முருகன் App
திருச்சந்நிதித் தோத்திரமாலை
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
நூல்2 / 3
திருச்சந்நிதித் தோத்திரமாலை · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

நூல்

1✓
ஒன்றறி யேனென் னுளக்குறை யாவு முனக்குரைக்கச்
சென்றடைந் தேன்செல்வச் சந்நிதி மேவிய தேசிகனே
நன்றறி யாதபுன் நாய்நிகர்ப் பேனை நவையகற்றி
உன்றயைக் காளினி யாக்குவை யோவென் னுயிர்க்குயிரே.
2✓
ஆனேர்செல் வச்சந் நிதியர சேநின் னடைக்கலமென்
பானேசங் காட்டி யருளுமை யாவிந்தப் பாருலகிற்
றானேர் துணையொன் றிலாதேனன் னேதவப் பூரணனாங்
கோனே யடியர்க் கெளியவ னேயென் குலதெய்வமே.
3✓
பரிமளத் தீர்த்தம் படிந்தாடி யன்பர்கள் பாடுதுதி
அரிமல ரோன்சுரர்க் காரமு தாகவு மன்புகொள்ளாத்
திரிமனக் கேடு சகிக்கவொண் ணாதினிச் செய்வதென்யான்
சொரிமலர் சூழ்செல்வச் சந்நிதி நீதத் துரையரசே.
4✓
நீதாசெல் வச்சந் நிதிநேச னேயிரு நீருலக
மாதா வளித்த குமார வுதாரர் மனமலர்ந்த
பாதார விந்த சிவானந்த னேயிப் படிதனில்யான்
ஆதார மொன்றி யேனடி யேனுன் னடைக்கலமே.
5✓
பத்தி நெறிக்கெனைப் பாரேலை யாபெரும் பாவியென்று
சித்தத் தயைகொண் டிரங்குபொல் லாச்சிறை சேர்சயந்தன்
புத்திக் கனவினி லோடிப் புரந்தருள் புண்ணியனே
சத்தி தருஞ்செல்வச் சந்நிதி மேவிய சண்முகனே.
6✓
வேலா லசுரரை வீட்டிச் சுரர்க்குவிண் ணாடளித்த
சீலாபொற் சந்நிதி வாழ்முரு காதிருக் கார்த்திகைமார்
பாலா வெனைக்கடைக் கண்பார் பசித்தபன் றிக்கிரங்கி
மாலா யமுதளித் தோன்கும ராமயின் மாணிக்கமே.
7✓
நல்லார்க்கு நல்ல துணையான ஞானத் தயாபரனைப்
பொல்லாங்கு தீர்க்குங் குருநா தனைமறை போற்றுகின்ற
கல்லா லமர்செல்வச் சந்நிதி மேவிய காவலனைச்
சொல்வா யுருகிப் பணிவா யினியென் றுயர்நெஞ்சமே.
8✓
அன்பா லுருகு மடியார் தமைக்கண் டுருகியருள்
மின்பால் விளங்கிய வேலவ னேவினை யான்மெலிந்தே
உன்பா லடைந்தே னுனக்கேயா னாமினி யோங்குதெய்வப்
பொன்பால னேசெல்வச் சந்நிதி மேவிய பூரணனே.
9✓
போதத் திருமணி போற்றிசைக் குஞ்செல்வச் சந்நிதிபோய்ப்
பாதத் திருமணி கொஞ்சுமின் னோரிரு பாலமர்கோ
மேதத் திருமணி மஞ்ஞையின் மீதுசெவ் வேல்சிறந்த
வேதத் திருமணி யொன்றுகண் டாலென்கொல் வேண்டுவதே.
10✓
விண்பா லமரை வாழவைத் தாயன்று வெற்பகத்திற்
பண்பார்ந்த கீரன் கவியான் மகிழ்ந்து பலர்பிழைக்கக்
கண்பார்த் தனையினி யானுமொ ரேழையுன் காவல்கண்டாய்
மண்பா லுயர்செல்வச் சந்நிதி மேவிய மன்னவனே.
