முருகன் App
சண்முகப் பாமாலை
உருத்திர சாமி
நூல்3 / 3
சண்முகப் பாமாலை · உருத்திர சாமி

நூல்

6✓
பூமே லயன்படைப்பும் பொன்னவன்கோன் காப்புமுயர்
சேமேல் வருமீசன் செய்துடைப்பும்-நாமேவும்
வேலேந்து மய்ய விளக்கினையே நின்னவென
மாலேந்து மேழையற்கு மன்.
7✓
சோம்ப லொழிந்து சுகமென்று பெற்றிடுவேன்
பாம்பணியு முக்கட் பரம்பரனே-தாம்பணியும்
எந்தைகுரு நாதா எழில்ஞானி யார்மடம்வாழ்
கந்தவடி யேனையின்று கா.
8✓
கானக் குறவள்ளி கால்வணங்கு கந்ததெய்வ
யானையுணர் பன்னிருதோ ளண்ணலே-ஈனஞ்சேர்
ஊணோம்பி யென்று முழலெளியேற் குன்றனடி
தானே யுறுதிச் சரண்.
9✓
மன்னவர்தஞ் செல்வ மதியேன் நிறைகல்வி
என்னுஞ்செல் வந்தனையு மெண்ணிலேன்-பொன்னைநிகர்
நின்னடிச்செல் வந்தனையே நீள நினைந்திருப்பேன்
கன்னன்மொழி வள்ளிகண வா.
10✓
கற்பித் ததுபோதும் கற்பித்த வவ்வழியே
நிற்பித்தல் வேண்டும் நிருமலனே-யற்பபத்தி
யேனுமிலே னேழையே னேந்தெழில்வேற் செங்கரத்தாய்
நானுய்த லென்றோ நவில்.
11✓
அயன்வாழ்வு வேண்டேன் அரிவாழ்வு வேண்டேன்
வியனிந் திரன்வாழ்வு வேண்டேன்-மயிலிவர்வோய்
நண்பன் குபேரன் நயவாழ்வு தான்வேண்டேன்
எண்ணுவது னீரடியே யீண்டு.
12✓
அயனாய்ப் படைப்பாய் அரியாகிக் காப்பாய்
தயல்பாக னாகித் தணிப்பாய்-மயனீக்கி
யாலி லடியேனை யாரே தடுப்பார்செவ்
வேளென்னுங் கோனே விளம்பு.
13✓
நக்கீ ரருக்காக நல்ல வயில்கொண்டே
அக்கல் பிளப்பித்த அண்ணலே-எக்கலினும்
திண்ணியவென் னெஞ்சச் சிறுகல்லைச் சேர்த்துருக்கல்
எண்ணி னரிதோ வியம்பு.
14✓
நல்லோர் குழுசேரேன் நாரியர்பின் சென்றென்றும்
பல்லாறு சொல்லிப் பழிச்சுவேன்-சொல்லுகுக
இத்திறத்த னென்றே வெளியேனை நீக்குவையேல்
முத்திதனை யார்தருவார் முன்.
15✓
அன்பிலேன் மேலா மருளிலேன் எப்பொழுதும்
முன்புபின் பில்லா முருகனே-கொன்னயில்வேற்
கோமானே கோவல் குருவடிவாய் வந்தாண்டா
யாமா றறியேனை யன்று.
16✓
அவனி மகளி ரருத்தத்தி னாசை
புவனந் துதித்திடவே போக்கித்-தவமார்
பெரியோ ருறவைநான் பெற்றுய்வ தென்றோ
அரிமருகா சேந்தா வறை.
17✓
புன்கண் டனையகற்றிப் போதங் கொளுத்துகுக
என்கண் வினையகற்ற லென்னரிதே-என்புருக்கும்
அன்புபெற்றார் பெற்றாரே ஆனந்த மென்றறிந்தும்
அன்பிலனென் வேலா வறை.
18✓
நுன்சந் நிதிசேர்ந்தார் நோய்கொண் டுழல்வாரோ
துன்பஞ்செய் சூர்முதலைச் செற்றாய்கேள்-என்கண்சேர்
நோய்மாற்றிக் காக்கு நுகம்பூணு மெந்தாயே
தாய்போற்சேய் காப்பாரார் சாற்று.
