முருகன் App
கந்தர் கலித்துறை
வை. தங்கமணி
நூல்3 / 3
கந்தர் கலித்துறை · வை. தங்கமணி

நூல்

5✓
முருகா! கயிலை மலையின் கொழுந்தே! பழியழிக்க
வருவாய்! வளரும் தமிழால் துதிக்க உனதுமனம்
உருகா திருப்பது வோமுறை! நாளும் நினதடியை
மருவா திருப்பின் வழியிலை என்றன் மனத்தினுக்கே!
6✓
மனமெனும் பொல்லாக் குரங்கை அடக்கும் குருபரனே!
தினமுனைப் பாடிப் பரவினன் என்றன் உளமதிலே
உனதடி வைக்கத் தடையது யாது தமிழ்வலவ!
கனிதமிழ்ச் சொல்லால் அழைப்பதால் ஓட வழியிலவே!
7✓
வழிபா டுனக்குத் தொடர்பே அதனால் மனமிளகி
அழிபா டிலாத மொழியா லுனக்கு நறைதொடையல்
தொழுது படைத்த தமிழுக் கிரங்கிப் படையுடனே
வழுவா தெழுந்த முருகன் எனக்கும் நலந்தருமே!
8✓
தருகென வேண்டின் தருவாய்! கொடுக்கும் குலமுதல்வா!
பருதிகண் டோடும் இருளென முன்வினை ஓடிடவும்
பருகிடும் நோயும் பசியும் அனைத்தும் விழியொளியால்
உருகிடச் செய்வாய் பழமே பழனித் திருமலையே!
9✓
மலையுறை தேவா கொடுமைகள் செய்த அரக்கனுடன்
மலைந்துநீ விண்ணவர் துன்பம் அகற்றி நலமவர்க்கு
நிலைத்திடச் செய்தனை! இப்புவி மக்கள் கலியறிந்தும்
கலையிலா மாந்தர் நிலையினில் நீயும் இருப்பதென்னே!
10✓
இருப்பதும் உண்டு! மனத்தினில் நித்தம் உனதடியை
ஒருமுறை யாகிலும் எண்ணி அனுதினம் நோற்றிடுவார்க்(கு)
அருகிடும் புந்தியால் யான்என தென்பவர்க் கெப்படியும்
இருப்பதும் இல்லைநீ சண்முகா! என்றன் பிணியகற்றே!
11✓
பிணியத னால்வாடு கின்றேன் முருகா அலைகடலுக்
கணிமையில் நின்றாய்! நிதமுனைக் கேட்டோர்க் கிடர்தவிர்த்தாய்
துணிவுடன் ஏத்திப் பணிவுடன் நின்றேன் அரவணைப்பாய்
பணியணி முக்கண் மகனே ஒறுத்தல் முறையிலவே!
12✓
முறையது கேட்டும் வினவா திருக்கும் வழியதனை
முறையாய் அறிந்தேன்! மருங்கினில் கொண்ட வடிவுடைய
நறைத்தமி ழன்ன வனிதைய ராலே எனைமறந்தாய்
துறைத்தீந் தமிழை முறையாய் உரைத்தோய் அடைக்கலமே!
13✓
அடைந்திட மாங்கனி ஆசையில் வந்தாய்! கரிமுகனார்
இடையினில் கண்டு கலங்கி நனிமிகு கோபமுடன்
புடைபெயர்ந் தாயே! நலந்தரு வெள்ளி மலையுறைவோய்!
கடையரும் சொல்லும் ‘சினந்தவிர்’ யாதுநீ சொல்லுவதே!
14✓
சொல்லுதும் கந்தா! முனியாது கேட்டெனை ஆண்டருள்க!
வல்லவா ‘பெற்றோரே காசினி’ என்பதை எண்ணிடாது
தொல்லுல கைவலம் வந்தநீ அன்று பிரணவத்தை
ஒல்லையில் தந்தைக் குரைத்தனை என்பதும் எப்படியே!
15✓
எப்படி யாகிலும் என்றனை யாட்கொள வேண்டுமையா
தப்பது பிள்ளைகள் செய்யினும் தாயவள் தண்டனையை
எப்படி நல்குவள்! என்றனுக் குத்தாயும் தந்தையும்நீ!
கப்பிடும் வல்வினை கொன்றவா என்னை அணைத்தருளே!
16✓
அணைத்தெனை யாண்டருள் வெள்ளி மலையுறை வேலவனே
துணையெனக் கேதுமில் நின்னடியன்றி; விரைவுடனே
புணையதாய் வந்தெமைக் காத்திடு! உன்றனைப் பாடவும்
இணைமனை யாளொடு நின்படை வீட்டையும் பாடிடவே.
17✓
பாடிப் பரவின கீரனுக் குப்படை வேலுடனே
நாடி விரைந்தவண் சென்றுநீ இன்னலை நீக்கிவிட்டாய்!
