
சுகமணம் சூட்டும் தொங்கலும் கடம்பும்;
கோதைசூழ் அன்னோர் கொங்கையால் பூசும்
ஏதமில் சுகந்த லேபனப் பூச்சும்;
மரகதப் பொருப்பும் வயிரவான் பொருப்பும்
✓
நிரல்வலம் இடமார் நெடியபொன் கிரிபோல்,
அகிலமும் ஈன்ற அன்னையர் இருவர்
மகிழ்வுற இருபால் மன்னிவாழ்ந்(து) இருப்பப்:
பன்னிறம் தளிர்க்கும் பச்சைவான் கிரிமேல்
துன்இரு கோடி சூரியர் உதித்தாங்(கு)
✓
அவரவர் அச்சம் அடுதிறல் மயூரக்
குரகதம் ஏறிக் குலவு காட்சியும்;
கரந்(து)எனை ஆளும் கருணையால், புவிமேல்
சரம்தரு மானுடச் சட்டை சாத்தி,
அழியா ஒளிவந்(து) அழியா மொழியை
✓
வழியா மொழிய, வந்தனம் குருவாய்;
ஆணவக் கடற்குள் அலைபடு துரும்பும்,
பூணுறு மாயைப் புலிவாய்ப் பசுவும்,
கருமச் சூறைக் காற்றுறு சருகும்
தரு(ம்)இச் சுழலைச் சார்ந்தந்திடும், எளியநின்
✓
வருத்தம் குறித்து வருந்தேல்; உனக்குத்
திருத்தகும் உணர்வு செப்ப வேண்டி
வந்தனம், முத்தி வழங்குதும் என்றான்;
அந்தநல் மொழிகேட்(டு) அன்பொடும் துதித்தேன்
கற்பக வனம்போல் கமழ்பூங் காவில்
✓
பொற்புற விளங்கும் பொலன்மணிக் கனகப்
பன்னக சாலையுள் பதுமபீ டிகைமேல்,
துன்னுபூந் தருக்கள் சூழ்கற் பகம்போல்,
சங்கமீன் நாப்பண் தயங்குவெண் மதிபோல்,
அங்கை கூப்பி அடியர்நின்(று) ஏத்த
✓
இனி(து)எழுந் தருளி, என்முகம் நோக்கிப்,
புனிதநீர் ஆடப் போகென மொழிந்தான்;
நீரிடை மூழ்கி, நெடும்கலை அணிந்து
சார்தலும், ஓமச் சடங்குகள் இயற்றி,
வெண்ணீ(று) அணிந்து, விதிஎழுத்(து) அஞ்சும்
✓
தெள்நீர் மையினிற் செவியிற் புகட்டி
அறு(கு)எரு வுடன்,கை அள்ளுநீ ருடன் என்
மறு(கு)உடல், ஆவி, வான்பொருள் கொண்டான்.
பரவுசஞ் சிதம்,நம் பார்வையால் ஒழிந்த,
விரவுமுற் பவங்கள், வினையுடம்(பு) அளவில்
✓
அத்தன் அருள்,மேல் ஆகா மியங்கள்
பற்றில, நினது பண்புபோல் இருந்த;
நம்பெரு வடிவை நாடுகென்(று) அருளித்,
தம்பொன் கரமலர், என்தலை தீண்டி;
முழுநிலம் புரப்ப முடிசூட் டுவபோல்,
✓
செழுமணிப் பத(ம்)என் சிரமிசைப் பொருத்திப்;
பாத தீர்த்தம் பரிகல சேடம்,
ஆதரக் குழவிக்(கு) அன்னைபோல் அருத்தி;
குருபதம் பணிதல், குஞ்சர முகனைக்
கருதல், சங்கற்பம், கங்கையின் பூசை,
✓
திருந்து முத்திரைகள், திக்கு பந்தம்,நீ(டு)
அருந்துயர் நீக்கும் அத்திர சந்தி,
தத்துவத் திரயம், தாளத் திரயம்,
சுத்(த) ஆசமனம், தொடுமிடம் தொடுகை,
கரமுடன் அங்கம், கருதிடு நியாசம்,
✓
விரவு தருப்பணம், விளங்குநீ(று) அணிகை,
அஞ்செழுத்(து) ஓதி ஆதவற் பணிதல்,
விஞ்சும்ஆ கமத்து விதிமுறை முடித்துப்
பண்டையோர் நம்மைப் பரவுசொற் பாடல்
கொண்டு,நீ துதிகள் (கூறு)என விளம்பிப்
✓
பத்திகூர் விரதம் பயின்றிடின், நாலாம்
சத்திநி பாதம் தரும்எனப் பகர்ந்தான்;
அன்னமிட்(டு) எவர்க்கும் அரும்பசி தீர்த்துப்
பன்னரும் சாலை, படித்துறைத் தடாகம்,