19✓
சாற்றுதற்கு நாவுடையேன் உன்னநெஞ்சு தானுடையேன்
போற்றத் தலையுடையேன் பொய்யனேன்-தேற்றமருள்
எங்ஙனுய்வேன் செந்தி லெழிற்பதிவா ழெங்குருவே
மங்கைவள்ளி நாயகனே வந்து.
20✓
வந்துதினம் வானோர் வணங்கி மகிழ்ந்திடுவர்
இந்தணிந்த வீச னிறைஞ்சிடுவேன்-புந்தியிலேன்
காலத்தை வாளா கழிப்பேன் குமரகுரு
சீலத்தைத் தந்தருளெற் சேர்ந்து.
21✓
நல்லா வினன்குடிவாழ் நாயகனே நன்குணராப்
பொல்லாதே னென்றோ பொருந்துவது-கல்லாரம்
முல்லைநகு வெட்சி மொய்த்திடுநின் பாதத்தைக்
கல்லைநிகர் நெஞ்சு கனிந்து.
22✓
எக்கலினும் வாழ்தல் இயல்புநினக் கென்றிடுவர்
தக்கவரைச் சாரே னுளக்கல்லில்-மிக்குயர்ந்த
செந்தில் முருககுக தேவநீ வாழ்நிலையென்
சிந்தனைக் கெட்டாநீ செப்பு.
23✓
கனிந்து கனிந்துருகக் கற்றிலேன் யாதும்
முனிந்து முனிந்திடவே மூத்தேன்-வனைந்து
துதிபுரியேன் சாமிநினைச் சூழ்ந்திலன்செவ் வேளே
மதியிலே னுய்ய மதி.
24✓
மதியினுட னாறணிந்த மாதேவ னன்று
விதியின் வணங்கி வினவத்-துதிசேர்
பிரணவத் தின்பொருளைப் பேசியவென் சற்குருவே
பரவிடுமெற் கின்று பகர்.
25✓
பகர்ந்தவே தாகமத்தைப் பார்த்திலேன் பார்த்தே
உகந்தவற்றிற் சார்பொருளை யோரேன்-சகந்தனில்யான்
ஏன்பிறந்தேன் மூடன் இயம்பிடுமின் சொல்லில்லேன்
கான்பிறந்த வள்ளிகண வா.
26✓
பாகாரு மின்சொற் பகர்வள்ளி காதலனே
நாகா சலமமரு நாயகனே-மாகாயம்
யானடுத்துச் சோராம லாறுமுகத் தேவேநீ
தானெடுத் தாளல் தலை
27✓
கற்றுமறி வில்லாதேன் கற்றவரைச் சேராதேன்
பற்றெனைப்போ லார்க்குண்டிப் பார்தன்னில்-முற்றும்
அறிந்தோர்போற் பேசும் அசடனயில் வேலா
சிறந்த வறிவினைநீ சேர்த்து.
28✓
கனவினிலும் நின்னைக் கருதவரந் தந்து
நனவினிலும் நாடுநலம் நல்காய்-தனதன்
நிகர்செல்வர் வாயிலி னின்றவா தாள்வாய்
புகர்வேற் கரத்தாய் புரிந்து.
29✓
காலா யுதக்கொடிகொள் கையா வடித்திட்ட
வேலா யுதங்கொள் விமலனே-மாலாம்
இருள்விடியக் கூவுவித்த லேலாதோ வின்பப்
பொருளே எனக்குப் புகல்.
30✓
வேலை யளக்கருள் வீழ்வீர வாகுவைநீ
வேலை விடுத்தன்று மீட்டனையே-வேலையிப்
பாரறியச் செய்யேன் படுபிறவி வாரிக்குத்
தாரயில்வே லின்றிலையோ சாற்று.
31✓
நீயா ரெனக்கேட்ட நீள்சயந்தற் கின்பளித்தாய்
மாயாத துன்பத்தை மாய்வித்தாய்-காயாம்பூ
வண்ணன் மருகாநின் மாண்புணர்ந்தேற் காங்குசெயா
வண்ணமென்னோ நீவாய் மலர்.
32✓
அருணகிரி நாதர்க் களவில்பே ரின்பம்
வருவித் தருள்செய்த வாழ்வே-தருணமதி
தாங்கினோன்சற் குருவே தமியேற் கருள்செய்தல்
பாங்கன்றோ நீதான் பகர்.