வாடி வதங்கிடும் நானுமே உன்னடி பாடுகின்றேன்
ஓடி வருகவே உன்னடி என்முடி சேர்ந்திடவே!
18✓
சேர்ந்திட வேண்டும்நான் உன்பதம் வெள்ளி மலையுறைவோய்
சீர்பெறும் நாட்டினில் ஒக்கும் பிறப்பதெல் லாவுயிர்க்கும்
பேர்பெறும் ஆண்டான் அடிமைகள் என்னும் இருபிரிவாய்
யார்படைத் தார்குகா? தேவையோ இச்செயல் இப்புவிக்கே!
19✓
இப்புவி மாந்தர்கள் இன்னலு டன்பசி யாலுமவர்
கப்பிய வஞ்சகர் கைத்தலம் பட்டுக் கதிகலங்கி
எப்படி வாழ்வது கந்தா? கடம்பா எனவவர்கள்
செப்பிய சொல்லும் புகுந்ததோ? ஓடிவா வேலுடனே!
20✓
வேல்விழி மாதர்கள் வள்ளிதெய் வானையும் மஞ்ஞையொடும்
மால்தவிர் வாரணம் வாம நெடும்புய கைகளுடன்
பால்வடி வும்முகம் பங்கய மாமலர் பாதமுமே
மேல்வழி காட்டிடும்! காண வருகுவீர் மானிடரே!
21✓
மாந்தர் களேசிவ செல்வனைப் பாசமாய் வேண்டுவதால்
சாந்தந் தவழும் முகமும் மதியும் திருவுடனே
ஈந்து மகிழும் இனிய பெருமையும் இப்புவியில்
மாந்து விரோதுக செந்தமிழ் வித்தகன் நற்பெயரே!
22✓
நற்பெயர் நாவால் நவிலுவ தின்பம்; நலிவழியப்
பொற்பதி போற்றிப் புகலுவ தின்பம்; பொழுதுமவன்
நற்பணி யேத்தி இயம்புவ தின்பம்; முருகனென்றால்
நற்கதிர் முன்னர்தன் புல்பனி போல்வினை ஓடிடுமே!
23✓
ஓடியே வந்தேன் உனதெழில் கண்டு மனமகிழ்ப்
பாடியே யுன்னைப் பணிந்திட முத்தமிழ் பெற்றிடவும்
ஓடிவா என்னுள் வினையகல் வெள்ளி மலையுறைவோய்
ஆடிய மஞ்ஞையில் ஏறிய கோலமே கண்டிடவே!
24✓
கண்ணுள் புகுந்தென் கருத்துள் நடமிடும் வேல்முருகா!
எண்ணும் பொழுதில் விரைந்திவண் வந்து நலந்தருவித்
தெண்ணும், எழுத்தும் இனிதா‌ய் எனதுளம் நின்றிடச்செய்
தண்ணடி பற்றும் அடியவர் உள்ளத் துறைபவனே!
25✓
உறையிமம் கூடும் உளர்சிவை நின்று நலிவழிக்கும்
கறைமிடற் றண்ணல் உலகவர் துன்பம் இரிந்திடவும்
நறைவடி சோலைப் பதிகளில் தங்கப் பணித்தனனே
மறையது போற்றும் மயிலுடன் நீயெமை ஆண்டருளே!
26✓
ஆனினம் நீருணப் பொய்கையுள் சென்றிட அங்கிருந்த
மீனினம் அஞ்சி வெருவிக் குதித்துமே அங்குநின்ற
தேனினம் சொட்டும் பலவின் கனிகளை வீழ்த்தவந்த
ஆனினம் ஓடிட மீன்மகிழ் கந்தன் கலைமலையே!
27✓
கண்பெற் றவரெனின் கந்தனைப் பார்த்து மகிழவேண்டும்!
பொன்பெற் றவரெனின் ஏழைகள் இன்னலைப் போக்கவேண்டும்!
பண்பெற் றவரெனின் பாடி யுருகிப் பரவவேண்டும்!
திண்பெற் றவரெனின் பொற்பணி போற்றி யிருப்பதுவே!
28✓
இருப்பதும் சின்னாள் அதற்குள் கடலெனப் பாவமதைப்
பெருக்கிடச் செய்தல் பிறவிகள் கூடும்! உடனதனால்
முருகனின் நன்னடி பற்றி அவனின் திருப்பெயரை
ஒருமுறை ஓதின் ஒழிந்திடும் தொல்வினை நாட்டவரே!
29✓
நாட்டில் நலந்தரு நல்மனை இல்லாள் புதல்வரொடும்
கோட்டி இலாதிரு வீரமும் பெற்றிடும் மன்னரேனும்
காட்டில் வதிபவர் ஆயினும் வல்வினை நீக்கிநல்ல
வீட்டின் இடந்தரும் வேலன்கை வேலன்றி யாதுவேறே!
