செந்திலாண்டவர் துதியமுது
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
செந்திலாண்டவர் துதியமுது · சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
நூல்
1✓
ஆனைக் கிளையவனை ஐயனைச் செந்தில்வாழ்
கோனவனைக் கோழிக் கொடியினனைச்-சேனைக்கு
நாயகனை நாயடியேன் கும்பிட்டு நன்கடைந்தேன்
பாயவினை போயகலும் பண்பு.
2✓
செல்வத் திருச்செந்தூர்த் தேவாவுன் பொன்னடிகள்
நல்ல கவனமாய் நான்றொழுவேன்-முல்லைநகை
வள்ளி கணவா மயில்வா கனேயென்
பொல்லா வினைகளெல்லாம் போக்கு.
3✓
முத்திதருஞ் சித்திதரும் மூவாத நல்வரங்கள்
எத்தனையுந் தந்தே இனிதளிக்கும்-பத்திதரும்
செந்தில் நகர்மேவும் செவ்வேள் மலரடிகள்
எந்தவித மேனு மெனக்கு.
4✓
முத்தம் கொழிக்குந் திருச்செந்தில் முன்னவனே
எத்திசையும் ஏத்தும் இறையவனே-சித்தம்
சிறிதே இரங்கித் திருக்கடைக்கண் பார்ப்பாய்
வறிதே இராதேநீ வந்து.
5✓
கேட்டிலையோ ஐயாநீ கீழ்மையேன் என்முறையை
நாட்டில் வளர்செந்தில் நன்னகராய்-ஏட்டிலே
எல்லாங் கருணையுரு என்றெழுதி யேயிருக்கப்
பொல்லே னளவதுவோ பொய்.
6✓
கையும் வலிக்கிறது காலும் வலிக்கிறது
செய்யாள் பிரியாத செந்தினகர்-ஐயாநான்
செய்யும் வகையறியேன் சேர்துன்பந் தீர்ந்தேயிங்
குய்யும் வகையை உதவு.
7✓
உலகம் புரக்கின்ற ஒண்சுடரே செந்தில்
இலகும் பரம்பொருளே ஏழை-கலகமிடும்
நோய்ப்பகைகள் தம்மால் நலிவுண்டு நோவாதே
வாய்ப்புடைய நல்லருளை வை.
8✓
ஆவகை செய்யும் அனைத்துநின் பொன்னடிக்கே
சேர்வகை செய்வாய்நீ செந்தினகர்த்-தேவனே
உன்சே வடியன்றி உற்ற துணையில்லை
தஞ்சமென வந்தடைந்தேன் சார்ந்து.
9✓
நோயுற்று நைந்திளைத்தேன் நொய்ம்மையேன் நான்துயரால்
பாயுற்று நைதலும் பண்பாமோ-சேயுற்ற
தன்மைபோ லென்னைத் தலையளித்துக் காத்திடுவாய்
அம்மையார் செந்தினக ராய்.
10✓
பாரார் பரவும் பதியாகும் செந்தினகர்ச்
சீராரும் தேவனடி சிந்தித்தால்-ஏராரும்
இன்பமெலாம் வந்தெய்தும் இன்னல்கள் போயகலும்
நன்மை வருமே நமக்கு.
11✓
பூசுகின்ற வெண்ணீற்றின் பொற்பார் பொலிவுடனே
தேசுடைய செந்தினகர்த் தேவனையே-பேசினால்
நன்மைகள் முற்று நமையிடமாக் கொள்ளும்பின்
புன்மைகட் கெங்கே புகல்.
12✓
நீலக் கடற்கரையில் நீள்செந்தில் மாநகரை
மாலகல ஏத்தி மனங்கொண்டால்-ஆலநிகர்
வெந்நோய்கள் என்னை மெலிவிக்க வல்லவோ
எந்நாளு நன்றே எனக்கு..
13✓
உடையானே செந்தில் உடையானே வேற்கைப்
படையானே பாதம் பணிந்தேன்-கடையேனைக்
காத்துப் பணிகொள்ளல் நின்றன் கடன்வானோர்
ஏத்தும் இறையவ னே.
14✓
மாறுசெய்யும் வல்வினைகள் மாய்ந்தகலப் புன்னெறிக்கோர்
ஈறுசெய்வாய் எங்கள் இறையவனே-கூறும்
திருச்செந்தில் நன்னகரம் சேர்ந்தருளும் செல்வா
இருட்சிந்தை யுள்ளே இசைந்து.