33✓
திருக்கோவ லூரிற் றிகழ்குருவா வந்தாய்
மருக்கடம்ப மாலையணி மார்பா-தருக்கில்
பெரியோரைச் சார்ந்தின்பப் பேறு பெறற்கே
உரியவனா நீமனதி லுன்.
34✓
களங்க மதியுடையேன் கல்வியிலேன் எங்ஙன்
துளங்கு நினதியலைச் சூழ்வேன்-விளங்குமயில்
வாகனனே வள்ளி மலரடியை வாழ்த்துகின்ற
மாகனவா னேநீ வழங்கு.
35✓
தத்துவங்க ளாறாறும் தாமகல வப்பால்வாழ்
வத்துவே வாழ்த்து வரந்தருவாய்-பொத்தறாப்
புல்லறிவி னார்ச்சேரும் பொய்யனெனைக் கைவிடேல்
நல்ல தருணமிதே நன்கு.
36✓
பஞ்சப் பொறியென்னும் பற்றலரைச் சார்ந்துமிக
வஞ்ச மடைந்தேன் மடமையேன்-தஞ்சம்
நினதடியே யன்றி நினைப்பேனோ ஒன்றை
கனமயில் வாகனனே காண்.
37✓
கண்பன் னிரண்டும் கரமலர்கள் பன்னிரண்டும்
விண்கண் மழைக்கார் விழைமயிலும்-உண்கண்
அனைமாரும் வேலு மருகிருக்கத் துன்பம்
எனையடையு மோமனமே யெண்.
38✓
எண்ணங்க ளெத்தனையோ எண்ணியெண்ணி யேழையேன்
புண்ணடைந்தேன் போதுமினிப் புண்ணியனே-விண்ணவர்க்குச்
சொல்லின்பந் தந்திடற்காச் சூர்முதலைச் செற்றாயே
நல்லின்ப மின்றெனக்கு நல்கு.
39✓
நல்கிடின் வள்ளி நலமல்ல வென்பாளோ
சொல்லாளெக் காலமுநீ சூழாதே-அல்லல்செய்
பிள்ளையே யாயினுமென் பெற்றவள்துன் பாற்றாளே
வள்ள லறிந்தநிந்த வாழ்வு.
40✓
வாழ்வெல்லாம் நீதந்த வாழ்வென் றுணராதார்
தாழ்வன்றி மற்றொன்றைச் சார்வாரோ-மூழ்குகின்ற
ஆனந்த வாரிதியில் அன்பிலனென் றாடுவனோ
மாநந் தயில்வேல வா.
41✓
அயனைச் சிறைசெய் தவன்செய் சிருட்டி
வியக்க வியற்றியவெம் வேலோன்-உயக்கடைக்கண்
என்மேற் செலுத்தி னெகின னெனைப்படைக்க
உன்னுவனோ வுள்ளமே வுன்.
42✓
பண்டமரர்க் காக்கப் பறந்தலைநீ வந்தமர்ந்தாய்
கண்டுநிகர் சொல்வள்ளி காதலனே-தண்டார்க்
கடம்பணியும் பன்னிருதோட் கந்தவெனைக் காக்க
இடமித் தலைவந்தா லென்.
43✓
நின்னேயப் பாட்டனோ நெய்த னிலக்குரியன்
உன்மாமன் முல்லைக் குரியனே-அன்னை
குறிஞ்சி நிலத்தள் குகமற்றோர் மாமன்
குறைவின் மருதனெனக் கூறு.
44✓
பரங்குன்றி லிந்திரன்றன் பாவை யளிக்கக்
கரங்கொண்டு மன்றல்செய் கந்தா-உரங்கொண்டு
நல்லோர் குழுவில் நயந்தென்னைச் சேர்ப்பிப்பாய்
வெல்லுமயில் வேலவனே நீ.
45✓
ஆறு திருப்பதிகண் டானந்தம் பெற்றிலேன்
ஆறெழுத் தென்றும் அமைந்திலேன்-ஆறு
முகவா முருகா முனைவடிவேல் மொய்ம்பா
தகவோ எனைவிடுதல் சாற்று.
46✓
சாற்றுவேன் நின்புகழைச் சார்ந்துநினைச் சூழ்ந்திடுவேன்
ஏற்ற வகைமனத்தி னேத்துவேன்-போற்றும்
அடியார் உறவே அயில்வே லவனே
கொடியேனை யாளல் குணம்.