30✓
யாது மறியாது நொந்து மனமிக வாடிடநான்
மாது புணர்ந்து மகிழ்ந்து படையுடன் நிற்பவரே
காது செவிடோ? முறையது கேட்க மனமிலையோ?
போது பதமதைத் தந்தெனை யாட்கொள வேண்டுமையே!
31✓
வேண்டுவ தொன்றுண்டு வேலவ! கள்வடி சோலைமலி
மாண்புறு குன்றம் பழநியில் நீயே தனிமையிலே
ஆண்டியாய் நின்றாய்! உலகினில் யாதும் நிலையிலவே
காண்மனி தாவெனக் கூறவோ நின்றாய் தமிழ்ப்பழமே!
32✓
பழமுதிர் சோலைப் பழமே தமிழே பெருநிதியே!
பழநநி லங்களும் முக்கனி நல்கும் முதுநிலமும்
அழகுறச் சூழ்ந்த பதியது வெள்ளி மலையதனில்
தொழுதிட நின்றாய் வடிவேல் குமரா குருபரனே!
33✓
குருவாய் படைத்தற் றொழிலதைக் கொண்ட பிரமனவன்
மருவா தவனே படைத்திட நையப் பிணித்தவர்க்கும்
குருவாய் இலங்கும் குருவே! உலகினில் உனதுநெறி
பெருக அடியவர் உள்ளில் நிறைந்திடும் நல்லறிவே!
34✓
அறிவினுக் கேற்ற அறிவாய் இலங்கும் தலைநிலத்தோய்!
வறியவர் செல்வர் அறமறம் யாவும் எவர்படைப்பு!
அறுமுக மக்கள் அறிவால் விழைந்த பிழையெனலோ!
அறிவுடை யோர்கள் அறிந்திட உன்னையே எண்ணுவரே.
35✓
எண்ணியே பன்முறை கட்டிட எண்ணினம் நின்றிடாது
கொண்டலெ னத்திரி யுன்றனைச் சேர்ந்திடத் திட்டமுடன்
தண்டமிழ்ப் பாவினால் கட்டினன் கந்தா பிழையொதுக்கி
அண்ணலே காத்திடு! பேதையேன் உன்னடி சேர்ந்திடவே!
36✓
சேர்மதி கொண்ட சிவனுடைச் செல்வன் திருப்பெயரை
ஓர்தலாய் எண்ணி இயம்பிடில் வந்த வினைகளுடன்
ஆர்வமாய் நம்மை அணைந்திடும் கேடும் அகன்றுநிதம்
சீர்பெறும் வீடும் சடுதியில் நம்மை யணைந்திடுமே!
37✓
அணைப்பதும் உன்செயல் காப்பதும் உன்செயல் காத்திடவே
பணைப்புயச் செல்வ கயிலையின் கண்ணே துயரெனக்கே
இணைத்தது போதும் பொறுத்திடேன் கட்டி அணைத்தெனக்குத்
துணையுடன் வந்தென் பிறவி அறுத்திடு வேல்முருகே!
38✓
வேல்கொண்ட வேலவா! பாரினில் மானுடன் பெண்ணொருவர்
வேல்வீச்சைத் தாங்கிட மாட்டாது நிற்பதும், நித்தமுன்னில்
மால்கொண்டு வள்ளிதெய் வானையும் தாக்கிடும் வேற்கணையை
நால்வாயன் தம்பியே எப்படித் தாங்குவாய் செப்புவாயே!
39✓
செப்புவ துன்றன் தொழிலினை என்னால் இயன்றிடுமோ?
அப்பனே கேட்கப் பிரணவம் கூறிய சான்றவனே!
எப்படிச் செப்பினை ஒப்புமோ இப்புவி! தப்பதுவோ!
செப்பமாய் இங்கு நவின்றிட யாருக்குங் கூடிடாதே!
40✓
கூடிட வேண்டியே வள்ளியை நீயும் கரிமுகனை
நாடிய வேலவா நல்லறம் இன்றி இடர்புரிந்த
கோடிய எண்ணத்தால் கொள்கையில் சூரனைக் கொன்றசெயல்
கோடியே! வீரரெ னின்றுணை வேண்டுமோ? விந்தையிதே!
41✓
விந்தம் உடைத்துநக் கீரனைக் காத்திட வந்தகுகா!
சந்தம் மிகுதமிழ் இன்னிசைப் பாட்டதைக் கேட்டிடத்தான்
வந்தாய்! அலாத பிறஅழைப் புக்கு வருவையோநீ
கந்த மிகுமலர் சோலை நிறைந்த மலையரசே!
