மயிலாசல அலங்காரம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
மயிலாசல அலங்காரம் · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
நூல்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு✓
தரவு
திருமகள்சேர் நெடுமாயன் செங்கமலக் கண்கடரு
மிருமடவார்க் கிடைநீடு மெழிற்பவள மலைபோல்வாய்
பரிதிமதி யிசைந்தாங்கு பகர்முடியு முகமொன்றும்
விரிகருணை விழிமூன்றும் விளங்குகுழைச் செவியிரண்டும்
வண்பனுவற் பைங்கிள்ளை மணநுகரு மணிநாசிச்
சண்பகமுஞ் சிறுமுறுவற் றரளநகைக் கனிவாயும்
பொற்பணியும் பன்மலரும் பொலிந்தகழுத் தொடுமார்பும்
விற்படுமின் னெனக்காணும் வென்றிமேல் வியன்சீரு
மடல்வயிரந் திரிசூல மபயம்வர தந்துலங்குங்
கடகநெடுங் கரந்தாங்குங் கவின்றோள்க ளொருநான்குங்
குஞ்சிமணிச் செஞ்சதங்கைக் கொத்தரையுங் கோசிகமும்
விஞ்சியபே ரானந்தம் விளைத்தருளுந் துணைத்தாளுங்
கொண்டுமயி லாசலத்தின் குவட்டிலுறுங் கோயிலிடை
மண்டுசடைச் சிவஞானி வலத்தமர வாழ்கின்றாய்
மயிலேறித் தகரேறி மழவெள்ளைக் களிறேறிக்
குயில்போலு முமையாள்கண் குளிரவருங் குருந்தேநீ.
அராகம்✓
அரன்வழிபடமுன மருணலமருளினை
முராரியமரர்முன் மொழிபுகழ்மருவினை
யயனமுதலமர வறமொடுகறுவினை
புயலிவர்மகபதி புனைமுடியுதவினை
தரவு✓
அன்பொடுமுன் றுதிகூறி யாறெழுத்தா லருச்சித்துத்
தென்பொதியை மிசைவாழ்வான் சிறப்பனைத்தும் பெறச்செய்தாய்
நின்னாமத் தொன்றினையே நிதங்கூறச் சலியாத
மின்னாள்என் றிழந்தகரம் விரைந்துதவி மீண்டுவந்தாய்
நற்கீரன் சிறைநீக்கி நவிலரிய தமிழுணிவான்
கற்கீறி யலகையையுங் கடிவயடி வேல்விடுத்தாய்
முற்றுசுவைக் கவிப்பொய்யா மொழிப்புலவன் களிகூரப்
பற்றுமொரு கோலொடுமுன் பாலையின்முட் டையுமானாய்
தென்னருணைக் கோபுரத்திற் றிகழொருவன் றனக்காக
முன்னமொரு தூணிடத்தின் முளைப்பதற்கு மிசைவுற்றாய்
போரிநகர் முனிவன்முதற் புகலுமவர் புகல்கின்ற
சீரியவ ரளவில்லார் சிந்தித்த பெறளித்தாய்
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்✓
ஏன மருப்பற மோதி வதைத்தனை
யேழிசை யிற்கவி கோடி தொடுத்தனை
மானவிர் கட்குரி யாரை மயக்கினை
மாசறு சிட்டிவி னோத மியக்கினை
முச்சீர் ஓரடி அம்போதரங்கம்✓
மாவடி யோடற வென்றனை
மால்வரை யாவினு நின்றனை
தாமத ரோர்வரி தாயினை
சாரணர் வாழ்வுற மேயினை
இருசீர் ஓரடி அம்போதரங்கம்✓
சேவல்பொ றுத்தனை
பாவம றுத்தனை
சிந்தையு ளுற்றனை
விந்தைகள் பெற்றனை
4தனிச்சொல் ஆதலில் ஆசிரியச் சுரிதகம்✓
கடலிற் பொருநையிற் கனலிற் றமியேன்
றிடமுடன் விடுத்த செழுந்தமிழ்ப் பனுவ
லனைத்து மீண்டொ ளிர்தர வளித்துமுன் னின்று
தினைத்துணைத் துயருஞ் சேரா தோரீஇத்
திருமலைக் குவட்டிற் செய்தபே ராட
லுருமலைக் கோயிலி லுரைத்த மாற்ற
மாதிய பிறவு மகிலத் தோரும்
பேதியா வண்ணம் பேசப் புரிந்து
கைச்சிலைக் குறவர் கவின்றரு சாரற்
பச்சிளஞ் சோலைப் பரண்மீ திருந்தாண்
மதலையென் றியாவரும் வழுத்த வைத்துப்
பதநிழற் றருவாய் பரமென வந்தேன்
விதிமுறை தவறி வெள்ளிலை மென்று
கதிர்மணி வடமுலை கருத்துட் டோன்றப்
பழைய பாவொன்று பகர்வான் றனையும்
விழைதரு கருணை மிகையாற் புரந்தாய்
நின்றிரு வுள்ளமெந் நேரத்
தென்றிகைப் பொழிக்கு மெனவிரங் கினனே.
5நேரிசை வெண்பா✓
இரங்குந் திருவுள்ளத் தேற்றமுற்ற செவ்வேள்
வரங்களெல்லா நல்கு மலைகேள்—குரங்கனைய
பாழ்மனமே பல்கோடி பத்தர் பரிசுபெற்று
வாழ்மயிலத் துள்ள மலை.
6கட்டளைக் கலித்துறை✓
மலைத்தெய்வ மேபர மென்றொப்பி டாச்சில மானிடருஞ்
சிலைத்தெய்வம் வைத்துப் பலவாறு நாமங்கள் செப்பலென்னோ
நிலைத்ததெய்வம் வாழு மயிலா சலத்தி னிறைபுகழ்நேர்
கலைத்தெய்வ மான பிடியேயவெண் டாமரைக் கன்னிகையே.
7கலிப்பா✓
கன்னிக் குறத்தி கணவன் மயிலவெற்பை
யுன்னிக் கருத்தோ டுடலுருகப் போற்றிசைக்கு
மென்னிட்ட மின்னதென யாரறிவா ரென்றனக்கு
மின்னிற் றிகழ்ந்தகதிர் வேலுமயி லுந்துணையே.
8கலிநிலைத்துறை✓
மயிலா சலத்துற்ற குமரேசனுக் கான வழிபாடாற்
கயிலாய மொடுமேரு வரைமீது வைகுங் கனற்கண்ணுதல்
பயிலாக மத்தைப் பழிக்கின்ற தீயோர்கள் பகைமிஞ்சுநா
ளெயிலாரு மடவார்த மக்கிச்சை கொடுவாட லொவ்வாததே.
9கட்டளைக் கலிப்பா✓
வாதநூற்பிணக் காளர்கண்காணாரு
மலயமால்வரை மாமுனி தன்னருட்
போதவாரியின் மூழ்கிட நாடுவேன்
புந்திநொந்துபு லம்பிட லாகுமோ
வேதநான்முகக் கள்வனைக்குட்டிய
வீறுகொண்டொளிர் மெஞ்ஞான தேசிகா
மாதமோர்திரு நாள்வருஞ்சீர்திகழ்
மயிலமால்வரை வாழ்முரு கையனே.
10கலிவிருத்தம்✓
ஐயமின்றிமுன் னறைந்தவா சகப்படி யருளி
மெய்யர்தம்புடை யூடுற விடுக்குநா ளுளதோ
வையம்வானொடு துதிசெயு மயிலமா மலையின்
செய்யபொற்கு வடாமெனத் திகழ்தருஞ் சேயே.
11அறுசீர் விருத்தம்✓
சேய நாண்மலர் கொண்டுன்னைத் தினந்தின மருச்சித் தேத்துந்
தூயவர் கமலப் பூந்தாட் டுகளணி தலும்வீண் போமோ
மாயவன் மருகா விண்ணோர் மகள்புணர் கணவா வள்ளி
நாயகா மயில வெற்பி னடஞ்செயு முருக வேளே.
12எழுசீர் விருத்தம்✓
முருக றாமலர்க் கடம்பணி புயத்தனை
மூவி ருமுகத் தானை
யருகர் பாழ்மதத் திமிரமிவ் வுலகைவிட்
டகல வந்தருள் வானைப்
பெருக சீர்த்திரு மயிலமா மலைமிசை
பேணி யபெரி யோர்தங்
கருணை ஞானமுஞ் சித்தியு முணர்பவர்
கால னுக்கஞ் சாரே.
13எண்சீர் விருத்தம்✓
அஞ்சலளித் தாண்டபெருங் கருணைச் சீரு
மருணகிரி தானெனநீ யறைந்த சொல்லும்
வஞ்சகமென் றிகழ்வதற்கு மஞ்சு கின்றேன்
வருத்தமினிச் சகிப்பதற்கும் வல்லே னல்லே
னெஞ்சகத்தன் றாடியதை மறக்க மாட்டே
னெடுமயிலக் குவட்டினின்முன் னின்றேன் கண்பார்
பஞ்சவன்னச் சிகியூரும் பவள மேனிப்
பண்ணவனே யெண்ணரிய பான்மை யானே.