15✓
பொய்யெலாம் போயகலப் புன்மைகள் நீங்கிவிட
மெய்யெலாம் மேவி மிகஅமையக்-கையுலாம்
வெற்றிவேற் பண்ணவனே வெல்கழல்கள் வந்திக்க
உற்றெனக்கோர் நற்சொல் உரை.
16✓
செழுங்கமலப் போதனைய செந்திலி னாதன்
தொழும்பரிற் கூட்டித் தொழுதே-அழுந்தி
அமுதம் அருந்த அருளைப் புரிவான்
எம்மையாள என்றும் இனிது.
17✓
செழுங்கடலின் சீரலைவாய்ச் செல்வனே யுன்றன்
பழங்கருணைத் தாளினைகள் பற்றி-அழுந்தினேன்
துன்பக் கடலுட் டுளங்காமல் ஏழையைநீ
இன்பமுற ஏமத் திசை.
18✓
பார்பூத்த செந்திற் பதியாளு மன்னாவுன்
ஏர்பூத்த பாத மிறைஞ்சுதற்குச்-சீர்பூத்த
செல்வமும் நல்ல உடல்நயமும் சீரடியார்
நல்லிணக்கும் என்றனக்கே நல்கு.
19✓
நிருத்தம் புரியும் நிமலன் மகனே
திருச்செந்தில் மேவுகின்ற தேவே-கருத்தில்
உனைவைத்தே நித்தம் உவந்து பணிந்தேன்
எனையாள்வாய் கந்தா இனிது.
20✓
கடலின் திரைமோதிக் காலுலவும் செந்தில்
இடமாக உள்ள இறைவன்-திடமாகப்
பத்திசெயு மன்பர்தம் பக்கம் எழுந்தருளி
எத்திசையுங் காப்பா னினிது.
21✓
மண்ணுலகை வாழ்விக்கச் செந்திலிலே வந்தருள்வாய்
விண்ணுலகை வாழ்வித்த வித்தகனே-என்னுடலின்
புன்மைகள் நீக்கியுன்றன் பொற்கழற்கீழ்க் கொண்டிடுவாய்
மன்னவனே நின்னருளை வைத்து.
22✓
வாகார் திருச்செந்தூர் வள்ளல் திருப்பாதம்
போகாப் பிணிகளெலாம் போக்குமே-ஏகாமல்
ஏத்து மடியார் இதயத் திருக்குமே
பூத்த கமலமதைப் போல்.
23✓
சீல முடையவர்கள் சென்றேத்தும் மாவனப்புக்
கோல முடைய குமரனே-ஏலுமிடர்
எல்லாங் கெடுத்தேழை என்னை உயக்கொண்டு
சொல்லார் நலந்தருவான் சூழ்ந்து.
24✓
நெறிநிற்கு மன்பதையை யாட்கொள் நிமலா
குறியொன்று மில்லாக் கொடியேன்-பறியுண்ட
பாழுடலை யோம்பிப் பயின்றிங் கலைவதோ
வாழ்செந்தில் தேவே வழங்கு.
25✓
நமச்சிவய மந்திரத்தின் நாதனே சேர்ந்தோர்
தமச்ச மொழிக்கின்ற தாயே- இமைப்பளவில்
எல்லா வினைகளையும் நீக்கும் எழிற்செந்திற்
பொல்லா மணிநீ புகல்.
26✓
தில்லைமணி யம்பலத்தான் சேயே திருச்செந்தில்
இல்லமென வாழ்வுகந்த ஏந்தலே-நல்லையென
உன்னை யடைந்தாரை ஓயாமற் காக்கின்றாய்
என்னைப் புறக்கணிப்ப தென்.
27✓
அண்டங் கடந்த அருட்பெருகு செந்நெறிக்குத்
தொண்டரையே யுய்க்குந் தொழிலாளா-கண்டவர்கள்
கண்கவருங் காட்சிக் கடவுளே செந்தினகர்ப்
பண்ணவனே என்னமுகம் பார்.
28✓
இன்பந் தருஞ்செந்தில் எம்மான் திருக்கைவேல்
துன்பந் துடைக்குந் துயர்நீக்கும்-என்பந்தம்
எல்லா மகற்றும் எழிற்கழல்கள் காட்டுவிக்கும்
பொல்லா வினையேன்பாற் புக்கு.