42✓
மலையெலாம் உன்றன் தலமெனக் கொண்டு நடைபயிலும்
கலைவிழி வள்ளி மனங்கொள் கணவ! மனத்தினிலே
நிலைபெற நின்று கனிதமிழ் தந்து பலவளமும்
நிலைத்திடச் செய்வாய் உனைநான் மறவேன் மனத்தகத்தே!
✓
மனத்தாலே எண்ணிநல் வாயால் இயம்பிப் பொழுதுமவன்
கனிவான தோற்றமும் கண்டு நெகிழ்ந்து துதிப்பவர்க்கே
இனஞ்செய்த பாவம், இடர்யாவும் நீக்கி மலைக்குமரன்
இனிதான வாழ்வைத் தருவான் துதியுங்கள் முத்தியாமே!
44✓
முத்தனின் கண்வந்த கந்தா! கயிலை வளர்கொழுந்தே!
பத்தியாய் நாரதன் செய்வேள்வி வந்த தகரதனை
அத்தமே கொள்ள வலியழித்தாய்! பாரில் இத்தகர்போல்
எத்தனை! எத்தனை! மாய்த்திட இங்குநீ ஓடிவாவே!
45✓
ஓடித் திரிந்த முகிலதைக் கூட்டியே கூலமாக்கிப்
பாடிப் பணிந்திடச் செய்தவன் தேவிக்குப் பாதியீந்தான்!
பாடி மனைகளில் வெண்ணையை வவ்வியோன் மார்பு மீந்தான்
நாடி மணந்தநீ எவ்விடம் நல்கினை செப்புவாயே!
46✓
செப்பு நகிலவள் வள்ளியின் உள்ளம் நிறைந்தவனே!
உப்புக் குறைந்திறும் பண்டமாய் ஏழைகள் இப்புவியில்
ஒப்புச் சொலாத்திருக் கொண்டவர் செய்திடும் இன்னலதால்
வெப்பு நாகென வாழ்வதை நீக்கிடு தண்ணியோனே!
47✓
தண்மதி வேணியில் தாங்கியோன் வெள்ளி மலைவதியும்
கண்மணி வாவெனக் கட்டி அணைத்துமே முத்தமிட
ஒண்ணகை அன்னையும் அச்செயல் செய்திட! ஊடலற
எண்ணியே நீங்க இருவரும் கொள்ள நகைப்பவரே!
48✓
நகையை நகையாய் அணிந்த குறமகள் வள்ளியவள்
‘பகையை அழித்துப் பதந்தரு பாதம் கழுவுதலே
தகைமை’ எனவே நினைவது கொண்டிட வள்ளியாறு
வகையாய் நனைக்கும் வளமிகு வெள்ளிச் சரவணனே!
49✓
சரவணா! சண்முகா! உன்னை மனத்தாலும் எண்ணிடாத
உரம்பெறு சூரனை எண்ணி வியந்திடப் பேரெழிலை
உருவுடன் காட்டினாய்! நாயினேன் எண்ணாத நேரமில்லை
பரிவுடன் என்னிடர் போக்கிட உன்னெழில் காட்டுவாயே!
50✓
காட்டிலே வந்து கொடியதோர் பாலை நிலத்தையுமே
வீட்டருள் உன்பதம் பட்டதும் கெட்டது பாலைநிலம்
நாட்டினில் எங்கணும் நோக்கினும் நீரின்றி வாடிநிலம்
வாட்டிவ தைக்குதே கந்தனே பண்ணையதாக்குகவே!
51✓
ஆக்குவ துன்செயல் என்னை அணைப்பதும் நீயதனால்
தூக்கிடும் கைதனில் வேலுடன் வெள்ளி மலையதனில்
நீக்கமில் நிற்போய் உனதடி பற்றினேன் ஐயனேயென்
போக்கிடு துன்பத்தை! போக்கிடம் வேறிலை என்றனுக்கே!
52✓
என்றனு ரையே இறையவர் யாத்த பனுவலுக்குச்
சந்தமும் சீர்த்தியும் பெற்றதென் றெண்ணிய கற்றவர்முன்
முந்தியே மூங்கையாய் வந்து முழுப்பொருள் தந்தவனே!
செந்தமிழ் வித்தகா என்றமிழ் கேட்டிட வந்தருளே!
53✓
வந்தருள் என்னை அணைத்தருள் கந்தா எனவெருவி
நொந்துசற் புத்திரன் கூவ விரைந்து குபகரிக்கு
முந்திய தோற்ற மளித்தாய் சரவண! இப்புவியில்
அந்தமே நல்கும் பசிக்கரி மாய்த்திட மஞ்ஞையேறே!
54✓
மஞ்ஞைசெ லுத்திடும் வெள்ளி மலையுறை வேலவனே
அஞ்சிய கேடனின் சிந்தையில் தோன்றிச் செருவழிக்க
விஞ்சிடும் மந்திரம் கூறி மறைந்தவா என்றனது
வெஞ்சுர வாழ்வினை நீக்கிடக் கூறிடு மந்திரமே!