14இரட்டை ஆசிரிய விருத்தம்✓
ஆனமட்டிற் பணிபுரிந் துனதுமெய் யன்ப
ரவையினிற் புகவி ரும்பா
தணிநகை மடந்தையர் முலைத்துணை நினைத்துருகி
யலமருந் தமிய னேனை
யீனருக்கெ மனனைய வீரர்முத லோர்களு
மிறைஞ்சும் பதத்தில் வைத்துன்
னெழில்வதன நிரைகுலவு மறுவகை நெறித்தலைவ
னென்றொளி ரவுஞ்செய் வையோ
கானவக் குடிலிலொரு கருகூல மெனவந்த
கன்னிக் கிசைந்த கணவா
கனகநக ராதிபன் வளர்த்தபிடி கண்டுளங்
களிகூர வருகுந் தனே
வானளக் குங்குவடு தொறுமிழியு மருவிபல
மாலிகை யெனக்கு லாவு
மயிலாச லத்தில்வரு புலவோர் துதிக்குமொரு
வடிவேல் பிடித்த குருவே.
15புயவகுப்பு
தனன தான தத்ததன - தானத்தனந்தன✓
குருப ராவெ னத்தினமு முருகி நாடு மெய்ப்புலவர்
கொணர்வ தான முத்தமிழை நேசித்துயர்ந்தன
குரவ நீப முற்பகரு மளவி லாம லர்த்தொகுதி
குலவு மாலி கைத்திரள்கள் சூடிப்பொலிந்தன
குறைவு றாவொ ளிப்பரிதி யனைய தோள ணிப்பகுதி
கொடுபல் பூணெ டுத்தொருமு நூலுற்றிலங்கின
குலிச மூவி லைப்படைவில் கணைவை வேன்மு தற்பலர்சொல்
குருதி யூனு டைக்கருவி சேரச்சுமந்தன
குகுகு கூவெ னத்தனது சிறகை மோத டற்பறவை
குளறி டாமொ ழிக்கிளியொ டேறிப்பிறங்கின
குளிரும் வாவி யிற்கவுரி முலையி னோடு கிர்த்திகையர்
குயமு மார்வ முற்றமுத மீயப்பிசைந்தன
கொடிய ராவி னைப்பகலை யுலகின் மாறி வைத்தமரர்
குழுவெ லாமெ திர்த்தமர்செய் தோடக்கவின்றன
குறளை நார தத்தவசி முயலும் வேள்வி யிற்றகரொர்
குதிரை யாகி டக்கசையி னால்விட்டுவந்தன
குடைய தாமெ னக்கலப நிழல்கொண் மாம யிற்கடவல்
குணமெ னாநி னைப்பவர்க ளூடுற்றவிர்ந்தன
குமிழி தோய்ம தத்தயில மொழுகும் வார ணக்களிறு
குதறி னாலெ ழிற்றலையின் மோதிச்சிவந்தன
குவளை நேர்வி ழிச்சசிமின் மருவு வான்வ ளர்த்துதவு
குமரி பூண்மு லைக்களப மாரக்கமழ்ந்தன
கொடியி னூடு வைத்துருக முடியும் வார்த ழைக்கலைகொள்
குறமி னாள் ணிப்பரண்மு னேகிக்குவிந்தன
கொலைசெய் வாள்வி ழிச்சிறிய மகளிர் பார்வை மெய்த்தவர்கள்
குலைவு றாம னக்கவன மீறப்பொருந்தின
கொடுமை யேமி கப்புரியு மவர்கள் வேர றக்கறுவு
குறியு ளார்த மக்கிழிவு றாமற்புரந்தன
கொடையி லாமு ழக்கவவர் மனைக டோறு முற்றடியர்
குறுகி டாத ருட்கடலின் மூழ்கச்செய்ப்பண்பின
குசையு நாணு றக்கதுமை யுடையமி யாமெ னப்பெரிது
குதிகொள் வேனு ளத்தினும நாள்சற்றொளிர்ந்தன (1/4)
வருவ வாத மிட்டுழலு மவர்கள் போக மற்றவர்க
ளணுகு மாறி ரட்டியந னீதிக்குளொன்றின
வணிகொள் வார்செ விக்குழைக ளுலவு சீர்பொ றுத்தழிவி
லசல மேயெ னக்கவிஞர் பேசக்கிடந்தன
வடலை யாரு டற்பரமர் பிரண வாக ரப்பொருளை
யறியு நாள்பு னற்சுடில மேறிக்குளிர்ந்தன
வகில லோக முற்பருகி யுமிழு மால்வ யப்படையை
யடையு மாறி யற்றியநல் வீறுற்றெழுந்தன
வரிய நான்ம றைக்கிழவ னுடலில் வேர்வை விட்டலறி
யவச மாகி டச்சிறிது கோபிக்கைகொண்டன
வமரர் கோன்மி கப்பயமொ டிணையில் காவிரிக்கரையி
லமையெ னாவு ருப்பெறுத றீரப்புரிந்தன
வடல்கொள் வீர ருட்டலைவ னொருவ னீசு ரக்கணைகொ
டவுணர் கோனி னைப்பழிதல் காணச்சிறந்தன
வலரும் வாரி சக்கடவுள் வரம தாலு வப்படையு
மவர்கண் மேலே திர்த்தவனை யாளப்புகுந்தன
வளவின் மாயை வெற்புருவ முடைய தான வப்பயலை
யணுவை நேர்பொ டிப்படுமு னாளட்டுநின்றன
வழலும் வாய்வி டக்கடிது பொருத தாரு கக்கொடிய
னழிய வேல்வி டுத்துலக மோதத்திகழ்ந்தன
வறிவி னான்மி கப்பெருமை யுடைய கோள ரித்தகுவ
னறையும் வாச கப்படிய னே னைத்தடிந்தன
வலமை கோத திக்கிடையி னெடிய மாம ரத்துருவொ
டவிரு வானை யப்பொழுதி லேவெட்டுமொய்ம்பின
வமல யோக தத்துவசின் மயசி வோக முற்றவர்த
மரச னாம கத்தியனை நேர்முத்தரன்பின
வயர்வு றாம லெக்கணமு முருக னேயெ னப்பகரு
மவள்கை வேறு பட்டதனை யீதற்கிரங்கின
வலகை யான்மி கத்தளரு மொருவ னோடு பற்பலரு
மவிவு றாது கற்கதவு கீறப்பிளந்தன
வதிக வாழ்வு டைப்பழைய மதுரை யூரி னிற்புலவ
ரலம ராது கைக்குறியி னால்வைத்தநண்பின (1/2)
கருது மாறு முற்றுகுலவி யுதவி டாத பொற்குவடு
கதற மோதி டத்தகுதி யாவுற்றசெண்டின
கடலை யேவி டத்துணியும் வருண னார்தொ ழுத்தனது
கதிர்கு லாவு சத்தியினை வீசிக்கனன்றன
கனக நாடு டைத்தலைவன் வலிய தூத ரைக்கொடுசெய்
கபட மான திற்சிறிது நோவற்றிருந்தன
கவிசொ லேனெ னத்தினமு நுவல்பொ யாமொ ழிக்கெதிரொர்
கரிய கோல்பி டித்திசையு மாடற்பயின்றன
கனல தாம லைக்கருகி னிலவு கோபு ரத்துயுமொர்
கவிஞ னாதி யிற்பகர்பல் பாடற்றுதைந்தன
களிறு நாணு றத்தொனிசெய் பனுவ லானொ ருத்தனது
கலியின் வேர றத்திருடி யீயத்துணிந்தன
கலைவ லார்மி கப்புகழு மிசைகொள் போரி யிற்றவசி
கவலை தீர்வ தற்கொருக ளாசத்தியைந்தன
கறையில் பாலை யற்குவகை பெருக வோர்க விக்குரிய
கனவி னார்ம லர்க்கொடுசெல் வாரத்தமிழ்ந்தன
கலுழ னார்கை யிற்றலையை நிரும லாந திக்குரிய
கரையில் வீசு முற்கடிதி லேகிக்கவர்ந்தன
கழறு மேழ்வ கைப்புவியி னுயிரெ லாம ழத்தனது
களியி னான்மி கக்குதிகொ ளேனத்தைவென்றன
கயிலை யீச னைப்பொருவு முனிவன் வாய்மொ ழிப்படியொர்
கடவுண் மாம ணிச்சுடிகை வீழ்த்துரந்தன
கனியெண் மோத கக்குவிய லனைய வேமி கப்பருகு
கரியி னீள்வ யிற்றிரவி மேவக்கடிந்தன
ககன மாந திப்புனலை யனைய நீர ழைத்துமைகொள்
கனவி டாய றச்செயும்வி னோதத் தொழும்பின
கமல வாவி விட்டெழுமோர் முதிய தாதை யுட்கருது
களவு தீர்த ரக்கரம் தான்மெய்ப்புகன்றன
கவள யானை யொத்தொளிரும் வழுதி கூன்வி டச்சுரமொர்
கணநி லாத றத்திருவெ ணீறிட்டுகந்தன
கடுவை நேரு டற்சமண முனிவ ராமு ழுக்கொடியர்
கழுவி லேறி டத்தமிழை வாரிச்சொரிந்தன (3/4)
மருவ றாம லர்க்கணைக ளளவில் கோடி தைத்துருகி
மகளிர் சேனை யிற்குரிமை மீறிப்புணர்ந்தன
மதுர சாக ரத்தமிழை யுதவு சீரு டைப்பொதியை
வரையின் வாணர் மெய்த்தவசு போலப்படர்ந்தன
வகுள நாண்ம லர்த்தொடையல் புனையும் தற்சிலருண்
மகிழ்வெ லாம றப்பெருகு கோலத்தமைந்தன
வரத மான தைப்பொருவி லபய மான தைக்கொடுதன்
வலிமை நாடு முத்தமர்வி சாரத்தைவிண்டன
மறவ னோடு கைச்சமர்செய் திரவி லோர்கொ டிக்குவகை
மலியு மாறெ ழிற்கயல்கண் மீறக்கொணர்ந்தன
மறதி யாலு ணக்களியின் முழுகு வான்வெ ளிப்படவு
மனையின் மேய திற்சிறிதி லாமற்பகிர்ந்தன
வயதி னாலு மிக்குறும வண்மு னாவ லிற்கடியின்
மணலி லோர்ப ழத்தினையை நாள்விட்டெறிந்தன
மறுவி லாவ ரைக்கவிதை யொருவ னோத லிற்புளிய
மரம் தூடு கொப்பொடிவ தாகத்தெரிந்தன
மனைய லாது மற்றவரை யனையெ னாநி னைப்பவன்முன்
மணியி னாவ றப்பகர்த லாதிக்கமர்ந்தன
வனச லோச னத்தொகுபெண் முடியின் மேல்வி ழத்துகுகல்
வழுகு மோர்ப டிக்கடியி லேநிற்கைகண்டன
வயின வாத ரத்தொருவ னிசையு நாளின் முற்புனையும்
வளைய மாம டற்றளைக ளோவத்தொடர்ந்தன
வயிர வாதி கட்களவி னினமு மூனு மிக்குதவும்
வலிய போரி னுக்குரிய வீரத்தழுந்தின
மனது வேறு பட்டுத லிலது நாடி நிற்பவர்கண்
மறலி தூத ருக்கயர்வு றாமற்றிரிந்தன
மலையி லேறி முற்புவியி லுருளு மாண வச்சிறுவன்
மடிவு றாதெ டுத்துலகி லேவிட்டவம்பின
வரிய ராவி னத்தரசர் பலர்சொ னாலு முற்றுதலின்
மகிமை யாண்மை யொப்பனவெ லாமுற்றடர்ந்தன
வளமை சேர்தி ருப்புகழை மொழிஞ வார்க ளுக்கெளிய
மயில மாம லைக்குமரன் வாகைப்புயங்களே.