வந்தார் அருந்தும் வாசநீர்ப் பந்தர்,
✓
நந்தா வனங்கள் நலம்பெற அமைத்தே,
ஈங்(கு)இவை முதலா எண்ணான்(கு) அறமும்,
தீங்(கு)இலா வண்ணம், செய்கென மொழிந்தான்;
காலையில் எழுந்து கடிமலர் பறித்து,
மாலிகை தொடுத்து, மதிமுடிக் கடவுள்
✓
பூசனைக்(கு) உதவிப், புனிதஆ லயத்தின்
வாசல் விளக்கிட்(டு) அலகொடு மெழுக்கிட்(டு)
ஆறுகா லமும்சென்(று), அரன்பதம் இறைஞ்சி,
ஏறுளான் அடியார்க்(கு) ஏவல்பூண்(டு) ஒழுகல்,
இத்திறம் முதலா இயற்றுதல் சரியை,
✓
சுத்தசா லோக்கியம் துய்க்கும்என்(று) இசைத்தான்
பொய்வகை நீக்கிப், பூதம் முதலா
ஐவகைச் சுத்தி மெய்வகை விளக்கி,
மணம்பொலி கந்த வர்க்கமாம் மலர்கள்,
இணங்குநல் தூபம், எழில்குலாம் தீபம்,
✓
தருநை வேத்தியம், தாம்பூலம் முதலாய்
வரும்உப சார வகைபல இயற்றி,
அகம்தவிர் உளத்தோ(டு) அகம்புறம் இறைஞ்சிச்
சுகம்கிளர் அங்கித் தொடுகடன் முடித்துப்
போற்றுறும் இலிங்க பூசனைக் கிரியை
✓
சாற்றுசா மீப்பியம் தரும்எனப் பகர்ந்தான்;
கட்டளைக் கப்பணம் கட்டளை யிட்டுத்
தட்டுறு மலம்தீர் சாதனம் ஒழிந்து,
கடுங்கொலை, வெறும்பொய், களவு,கள், காமம்
படும்பெயர் பஞ்ச பாதகம் தீர்த்துக்
✓
காமம், கோபம், கசடுறும் உலோபம்,
தீமன மோகம், சேர்மத, மாற்சரியம்;
ஈண்டிவை முதலா எண்ணில பாவம்
பூண்டன ஒழியப் புந்திதந் தருளி;
மன்னுகீழ் அரணி, வருத்தமில் உணர்வாய்ப்
✓
பின்னும்மேல் அரணி, பிரணவம் ஆகக்
கடையவே, ஞானக் கனல்எழும் என்றே
தடைபடாப் பாச தகனம் செய்தான்;
அருளெனும் தலத்தில் அறிந்துகால் மடக்கி
இருளற இருக்கும் இயற்கையும் விண்டான்;
✓
பன்னிரண்(டு) அங்குலம் பறிந்திடும் பிராணன்,
பின்னதின் நான்கும் பிரிந்துபோம்; அதனால்
ஆயுளும் குறைந்திட்(டு) ஆக்கையும் தளர்ந்து
சாயும்என்(று) உரைத்துச் சாகா(து) இருக்க,
நாடிஓர் பத்தும் நாடி,நா டிகள்புக்(கு)
✓
ஓடிய வாயு ஒருபதும் தேர்ந்து,
சொன்ன நாடிகளிற், சுழுமுனை நடுவாம்
இன்னதின் பக்கத்(து) இடைபிங் கலையாம்
அக்கினி திங்கள் ஆதவன் கலைகள்
புக்கமூச் சரமும் போய்மீண்(டு) இயங்கும்,
✓
மூலகுண் டலியாம் உரகம் மூச்செறிந்து,
வாலது மேல்கீழ் மண்டலம் இட்டுப்,
படந்தனைச் சுருக்கிப் படுத்துறங் குவது,
நடந்து மேல்நோக்கி, ஞானவீ(டு) அளிக்கும்;
மண்டலம் மூன்று மருவுதூண் புகஅக்
✓
குண்டலி எழுப்பும் கொள்கையீ(து) என்றான்,
முன்ன(து) இரேசகம் முப்பத் திரண்டு;
பின்னது பூரகம் பேசும்ஈ ரெட்டுக்
கும்பகம் நாலோ(டு) அறுபதாக் கூறும்
தம்பமாத் திரையின் தன்மையும் உணர்த்தி;
✓
மூலமே முதலா முடிநடு உச்சிப்
பால்அள வினும்நீள் படுதுளை நோக்கி;
மூலா தாரத்தின் முச்சுழிச் சுடரை:
மேல்ஆ தாரத்தின் மெல்லெனத் தூண்டி
இருவழிக் காலும் ஒருவழி நடத்திக்
✓
கருவழி அடைத்துக்; கமலம்(ஆறு) உருவிப்,
பன்னிரண்(டு) அந்தம், பரிதியும் மதியும்
மன்னி ஒன்றான வண்ணமும் தெரிந்து!