47✓
குகனே கடம்பா கொடியேனைச் செவ்வன்
உகந்தாளும் நாளுமெனக் குண்டோ-பகவ
தகுதியிலேன் பொய்யனேன் தாரணியில் பக்திப்
பகுதியிலேன் செய்வனென்ன பாங்கு.
48✓
முதலறியேன் அந்தம் முறையறியேன் மால்செய்
திதலைமுலை யார்தம் திறமோ-சிதைவின்றி
ஆய்ந்தறிவே னெங்ஙன் அமலநினைச் சார்ந்துய்வேன்
தேய்ந்தவிடை வள்ளிகண வா.
49✓
மான்மகளை மால்கொண்டு மாவளத்தில் மான்தேடிக்
கான்வடிவங் கொண்டுசென்ற கொற்றவனே-தேன்வண்டு
சூழ்வெட்சி மாலைத் தொடையணிந் தோய்நின்னை
வீழ்வார் பெறுவதுநல் வீடு.
50✓
வீடு பெறலாம் விளங்கின்ப மும்பெறலாம்
நாடு பெருஞ்செல்வம் நன்குறலாம்-கூடுநலம்
எல்லாந் தருந்தரும மெய்தலாம் வேலேந்து
நல்லா னடிமனமே நாடு.
51✓
வேங்கைமர மாமளவு வேட்கை யுறுமுருவந்
தாங்கயில்வே லேந்துசிவ சண்முகனே-காங்கயனே
மாலதனை மாற்றி மடமையேன் றன்னையுன்
கோல வடிமலரிற் கூட்டு.
52✓
கூட்டினும் வீட்டில்நீ கூட்டா தொழியினும்நீ
ஓட்டிடினும் என்னை உணர்த்துகினும்-முட்டிருளில்
தள்ளினும் என்றும்நின் தாளை மறப்பேனோ
வள்ளிகா தற்கண வா.
53✓
மங்கலத்திற் காக மகிழ்சுத்தத் தற்காக
அங்கவடை யாளத்திற் காகவே-மங்கைபங்கன்
தன்னடியார் காப்பாகத் தந்த திருநீற்றைக்
கொன்னயில்வேற் கோவே கொடு.
54✓
கையாற் றொடினுங் கதிதரு நல்லமணி
மெய்யிலணி வாரை விளக்குமணி-ஐயகுக
உண்டார்க ளுய்ய வுயிரளிக்குங் கண்மணியைக்
கொண்டா தரிக்கக் கொடு.
55✓
அப்பரை முன்னாள் அளக்கர்க் கரையேற்றி
இப்பொழுது மென்னை யிடர்க்கடலின்-தப்புவித்து
வேத வுளமா விளங்கனைந் தெழுத்தைநீ
ஏதமற வேலா இயம்பு.
56✓
தன்மேனி கண்டார்க்கும் தன்னாமாம் சொன்னார்க்கும்
தன்சொ னினைக்கும் தகையினர்க்கும்-முன்னுருக
வேண்டுகின்ற நன்மை விரும்பித் தருகுருவை
ஈண்டவருள் செய்கநீ இன்று.
57✓
வடிவா ரயில்வேலா வள்ளிமகிழ் கேள்வாநின்
வடிவா மிலிங்கத்தின் மாண்பைக்-கொடி யேன்
தெரிந்தென்றும் பூசை செயும்வாழ்வு தந்தாய்
உரந்தரித் துன்னுநலத் தோடு.
58✓
திருவேடத் தானும் தியானமது கொண்டும்
வருசெயல்க ளாலு மகிழ்சி-தருதன்மை
கொண்டும்வே றற்ற குணஞ்சா ரடியாரைக்
கண்டடையக் கந்தா வருள்.
59✓
மஞ்சன வண்ணன் மருகனே நின்னடிக்கு
மஞ்சனஞ்செய் தீர்த்தமது வாய்கொண்டும்-கஞ்சன்
படைப்பினிலும் காப்பினிலும் பண்ணவனீ சன்செய்
துடைப்பினிலும் சிக்குவனோ சொல்.
60✓
ஆய அகலும் அறுமுகத்தெம் மண்ணலின்
தூய பிரசாதந் துய்த்தின்னல்-மாய
அறியாமை நீங்க அறிவின்பம் பெற்றுக்
குறியா நினைப்பெறுமா கூறு.