16நேரிசை வெண்பா✓
புயலார் மயிலமலைப் புண்ணியமே போல்வான்
கயலார்கண் வள்ளி கணவ—னியலாரப்
பாடுமடி யேன்றனக்குப் பத்தர்மனப் பங்கயந்தோ
றாடுமடி யேன்றரமாட் டான்
17கட்டளைக் கலித்துறை✓
மாட்டாத வென்னை வலியவந் தாட்கொண்டு வண்கமலத்
தாட்டாம ரைத்தொண்டு செய்யென் றுமுன்பு தடுத்துநின்றான்
கேட்டார் மகிழ வரங்களெல் லாந்தருங் கீர்த்திகொண்டு
பாட்டா லுயர்மயி லாசலத் தோங்கயிற் பண்ணவனே.
18அறுசீர் விருத்தம்✓
பண்குலவு செந்தமிழா னின்கமலத் திருவடியே
பரவு மென்முன்
கண்குலவு தோகைமயிற் பரிமீதி லொருதரநற்
காட்சி யீந்தாள்
பெண்குலவு மொருபாகப் பிஞ்ஞகனுக் குபதேசம்
பேசும் வாயாய்
திண்குலவு மயிலமலைக் குருபரனே வேலணியுந்
திரடோட் சேயே
19எழுசீர் விருத்தம்✓
சேயமா முகங்க ளாறுடைக் குமர
தேசிகன் றிருக்கைவேற் பெருமான்
றூயவெண் சேவற் கொடியணிந் தாடுஞ்
சுப்பிரம ணியனை யன்றி
மாயவன் பரமன் கணபதி முதலாம்
வானவ ரிலையென வுணர்வார்
தாயக மான மயிலமா மலைச்சீர்
சாற்றிடத் தக்கவ ரெவரே.
20எண்சீர் வண்ணவிருத்தம்✓
தனன தந்ததன தனதன தத்தன
எவர்க ளும்புகழு மயிலம லைக்குக
னெனமொ ழிந்தவன திருசர ணத்திடை
தவமுயன் றுறையு மனமுள வித்தகர்
தமைய டைந்தவர்கள் பெறுவன செப்பிடி
லவனி யெங்குநிறை தருபுகழ் சத்திய
மதிவி தங்குலவு மதுரந யத்தமிழ்
சிவன்மு குந்தனயன் மகபதி யொப்பவர்
திறமை யின்பமலி சமரச முத்தியே.
21இரங்கற்றாழிசை✓
முத்தமனைய நகைமடவீர் மொழியக்கேளீ ரென்கனவின்
முன்னமொரு நாண்மயிலமலை முருகக்கடவுள் வலியவந்து
சித்தங்கவர்ந்தான் வளைகவர்ந்தான் சேலைகவர்ந்தான் றிறல்கவர்ந்தான்
சிறிதுநாண மில்லாமற் றேடித்திரிந்து திகைக்கவிட்டான்
பைத்தவரவக் கடிதடமும் பணைத்தமுலையு மதவேளும்
பரவைத்தொனியும் பிறவுமெனைப் படுத்துந்துயரஞ் சகிக்கறியே
னெய்த்தகுரவங் குவளைவெட்சி நீபமுதலா மாலைகளி
னேருமொன்றை யெனக்காக நீர்போயிரந்து கொணர்வீரே.
22நேரிசை வெண்பா✓
வீர வடிவேற்கை வித்தகனை வெள்ளிமலைக்
காரன்விழித் தீயில்வந்த காரணனை—நீரருவி
கொட்டுமயி லாசலத்திற் கும்பிட்டுக் கொண்டபின்னு
மிட்டுமயி லாரிடஞ்செல் வேன்.
23கட்டளைக் கலித்துறை✓
ஏனலங் கானிற் பரண்மீ திருந்த விளங்குறத்தி
பானலங் காமர்க் குருகிப் பணிந்தவன் பண்ணவர்க்கா
வீனலங் காதிபற் செற்றோன் மருக னெனத்துதித்து
நானலங் காண மயிலா சலத்தினை நண்ணினனே.
24கலிவிருத்தம்✓
நண்ணல் கண்டு நமக்கு மயிலம்வா
ழுண்ண லோர்வர மாயினு நல்கிலான்
கிண்ண நேமுலைக் கீர்த்திகை பானுகர்
வண்ண வாய்ச்செயல் வன்மையில் வன்மையே.
25கலிப்பா - கைக்கிளை✓
வன்ன முலைத்துணையை வாய்மொழியைத் தாழ்குழலை
நன்னயஞ்சேர் கண்ணைமிக நம்புமென்னை நத்துகில்லாய்
கன்னல்விற்கை மாரன் கடும்போர் விளைக்கின்றா
னென்னடிநான் செய்வே னெழின்மயிலத் தேந்திழையே.
26நெஞ்சுவிடு தூது - தாழிசை✓
ஏந்துபூண்முலை மங்கைமார்களை யேவினாலவர் தங்களுக்
கின்பமெய்திடனாடிவாடியிறைஞ்சுவாறெழில் வண்டினம்
பூந்துணர்க்கடம் பாரமீதுபொ லிந்ததேன்மிக வுண்டுதன்
புந்தியொன்றிம யங்குமஞ்சுகம் பொற்புயத்துறு நற்கிளி
வேந்துடன்களி கூருநாரைகண் மெல்லெனப்பக ராதுபோ
மேகமாதிய யாவுமென்றன்வி ருப்பமுற்றுரை யாதவே
நீந்துதற்கரி தாகுமென்றுயர் நெஞ்சநீயறி கின்றையா
னீடுசீர்மயி லாசலக்குக னேரினின்றுநி கழ்த்திடே.
27நிலைமண்டில ஆசிரியப்பா✓
நிகழ்த்தரும் பெருமை நிலவுதென் மலயத்
தகத்திய முனிவற் கருளிய வீறும்
பண்டுநற் கீரன் பருவர லொழித்துத்
தொண்டுக்கொண் டவிர்தரு தூய புகழுங்
கருணையே வடிவ மாகக் காண்டரு
மருணையூர்ப் புலவற் களித்தசெந் தமிழுங்
கடனடு விழிந்து கரைமடத் தவிர்தரு
திடமலி பாலைய னாதிய சித்த
ரெண்ணிலார்க் குதவு மெழிற்பெருஞ் சிறப்பு
நண்ணிநின் றன்பா னானும்வந் தடுத்தே
னென்பெருங் குற்ற மியம்பரி தாயினு
நின்பெருங் கருணை நினைக்கரும் பாற்றாற்
றவிர்க்குமென் றுன்னித் தமிழ்கொடு சிறிது
கவித்தொடை வனையக் கருதின னாதலி
னெஞ்சிறக் கலாபத் தணிக்குடை பரிக்கு
மஞ்ஞைவா கனத்தின் மரகத வன்னக்
கிள்ளையோர் பாகங் கிளர்ந்தர வொருபால்
வெள்ளைமால் களிறு மேனாள் வளர்த்த
பொன்னிறத் தன்னம் பொலிதர நடுவி
லுன்னிய பதினா றுருவிலொன் றெடுத்துச்
சேவலுந் தண்டுந் திருக்கை வேலும்
பாவலர் பனுவல் பகர்வன பிறவுந்
திகழ்தர வந்தருட் சேவை நல்கிப்
புகழொடு தவமும் பொருந்தவைத் தருள்வாய்
தென்னையு மாவுஞ் செருந்தியுங் குருந்தையும்
புன்னையும் பிறவும் பொலிதரு சாரற்
குயிலினம் பாடக் குரங்கினங் கொட்ட
மயிலின மாடும் வளந்திகழ் மயில
மாமலைக் கோயில் வயினினி தமருங்
கோமளக் குமர குருபரக் குகனே.