29✓
இப்பாடே மக்களெலாம் இன்புற் றிருக்கின்றார்
எப்பான்மை யோரு மியம்புகின்றார்-சொற்பால
எல்லா மிதுவே எனத்துணிந்தார் செந்தில்வாழ்
வல்லாளன் நற்பெயரை வைத்து.
30✓
அருளா ரமுதப் பெருங்கடலே ஆண்டு
தெருளாய் விளைந்த திருவே-பொருளாக
இந்தக் கடையனையும் ஏற்றருளல் நின்பரங்காண்
செந்திற் பதியாய் சிறந்து.
31✓
பாலார் மொழிமங்கை பங்கனெனும் அம்பலவன்
பாலாநற் செந்திற் பதியுடையாய்-காலால்
எனதின்னல் நீக்க இனிதே மிதிப்பாய்
உனதருளை வேண்டினேன் உற்று.
32✓
வளைகடலின் மேற்கரையில் வாய்ந்ததிருச் செந்தில்
திளைக்கும் திருக்கோயில் தேவே-களைகணாம்
ஊற்றுத் துணையிங் கொருவரு மில்லையெனை
ஏற்றருள்வ தன்பார மே.
33✓
புத்தி யெலாமுன்றன் பொன்னடிக்கே யாக்கினேன்
சித்தம் திகையாமற் செய்தாள்வாய்-எத்திசையும்
போற்றும் திருச்செந்தில் புண்ணியா என்துயரம்
மாற்றும் வகையினிதே வந்து.
34✓
சீரார் திருச்செந்திற் செவ்வேடன் சேவடிகள்
ஏராரப் போற்றி இறைஞ்சினால்-வாராத
புத்திசித்தி தம்மோடு புண்ணியங்கள் பூரிக்கும்
பத்திசெய்க நெஞ்சே பயின்று.
35✓
கருடன் இவர்ந்தோன் கமலத்தோன் வானில்
வெருளில்லா விண்ணவர்கள் வேந்தன்-அருள்பெற்றுச்
சேவித் திருக்கும் திருச்செந்திற் சேந்தன்பேர்
பாவித்தே உய்வேன் பகர்ந்து.
36✓
வைப்பு நிதியென்றே வந்தித் தடியார்கள்
செப்புந் திருச்செந்திற் செவ்வேளே-எய்ப்பினில்
வந்திங் கெனைக்காக்க வல்லாயோ என்றேநான்
சிந்தித் திருப்பேன் சிறந்து.
37✓
பார்பரவும் செந்திற் பதியான்றன் பொற்றாளின்
சீர்பரவச் செல்வம் சிறக்குமே-ஏர்பரவும்
இன்பங்கள் எல்லாம் இணைந்தெய்தும் பின்னடைந்து
துன்பங்கள் போமே தொலைந்து.
38✓
சோதியாய் எங்குந் தொடர்ந்திருவர் காணாமல்
நீதியாய் நின்ற நிமலன்சேய்-கோதகற்றும்
செந்திற் பதியுள்ளான் சேவடிகள் நாடோறும்
சிந்தித் திருப்போம் சிறந்து.
39✓
இந்திரிய மைந்தின் இடுக்கண் களைந்தாட்கொள்
செந்தில் நகரினருட் தெய்வமே-இந்தவெறும்
பாழாம் உடலையே பார்த்திருக்க வொண்ணாதே
ஏழாய் எழுகவென்பா யின்று.
40✓
கலந்து வளருமடி யாருடன் காலால்
வலஞ்செய்து வாழவெண்ணி வந்து-மலங்கினேன்
என்கருத்தை நீயறிவாய் இன்பாரும் செந்திலாய்
உன்கருத்திங் கேதோ உரை.
41✓
அடியார்கள் வாழ அருட்செந்தில் வந்து
குடியாகக் கொண்டகுணக் குன்றே-செடியேனை
ஆட்கொண் டருளக் கருணைசெய்வாய் அங்கமலத்
தாட்கொண்டே னென்றன் றலை.
42✓
மேவும் பெருமை அடியாரும் வேட்டசெந்திற்
கோவும் கலந்து குலவுகின்ற-காவலகம்
கண்டிலையோ நெஞ்சமே கண்டாயேல் பின்னதனை
விண்டலைவ தேனோ விளம்பு.
43✓
புற்றுமாய் வன்மரமு மாகிப் பொருந்துமுடல்
வற்றி நினைந்திருக்கும் வண்மையோர்-நிற்க
வறிய மரம்போலும் என்னையாள் வள்ளல்
செறியும் திருச்செந்தில் தேவு.
