முருகன் App
சந்நிதிக் கந்தன் சரிதை
ந. சுப்பிரமணியம்
விருத்தம்2 / 3
சந்நிதிக் கந்தன் சரிதை · ந. சுப்பிரமணியம்

விருத்தம்

1✓
இந்துமா ஆழி தன்னில் இலங்கிடும் இலங்கை மீது
பந்தமில் முனிவர், தேவர் பாடியே பூசை செய்த
சுந்தர யாழ்ப்பா ணத்தின் தொண்டைமா னாறு தன்னில்
கந்தனும் உறைந்தான் மக்கள் கவலைகள் தொல்லை தீர்க்க.
2✓
புண்ணியன் ஒருவன் இங்குப் புரிந்தனன் பூசை, பின்னர்
நண்ணருஞ் சமாதி கொண்டான் நற்பெருந் தொண்டை யாற்றில்
விண்ணவர் தொழுது ஏத்தும் வேலனும் இதனைக் கண்டு
மண்ணிலே குதித்து வந்தான், மானிடர் மகிழ்ச்சி யெய்த.
3✓
ஆடினான் மக்க ளோடு ஆறிரு கரத்தன், அங்கு
பாடினான் மக்க ளோடு பரவசம் யாருங் கொள்ள
ஓடினான் துள்ளித் துள்ளி ஒப்பிலா வேலி னோடு
கூடியே காட்சி தந்தான் குஞ்சரி வள்ளி யோடே.
4✓
பாவுடன் சமாதி கொண்டோன் பண்ணிய பூசை மண்ணில்
பூவர சொன்று தோன்றப் புன்னகை முகத்தி னோடு
பூவர சின்கீழ் நின்று புரிந்தனன் புதுமை யெல்லாம்
பாவமும் பிழையும் செய்யும் பாமரர் தம்மைக் காக்க.
5✓
கடற்றொழில் புரியும் அன்பன் கதிர்காமப் பெயரி னானைக்
கடம்பனும் அழைத்து ஆங்கு, கதைபல சாற்றிப் பின்னர்
படைத்தனன் கறியுஞ் சோறும் பச்சைஆல் இலைகள் மீது
கொடுத்தனன் மயில்மேற் காட்சி குஞ்சரி வள்ளி யோடே.
6✓
காட்சியைக் கொடுத்த பின்னர் கடம்பனும் மறைந்த போது,
காட்சியை எண்ணி யெண்ணிக் கதிர்காமன் கலங்கி யேங்கி,
“மாட்சிமை யுடைய மாலின் மருகனே வாவா!” என்று
ஆட்சிலை யாக நின்று அழுதனன் அலறி னானே.
7✓
தாய்ப்பசு தவற விட்டுத் தவித்திடும் கன்று போலத்
தாயினைத் தவற விட்டுத் தவித்திடும் சேய்போல், புற்று
நோயினால் வருந்தி வாடும் நோயினர் போல, அங்கு
வாயினால் அலறி நிற்க வந்தனன் கதிர்வேற் கந்தன்.
8✓
“எம்மைநீ பிரியா திங்கு இருந்திடு” வென்று வேண்ட;
“இம்மையிற் பூசை செய்து என்கழல் அடைவீ” ரென்ன;
“எம்மரும் வேலா பூசை இயற்றுதல் அறியேன், மேலும்
உம்மிடம் ஓதும் மந்த்ரம் ஒன்றுமே தெரியேன்,” என்றான்.
9✓
மதிசடை யுடையோன் மைந்தன், “வாய்கட்டி மெளன மாகக்
கதிர்காமப் பூசை போலக் கவினுறச் செய்வீர்,” என்னக்
கதிர்காமன் இறையை நோக்கிக் “கதிர்காமம் அறியேன்” என்னக்
‘கதிர்காமம் செல்வோம்’, என்று கந்தனும் உரைத்திட் டானே.
10✓
கதிர்காமத் தலமுங் கண்டு, கதிர்காமப் பூசை கண்டு,
அதிர்வுடன் அங்கு நின்ற அன்பனைக் கந்தன் கூட்டிப்
புதியதோர் வேலை யீந்தான் பூவர சின்கீழ் வைத்துக்
கதிர்காமன் பூசை செய்து கந்தனை வணங்க மாதோ.
11✓
பொன்பதி தொண்டை யாற்றில், பூவர சின்கீழ் வேல்வைத்
தன்புடன் வாயைக் கட்டி அழகுறப் பூசை செய்து
அன்பனும் முருக னோடு அளாவியே வாழும் நாளில்,
மன்னிய வேலும் எங்கோ மறைந்துவிட் டதுவே அம்மா.
12✓
மறைந்தவேல் தன்னை யெண்ணி மனமுடைந் திருக்கும் வேளை,
”மறந்திடு வேலை,“ என்றான், வைத்தனன் அழுத்திப் பாதம்;
மறமது அழியத் தொண்டை மானாறு புகழை யெய்தத்
திறமுடன் செழிக்கச் செல்வச் சந்நிதித் தலமும் ஆங்கே!
13✓
கதிர்காம வேளும், செல்வக் கந்தனும் ஒன்றே யென்று
மதியுள மாந்தர்க் கெல்லாம் வண்ணமாய் எடுத்துக் காட்டக்
கதிர்காமக் கொடியி னன்று கந்தனும் அங்குச் செல்வான்,
கதிர்காமத் தீர்த்தத் தன்று கந்தனும் திரும்பு வானே.
14✓
பேர்வள்ளிக் கொடியு மொன்று பிரதமை ஆடித் திங்கள்
சீர்பெறத் தோன்ற, அந்தத் தினத்தினைக் கொடிநாள் ஆக்கி;
தீர்த்தநாள் சிங்க மாதம் பூரணைத் தினத்தை யாக்கிக்
கார்த்திகைக் குமர னார்க்குக் களங்கமில் விழாக்கள் செய்தார்.