28நேரிசை வெண்பா✓
குகனே மயிலமலைக் கோமானே யீசன்
மகனே யெனத்தினமும் வாழ்த்தி—முகமாறும்
பன்னிரண்டு தோளும் பதமிரண்டு நாடுநர்முன்
னென்னிரண்டு கைகுவியு மே.
29தழை - கட்டளைக் கலித்துறை✓
குவிக்குங்கைத் தொண்டரைக் காப்பான் மயிலக் குவட்டிறைவன்
செவிக்கென் றுயரமெல் லாமுரைத் தாடருஞ் செய்தழை
கவிக்கின்ற திங்கட் குடைமத வேடன் கணையை வென்று
புவிக்கண் ணிறைந்த புகழ்வானத் தூடும் புகச் செய்ததே.
30மடக்குக் கொச்சகக் கலிப்பா✓
புகழனந்த முறவாக்கும் பொருளுநல்கு முறவாக்கு
மிகலறுக்கு மயிலமலை யிடஞ்சேர்க்கு மயிலமலை
மகனெனினுங் களித்தாளும் வண்கொடிதூங் களித்தாளு
மிகவணிதற் செயவேளே வினைவிலக்குஞ் செயவேளே.
31கலிவிருத்தம்✓
வேளைக்குத விடுமெய்ப்பொருள் வினைவேரற வென்று
தாளைத்தலை மிசைவைத்தரு டருசண்முக முருகோன்
வாளைப்பொரு கண்ணாருடன் மகிழுந்திரு மயில
நாளைக்கெனு மொழியின்பய னணுக்கச்செயு னலமே.
32அறுசீர் விருத்தம்✓
நலங்குலவு மயிலமலைக் குமரேசன் றிருவடியை
நண்ணி டாம
லிலங்கடொறுஞ் சென்றிரந்து பட்டசள மித்தனையென்
றியம்பப் போமோ
கலங்கரிய நெஞ்சகத்தோ டாரெழுத்தைத் தினந்தோறுங்
கருதி யன்பாற்
றுலங்குபுகழ்க் கடன்மூழ்குங் கவுமாரர் வேடமிகத்
தோய்ந்த நானே
33எழுசீர் விருத்தம்✓
நானு நீயுமற் றனைத்துமொன் றெனப்பல
ஞான நூல்சொலக் கேட்டு
மூனு மாவியு மொன்றெனுந் துணிவுகொண்
டுழன்றி டவிட லாமோ
தேனு மாவுமுன் றருமொரு குறமகள்
சிறுப தம்பணிந் தோனே
வானு ளார்வரும் பொழின்மிகு மயிலமா
மலையு டைக்குக வேளே.
34எண்சீர் விருத்தம்✓
வேள்விடும் பூங் கணைகள்வந்து தைக்க மேனி
மெலிவடைந்து வெண்ணகைவாய் மின்னா ருண்கண்
வாள்விடத்தா லிறந்தமுதாற் பிழைக்குஞ் சிந்தை
வசமாமென் றனக்கிரங்கா வன்மை யாதோ
கேள்வியுற்ற நிந்தைமொழி போதா தேயோ
கிளிதானென் றெனைப்பலகால் கிளத்தி லாயோ
கோள்விலங்கு மயிலமலைக் கோயி லானே
குன்றுதொறு நடமாடுங் குலத்தாட் கோவே.
35மடக்குக் கட்டளைக்கலிப்பா✓
கோவில்கொண்ட குறிஞ்சியிராகமே
கூறக்கேட்கை குறிஞ்சியிராகமே
வீவின்மேனி முதிர்ந்தவராகமே
வென்றுமீண்ட தெதிர்ந்தவராகமே
காவிசெங்கடம் பம்புயமாலையே
கானவள்ளிக ணம்புயமாலையே
யாவியென்பவர்க் காட்சிமயிலமே
யன்பர்வேண்டருட் காட்சிமயிலமே.
36குறளடி வஞ்சிப்பா✓
மயிலெனநடித் தயிலெனவிழித்
தொயிலுறநடந் துயிர்கவர்பவ
ரிருபூண்முலைக் கருதாமருண்
டருளாவலற் றிருள்பாழ்மனம்
போலும்பதஞ் சாலுங்கவி
மாலுண்டுளார் பாலுந்தினந்
தேனெனவினித் தூனையுமுருக்
கீனமில்கவி யானவில்கிலே-னிதனாற்
செந்தகைக் கிரியெனச் விகிமேல்
வந்தருள் செயத்தகு மயிலத் தரசே.
37பதினான்குசீர் விருத்தம்✓
சேயநின் முகங்கள் பூதமோ ரைந்துந்
திகழ்பரப் பிரமமு மாகுந்
திறன்மலி திரடோ ளகம்புற மெனநூல்
செப்பிய பன்னிரு சமையந்
தூயவர் விரும்புந் திருவடித் துணைபல்
சுருதியா கமப்பொருளுண் முடிவு
துங்கவே லுலகைத் தருமவன் மற்றுஞ்
சொலும்படை யுருத்திரத் தலைவர்
மாயவன் முதலோர் வணங்கிடு மொருவன்
மயிலுடன் சேவலு மீசன்
மலையமா முனிவன் பாலைய னனையார்
வழிபடுஞ் சீடரிவ் வாறே
யாயசீ ரனந்த முடையநீ யெளியேற்
கருள்செய்தி ருப்பது முறையோ
வருவிதம் மயிலா சலப்பெருங் கோயிற்
கழகிய குமரநா யகனே.
38நேரிசை வெண்பா✓
நாயிற் கடையாகி நானிலத்து ரத்தனைக்கும்
போயிற் றொறுமிரக்கும் பொல்லேன்றன்-வாயிற்
றமிழ்மணக்கச் செய்தபிரான் றையநல்லார் கொங்கைச்
சிமிழ்மணக்குந் தேன்மயிலச் சேய்
39கட்டளைக் கலித்துறை✓
சேயிலங் குந்திரு வுள்ளமுள் ளீரொன்று செப்புகின்றேன்
கோயிலங் குன்றக் குறிஞ்சியெங் கெங்குங் குறுகிநொந்து
வாயிலங் குன்றி வருந்தாம லெங்கண் மயிலவெற்பின்
மேயிலங் குங்குமக் கொங்கைமின் னார்பொன் வெறுத்துய்மினே
40மடக்கு - தாழிசையிரங்கல்✓
மின்னிலங்கிய வேலனென்சிறு மின்னினக்கம் விரும்பிலான்
மேவலர்க்கெம னானவேண்மகன் மேவநாடுத லோர்கிலான்
பன்னிரண்டுசெ விக்குகன்சிலர் பன்னிடுஞ்சொல் வினாவிலான்
பாடுவார்க்கருள் கந்தனீங்கிவள் பாடுகண்டு பரிந்திலான்
மன்னிடும்புகழ்ச் சேந்தனைங்கணை மன்னிரும்பைம றுக்கிலான்
வாரணக்கொடி கொண்டசேயுலை வாரணத்துயர் மாற்றிலான்
வன்னிசேர்கரத் தண்ணலார்மகன் வன்னினைப்பவி டுக்கிலான்
மயிலமாமலை வள்ளலாயன்பெறு மயிலன்மட்டினில் வஞ்சனே
41அம்மானை-வெண்டளை✓
வஞ்சமெல்லாந் தீர்க்கு மயிலமலை வாழ்முருகோன்
கஞ்சனரி யீசனுக்குக் கண்டனன்கா ணம்மானை
கஞ்சனரி யீசனுக்குக் கண்டனனே யாமாகிற்
கொஞ்சங் கருமங்கைக் கொண்டதே னம்மானை
கொண்ட தமரக் குலத்தினரா லம்மானை.
42தாழிசையிரங்கல்✓
அம்மானை யாடிக் கழங்காடி முத்தாடி யணிமேவுபந்
தாடிச் சிறாரோடு விளையாடி வெயர்வாடி யயர்வின்றியே
செம்மானம் வருமட்டு முச்சில் வைத்தாடிச் சிரித்தாடியென்
சேலைதொட் டாடித் தினந்தோறு மறவாது சீராடுவாள்
பொய்ம்மானுடன் போனவன் றங்கைமைந்தனைப் பொறிமஞ்ஞையிற்
புகழ்கொண்ட மயிலாச லச்சார லிற்கண்ட போதேயெனைச்
சும்மாவி ராதேய வன்பா லெனக்கான சொற்சொல்லெனச்
சொல்லத் துணிந்தா ளுறங்கா ளெனநெஞ்சந் துடிக்கின்றதே.
43வஞ்சிவிருத்தம்✓
துடியடிக் களிற்றின் றோமுனை
யடியர்துழ் மயிலத் தண்ணலை
வடியயிற் கரத்து வள்ளலைக்
கொடியனென் றுரைக்கக் கூடுமே.