55✓
மந்த மகற்றி மனத்தைக் கவர்வதில் ஒப்புமையில்
சந்தத் தமிழினைக் கேட்டிடக் காட்டினை நல்சிகண்டிக்(கு)
என்றன் நிலையை உணர்ந்து சிவதா ணுவையளித்தாய்
சந்த மிகுதமிழ்ப் பாவல உன்னை வழுத்துவனே!
56✓
வழுவில் நிதியாம் உனதடி பற்றிடா திவ்வுலகில்
புழுவாய்க் கலிதரு மண்பெண் இணைந்த பொருட்களிலே
கொழுக்க நினைந்து கொடுமைகள் செய்வோர் மனமழிய
எழுக! வருக மயில்தனில்! ஞானச் சிவமகனே!
57✓
சிவனைத் துதித்திடும் வாயால் உனதடி பாடுவதில்
சிவனின் மகனே அறைந்தனன் பொய்யா மொழியவனின்
நவர சமிகு தமிழ்ப்பா மடுக்கவே வேடனானாய்
அவமோ எனது கவியினைக் கேட்க வருவதுவே!
58✓
வருந்தினான் தாரகன் செய்ததோர் தீமையை எண்ணிநிதம்
திருமகள் கொண்கனும் அன்னவர்க் காறு முகமதுமே
வருமெனச் சொல்ல! உதவிய கந்தா! உனதடியை
விரும்பியே கொண்டேன் வருவாய் விரைந்து நலந்தரவே!
59✓
நலந்தரு செல்வன் நலிந்திடச் செய்து பிரிந்ததாலே
புலந்துமே வாடினள் அண்ணலே பிள்ளை அருளெனவே
புலம்பியே நின்ற மகேசை மடியில் துயின்றவனே
இலமெனக் கேட்டும் அமைதியோ! ஓடிவா வேல்முருகே!
60✓
வேலின் வழியே பழிதீரும்; நல்ல தடம்புயத்தால்
காலன் பகையும் வரவஞ்சும்; ஆறு திருமுகமும்
மூலம் அறுக்கும் பிறவிக்கு; மென்மலர்ப் பாதமுமே
நூலின் இறுதி நலமுடன் சேர்க்கும் உணர்வுமுதே!
61✓
உணர்வெள்ளம் தேக்கி உடலெலாம் வாட்டிப் பகையைவெல்ல
மணம்வீசும் சோலை அணிசூழ்ந்த வெள்ளி மலையதனில்
அணியாக நின்ற குமரா பகீரதன் நோன்பிருக்கத்
துணையாக நின்றவா! தண்டமிழ் வெம்பகை நீக்கவாவே!
62✓
நீக்குக என்றுயர் என்றுனை வேண்டியும் கற்சிலையாய்
நோக்கிட நின்றனை! வஞ்சமும் பாவமும் செய்வதுதான்
ஆக்கமாய்க் கொண்ட கருணை இலாருக் கருளுவதன்
நோக்கமென் கூறுக! வெள்ளி மலைவாழ் சிவமகனே!
63✓
‘சிவமே முருகு! முருகே சிவமாய்’ பிரிவிலதாய்ப்
புவியில் இலங்கப் பழனியில் ஒன்றாய் உலகமெலாம்
உவந்தே புகழத் தனியாக வந்த அறுமுகனே
தவிக்கும் துயரை அகற்ற அருள்வாய் உடனடியே!
64✓
உடலதை வாட்டியே கூறிட்டா லும்நமன் ஆவிபற்ற
உடனடி வந்தாலும்; நீரில்லாக் காட்டினில் நின்றபோதும்
கடலதில் கற்கட்டிப் பூட்டிட்டா லும்நம் சரவணனின்
வடிபெயர் உள்ளில் நினைத்திடில் யாவும் பறந்திடுமே!
65✓
பறந்தலை யன்ன மனமே இருந்ததால் ‘வென்றிமாலை’
இறந்திட ஆழி நெருங்கிய போது விரைந்தவர்க்குச்
‘சிறந்திட எங்கும் கவியாய் விளங்குக’ என்றனையே
வறியனெ னக்கும் அருளுதி வெள்ளி மலையரசே!
66✓
மலையைச் சுழற்றத் துணையாய் இருந்த அரவுதனின்
ஒலியில் புரையை அகற்றிட வந்தாய் தமிழ்ப்புலவ!
மலநோய் பிடித்துத் துடியாய்த் துடிக்கும் அறிவிலியின்
கலிபுண் அகற்ற விரைந்து வருக மயிலுடனே!
67✓
மயில்மீது நின்று விளையாடும் கந்தா பகைமையற
அயில்வேலை நாளும் மறவா திருக்க மனதினிலே
முயல்வோரைக் காக்கப் படையோடு வந்து துணையிருக்கும்
தயவுள்ள எங்கள் தமிழ்த்தெய்வ மேவாழ்த்திப் போற்றுதுமே!