44✓
பூங்கமலச் சேவடிகள் போற்றேன் புகழ்ந்திருந்து
தீங்ககலச் செந்தினகர் சென்றடையேன்-பாங்காகக்
கந்தன் திருநாமம் கல்லேன் கடையேனுக்
கெந்தவகை உய்தி இனி.
45✓
தேவர் வணங்குந் திருச்செந்தில் நாயகனை
யாவரும் போற்றும் இறையோனை-ஏவலராய்ச்
சென்று வணங்கியே சீரடையா ரார்நாமும்
நின்று பணிவோம் நிதம்.
46✓
மாதொரு பங்கன் மகிழ்மகனே செந்தினகர்
போதருவார் மேலேற்றும் போதகமே-ஏதஞ்சேர்
நாயனையேன் நோய்நீங்கி நன்றாக வேண்டியே
தாயனையாய் போற்றுவனுன் றாள்.
47✓
காடிடமா ஆடிதன் கான்முளை நற்செந்தில்
நாடிடமா நண்ணுமென் நாயகன்-கூடிப்
பழவடியார் வேண்டப் பரிந்தீயும் வள்ளல்
மழவெனக்கும் நல்கும் மகிழ்ந்து.
48✓
ஒன்றா யிரண்டாகி யுள்ளொளியா யென்னுடைய
பின்றாழ் வினையین பிறப்பகல-நின்றான்
திருச்செந்தில் என்று திசைநோக்கி வாழ்த்தி
இருக்கில் அவல மிலை.
49✓
முத்தி பெறவருளும் முன்னவனார் செந்தினகர்
எத்திசையும் போற்று மிறையவனார்-தித்திக்கும்
சீர்நாமம் செப்பிதின் சிந்திக்கின் உள்ளத்தில்
ஏர்பெருக உள்ளுருகு மே.
50✓
நமச்சிவய என்று நணுகினர்க்கு நல்ல
அமைத்து நலநல்கும் அண்ணல்-இமக்கொடியின்
மாமகனற் செந்தில் வளர்வேலன் பொன்னடிகள்
தாமென்றும் பண்ணும் தயை.
51✓
தில்லையி லாடுஞ் சிவபெருமான் சேய்செந்தில்
எல்லை இருந்த இறைவன்சீர்-சொல்லிப்
புகழாப் பொறியிலி என்னையு மாண்டிங்
கிகழா தளித்திடுவா னே.
52✓
அண்டங் கடந்த அருள்வெளியி லானந்தம்
மொண்டங் கருந்த முழுமுதலாய்-வண்டருந்துந்
தார்கடம்பு மார்பணிந்த செந்தில் தலத்தவன்
ஏர்பெறுந் தாளே இறைஞ்சு.
53✓
நான்முகன்மால் வானோர்கள் சூழ்ந்திறைஞ்ச நண்ணினான்
மேன்மைகொள் செந்தினகர் மேவியே-கான்மலர்
பாச வினையகலும் பாங்கினிலே நல்கியித்
தேசந் தொழுநின்ற தேவு.
54✓
மெய்யனே செந்தினகர் மேவும் வடிவேற்கை
ஐயனே என்றென் றழுதரற்றுங்-கையனெனை
வாழவருள் வைத்தருள்வாய் வானவரை வாழ்வித்தாய்
தாழ்ந்தேனின் செங்கமலத் தாள்.
55✓
பரவுவார் அன்பர் பணிந்திடுவார் உள்ளம்
உருகுவார் நின்றபடி உள்கி-விரவுவார்
மெய்ப்புளகம் செந்தில்நல் வேலா வெறுந்தமியேன்
எய்த்தடைந்தேன் அன்பின்றி யே.
56✓
சிந்திக்கச் சித்தம் சிறிதுமிலேன் செந்தில்போய்
வந்திக்கும் வன்மைக்கும் வாய்ப்பில்லேன்-எந்தவகை
இவ்வேழைக் குன்னருளை ஈவாய் அருள்வடிவாம்
செவ்வேளே நீஎனக்குச் செப்பு.
57✓
செந்தில் திருநகரஞ் சென்றேநான் அங்குறையும்
கந்தக் கடவுளையே கண்டுகண்டு-எந்தக்
கவலையு மின்றிக் களித்திருக்க எந்நாள்
அவன்கருணை செய்தருளு வான்.