44கொச்சகக் கலிப்பா✓
கூடுமவர்க் கருள்வேளைக் கூடாரைக் கொல்சேயை
யாடுமருட் கொடியானை யாடலம லசப்பானைத்
தேடுமன்பர்க் கெளியானைத் தேடாரைத் திருத்தானைப்
பாடுநருண் மயிலத்தைப் பாடாதார் பதர்தாமே.
45ஊசல்-எண்சீர்விருத்தம்✓
தாமரைக்கண் முகுந்தனென வளர்ந்து காட்டுந்
தனிமயிலா சலக்குவட்டிற் றவத்தோர் போலுந்
தூமணிமண் டபத்திலிரு மகளி ரோடுந்
துவர்மேனி யெழிலோங்கத் தொண்டர் சூழ
வேமவடம் பூண்டவிர்செம் மணிப்பீ டத்தி
லெழுந்தருளி யினியதமி ழிசைகேட் டும்பர்க்
காமகளி ரங்கவைழி யாடீ ரூச
லயில்வேற்கைப் பெருமாளே யாடீ ரூசல்.
46இன்னிசை வெண்பா✓
ஊசற் குழைமடவார்க் குள்ளத்தை யொப்புவித்து
நாசப் படாத நலமளிக்க வல்லாயோ
மாசற்ற தென்மயில மாமலையில் வண்டுமொய்க்கும்
வாசக் கடம்பணிதே வா.
47கட்டளைக் கலித்துறை✓
தேவருக் குஞ்சசி கேள்வன் றனக்குஞ் சிவன்முதலா
மூவருக் குந்துணை யாமுரு காவென்று முன்னுமன்ப
ரியாவருக் கும்பொது வாய்மயி லாசலத் தெய்தினர்க்கே
பூவருக் குந்தள ராவுண்மை ஞானப் பொருளெய்துமே.
48கலிநிலைத்துறை✓
பொருசேவ லணிநீடு மயிலாசலத்
தெந்தை பொதுவாய்மையிற்
றருசேவை யொருவாறு பெற்றோர்
மலர்த்தா டலைக்கொள்வதே
குருசேவை முதலாய பலபேறு
மென்னுங் குணத்தோர்களாற்
றிருசேரு மருமத்தன் முதலாக
நூல்சொன்ன சிலருய்வரே.
49அறுசீர் விருத்தம்✓
உய்யநல் வரந்தந் தாட்கொண்
டுலகரோ டுழலா வண்ணஞ்
செய்யநின் புகழே நாடுஞ்
சிந்தையுந் திகைக்க லாமோ
பையர வருந்துந் தோகைப்
பரிநடம் பயிலுஞ் சோலை
மையறா மயிலக் குன்றில்
வதிதரும் வளமை யானே.
50பாண் - தாழிசை✓
வளமலிந்த மயிலவெற்பின் மன்னரென்னை முன்னைநாள்
வலியவந்தி ரந்தணைந்த வண்மையொன்று மறிகிலா
யளவிலாத வுண்மைசொல்லி யவைமறந்து வஞ்சமா
யவரிருக்கை நீதமென்ற றைந்திடத்த காதடா
பளபளத்த வேலணிந்த பன்னிரண்டு தோளிலென்
பாவிநெஞ்சி ருந்தும்வேறு பாவைமாரை நாடினார்
களவினீயு ரைத்ததூது போதுமீடில் பாணபோய்க்
கந்தர்பாலு நெஞ்சறிந்த கன்னியென்று பன்னிடே.
51தவம் - வேற்றொலிவெண்டுறை✓
பன்னிரண்டு தோளானைப் பவளமலை யனையானைப் பழுதிலாறு
சென்னியுடைக் குருபரனைத் திருமயிலக் கிரிபுரக்குஞ் சேயைநாளு
முன்னி யுன்னி யுறங்கி யுறங்கிடா
நன்னி லைத்தவ ஞானிகட் கானதே.
52எண்சீர்விருத்தம் - கட்டு✓
ஆனையுரு வானதிரு ஞானமிசை தோன்று
மழகியசண் முகத்தொருசெங் குழவியினை முன்னாள்
பூனையுய்யச் செய்தானைத் தேனைநிகர் பாடற்
பொழிவாருக் கருள்புரியும் விழிமூவா றுடைய
கோனைமலை பனிவரையின் மேனைமக டன்னைக்
கொற்றவைவே லெனக்கரத்திற் பற்றவல்ல குகனை
மானையொக்கும் விழியார்கண் டனமுறப் பவனி
வரும்பரனை மயிலவெற்பில் விரும்பியதென் மனமே.
53இரட்டையாசிரிய விருத்தம்✓
மனமுனது திருவடியை யல்லாது மற்றொன்றின்
மருவா திருக்கு மியல்பும்
வாக்குனது புகழன்றி வேறுவித மொன்றையும்
வழுத்தாத வன்மை நெறியுங்
கனபணி யுனக்கன்றி வேறொருவ ருக்குமுயர்
காயமுய லாத நிலையுங்
கமழும்ப னீரிலையில் வைத்தவெண் ணீறுகொடு
கடையனேற் கமைய வருள்வாய்
புனமறம டந்தையொரு பொன்னகர்ப் பிடிதழுவு
புயநிரை பொலிந்த புனிதா
புனலிகுர வங்கடம் பிந்தீவ ரஞ்செச்சை
பொற்பணி யுடன் பு னைந்தா
யனவரத நடநவிலு மரகத மயூரத்தி
லயில்வே லெடுத்து வருவா
யணிமயில மலையினது தலையினிதம் விளையாடு
மானந்த முருகே சனே.
54நேரிசை வெண்பா✓
ஏசகன்ற பல்பாட் டிசைந்துபுகழ்த் தோள்களிலென்
மாசடைந்த சொல்லும் வனைவானே - யீசனுக்குச்
சொன்னதனைக் கிள்ளையொடுஞ் சொல்லிமயி லாசலத்தின்
மின்னவிர்வேல் பற்றிநிற்கும் வேள்.
55கட்டளைக் கலித்துறை✓
வேளஞ்சித் தன்னுரு மாறித் திரிய விளங்கெழிற்சேய்
வாளஞ் சிறந்தகண் ணார்நட மாடு மயிலவெற்போன்
காளஞ் சிறிதுமில் லாப்பொருள் கேட்டுய்ந்த கண்ணுதல்பாற்
றாளஞ் சிவிகைபெற் றுத்துதி பாடிய தன்மையென்னே.
56கலிநிலைத்துறை✓
என்னேயமு நின்றிருக் கூத்து மிரண்டுமொன்றா
யின்னேகளி கூர வைகுந்திர லில்லைகொல்லோ
மின்னேர்சடை யான்முதா லாகிய மேலவர்க்கோர்
மன்னேமயி லாசலக் கோயிலில் வாழ்பிரானே.
57அறுசீர் விருத்தம்✓
இரங்கல் - சிலேடை
வாழுங் கிளையி னிலைநீங்கி வளர்மென் முகையா முலைபசந்து
சூழு மனையா ரிடைநாணிச் சோர்ந்து வாடித் தளர்வெய்தி
வீழுங் காய மிகக்காய்ந்து வேனிற் சகியா வியன்கோங்கென்
பாழு மகள்போன் மயிலமலைப் பவளக் குகன்மால் படைத்ததுவே.
58கலித்தாழிசை✓
படையாலொரு முதுசூருடல் பப்பாதிய தாகப்
பண்ணுங்குகன் மயிலாசல நண்ணுங்களி யுடையே
முடைநாறிய வூனுண்பவர் முன்னேகியு நில்லே
முதிர்செந்தமிழ் பொழியுஞ்சில முனிவர்க்குற வாவேம்
விடையெறிய பரமன்றலை மீதேமுய லகனும்
விறன்மாயவ னதுசெங்கையின் மிளிர்கின்றவை வேலு
மடையாளமெ னக்கூறிடு மவருக்கிழி வுரையே
மயன்மாதெவெ றுக்காதவ ரரையும்புகழ் நமதே.
59எழுசீர் வண்ணவிருத்தம்✓
தனதந்தன தனதானனா—தனதானா
நமனஞ்சிய பெரியோரவர் தவமிஞ்சிய பயனாமென
நவிலும்பனு வலைநாடொறு—மிகழ்தீயோர்
தமறென்றுழல் வதுபோயநு தினநின்பணி புரிவேனொரு
தரமிங்கித மயின்மேலெதிர்—வருவாயே
குமரன்குரு பரன்வேள்குகன் முருகன்சர வணநீர்தரு
குழகன்றுணை யெனவோதுநர்—செவியூடே
யமலன்பெற மொழிதாரக விபரஞ்சொலி மயிலாசல
மதினின்றருள் பொழிசீர்திகழ்—கிழவோனே.
60மருட்பா✓
கிழமுனிவன் வேடமிட்டுக் கேகயத்தை விட்டுப்
பழகிவசஞ் செய்துகுறப் பாவை—குழல்சரியச்
சேர்ந்தளி கூர்வான் றிகழ்திரு மயிலத்
தார்ந்தமெய் யடியவர்க் கஞ்சிக்
கூர்ந்தபூங் கணையான் கும்பிடல் வியனே.