கமடம்ஐந்(து) அடக்கும் கருத்தெனப், பொறியின்
மமதைகள் அடக்கி, மனோலயம் ஆக்கி;
✓
மூலக் கனலால் முழுமதி உருக்கிப்,
பாலைப் பருகும் பண்புதந் தருளி
இட்டகா மியமும், எண்ணெண் கலையும்,
அட்டமா சித்தியும் அன்புறக் கொடுத்துப்
பன்னிரு பட்சியும் பறவா வண்ணம்.
✓
என்னுளே நிறுத்தும் இயற்கையும் விண்டான்;
மூலமே முதலா மூவிரு தலத்தின்
கோலமும், பூதக் குறிகளும், அதன்பால்
ஐம்பதோ(டு) ஒன்றாம் அக்கர விதமும்,
பொன்பொலி கமலப் பூஇரு மூன்றும்,
✓
தாரக எழுத்தும், சார்பெழுத்(து) அஞ்சும்,
வாரண முகவன் மலரோன், திருமால்
வருத்தம்இல் உருத்திரன், மகேச்சுரன், சதாசிவன்
உருத்தெளிந் திடநம் உருவே ஆகும்;
ஆறுமா முகத்(து) அமர்ந்ததும் இதுவே;
✓
வேறிலை என்று மெய்ம்மொழி செப்பி,
இலங்கும்ஆ யிரத்தெட்(டு) இதழ்த்தா மரைமேல்
துலங்கிடும் நடனச் சோதியும் காட்டி,
இருபத் தோரா யிரத்(து) அறுநூறாய்
மருவிநாள் தோறும் வளர்சுவா சத்தைச்
✓
சங்ஙன வாங்கிக், சமனுறக் கும்பித்(து)
அங்ஙன்(று) எழுப்பும் அசபையும் அருளிப்;
பொருள்,அருள், ஆன்மாப் பொருந்திடும் திரோதை
மருஇரு மலமாய் வயங்கும் அஞ்செழுத்தி(ல்)
திரோதையும் மலமும் தீர்த்(து)அத னிடத்தில்
✓
வரோதையம் ஆன வாசியை நிறுவி,
வளம்பொலி சிவய வசிஎன்(று) உளத்தில்
விளம்புக; நின்னை விளக்கும் ஆநந்த
முத்தி அஞ்செழுத்து மொழிந்தனம்; இதனைச்
சித்த சாந்தியினிற் செப்பென மொழிந்தான்
✓
வாசிவா என்ன வழங்குமுன்(று) எழுத்தும்
பேசுதல், முதிர்ந்த பே(று)என மொழிந்தான்;
இன்பமாம் வாசி என்னும் ஈரெழுத்தில்,
அன்புறு மகிமை அதிசயம் என்றான்;
சீரெழுத்(து) ஒன்றே சிந்தையிற் கருதத்
✓
தூயநல் சுடராய்த் தோன்றுவை என்றான்;
விந்துவும் நாதமும் மேவிய வெளியிற்
சிந்தையை நிறுவிச் சிவன்வடி வாகித்,
தாக்குவை மூலம்; நோக்குவை அதீதம்,
போக்குவை பிறவி, ஆக்குவை இன்பெனத்;
✓
தராப்புகு நாப்போல் சமனுற நிற்கும்
இராப்பகல் அற்ற இடத்தே இருத்தி,
நலம்படர் சோதி நடனகுஞ் சிதத்தாள்
சிலம்பொலி கேட்கும் திறம்பா லித்தான்;
மயல்பொறி புலன்வாய், மனம்புகு நனவில்;
✓
இயற்றிடு தவங்கள், இயமநிட் டையதாம்
சார்பொறி விடுத்த சாக்கிரக் கனவு,