68✓
போற்றும் பணியே பணியெனக் கொண்டு தமிழறிந்த
ஆற்றல் மிகுந்தநல் ஒளவைக் கருளக் கனிகொடுத்துப்
பேற்றை யளித்த பழமே பழனி மலைவதிவோய்
சாற்றும் எனது பனுவல் தனக்கும் கனியருளே!
69✓
கனியிதழ்ப் பெண்ணின் கடைவிழி காட்டிடில் எச்செயலும்
இனிதுடன் செய்வர்! இடுக்கண் வரினும் துயரறியார்!
புனிதநற் செல்வி புரந்தரன் பெண்ணின் மனம்நெகிழ
முனிவுடைச் சூரனைக் கொன்றாய்! பிறிதிதற் கேதுவேறே!
70✓
யாதொன்றும் இல்லாத என்னையே பாடப் பணித்திடுதல்
தீதொன்றும் வாராது காத்திட நிற்பவா கந்தவேளே
போதன்ன மெல்லடி மாமறை போற்றிடும் பிஞ்சுகந்தன்
நாதம்நீ! நாடுவோர்க் கெல்லாம் கொடுப்பவா! விந்தைதானே!
71✓
விந்தை புரிந்திடும் ஆசையை விட்டவன் இவ்வுலகில்
கந்தன் துணையினால் இம்மையில் எல்லாப் பெருமைகளும்
வந்து நிலைகொளும்! கொல்கரி சென்றுணும் நல்வயல்போல்
சந்த மிழந்துமே யல்லவர் வாழ்வு துயர்படுமே!
72✓
துயரம் அழியும், பிறவியகலும், பிழைதவிரும்!
கயிற்றால் உயிரைப் பிணித்திடும் கூற்றதும் ஓடிவிடும்!
மயில்குயி லாலும் இளமரக் காவுறை ஆறுமுகன்
இயலை இயம்பிடும் பாட்டினைச் சொல்லிடில் இங்கிருந்தே!
73✓
இங்கிதம் பொங்கிடும் இன்றமிழ் நாட்டின் இயல்பொருவன்
தங்கிடும் தன்மையைச் செப்பிடில் நிற்றல் ஒருத்திமனம்
எங்குமே நிற்கும் இறைவா இருவர் மனதினிலும்
தங்குவ தெப்படித் தங்கினாய் வெள்ளி மலையரசே!
74✓
மலைகளில் தங்கிக் குறையதைப் போக்கும் குருபரனே!
கலைமலி யுன்றன் செயலதை நானே இயம்பிடிலே
மலைநறை யன்ன மனமெலாம் ஊறி உருவெடுத்துக்
கலியெனும் துன்பத் தடையதைப் போக்கி நலந்தருமே!
75✓
நலந்தரு கந்தன் பெயரை நினைப்பின் அனுதினமும்
உலகினில் சேராப் பெருநிதி சேரும் வியாதியதும்
இலையிலை! எப்போதும் துன்பம் அடையார்! பரகதியும்
நலமுடன் இன்றே இணைந்திடும் எண்ணித் துதிப்பவர்க்கே!
76✓
துதிப்பவர் உள்ளம் நிறைந்திடும் ஆறு திருமுகமும்
கதிபெற ஒன்றாய்ப் பலவாய் அருவுரு வாயிலங்கி
முதலகும் ஈறும் இலவாய் இயங்கி இயங்க வைக்கும்
மதிகொடு தேவே அடைந்தேன் அடைந்தேன் உனதடியே.
77✓
உனதடி யன்ன மலர்ந்திடும் ஆம்பலும் தாமரையும்
மனமகிழ் சோலை தடாகமும் முக்கனிப் பண்ணைகளும்
இனயினச் சாலியும் தென்னையும் கற்பகக் கூட்டமதும்
தனியெழில் சேர்த்திடும் வெள்ளி மலையுறை கந்தவேளே!
78✓
கந்தனே காலன் கடாவினில் ஏறி உயிர்பறிக்க
வந்திடு முன்னே அணிமயில் ஏறித் திருக்கரத்தில்
சுந்தர வேலுடன் வந்தெனைக் காத்திடு! சங்கமதில்
செந்தமிழ் ஆய்ந்தவா! என்னுரை கேட்டிடு வள்ளிகோனே!
79✓
வள்ளியின் உள்ளத்தைக் கொள்ளைகொள் கள்வனே! இன்றுவரை
துள்ளிடும் இந்நலம் பெற்றதில் என்னுடை வாழ்வினிலே
எள்ளலும் தொல்நகை பாவுமே வாட்டுதும் இன்னிலையைத்
தள்ளிட ஓடிவா! விண்ணவர் கேடதைத் தீர்த்தவனே!