58✓
செந்தி லெனச்செப்பிற் செய்வினைபோம் அப்பதியிற்
கந்தனெனில் எந்தக் கடுவினையும்-வெந்தகலும்
அன்னான் கழல்பணியில் ஆனந்தம் வந்துறும்
என்னா மறையோது மே.
59✓
திருச்செந்தில் மாநகர மென்றுநீ செப்பாய்
உருச்செய்தே ஈடேற்று மொன்றோ-கருப்பையுள்
வாராமற் காக்கும் வளர்கருணைக் கந்தன்றாள்
தாராத துண்டோ தகவு.
60✓
வேல்மறவேன் வெல்லுங் கழல்மறவேன் செந்திலொரு
கால்மறவேன் பன்னிரண்டு கண்மறவேன்-மேன்மைதருங்
கொற்றக் கொடிமறவேன் கண்மணியாஞ் செவ்வேளைப்
பற்றினேன் ஈங்கிவையென் பற்று.
61✓
அழகாரும் செந்தில் அணைந்துன் முருகார்
கழல்கள்யான் கண்ணாரக் கண்டு-மழவாகும்
அக்கோலம் உள்ளுருக்க அங்கே பணிசெய்ய
எக்காலம் வேலா இயம்பு.
62✓
செஞ்சேவ லின்கொடியாய் சேவேந்து சங்கரர்
தஞ்சே யெனத்தரணி சார்பவனே-மஞ்சேய்
மயிலிவர்ந்து செந்தில் மகிழ்வோனே மன்னும்
அயிலாயுன் றாளே அரண்.
63✓
செந்தினகர் செந்தினகர் செந்தினகர் செந்தினகர்
செந்தினகர் செந்தினகர் என்றுசொல்லிக்-கந்தனடி
வந்தித்து நிற்பேன் வழியடியேன் ஆதலினால்
பந்தவினை ஓடும் பறந்து.
64✓
ஆறு முகத்தெங்கள் ஐயா திருச்செந்தில்
வீறுடைய வேலவனே வேண்டாவோ-தேறுமுகம்
செய்தென்னை யாண்டருளிச் சேவடியைக் காட்டியென்றும்
உய்ந்திடவே ஏற்கும் உவப்பு.
65✓
சீர்பூத்த செல்வத் திருச்செந்தில் சேர்ந்தமர்ந்த
ஏர்பூத்த கந்தன் இணையடிகள்-நார்பூத்த
நல்லடியார் சேமத் துணையாகும் நாமுகந்து
சொல்லத் தகுமனமே சூழ்ந்து.
66✓
செந்தில் புகுந்தெங்கள் செவ்வே ளடிபணிந்தே
உந்தும் வினையவற்றை ஓட்டுகந்து-நந்தும்
பிறவிக் கடல்கடப்பேன் பேரின்பம் பெற்று
மறலி தொழில்துடைப்பேன் மற்று.
67✓
இன்றே எழிற்செந்தில் எய்தி இறைஞ்சுமின்
குன்றே யனைய குவவுத்தோள்-வென்றிவேல்
ஒன்றேந்து கையானை ஓங்குமயில் ஊர்வானை
நன்றே பணியின் நயந்து.
68✓
கோலப் பசுங்கிள்ளாய் குற்றமறுத் தாட்கொள்ளும்
பாலன் விளங்கும் பதியதாய்-ஞாலம்
இடையகலாத் தொண்டாற்றி ஈடேற நல்ல
நடையிற்றுஞ் செந்தில் நகர்.
69✓
துதித்திடுவாய் நீவாக்கே சொல்லியென்றும் வாழ்த்திப்
@todo undefined
உம்பர் கிளைகாத்த உத்தமன் ஆறுமுகன்
எம்பெருமான் செந்தினக ரென்று.
70✓
சீரார் திருச்செந்தூர்த் தேவா திருமாலின்
ஏரார் மருகா இறையவனே-காரார்
குழலுமை சேயே குவலயத்து வந்தே
எழவெமை யாள்வா யினிது.
71✓
மான்மருகா வென்று வழுத்தே னவனாமம்
வேள்முருகா வென்று விளம்பகிலேன்-பான்மைபெறச்
செந்திற் பதியென்னேன் செவ்வேள் அடிபணியேன்
அந்தோநான் வாழ்வகையுண் டா.