61கழிக்கரைப் புலம்பற் றாழிசை—மடக்கு✓
வியனார் கமல மலரினமே
விளம்பு முலக மலரினமே
வெள்ளை நிறத்துக் குருகீரே
வேண்முனி றத்துக் குருகீரே
கயலின் குலமே கேதகையே
கருத்தைச் சுடுமே கேதகையே.
கருங்கு வளையே கடனுரையே
காணேன் வளையே கடனுரையே
புயல்வந் தருந்துங் கசப்புனலே
பொருந்து முறவுங் கசப்புனலே
புளினத் திடரே யளப்புனையே
பொல்லா திடரே யளப்புனையே
வயமிக் குளவன் பேரொலியே
மயிலத் தொருவன் பேரொலியே
மயலி னிலையஞ் சகியெனே
வந்தா னிலையஞ் சகியெனே.
62நேரிசை வெண்பா✓
ஏனமற மங்கையைவேற் கிட்டானை யீடில்பசுங்
கானமற மங்கையைவேற் கைக்குகனை—ஞானமற
மங்கையத்த ரேயா மயிலத்திற் கண்டுசென்னிக்
கங்கையத்த ரேயா கலாம்.
63கட்டளைக் கலித்துறை✓
கலையான வத்திர வாணி புகழுங் கவின்மயில
மலையான வத்திர வாணிந்தை யேனையும் வாழ்விக்கும்வே
ணலையான வத்திர வாணிபங் குன்றொடு நந்தவென்றோ
னிலையான வத்திர வாணித்தர் போலு மியல்பினர்க்கே.
64அறுசீர் விருத்தம்✓
இயல்வளமு மலைவளமும் பொழில்வளமும் புனல்வளமு
மிமையார் போற்றும்
புயல்வளமு முற்றுமுள்ள பலவளமுந் திகழ்மயிலம்
புரந்த செவ்வேள்
கயல்வளங்காட் டியநெடுங்கட் குஞ்சரிக்குங் குறமகட்குங்
கணவன் செந்நெல்
வயல்வளத்தண் மருதமுத னானிலத்துஞ் சென்றாடி
வருத லுண்டே.
65ஊர் - எழுசீர் விருத்தம்✓
வரும லின்றிய தொண்டருக் கருட்செயு
மயில மாமலைச் சேய்க்குத்
திருநி லாவிய பரங்கிரி யேரகஞ்
செந்தி லம்பதி சோலை
மருவு மாமலை யாவினன் குடிமுதல்
வண்ட மிழ்ப்புல வோர்சொல்
பொருவி லாயிரங் கோடிக ளாகிய
பொருப்பெ லாந்தன தூரே.
66அடிமடக்குக் கொச்சகக் கலிப்பா✓
தனம்பகமா னவர்மீதே தனம்பகமா னவர்மீதே
வினம்பரவு பதியென்னா வினம்பரவு பதியென்னா
வனம்புயத்தாட் டுதியாதோ வனம்புயத்தாட் டுதியாதோ
கனம்படரு மயிலமனே கனம்படரு மயிலமனே.
67சித்து - தாழிசை✓
அமலன்புகழ் மயிலாசல மதில்வாழ்சிவ ஞானிக்
கருள்செய்தயி லணிதோளுட னருகிற்றிகழ் சித்தன்
றமதென்றுள பலசித்தர்க டந்தாண்மலர் மகரந்
தலையிற்புனை தருசித்தர்த மைப்பேணிட லுள்ளே
மெமதன்பவி டாதேபல மீயங்கொடு வந்தா
லெண்ணூறுவ ருடமாயுளி லங்கச்செய வல்லே
முமலத்தடை யறியேமிரு நாகந்தரு வாயேன்
முன்கட்டிவெ ளுக்கச்செயு முறையுந்தெரி வேமே.
68இதுவுமது எண்சீர் விருத்தம்✓
வேமப்பான் முழுக்காட்டி யாடை சாத்தி
வெண்ணீறு மிகப்பூசி வேண மட்டு
மேமப்பாத் திரத்திலன்னம் பருப்பு நெய்பா
லிருமூன்று சுவையுடனீ யீந்தா யானா
லியாமப்பா லியைந்தரச வாதஞ் செய்வோ
மிராப்பகன்மா றிடப்புரிவோ மிவையல் லாமற்
சேமப்பாங் குறுமயில மலைப்பொற் கோயிற்
றிருக்கைவேற் சித்தர்தம்பேர் செப்பு வோமே.
69நேரிசை வெண்பா✓
செப்பரிய பல்சீர்த் திருமயில மாமலையிற்
றுப்பனைய மேனிச் சுராதிபனை—யெப்படியுங்
காணாம லென்றன் கலிதீர மாட்டாது
நாணாம லுந்திரியே னான்.
70கட்டளைக் கலித்துறை✓
நானங் கமழு மயிலா சலத்தி னடிக்குமருட்
கோனங் கமழு மயிலா சலத்தினர் கும்பிடுந்தா
ளானங் கமழு மயிலா சலத்தின் னன்றடற்சூர்
வேனங் கமழு மயிலா சலத்தினல் வீட்டிடுமே.
71கலிவிருத்தம்✓
வீட்டு நேய மிகுத்துனை நாடிடுமென்
பாட்டு மாலை பரிந்தருள் செய்குவையோ
காட்டு வள்ளியைக் காவுடை யான்மகளிற்
கூட்டு வாய்மயி லாசலக் கொற்றவனே.
72சம்பிரதம் - தாழிசை✓
கொற்ற வர்க்குமுயர் மாதவர்க்குமொரு
கோனெனக்குலவு குமரவேள்
கோழியங்கொடிகொண் மயிலவெற்பிலிரு
கோதையர்க்குநடு மேவுவா
னற்றமீதெனவ றிந்தளிக்குமுரு
கையனென்றுருகு மயிலினா
னெம்புயக்கழனி னைந்துதெண்டனிடு
மன்புகொண்டுதமிழ் பாடினான்
மற்றவர்க்குநிகர் வாழ்வெய்தாதுடலு
மனமும்வெள்ளைநிற மாகிடு
மாநிலத்திலியெ றும்புமோர் பெரிய
மலையெனத்திகழும் விழியினீர்
வற்றலின்றிவரு நல்வினைப்பயனும்
வம்பதாமணியும் வெண்கலை
மண்ணடைந்துநிற மாறுமெண்ணில்பல
வாயிலிற்புகலு மாகுமே.
73எண்சீர் விருத்தம்✓
ஆகுமதை யழிப்பதற்கு மழிவதனை யாக்குதற்கு
மயில்வேற்கைக் குருபரனை யன்றியிலை யெனத்தேறிப்
பாகுநிகர் தமிழ்ப்பாடல் பலபாடிக் களிகூரும்
பழையோர்கள் பெற்றபயன் படிறேனும் பெறவேண்டி
யோகுடையார் மலிபொதியை யுயத்திருச்செந் தூரருணை
யொளிர்திருமா மலைபொருநை யுருமலையா தியதலந்தோ
றேகுமதிற் சலிப்பெய்தி யெழின்மயிலா சலக்குவட்டி
லின்றுவந்து பரவுகின்றே னினிநடப்ப தறியேனே.
74வஞ்சித்துறை✓
அறிஞர்தூழ் மயிலத்
தெறிகதி ரெழிற்சேய்
வெறிகமழ் மென்றாட்
குறிகொளல் குணமே.
75மறம் - நேரிசை வெண்பா✓
குணப்பிசகுந் தோள்வலியுங் கொண்மறவர் பெண்ணை
மணப்பதற்கு மன்னனிச்சை வைத்தாற்-கணப்பொழுதி
லந்தப் புரத்திருக்கு மாயிழைமா ரெல்லோரு
மிந்தமயி லத்துறுவா ரே.
76இதுவுமது - கட்டளைக்கலித்துறை✓
வார்வேல் புரக்கு மயிலா சலத்து மறவர்கொம்பைச்
சேர்வேனென் றெண்ணு மரசேவந் தூதுந் தேயவழக்
கோர்வேம்பைக் கட்டுத லன்றோ முன்கற்பகத் தூறொழித்த
சீர்வேங்கைக் கொவ்வுங்கொன் மாப்பட்ட பாட்டைத் தெளிந்துசொல்லே.
77கலிவிருத்தம்✓
சொல்லு மாய்ப்பொரு ளான சோதியை
யல்லு மாய்ப்பக லாகி யல்லதைப்
புல்லு மாறெழின் மயிலப் புங்கவ
னொல்லு மாறுமா முகங்க ளோதுமே.
78எண்சீர் விருத்தம்✓
ஓதும் பனுவற் றொகையா வையுநின்
னுபயக் கழல்து டிடுமுண் மையுணர்ந்
தேதுந் தனதென் றுரையா வழியா
லெனையுந் தருவே னிடையத் தகுமோ
காதுஞ் சிலைவே டர்புனத் தினஞுங்
ககனத் தினர்கன் னிகையும் புரியும்
வாதுங் களியா கிநடிப் பவனே
மயிலத் தொருநல் வரமின் றருளே.
79குறம் - தாழிசை✓
மின்றயங்கும்வடி வேலணிதோளுடை விகிர்தன்
விரைமலிந்தபனி நீபமுளான்வியன் மயிலக்
குன்றடுத்துமயின் மேல்வரல்கண்டத னாலே
கொண்டமையலென நின்குறிகூறுது கோதாய்
நன்றவன்றருசுகம்பெறுவாய்மலை யாதே
நானுரைத்ததுபொ யல்லநினானைமெய் நம்பா
யென்றனக்குநிறை நாழியினெல்லொடு சோறு
மெண்ணெயுங்கலையு மீந்துவிடிப்பொழு தும்மே.