61✓
பரங்குன்று சீர்த்திப் பருப்பதங்கள் செந்தில்
வரமா வினன்குடிவாழ் மன்னா-திரமாப்
பழமுதிர் சோலைப் பதியே ரகத்தாய்
கழன்முழங்கு காலிரண்டுங் காட்டு.
62✓
காட்டில்நான் காண்பேன் கவின்சேருங் காங்கேயா
வீட்டினில்நீ கூட்டில் விடுவேனோ-தீட்டரிய
கோலத்தாய் கோழிக் கொடியாய் நினதுபுகழ்
தாலத் தெவரறிவார் சாற்று.
63✓
ஞானவடி வானவேல் நாயேனை யாண்டவேல்
வானவரைக் காத்த வடிவேலே-தானவரைச்
சாடியவே லென்றுதினம் சண்முகனே நின்வேலை
நாடுவரம் வேண்டுவனே நன்கு.
64✓
ஆயிரத் தெட்டண்ட மாண்டமயில் ஆறுமுக
மேயநினைத் தாங்கி விளங்குமயில்-தூய
அடியார்கள் கண்டுவக்க ஆடுமயில் என்றே
கொடியேனு முய்வதென்றோ கூறு.
65✓
வேலுமயி லுந்துணையா விண்ணோர்கள் உய்ந்தார்கள்
வேலுமயி லுந்துணையா வேண்டுவனே- ஆலுமயில்
வேலுமென வோதி விமலவயில் தாங்குமுன்றன்
காலுமென தாக்குவனோ கண்டு.
66✓
ஆயிரத் தெட்டண்டம் ஆண்டு மகிழ்சேவல்
ஆயவள்ளி சுற்ற மனைவருமே-மாயவன்று
கூவிய சேவல் குமரவேள் கைச்சேவல்
பாவியனை யாட்கொளுமே பார்த்து.
67✓
ஐவர் வசப்பட் டடைந்திட்ட வல்லலெலாம்
மைவரையே யென்ன வகுக்கலாம்-துய்வரைவாழ்
கைவரையைக் காத்தருள்செய் கண்ணன் மருகவருள்
ஐவரை வெல்லு மறிவு.
68✓
அடியே னறியாமை அண்ணா லகற்றி
வடிவேலை ஏந்துகர வள்ளால்-கொடியேற்கு
நின்னறிவைத் தந்து நிகழ்ந்தா மரையடியை
என்னுளத்தே காட்டிநீ எண்.
69✓
எண்ணுவ துன்னுருவம் ஏத்துவது துன்புகழே
மண்ணி லுனையே வணங்குவது-கண்ணுதற்குத்
தாரகத்தின் உண்மைதனைச் சாற்றியவெம் சற்குருவே
காரணனே ஏழையனைக் கா.
70✓
அகத்தியருக் கந்நாள் அருந்தமிழைச் சொல்லி
சகத்தில் மறைவிளங்கச் சாற்றி-முகத்தியலும்
தாரகத்தைக் கேட்பித்த தண்ணளிசேர் வித்தகனே
ஏரகத்தா யெற்கணிக்க வெண்.
71✓
கன்னிவன நாதனருள் கந்தனே வள்ளிக்காக்
கன்னிவனஞ் சென்ற கருணையனே-முன்னியவென்
கன்னிமதி வேண்டும் கடப்பமலர் மாலைகொடுத்
தின்னலை நீக்கிடுவா னெண்
72✓
அத்திமுகற் கொன்றா யரிமுகனை யுங்கொன்றாய்
பத்தியிலாக் குற்றத்தாற் பண்ணவனே-முத்திக்கு
வித்தாகும் பத்தி விளைவித் தருளாயேல்
எத்திறத்தி லுய்வே னியம்பு.
73✓
இயம்பி இயம்பி இளைத்தேனே யன்றி
கயமுகன்பின் வந்தருள்செய் கந்தா-இயம்பிய
அந்நெறியி னின்றொழுகு மாற்றலிலே னெங்ஙனுய்வேன்
நன்னெறியி னிற்பிக்க நாடு.