72✓
செவ்வேற் பெருமானே செந்திற் பதியானே
இவ்வேழை யேற்கு மிரங்குவையோ-செவ்வையே
தேவர் குடிகாத்த தேவே இரங்கிலையேல்
ஏவர் துணையிங் கெனக்கு.
73✓
மானேரும் நோக்கியெம் வள்ளி மணவாளா
தேனே திருச்செந்தில் தேவேஎம்-மானே
கடையவ னாகக் கருதிக்கை விட்டால்
அடையும் புகலெனக்கிங் கார்.
74✓
பூமங்கை நாமங்கை பொய்தீர் புலோமசை
ஏமம் பெறவே இனிதளித்தான்-சேமஞ்செய்
செவ்வேளெம் செந்தில் சிறந்தோங்கு தெய்வமென
எவ்வே ளையுமேத்து வேன்.
75✓
திருத்தங்கு மார்பன் திசைமுகன் என்றிங்
கொருத்தருங் காணா துயர்ந்தே-பெருத்ததழல்
என்ன நிமிர்ந்தான் இளஞ்சேய் திருச்செந்தில்
மன்னன் பதமே மதி.
76✓
திருவார்ந்த செந்தில் திகழவரு தெய்வம்
செருவார்ந்த செய்யவேல் தெய்வம்-உருவார்ந்த
வள்ளி பிடிமகளை வைத்தொளிருந் தெய்வநமை
எள்கலின்றிக் காக்குமே ஈண்டு.
77✓
வினைகெடச் செய்திடும் வேல்வாங்கி நின்று
தினைகெட லின்றிநலம் சேர்க்கும்-நனைகவுள்
வேழமுடன் கூடி விரவும் கடற்செந்தில்
தாழவுறும் சேயோன் தழைத்து.
78✓
செந்தமி ழாய்ந்த சிறப்புடை எம்பெருமான்
செந்திலில் வந்தருளும் சீர்மையான்-கந்தனெனப்
பேர்புகல அண்ணிக்கும் பேராளன் என்னுள்ளே
ஏர்பெறவே நின்றான் இருந்து.
79✓
அருமைத் திருச்செந்தில் ஐயனடி காண
உரிமையாற் சென்றங் குறைந்தே-ஒருமையால்
வந்தித்தே வாழ்த்தி வணங்குவேன் நல்லுருவைச்
சிந்தித்தே நிற்பேன் தினம்.
80✓
என்னுடைய தீய இருளைத் துரந்தநம்
மன்னன் திருச்செந்தில் வாழ்வுகந்த-தென்னவன்
சேவடியே சிந்தித் திருநெஞ்சே சேமமாம்
பூவடியே தூவிப் புகழ்ந்து.
81✓
அற்புதமே யான அமுதத்தின் தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றுவன்-பொற்புடைய
செந்தில்சேர் கந்தன் திருவடியை ஏத்தியே
வந்தித்து நெஞ்சமே வாழ்.
82✓
சாயாத அன்பையே நாளும் தழைப்பவரைத்
தாயாகிப் பேணும் தயாபரன்-சேயாகச்
செந்தினகர் வாழ்கின்ற செவ்வேள் மலரடியை
எந்நாளும் நெஞ்சமே ஏத்து.
83✓
ஆற்றுப் படுக்கும் அடிமலர்கள் ஏத்தாதே
போற்றித் திருச்செந்தில் புக்கங்கே-வேற்றவுணர்
தம்மையடும் வேற்பெயரைச் சாற்றாதே ஈங்கந்தோ
எம்மையேன் வைத்தாய் இயம்பு.
84✓
கன்னெஞ்ச வன்மரக்கட் கள்வனையும் ஈர்த்தாண்ட
நன்மைசேர் செந்தினகர் நாயகனே-என்நெஞ்சும்
நல்லிடமாய்க் கொண்டாய்க்கு நாயேன்செய் கைம்மாறென்
வல்லை தருவாய் வரம்.
85✓
செந்தினன் மாநகர் சேரன் திருவடிக்கே
எந்தநற் றொண்டும் இயற்றகிலேன்-சந்ததமும்
வாழ்வதற்கே எண்ணி வளர்கின்றேன் ஏழையேன்
தாழ்வதற்கோ இந்தத் தகவு.
86✓
அன்பர்தங் கூட்டத்தில் ஆளாய்க் கொடுத்தென்னை
இன்பமளித் தாட்கொண்ட எந்தையே-செந்திலின்
தெய்வமே என்றென்று சிந்தித்தே நாயடியேன்
எவ்வங்கள் போக்குவன் ஈங்கு.