80இதுவுமது - அறுசீர் விருத்தம்✓
அம்மா வென்குறி கேளுன் னாக்கஞ் சுந்தர மீகை
சும்மாபோ மென்றி ராதே தூய மயில மலைவா
ழெம்மான் றன்புயஞ் சேரு மின்பக் கடலை நல்கு
மம்மான் கட்புன னீங்கி வருத்தந் தீருள மகிழ்ந்தே.
81கட்டளைக் கலித்துறை✓
மகிழமாமலர் மாலிகைமாரவேண்
மலயங்காவில் வரக்குயில்வாய்விடச்
சகிகணிந்தையு மம்புலியுஞ்சுடத்
தையல்வாடித் தயங்கிலகுமோ
வெகினமூர்தியைக் குட்டியகையனே
ஈசன்மால்பணிந் தேத்தியமெய்யனே
முகிலறாமயி லாசலத்தையனே
முத்தமிழ்ச்சுவை முற்றுணர் தெய்வமே.
82இரட்டையாசிரிய விருத்தம்✓
தெய்வங்க ளெத்தனையு மொன்றென வுணர்த்திடத்
திருவுருவெடுத்த தெய்வஞ்
சிவசமைய முதலாகு மறுவகைச் சமையமுந்
தெண்டனிட நின்ற தெய்வம்
பொய்வலித் தானவர்கள் வலியொழித் தமரர்வளர்
பொன்னுல களித்த தெய்வம்
பொறியனைய குஞ்சரிமு லைத்துணைக் களபம்
பொலிந்தமார் புடைய தெய்வ
மைவனக் குயிலனைய வள்ளியின் றந்ததினை
மாவினின் மகிழ்ந்த தெய்வம்
வண்டமிழ்ப் புலமைதிகழ் கவுமார ருக்கினிய
வரமெலா முதவு தெய்வம்
வைவதற் கஞ்சாத கொடியேனை யன்றுதிரு
மலைமீது காத்த தெய்வ
மயில்வா கனத்தெய்வ மயிலார் புயத்தெய்வ
மயிலா சலத்தெய் வமே.
83நேரிசை ஆசிரியப்பா✓
தெய்வப் புலமையுந் திருப்புகழ்ச் சிறப்பு
மைவைகைப் பொறிகட் கடங்கா வரிவுந்
தொண்டர்தம் பணியுந் தூய நெறியு
மண்டலத் தரையரும் வணங்கு மாண்பு
மன்னபல் சீரு மடைவது குறித்து
நின்னருட் பேறே நினைத்துநெட் டுயிர்த்துத்
தோகைமா மயிலைச் சுடர்ச்செஞ் சூட்டு
வாகைவெண் சேவலை வடிவேற் படையை
மூவிலைச் சூல முதிரொளி வயிர
மாவிலம் படல்வாள் வயங்கெழிற் கேடகஞ்
சக்கரஞ் சங்கந் தனிக்கயி றங்குச
மிக்கசீர்ப் பணிகண் மிகவணிந் துள்ள
பவளமால் வரைநேர் பதினா றுருவிற்
றவளவெண் ணீற்றுச் சங்கரன் பரவுஞ்
சிற்சில வற்றொடு தினந்தினங் கருது
நற்செயல் பொலிந்த நாயினேன் மனத்தைத்
தளர்வொடு சலியாத் தகையுறப் புரிவா
னளவில்பே ராட லலைபுனற் பொருநைத்
திருவுரு மாமலை யாதியிற் செய்து
பருவம்வந் தடுத்தது பதறே லென்ன
விருதரங் கூறி யிறுமாப் புய்த்துப்
பருவரன் மிடியிற் பட்டார் போலப்
புல்லர்தம் மனைகளிற் போய்வர விடுத்து
நல்லறல் கடுக்கு நறைக்குழன் மகளிர்
கணைப்பிணை யிணைவிழிக் காமர் கனிவாய்
துணைமுலை யிளநலந் தொய்யிலின் மென்றோ
ளிறானிகர் வேளர சிருக்கை யாதியினு
முறாவரச் செய்தனை யொருகணத் தொருதர
மாதலின் மருண்டன னருண கிரியென்
றோதலும் பிறவு மொளியா வண்ணங்
குழீஇய முனிவர் குழாத்தொடு மாசு
கழீஇய மதிநிகர் களிற்றிற் றோன்றித்
தகர்கொணர் வீர வாகுத் தலைவ
னிகரென விளங்கவெண் ணீறளித் தருள்வாய்
பைம்புயற் புனலைப் பவள மேய்க்குஞ்
செம்புகர் வேழத் திரணெடுந் தடக்கைப்
புழைவழி யுறிஞ்சும் புதுமலர்ப் பொதும்புர்
தழைவள மயிலா சலப்பெருங் குவட்டிற்
குலவுபொன் மதிற்றிருக் கோயி
னிலவுசீர் பொறுத்த நிமலசற் குருவே.
84மதங்கம் - நேரிசை வெண்பா✓
சற்குருவாந் தன்மைத் தவத்தோர் தமைமறந்து
நிற்கு மிசைமதங்கி நீலவிழி—பொற்குவட்டை
யன்னமயி லாசலத்தா னாற்றிருதோ ணாடியதா
லின்னமசை யாதிருந்த தே.
85இதுவுமது - கட்டளைக் கலித்துறை✓
இருந்துலங் கொண்ட வயிரவர் போற்று மிகன்மதங்கி
வருந்துறைக் காற்றெனச் சீறிச் சினந்துழல் வாய்திறந்து
பெருங்குத ரான புறமதத் தோர்களைப் பிய்த்தருந்திக்
கருந்துதங் கொன்றபி ரான்மயி லாசலங் காண்பவளே.
86இதுவுமது - அறுசீர் விருத்தம்✓
பவச்சாதி யாமதங்கி தருநரம்பு பஞ்சினுக்கும்
பருவ நல்கு
மவச்சாவா வெய்யின்முள்ளிற் றவிப்பாரைக் கழல்புரக்கு
மன்றிப் பின்னுந்
தவச்சார்பி லுயர்வசிட்டன் கைக்கொண்டான் மதநடியார்
தவிர்ப்பார் கொல்லோ
நவச்சாமப் பயிரெள்ளா மயிலத்தா னன்பர்சொல்லு
நவைச்சொற் கேட்டே.
87கலிவிருத்தம்✓
கேட்டினுக்கு ளஞ்சிநின் கிளித்தமிழ்க் கிளத்துவேன்
மாட்டிரங்கி டாதிருக்கும் வன்மையென்ன நன்மையோ
கோட்டினத்து யர்ந்தவண்மை கொண்டதான மயிலம்வாழ்
தாட்டிகச்ச டானனச்ச ரோசமுற்ற தலைவனே.
88நெடிலடி விருத்தம்✓
தலையா லன்புடனே யுனைச்சந் ததமும் பணிவேன்
முலையா னைக்கிடை போமன மூடமொ ழித்தருள்வா
யிலைவேல் கொண்டவ னேதக ரேறிய சேவகனே
யலைசூழ் பார்புகழ் சீர்மயி லாசல வித்தகனே.
89எழுசீர் விருத்தம்✓
வித்தை யாலும் வருந்தி டாதுன்
விரைப்ப தாம்புயம் வேண்டுவேன்
முத்தை வென்றவெ ணீற ணிந்தொரு
முத்த முந்தர வில்லையோ
தத்தை யொன்று குலாவு திண்புயச்
சண்முக காமயி லாசலத்
தத்தை தங்கையொ டாடல் கண்டுவப்
பான சீர்புனை யண்ணலே.
90பதினொருசீர் வண்ண விருத்தம்✓
தன்னத் தனதன தானன—தந்ததானா
அண்ணற் கொருபொருள் பேசுநின்
வண்மைப் புகழ்மிக வோதியு
மன்னச் சிறுநடை யார்மயன்
மிஞ்சுதீயேன்
விண்ணப் பமுமுன தாறிரு
நன்மைச் செவியினு ளேகியென்
வெம்மைக் கலிகெடு மாறுபு
ரிந்திடாதோ
கிண்ணத் துணைமுலை வேடுவ
மின்னுற் கெதிர்பசி மீறிய
கின்னக் கிழமுனி யாயுமி
ரந்துளானே
வண்ணத் தமிழ்மயி லாசல
நண்ணித் தொழுமடி யார்களை
வன்மைச் சமணணு காதருள்
கந்தவேளே.
91பதினாறுசீர் வண்ணவிருத்தம்✓
வேளணிம லர்ச்சமரு மீனமலி வுற்றபுலை
மேவியநெ றிக்கயவர் பகையும்வீணே
வீடுதொற லைக்குமிடி நோயுமிக லிற்றமியன்
வேதனைபொ றுத்துழல்வ தறிகிலாயோ
காளவிட மிக்கொழுகும் வாயரவி னைப்பருகு
கானமயி லிற்கலப நிழலினூடே
காதலிரு வர்க்குநடு வேலுடனு தித்தளவில்
காலபய மற்றநிலை யுதவுவாயே
வாளவுண ருக்கரச தாமென முளைத்தநெடு
மாமரம றக்கறுவு புயவிசாகா
வாரணமு கத்தமைய னாரொடுப கைத்துலக
மாதிரமு முக்கவலம் வருகுமாரா
தாளநிகர் பொற்புமுலை மாதரனை வர்க்குமொரு
சாமியென மெச்சிடினு மகிழ்குகேசா
தாரணிது திக்குமயி லாசலமு கட்டில்வரு
தாபதர்த மக்கருள்செய் தகையுள்ளானே.