74✓
வேடநெறி நில்லேனான் வேட்கை மிகவுடையேன்
பாடவத்தின் மேலாப் பகர்சமர்த்தன்-நீடறத்தைச்
செய்யேன்மேற் செல்வழியைச் சிந்தியேன் மூடருளே
அய்யா எனைப்போலிங் கார்.
75✓
ஆரைத் துணைகொள்வேன் அந்தார் கடம்பகுக
நீறையணிந் தோன்குமர நின்மலனே-சீரினியல்
இற்றென் றறியா வெளியேற்குப் பாடுகின்ற
பற்றளித்தாய் நன்றோவிப் பாங்கு.
76✓
பாங்கிருவ ரன்னையர்கள் பற்றோ டிருந்திடுங்கால்
ஏங்கி வருவேனை யேனென்னா-தாங்குநீ
எங்ங னிருப்பா யிருவர் முனையாரோ
புங்கவநின் தாளே புணை.
77✓
குகனே முருகா குமரகிர வுஞ்சம்
பகவேல் தொடுத்த பகவா-அகங்குடிகொள்
அய்யவென நாளும் அடியே னினைவழுத்தி
உய்ய வருள்தரவே யுன்னு.
78✓
உன்னு மடியார் உளக்கவலை விட்டொழிப்பார்
துன்னி யுனைவணங்கும் தொண்டரெலாம்-முன்னு
நலமெலாம் பெற்றிடுவார் நாயேனென் செய்வேன்
தலம்புகழும் வேலவநீ சாற்று.
79✓
ஒன்று மறியா வொருவ னெனவென்னை
என்றுநீ யாண்ட விறைவனே-இன்று
சும்மா யிருந்துவிடின் சூர்தடிந்த வேலவனே
அம்மா எனையாள்வா ரார்.
80✓
நின்னை நினைப்பித்தாய் நின்புகழைச் சொல்வித்தாய்
நின்னடியே சாரும் நினைவுதந்தாய்-என்னாலொன்
றில்லை யெனவறிந்தேன் எல்லாம் நினதருளே
வல்லவனே வள்ளிகண வா.
81✓
தாவா வருள்நிறைந்த சண்முகனே நின்னடியேன்
வாவா வெனவழைத்தேன் வந்திலையே-மாவாழும்
மார்பன் மருகா வழியடியேன் அல்லனோ
யார்பற்றி வாழ்வே னறை.
82✓
ஞாலம் புகழும் நவவீரர் சூழ்ந்திருக்க
மாலு மயனு மகபதியும்-கோலஞ்செய்
நின்னைத் துதிக்கு நிலைகண் டுவப்பேனோ
தன்னைநிக ரில்லவநிற் சார்ந்து.
83✓
பொன்னைப் பொருளாகப் போற்றியொழித் தேன்பலநாள்
நின்னைப் பொருளா நினைக்கிலேன்-என்னைப்போல்
பேத மறியாப் பேதையரு முண்டோசொல்
நாத மயில்வாக னா.
84✓
எப்புகழை வேண்டுமென எண்ணினரோ சான்றோர்கள்
அப்புகழோ இப்போழ் தகன்றதுபோல்-கைப்பொருளை
வேண்டிப் புகழ்கின்ற வீண்சொல் புகழாமே
ஆண்டவனே நீயுண் டறை.
85✓
துட்டரையே அஞ்சுகின்றார் தூய ஒழுக்கமுடைச்
சிட்டரையே உய்ந்திடுவான் சேர்ந்திலரே-கட்டமே
நல்லா ருளங்குடிகொள் நாத கலியுகத்தின்
பொல்லாங் கிதுவோ புகல்.
86✓
புகலென் றெவர்பாற் புகுவேன் முருகா
அகவல் மயிலேறு மத்தா-பகவனே
தூய ஒழுக்கமுடைச் சேட்ட னெனவென்னைத்
தாயனையாய் தள்ளி விடின்.
87✓
தள்ளிவிடின் ஏழையனைத் தாங்குபவர் வேறுளரோ
வள்ளிதெய் வானை மகிழ்நனே-துள்ளிமுனே
வந்தெதிர்த்த சூர்க்கும் வழங்கினையே நீயருளை
அந்தநா ளென்ப தறி.
88✓
தெய்வம் நினையன்றித் தேடுதற்கு முண்டுகொலோ
வையந் தனிலெனைப்போல் மந்தனுண்டோ-அய்யவெங்கும்
உள்ள உனக்கிங் குணர்த்துவதும் வேண்டுவதோ
வள்ள லருள்நீ வழங்கு.