சேர்தரு கருத்தால் செய்தவம் நியமம்;
நீங்காக் கரணம் நீங்கவே, நனவில்
தூங்காத் தூக்கச் சுழுத்திஆ சனமாம்;
✓
அறிந்து தொண்ணூறும் ஆறும் வே(று)ஆக்கிப்
பிறிந்து,தற் கண்டு, பிரமமே தானாய்ச்
சாதனம் விடுத்த சாக்கிர துரியம்;
பேதமற்(று) இருக்கை, பிராணா யாமம்,
சான்றுசாக் கிரம்போய்த் தான்இருந் தமையும்
✓
தோன்றிடா(து) உலகைச் சுழற்றும் கால்போல்,
பறந்திடும் காலால் பரமறந்(த) அளவில்,
பிறந்திடும் அதீதம் பிரத்தியா காரம்;
வான்எனும் அகண்ட வடிவுகண்(டு) எங்கும்
தான்என்(று) இருக்கை தாரணை ஆகும்;
✓
காட்சிகள் அனைத்தும் கண்ணதாய் விளங்கி,
ஆட்சியின் அமைந்த(து) அதுவே தியானம்;
தற்பதம், தொம்பதம், சார்ந்திடும் உபாதி
கற்பனை தீரக் கண்(டு)அசி பதமாம்
சச்சிதா நந்த சமரச நிலைதேர்ந்(து)
✓
உற்றசிற் பதம்பெற்(று) உறங்குதல் சமாதி
மன்னிடு சாம மறைஉப நிடதம்
சொன்ன வாக்கியத்தின் தொகைஇதே; ஞான
யோகஎட்(டு) அங்கம், உண்மைநீ உணர்தி,
ஏகசா ரூப்பியம் இதுஎன மொழிந்தான்,
✓
சரியை கிரியை தருக்கமா யோகம்
சுருதியின் முறையே தொடங்கிய அனைத்தும்,
நான்எனும் போத நாட்டமே அன்றி,
ஈனம்இல் உணர்வுக்(கு) இன்பம் காணேன்;
என்றுநான் வினவி இறைஞ்சலும் நகைத்து
✓
நன்றென மொழிவான், ஞானம், உரைக்கில்
பாச ஞானம், பகர்பசு ஞானம்.
ஈச ஞானம் என்னமூன்(று) உளவாம்
அதுகேள், பாசம் ஆவது ஆணவம்
மதிமயல் கன்மம், மாயை இரண்டும்,
✓
தெருமரல் காட்டும் கருமமும், திரோதையும்,
மருவிடும் பஞ்ச மலங்காண்; இதனை
ஆ(சு)என உணரா(து) அகம்என இருக்கை
பாச ஞானப் பண்பது ஆகும்
தரும்பசு ஞானம் சாற்றுதும் கேண்மின்
✓
வரும்பவம் மூட்டும் மலம்ஐந்து; அவற்றின்
ஆணவம் ஒன்றும் அகலா மையினால்,
காணுறும் விகடக் கருவிகள் தீர்ந்து,
தன்னை உணர்ந்து, தானே பிரமம்
என்னக் கருதி இருப்ப(து) ஆகும்;
✓
பதிஞா னத்தைப் பகருதும்; அகம்கூர்
மதிஞா னத்தால், வரும்பவம் ஒழியா(து)
ஆகையால், அருள்புக்(கு) ஆணவம் ஒழிந்திட்(டு,)
ஏகமாம் இன்பத்(து) எய்துவது ஆகும்;
தத்துவம் முழுதும், சடம்எனக் காணா(து)
✓
இத்தைநீ நடத்தற்(கு) இறைவனோ? அல்லை,
அறிவனும் அல்லை, அறியான் அல்லை;
செறிஅருள் காட்டத், தேர்ந்துகாண் பவன்நீ;