87✓
திருச்செந்தில் வாழ்கின்ற தேவனே நின்றன்
விருப்பமே என்பால் விளைய-இருப்பதன்றி
வேறொன்றும் வேண்டேன் வினைதீர்க்கும் மாமருந்தே
தேறும் வகையெனக்கே செப்பு.
88✓
ஐயா திருச்செந்தில் அப்பா உனைப்போல
வெய்யேனை ஆட்கொள்ளும் மேலவரார்-எய்யாமற்
காப்பாய் எனைக்கடைக்கண் பாராய் கடவுளே
பாப்புனைந்து சாற்றுவனப் பா.
89✓
மலங்களடைந்தால் நொந்து வகையற்றேன் தன்னை
விலங்க எடுத்தருள் வேலா-நலங்கிளர்
செந்திற் குமராவுன் சேவடிக்கீழ் தாழ்கின்றேன்
எந்தவினை யும்போக்க என்று.
90✓
வாழ்முதலே செந்திற் பதியில் வளர்கரும்பே
ஊழ்முதலைப் போக்கி ஒளிவளரும்-வாழ்வுதவிச்
சந்ததமும் உன்றாள் தரிசிக்கும் பேறீவாய்
கந்தா கடையனையும் காத்து.
91✓
கடையவ னேனையுங் காத்தல் கடனாம்
உடையவர்க் கென்பதோர் உண்மை-விடையவன்றன்
சேயே திருச்செந்திற் சேவகனே கும்பிட்டேன்
நீயே வருவாய் நிதம்.
92✓
செந்தில் திருச்செந்தி லென்று தினந்தினமும்
சிந்தனைகள் செய்தே திரிவேனைக்-கந்தனே
எவ்வேளை யுங்காத் தினிதருள வேண்டினேன்
செவ்வே யளிப்பாய் தினம்.
93✓
நீருருகக் கண்கள் நினைந்திடேன் செவ்வேளின்
பேருருக நின்று பிதற்றிலேன்-சீருருவச்
செந்தில் திருக்கோயில் சென்று வலம்வரேன்
எந்த வழியோ எனக்கு.
94✓
ஓயாதே உள்கி உருகுவார் உள்ளிருக்கும்
தாயான செந்தில்சேர் தத்துவனை-நாயேனும்
உள்நினைந்தேன் எல்லாரும் ஒன்றாக உய்யவே
எள்கலின்றிக் காக்குமே என்று.
95✓
என்னையுந் தன்றொண்டி லேற்றருளு மென்னையன்
தென்செந்தில் நன்னகர்ச் சேவகன்-நன்னெஞ்சே
கோலவேல் ஏந்தியாள் கொற்றவன்பேர் சொல்லிநீ
ஏலவே இன்புற் றிரு.
96✓
பூவார் திருவடிகள் பூண்டேன்என் சென்னிக்கே
தேவார் திருக்கைவேல் சேவித்தேன்-நாவாரச்
செந்தமிழ் பாடியே சீருற்றேன் காத்திடவே
செந்திலாய் நற்கருணை செய்.
97✓
போற்றி திருச்செந்தில் போற்றி திருக்கைவேல்
போற்றி குகனூரும் பொன்னூர்தி-போற்றியெம்
வெவ்வினை போக்கியருள் வேலன் அடியிணை
அவ்விய மின்றி அகன்று.
98✓
போற்றி திருச்செந்தில் போற்றி யவனாமம்
போற்றியவன் சேவற் பொலன்கொடி-போற்றியவன்
ஏறுதகர் என்றே இயம்பின் மடநெஞ்சே
கூறுபடும் நோய்களெனக் கொள்.
99✓
போற்றி திருச்செந்தில் மேவிப் பொலிகோயில்
போற்றி திருத்தொண்டர் பொற்கழல்-போற்றி என்றும்
காக்கின்ற நீறென்பார் காற்போதென சென்னிமிசைப்
பூக்கின்ற பூவாம் பொலிந்து.
100✓
போற்றி திருச்செந்தில் மேவுமோர் புட்கரிணி
போற்றியவன் தேவியர் பொற்பாதம்-போற்றியே
அன்பர் விழிக்கென்றும் ஆராத கோலமென
என்புருக ஏத்துவன் ஈங்கு.