89✓
அறிஞர் முதலென் றறைந்திடநீ நிற்பாய்
முறையறியா மூடருளே முன்யான்-துறையில்
எனைநீக்கி நீயருளின் ஏழைபங்க னென்பானார்
உனைவே லவனே உரை.
90✓
மாதர்பின் சென்று மயங்குகின்ற என்மனம்நின்
பாத கமலத்தைப் பற்றுமோ-நாதா
குமரா முருகவெனக் கூறுவனே தாழ்ந்து
திமிரமகன் றுய்வேனோ செப்பு.
91✓
மறைகள் மறைமுடிகள் மன்னுபுரா ணங்கள்
இறையும் நினையறிய வில்லை-முறையொன்றும்
பார்த்தறியா யானோ பகவ நினையறிவேன்
வார்த்தன வள்ளிகண வா.
92✓
எண்குணத்தா னென்பருனை என்னை மிகஇகழ்ந்தே
எண்குணத்தா னென்றே இயம்புவார்-பண்ணொன்றப்
பேசுகின்ற பேதையர்தம் பின்செல்லும் பேதையன்யான்
ஈசுரன் எண்ணுகுரு நீ.
93✓
செவ்வான மேனிச் சிவசண் முகத்தேவே
அவ்வான இன்பம் அவாவுவனோ-செவ்வேலால்
அன்றுசூர்ப் போக்குதன்மு னாகண் டலனுற்ற
பின்றுதுயர் யானறிந்த பின்.
94✓
பின்னுசூழல் தெய்வப் படிக்கே யிடமளித்தாய்
மன்னுவலம் வள்ளியைநீ வாழ்வித்தாய்-துன்னி
மயல்பெற்ற என்றன் மதிமகளுக் கெவ்விடமோ
துயரொழிக்கும் வேலவநீ சொல்.
95✓
பார்த்தார் வினைபோம் பணிந்தவர்தம் மாயைபோம்
ஆர்த்தார் அரன்பணியும் அண்ணலே-கூர்த்தறிவின்
உன்னுவார் ஆணவம்போம் உண்மைதெரி வித்தனையோ
பன்னுமுறை நூலைப் பகர்ந்து.
96✓
நினைக்கண்ட வன்றுமுதல் நின்னினைவே யென்மகட்கு
மனைக்கண் வதிகாலம் வாய்சோர்வாள்-கனைகழலோய்
கந்தாசு கந்தா கடிதி னெனச்சொலுவாள்
இந்தா வெனவந் தியம்பு.
97✓
தாண்டுஞ் சினவிடையோன் சற்குருவே யென்றக்கால்
ஆண்டுரைத்த தொன்றை யறைந்திடற்கே-ஈண்டெனிலை
நீபார்ப்பின் நான்பாபி நீயயில்வே லேந்துமுனி
மாபாவந் தீர்த்தோன் மகன்.
98✓
மகனறிவு தந்தை மதியென் றறைவார்
இகலயில்வே லேந்தும் இறைவா-மிகப்பகைத்த
காமாரி தன்சுதனே காழ்த்திடுமென் காமத்தைப்
போமாறு செய்நாள் புகல்.
99✓
தந்தை யறிவே தன்சுதனுக் கென்றுரைப்பார்
அந்தகனை அந்தணற்கா அன்றுதைத்தோன்-மைந்தவுனை
அண்டினபின் காலனெனக் கஞ்சுவனே நின்கழற்கால்
தொண்டன்றி வேறுசெயேன் சூழ்ந்து.
100✓
சூழ்ந்துவலம் வந்துன் துணையடிகள் உள்வைத்து
வீழ்ந்துனடி யாரை விரும்புவேன்-ஆழ்ந்துயர்ந்த
நல்வித்தை தந்துன் நளினபதஞ் சேர்ப்பிப்பாய்
புல்லனுக்கு நீயே புகல்.
101✓
சார்ந்தாரைக் காக்கின்ற சண்முகனே ஆன்மவியல்
சார்ந்ததன் வண்ணமாச் சாற்றுநூல்-சார்ந்தேனை
நின்வண்ணமாச் செய்யா நிபமெற் குணர்த்தாயோ
கொன்வடிவேற் கோவே குழைந்து.