80✓
தீர்ந்திட வல்வினை வேண்டுமேல் செவ்வேள் திருப்புகழை
ஓர்ந்துமே நீயும் இயம்புக! இல்லையேல் மங்கலநாண்
தீர்ந்தவள் வாழ்வென இப்புவி வாழ்வுனக் காகுமப்பா!
ஆர்ந்திடும் தண்டையும் வேலுதும் மஞ்ஞையும் சேவலுமே!
81✓
சேவலு டையவன் செங்கோடன் பொன்னடி போற்றிநிதம்
ஆவலாய் ஏழை அழிபசி நீக்கிடில் அச்செயலே
மாவலி கொண்டவன் காலன் உனைச்சேர வந்திடாமல்
தேவனெ னப்படும் பேற்றினைப் பெற்றிடச் செய்திடுமே!
82✓
செய்யவள் அன்ன தினைப்புன வள்ளியை வேட்டவனின்
நொய்மனம் கொள்ளும் வழியினில் நாடியே முத்தமிழால்
உய்யவ வன்பெயர் கந்தா கடம்பா எனவினைகள்
பிய்ந்திடும்! வேறெதும் நல்குதல் இல்லையாம் இச்செயலே!
83✓
இச்சை யுடன்வள்ளி கொங்கை விரும்பி மணமுடித்த
விச்சை யுடையநல் மங்கலச் செல்வனைப் போற்றிநிதம்
அச்சங் கொடுபொருள் நின்றிட ஈந்திடி்ல் பேறுகிட்டும்!
நச்சின் திருட்டில் கொடுத்து மயங்கி அழிபவரே!
84✓
அழிவிலாக் கல்வியைப் பெற்றாலும்; யாவும் அளிக்கவல்ல
வழுவிலாச் செல்வமே சேர்ந்தாலும்; நாட்டில் பேரரசாய்
செழுமையாய் வாழ்ந்தாலும் நன்றாம் பணிதல் பணிதலின்றேல்
உழன்றிட வேண்டும் உலகினில்! மக்காள் பணிகவின்றே!
85✓
இன்சொல் மொழிநவில் வள்ளியைப் புல்லும் வடிவுடையோய்
நன்மொழி பாட்டினால் சொன்ன அருண கிரிதனக்கு
நன்மை யடைந்திட மஞ்ஞையி லேறி யருளியவா!
இன்னும் தடையேன் எனக்கும் நலந்தர மால்மருகே!
86✓
மால்கொண்ட சூரனும் வெற்பும் அகந்தை அழித்தொழிக்க
வேல்கொண்டு தாக்கி மிசைநிலத் துன்பம் துடைத்தவனே!
நால்வாய்ப் பிடித்த கரும்பென மக்கள் இடரடைய
ஏர்கொண்ட செல்வா! எழுந்திரு நீக்கிடர் எம்பிரானே!
87✓
எம்மான் எனதுளம் நின்ற உமையாள் திருமகனை;
விம்மும் முலையாள் குறமகள் கொண்கனை; வானவர்க்கும்
இம்மா நிலத்தும் இறையை விழிகள் பலவனந்தம்
அம்மயி லேறும் அழகனைப் பார்த்திட வேண்டுவதே!
88✓
வேண்டிடும் போது வினையறத் தோன்றும் முழுமுதலே
மாண்டிட நின்றிடும் மக்கட்குச் செய்யும் உதவியதே
தாண்டிடும் வேலின் முருகன் தனக்கது செய்வதென
யாண்டறி வாரிதை! காசின் பெருமையைக் கண்டவரே!
89✓
கண்ணெனப் பேணிடும் பெற்றோரும் மற்றோரும் மக்களுடன்
தண்ண ளியாலென்றும் தாயாகக் காக்கும் மனைவிவிட்டு
வன்கான் புகுந்து வழிபடல் நன்றில்! மனையறத்தால்
கண்ணன் மருகன் இணைதாள் பணிதல் இனியதுவே!
90✓
இனிய கனிகள் உதிர அதனை உணவெனவே
நினைத்துக் குதிக்கும் வரால்மீனை நாரை எடுத்ததனை
மனதுக் கினிய மனையாட் கினிதாய்க் கொடுத்தணைக்கும்
கனிவாய் இனிக்கும் முருகனார் வெள்ளி மலையழகே!
91✓
அழகிய மாதர் கனிந்திடும் செவ்வாய் பணைநகிலில்
ஒழித்திடும் பாம்புப் படமது அல்குல் இடத்தினிலும்
அழியவே சிந்தை விடுத்த அருண கிரிதனக்கும்
பழவினை தீர்த்தாய்! அடியேன் பிழையா தருள்முருகே!