92காலம் - நேரிசை வெண்பா✓
ஆனதா கின்றதினி யாவதெனுங் காலமற்ற
ஞானபரா னந்த நமக்கருள்வான்—வானளவுஞ்
சீரார் மயிலமலைச் செவ்வே ளெனவிளங்கும்
பேரார் குருபரப்பி ரான்.
93இதுவுமது - கட்டளைக் கலித்துறை✓
பரம்பிய தென்றற் கனல்காட்டி மாங்குயிற் பாட்டொலித்து
வரம்பெறு மாநதி நீருண்ட வேனின் மயிலமலைச்
சிரம்புனை தாளுடைச் செவ்வேண் மயிலிற் செலுத்துமென்றாற்
றறம்படு கார்பனி யென்செய்யு மோவிளந் தையலையே.
94இதுவுமது - எண்சீர் விருத்தம்✓
தையலுக்கு முலையரும்பு முதிராக் காலஞ்
சரசனய மொழிப்பயனுஞ் சாராக் காலம்
வெய்யமதன் கணையெடுத்து வெகுளாக் காலம்
வியன்கழங்கம் மாணைமுச்சில் வெறுக்காக் காலம்
பையனைய கடிதடப்பு மலராக் காலம்
பழையமத நூல்சிறிதும் படியாக் காலம்
வையமுதன் மூன்றுலகுந் துதிக்குந் தொல்சீர்
மயிலமலைக் குகன்மோக மலிந்த தன்றே.
95பன்னிருசீர் தாழிசை✓
மலியுருங் கருணை பழியான் வானோர் பரவு பெருமான்
வடிவேன் முருகக் கடவுண் மயில மலைச்சண் முகவே
ளொலிதங் கியதிண் கழல்சே ருபய சரணங் கருதி
யுருகித் தொழுமெய் யடியார்க் குரிய பணிகள்புரிவார்
கலியை மதனை விதியைக் காலன் றனையுண் மதியார்
கவலைக் கடலிற் சுழலார் கமழ்செந் தமிழ்முற் றுணர்வார்
புலியைக் கரியை யுரித்தார் போலுஞ் சிலரைப் பணியும்
புனிதச் சமைய மாறும் புகழத் திகழ்கின் றவரே.
96எண்சீர்த் தாழிசை✓
திகழுஞ் சண்முகப் பண்ணவன் வீரஞ்
செறிந்த பன்னிரு திண்புயன் றேவர்
புகழும் வேலுடைச் சேவக னாண்மை
பொலிந்த சேவலம் பொற்கொடிக் கார
னகழுஞ் சாகரஞ் சூழ்புவி மெச்ச
வவிர்ந்த சீர்மயி லாசலத் தண்ண
லிகழுஞ் சிந்தையு ளேனையு மாட்கொண்
டிடத்து ணிந்தமை யாரறி வாரே.
97பள்ளு-பதினான்குசீர் தாழிசை✓
ஆரார் செஞ்சடைப் பரம னார்விழி
யழலி லுதித்த முருகவே
ளகத்தி யன்முத லான தொண்டருக்
கருள்வி ளக்கமுன் னளித்தவன்
வாரார் பூண்முலைக் குறத்தி குஞ்சரி
மருவுந் திண்புய வானவன்
மயில மால்வரை யருவி நீர்மிக
வந்து பாயுநல் வயலிலே
யேரா ருழவர் களித்து மையல்கொண்
டேப்ப மிட்டுவந் தடுப்பதா
லினித்த மொழிகள் பேசிச் சரசத்
திணங்கி நாழிகை போக்குறீர்
காரார் மென்குழல் சரியப் பெரிய
களப முலைகள் குலுங்கிடக்
கவிழ்ந்து நிமிர்ந்து நாற்றை யெடுத்துக்
கையா னடுமின் பள்ளீரே.
98சவலை வெண்பா✓
ஈரம் பொருந்தா விதயத் தெளியேனை
வாரம் பொருத்து வலிதாண்டா
எாரம் பொலிமயில் தன்பர்கபகை மாற்றுதற்காம்
வீரம் பொறுக்கதிர்வேல் வேள்.
99ஏகபாதம்-கட்டளைக் கலித்துறை✓
வேளைக் கருளு மயிலத்தன் றன்னை விரும்பனன்றே
வேளைக் கருளு மயிலத்தன் றன்னை விரும்பனன்றே
வேளைக் கருளு மயிலத்தன் றன்னை விரும்பனன்றே
வேளைக் கருளு மயிலத்தன் றன்னை விரும்பனன்றே.
100வருகை - தாழிசை✓
நன்றேவருக சிவபெருமான் ஞானாகரமே வருகமறை
நாலுமுணராப் பொருள்வழங்குமடம்பு மலர்பவளக்
குன்றேவருக மயிலாருங் குருந்தேவருகக் கனகநகர்க்
கோமான்மகள்சேர் குகன்வருக குறத்திக்கணவா வருகவிரைந்
தின்றேவருக களிறேறி யின்னேவருக கழறியவா
றியற்றறியான வருகவுன தின்பங்கொடுக்க வருகவருண்
மன்றேவருக பலகோடி மலையாய்வருக வருகவே
மயிலாசலத்தில் விளையாடும் வாழ்வேவருக வருகவே.
101எண்சீர் வண்ணவிருத்தம்✓
வருபல கனவினி லொருவா சகமே
மகிழ்வுட னுரைசெயு முருகோ னிமையார்
தருமக ளழகிய குறமா துடனே
தறுகிய மலைகளி லுயர்வா னதுகே
டிருவருள் வளமுறு சிவஞா னியர்நேர்
சிலர்பிர ணவமத னுரைதே றியதா
விருமையு மெளியவர் பெறுமேன் மையினா
லிசையொடு வளமிகு மயிலா சலமே.
102குரவை - முடுகுத்தாழிசை✓
சலனமற்றதிரு மயிலவெற்பிலரு
டழைவுறக்குரவை யிடுமினோ
சண்முகக்கடவுள் வள்ளிக்குஞ்சரித
மக்கெனக்குரவை யிடுமினோ
வலமிகுத்ததொரு சேவல்வேல்கலப
மயிலெனக்குரவை யிடுமினோ
வண்டமிழ்ச்சுவைம லிந்திடப்புலவர்
வாழ்வுறக்குரவை யிடுமினோ
நலமனைத்துமுத வத்தகுந்தசிவ
முனிமுன்குரவை யிடுமினோ
நானிலத்துயிர்கண் மிடியிலாவுவகை
நடுவுறக்குரவை யிடுமினோ
குலமறைப்பகுதி யாகமத்தினொடு
கூடிடக்குரவை யிடுமினோ
கோதையிர்சிறிய கொங்கையீரளவில்
குமரியீர்குரவை யிடுமினோ.
103நிலைமண்டில ஆசிரியப்பா✓
மின்னவிர்ந் தாங்கு மிளிர்கதிர் வேலும்
பொன்னவிர் மஞ்ஞையும் பொருதகர்ப் பரியுங்
களிறுஞ் சேவலுங் கழறுவ பிறவும்
வெளிறுநீ றணிந்த மேனியும் விளங்கப்
பரசிவன் றிருமால் பதுமப் புத்தே
ளரசிலை போன்றே யவிர்தரு மல்குற்
சசிமினாள் கணவ னாதியர் சார்தரப்
பசிமுது பலலோர் பல்லோர் சூழக்
கந்தநா யகனைக் கவின்றிகழ் பொதியை
மந்த மாருதம் வரப்பெறு மயிலத்
தந்தணர் போற்ற வமர்பெருந் தகையைச்
செந்தகைப் பைந்தகைத் தேவிய ரிருவர்
நடுவினி தமரு ஞான பண்டிதனை
மடுவினு மொருக்கால் வந்தசண் முகனை
யேத்துவா ரேத்து மியல்பினுக் கிசைந்த
நாத்துணை வாணி நவைதவிர் முதுநூல்
கற்றுழி வணங்குங் கான்மலர் படைத்த
முற்றுமுணர் கடவுள் முனைகட வுளரைக்
கனவினு நனவினுங் கண்டுவப் பெய்திச்
சினமிலாச் சாந்தந் திருமுறு முத்தி
வீட்டுறக் கருதி வியன்றமிழ் மொழியாற்
பாட்டுரைத் தணியும் பழங்கவு மாரர்க்
கணிமலர்ப் பொதும்பல் பல்குறிஞ்சியும்
பிணியறுத் தழியாப் பெருமை நல்கும்
புனிதப் பூசையும் புரைதவிர் நாட்டமுங்
கனியுமெய் யுணர்வுக் களிக்குந் திருவே.
104நேரிசை வெண்பா✓
மயிலமலைக் கோயிலுக்குள் வாழ்முருக வேளுக்
கயிலதனைப் போற்றுமவ னன்பாற்—பயிலுங்
கலம்பகத்தைக் கூறுமவர் கல்வியறி வென்னு
நலம்பகம்பெற் றுய்யு நரர்.