முருகன் App
கைலாச வாகனத்தில் கந்தா வா வா
ந. சுப்பிரமணியம்
வெண்பா1 / 3
கைலாச வாகனத்தில் கந்தா வா வா · ந. சுப்பிரமணியம்

வெண்பா

1✓
கைலாச வாகனத்திற் கந்தன் எழுந்தருளி
மெய்யாகக் காட்சிதர வேலேந்திக் - கைலை
மலையைத் தலைவணங்கா மானிடர்கள் யாரும்
தலையில்லாத் தாவரமே தான்.
2✓
மின்னொளிகள் பூட்டி மிளிரும் மலைமேலே
பன்னிரண்டு கையான் பவனிவரத் - தன்னிரண்டு
கண்களிலே கண்ணீர் களிப்பினிலே சிந்தாதார்
கண்ணிருந்தும் கண்ணிலரே காண்.
3✓
வானுயருங் கைலாச வாகனத்திற் கந்தப்பன்
ஞானவேல் ஏந்திவர நல்லூரில் - தேனாம்
கயிலை மலையதனைக் கைகூப்பிப் போற்றார்
பயனில்லாக் கையோரே பார்.
4✓
நல்லூர் முருகையன் ஞான ஒளிவீசிப்
பல்லா யிரர்முன் பவனிவரச் - சொல்லாலே
வாயார வாழ்த்தி வலம்வந்து பாடாதார்
வாயிருந்தும் வாய்பேசா மாடு.
5✓
மலைகீழ் நசுங்கிடினும் மன்னனிசை மீட்கும்
தலையான காட்சியினைச் சாற்றும் - மலைகைலை
வாகனத்தில் ஏறும் வடிவேல் வணங்காதோர்
தேகம் சவமே தெரி.
6✓
நந்தி மிருதங்க நாதம் முழங்குவதைக்
கந்தன் அருகினிலே கண்ணுற்றும், - வந்தனைசெய்
கூட்டம் கவியிசைப்பக் கூர்ந்து செவிசாய்க்க
நாட்டமிலார் காதற்றோர் நம்பு.
7✓
அட்டாங்கம் பஞ்சாங்கம் ஆகும் நமஸ்காரம்,
தொட்டு வணங்கல், துதிபாடல், - விட்டுக்
கடலை கொறித்துக் கடைவீதி சுற்றல்
சுடலைக்கும் ஏற்குமோ சொல்லு.
8✓
வீணான பேச்சு, விளையாட்டு, காமுறுதல்,
காணாமற் கன்னியர்க்குக் கண்ணடித்தல், - நாணாமற்
கையாற் றிருடுவது, கைலாச வாகனத்தை
நையாண்டி செய்வதே நம்பு.