யாதுசார்ந் திடினும், யான்அது என்னும்
போதம்நின்(று) உணர்வு புகன்றிடிற் சிறிதாம்;
✓
மறைத்திடும் மூல மலத்தினால், பாசச்
சிறைக்குளே கிடந்து, தேகம்நான் என்று
வல்வினை புரிந்து மயங்கினை; அந்தத்
தொல்வினைப் பயன்கள் கூட்டினம்; இப்பால்
இருவினை ஒப்பு, மலபரி பாகம்;
✓
திருவருள் பதிக்கத் தேடிவந் தனம்யாம்:
மே(வு)ஒரு மலத்து விஞ்ஞானா கலர்க்(கு)
ஓவறு முத்தி, உணர்வில் நின்(று) அளிப்போம்;
பெரு(கு)இரு மலம்கொள் பிரளயா கலர்க்கு,
மருவுநன் மூர்த்தி வடிவுகொண்(டு) அருள்வோம்,
✓
மும்மலம் உடைய சகலன்நீ மொழியின்;
அம்மலம் நீக்கி ஆட்கொண்(டு) அருள,
மானைக் காட்டி மான்பிடிப் பவர்போல்,
மானுட வடிவாய் வந்தனம்; தெள்நீர்
மீனது போல, விழியுற நோக்கி;
✓
ஆன(து)ஓர் கமடம் போல்,அகத்(து) உன்னிப்;
பறவை போலப் பரிசம் செய்து:
திறமிகு முந்நூல் தெளிவுரை பகர்ந்து:
பக்குவத்(து) அடைவே பாலித்(து) அருள்நீ
புக்கிட வேண்டிப் போந்த(து) என்(று)இசைத்தான்
✓
பற்பல சமயப் பகுதிசேர் நிலையும்,
சொல்வகை மறப்பும் துகளற மொழிந்தான்;
தெய்வம் சிவமே; சிவனருள் சமயம்
சைவம், சிவத்தொடு சம்பந்தம் என்றான்;
பூதம் பழித்துப், பொறியற உணர்த்தி,
✓
வாதமாம் கரண வல்லபம் நீக்கிப்,
பித்துறும் கலாதிப் பிணக்(கு)அற விடுத்துச்,
சுத்த தத்துவம் தூடணம் ஆக்கி,
முப்பது முப்பது முப்பதோ(டு) ஆ(று)எனச்
செப்பும் கருவிகள், சேரா(து) அகற்றித்;
✓
துன்னிடும் அத்துவா சோதனை கண்டு,
தன்னை உணர்ந்(து) தனித்(து)இருள் நீக்கி,
யாம்ஆம் உலகம் அனைத்தினும், சாட்சி
நாமே என்னும் ஞானமும் கடந்திட்(டு)
அண்ட பிண்டம் யாவும் தோன்றா(து)
✓
உண்(டு)எனும் உணர்வு(டு) உறக்கமும் விட்டு;
விசுவக் கிராசம், வீ(று)உப சாந்தம்,
அசிபதம் குறிக்கும் ஆசையும் தீர்த்துக்;
கால்புகா இடத்தில் கறங்காத் தீபமும்,
மேல்விசை தீர்ந்து வீழ்ந்தபம் பரமும்,
✓
சித்திர வடிவும், திரைதீர் புனலும்,
ஒத்தவந் நிலைசார்ந்(து) ஒளிஅருள் நோக்கி,
என்செயல் ஏதும் இல்லையென்(று) எய்து
தன்செயல் நோக்கிச், சார்கென மொழிந்தான்;
சும்மா இருக்கச் சொன்ன(து)ஓர் வார்த்தை,
✓
அம்மா அதிசயம், ஆருடன் புகல்வேன்?