92✓
முருகா சிவனின் மகனே திருமால் மருகவனே
ஒருகை முகனின் இளையோய்! உடலம் இழைத்துமிக
உரம தகன்று நடைபிண மாக நலிதலுற்றும்
கருணை இலையோ! உடனே வருவாய் உதவிடவே!
93✓
உதவிட வேண்டும் குறத்தி மகளே உனதுசொலை
உதறிய தில்லை முருகன்! அதனால் எனதுநிலை
இதமுடன் உள்ளம் புகும்படி கூறி அருகிருந்து
கதிதரக் கூறு அருளுடைத் தாயே தமிழ்மகளே!
94✓
தமிழினால் உன்னைப் பழித்தாலும் பாச முடனருளும்
இமிழ்கடல் ஓரம் இணைந்த கரும்பே சரவணனே
எமதுடைப் பாட்டும் பழித்தலே யாயினும் வந்தெனக்கு
நமந்துயர் நீக்கா திருந்திடல் ஏதும் வழியிலையே!
95✓
இலையிலை என்றே இரப்பவர்க் கீயா இழிமனிதர்
நலமுடன் நல்ல நிலையுடன் நாட்டில் வாழுவதும்
தலந்தல மாக வணங்கியே வந்தும் இழிநிலைகள்
நிலைத்துமே துன்பந் தருவதேன் வெள்ளி மலையரசே!
96✓
மலைவாழும் செங்கோட! யாவர்க்கும் தெய்வமே! விண்ணிலுள்ளார்
தொலையாத துன்பத்தைப் போக்கச் சரவணப் பொய்கைதன்னில்
குலையாத ஆட்டமே ஆடிய மைந்தனே பாரிலுள்ளோர்
கலையில்லாத் தன்மையைப் போக்கிட ஓடிவா கந்தவேளே!
97✓
கந்தனே வெள்ளி மலைவாழும் ஒள்ளிய நற்சுடரே!
சந்தமுள் வேலதால் சூரனை வேலை வெற்புயாவும்
வெந்திடச் செய்தவா தெய்வானை வள்ளியும் சேர்த்தணைத்து
முந்தியே வந்தெனை ஆண்டிடு செந்தமிழ்ப் பாவலனே!
98✓
பாவலன் சூரனை வேரற மாய்த்தவன் வள்ளிபுணர்
காவலன் சொன்ன நெறிப்படி வாழ்பவர் வாழ்பவரே!
மேவலர் எல்லா வளமும் இருந்தும் படுதுயரம்
மேவிட இங்கு பிறந்தும் இறந்தும் அழிபவரே!
99✓
அழிவிலா வேலன் குமரன் தாணையி னால்தமிழை
வழங்கிய மாசில் சிவதா ணுலிங்கம் கருணையதும்
தொழுபவர்க் கீயும் முருகன் அருளும் இருக்கையிலே
கழுத்ததைப் பூட்டிடும் காலனுக் குங்கூட அஞ்சிடேனே!
100✓
அஞ்சி யழைக்கவே கீர னியம்பிய சொற்றனக்கு
மஞ்ஞை யிலேறிப் படையுடன் தோன்றி இடர்தவிர்த்தாய்
தஞ்ச மடைந்துமே உன்னருள் பெற்றிடப் போற்றி யென்றன்
நெஞ்சம் நெகிழக் கலித்துறை பாடினன் தோன்றுவாயே!
101✓
தோன்றி யடியவர் துன்பம் அகற்றும் சிவகுமரா
சான்றோர் தலைவா! பொறிகள் அடங்கி முதுமைகண்டு
தேன்மொழி யாளொடு மக்கள் உறவும் அனைவருமே
‘ஆன்மா நலமுடன் கொள்க’ எனுமுனே கொள்முருகே!
102✓
கொண்டல் மருகன் புகழைச் செவிகளே கேட்டிடவும்,
கண்கள் அழகினைப் பார்த்திட வாயோ அவன்புகழைப்
பண்ணால் இசைத்திட, கைகூப்பிச் சென்னி பதம்வருட
எண்ணி நினைத்துப் பணிந்திடில் நன்மைகள் தங்கிடுமே!
103✓
தங்கிட எண்ணியே குன்றம் அலைவாய் அவைகளுடன்
பொங்கிடும் நன்குடி ஏரகம் நச்சியே குன்றுதோறும்
மங்களம் நல்கிடும் சோலையும் தங்கிய வேலவனே!
பங்கமில் என்றன் மனமதும் வீடெனக் கொண்டிடிலே!
104✓
கொண்டடி வருடிடும் குன்றம் நினைந்து பணிபவர்க்கு
நண்ணும் வரங்கள் வழங்கிடும் வள்ளலின் வாரணமும்
திண்ணழி வேலதும், மஞ்ஞையும் வாழ்க! கலித்துறையை
எண்ணிப் படிப்போர் அனைவரும் வாழ அருள்முருகே!