கரைசேர்த்(து) அருள்வான் கருணையை நோக்கி
இரைதேர்கொக்(கு) ஒத்(து) ஏ(சு)அறஇருந்தேன்
என்செயல் அகன்றேன்; யான்அற, ஈசன்
தன்செயல் நடக்கும் தன்மையும் கண்டேன்
✓
ஆத்துமிகத் தோ(டு) அடைதரு பௌதிகம்
போற்றுதெய் விகம்இவை புரிவதும் கண்டேன்;
புலக்கணக் கதவு பூட்டினேன்; சிந்தை
அலக்கண் தீர்ந்த அறிவையும் கண்டேன்;
பொறிபுலன், கரணம், பொருந்திடும் கலாதி
✓
அறிகரு விகள்போய், அடங்(கு)இடம் கண்டேன்
தாழும்என் இழப்பில், தயங்குறு விளக்கின்
சூழூறும் ஒளிபோல், துலங்குதல் கண்டேன்
பஞ்ச வருணப் படம்விரித் ததுபோல்,
விஞ்சுபல் சோதி விளங்கிடக் கண்டேன்;
✓
சித்திர படத்திற் சேர்பல வடிவம்
ஒத்த அநேகம், ஒளிக்குளே கண்டேன்;
பஞ்சமூர்த் திகளும், பஞ்சசத் திகளும்
விஞ்சைபோல் ஒளிக்குள் வெளிப்படக் கண்டேன்;
மண்ணொடும் கடம்போல் வரைமா திரங்கள்
✓
எண்ணில் புவனமும், என்னுளே கண்டேன்,
எழுவகைத் தோற்றத்(து) இயைந்தபல் உயிரும்,
வழுவறச் சோதி வான்இடைக் கண்டேன்,
தன்னுளே சகமும், சகத்துளே யானும்,
பின்னமற்(று) இருக்கும் பெற்றியும் கண்டேன்;
✓
பளிங்கு போலப் படரொளி விந்து,
விளங்குவெண் மதிபோல் வெளிப்படக் கண்டேன்
பருதி போலப் படரொளி தோன்றி,
ஒருபது நாதம் ஒலிக்கவும் கண்டேன்;
அக்கினி போலும், அனந்தமீன் போலும்
✓
தக்கபே ரொளியாய்ச், சராசரம் அனைத்தும்
புரந்தருள் அகண்ட பூரணம் ஆகிப்
பரந்தசெஞ் சுடரைப், பரையெனக் கண்டேன்;
அருள்பரை ஒளிக்குள் அழுந்தும்அந் நேரம்,
உருக்கமும், கண்ணீர் ஒழுக்கமும், திகைப்பும்,
✓
கம்பமும், புளகமும், களிப்புடன் நகையும்,
சிம்புள்போல் வலியும், சித்தியும் கண்டேன்;
மேலுள விஞ்சை விதிநெறி விடுத்த
பாலன்,உன் மத்தன், பக்குவம் கண்டேன்;
ஓங்கும் பரைக்குள், உள்ஒளி ஆகித்
✓
தேங்கும் ஆநந்தச் செழுஞ்சுடர் கண்டேன்;
உள்ஒளிக்(கு) உவமை, ஒன்றும் காணேன்;
விள்ளவும் தரமோ? மீமிசை விளங்கித்
தெளிபடும் சுடரைச், சிவமென்(று) உணர்ந்து,
களிபடும் ஞானக் கண்ணினால் கண்டேன்;
✓
பார்த்திடும் என்னைப் பசையற விழுங்க,
ஆர்த்(து) அதில் வீழ்ந்துற்(று) ஆநந்தம் ஆனேன்:
தன்னைத் தந்தான், என்னைக் கவர்ந்தான்;
பின்னைப் பெறும்ஓர் பேற்றையும் காணேன்:
சுயம்பிர காசம், சொரூபா நந்தம்
✓
இயம்புதற்(கு) அரிதாம், இன்பப் பெருக்கம்;
தாள்தலை போலும், கால்தலை போலும்
கூடலை என்னால் கூறவும் படுமோ?
பேய்பிடி யுண்டான் பெற்றி போலச்
சாய்படு கருவிச் சங்கமும், நானும்,
✓
பகலோன் வெயிலிற் பாயிருள், விண்மீன்,
சகசமாய்க் கலந்த தன்மையும் பெற்றேன்;
காந்தம் இரும்பும், கனல்படும் இரும்பும்,
வேய்ந்த இந்தனமும் வெந்நீர் உப்பும்,
குளிகைபொன் மதுரம் கொண்டநா என்னத்,
✓
தளிவிடா(து) என்னைத் தடுத்தாட் கொண்டான்
விண்டேன் பிறப்பை; வேதா கமத்தோர்
சண்டை தீர்ந்து சமரசம் ஆனேன்:
திருமலி செந்தூர்ச் சேவல் பெருமான்
நிருமல ஞானம் நிகழ்த்தி, ஆட்கொண்ட(து)
✓
இவ்வணம் தமியேற்(கு) இருநிலப் பரப்பில்
அவ்வவர்க்(கு) அளிக்கும் அருள்நெறி உணரேண்
ஆகையால், இந்த அருள்பெறல் வேண்டின்,
ஓகையால் திருச்செந் தூர்இடத்(து) ஏகிக்
குமரவேள் சரணம் குறித்துமா தவத்தீர்!
✓
நிமலமெய்ஞ் ஞானம் நீவிரும் பெறுவீர்;
உத்தமர் ஆவீர்; உண்மையீ(து) என்று
சிற்றம் பலவன் செய்யுளால் புகன்றான்.