11✓
பொய்ச்சாட்சி பொய்க்கை யெழுத்தாகி பாவப் புலைத்தொழில்கள்
மெய்ச்சாட்சி யென்னப் புரிந்தே பிறர்பொருள் வேண்டிநின்றா
ரைக்காட்சி கண்டென் னறிவுகுன் றாம லருடருவாய்
செய்க்காட்சி சேர்செல்வச் சந்நிதி ஞானச் செழுஞ்சுடரே.
12✓
மத்தளம் யாழ்கொம்பு வார்குழல் கின்னரம் வாழ்த்தெடுப்புப்
பத்தியி னாற்பலர் போற்றநற் பாற்கா வடியுயர்த்தே
எத்தனை பேரிரு கண்ணீர் சொரிய விறைஞ்சிச்சென்று
சித்திபெற் றார்மன மேசெல்வச் சந்நிதித் தேவனுக்கே.
13✓
வஞ்சர்தஞ் சூழ்ச்சி மயக்க விரவும் வழக்கிரவுங்
கொஞ்சிப் பொருள்கொள் குழையாக ரிரவும் விடாக்கொடிய
பஞ்சப் படிதனிற் சஞ்சலந் தீர்க்கும் பரிசருள்வாய்
மஞ்சத் திருச்செல்வச் சந்நிதித் தூண்டா மணிவிளக்கே.
14✓
கன்னெஞ்ச ராயினுங் காமலர்ச் சோலைகை காட்டுச்செல்வச்
சந்நிதி நேருறி னாண்டவ போற்றிநற் சண்முகனே
மன்னவ போற்றியென் றன்பர்கள் போற்ற மகிழ்ந்துருகி
நன்னயப் பாதம் பணிந்திரு போகமு நண்ணுவரே.
15✓
சோதி மலைமருந் தொன்றான தெய்வச் சுவைமருந்தெய்
தாத மருந்துசெல் வச்சந் நிதித்தனி மாமதுரப்
போத மருந்தன்பர் கையார் மருந்தற் புதம்பூரிவேள்
வேத மருந்தது கண்டுகொண் டார்க்கில்லை வெம்பிணியே.
16✓
ஆரணங் கோடி துதிப்பவ னேயெனக் கார்நரக
மாரண வேதனை தீர்த்தருள் வாய்மல ரோன்சுரர்மால்
சீரணங் கோடுதம் மூர்வாழ வைத்த சிவக்கொழுந்தே
பேரணங் கோட்டுபொற் சந்நிதி யார்த்த பெருமருந்தே.
17✓
ஒய்யார மான மயின்மீது வோங்கி யுயர்ந்ததெய்வக்
கையா றிரண்டுடை யானைப்பொற் சந்நிதிக் கற்பகத்தை
மெய்யாய்ச் சுருதி யடையவல் லார்க்கு விரும்பியதொன்
றெய்தாத தில்லைகண் டாய்மன மேயிவ் விருநிலத்தே.
18✓
அருளா லுலகுயி ராள்பவ னேயெனை யாதரித்தே
னிருளாம் பிணிகெடப் பாருமை யாவிம வானளித்த
வருளாண் முதல்வி புதல்வாதிக் கற்றவர்க் காரந்துணைப்
பொருளாள னேசெல்வச் சந்நிதி தோற்றிய பூரணனே.
19✓
பிறந்தவ ராரூயி ரோடிருந் தாரெனப் பேருலகோர்
துறந்தவர் போலச் சுடலையின் ஞானமுஞ் சொல்லியுமே
னறந்தவ மாற்றா திறந்தவ ராவரை யாவெனைநீ
சிறந்தவ னாக்குவை யோசெல்வச் சந்நிதித் தேசிகனே.
20✓
மாபாத கம்புரி தீயோரை மாய்த்த மகிமைப்பிர
தாபா தவத்தர் மகிழ்செல்வச் சந்நிதி சார்முதலுன்
சீபாத கஞ்ச மறவாத தஞ்சத் திருவருள்வாய்
கோபாலன் மாமரு கோனேகிட் டாத குருமணியே.
21✓
அன்னை பிதாத்தெய்வ மியாவையு நீயென் றடைந்தவெனை
யின்னை நுணிந்து வருத்தலென் னோவிறை வேல்விடுத்துப்
பன்னக ராச னடுங்க வுயர்ந்த பழுமரச்சூர்
மின்னினிற் சாய்ந்தவ னேசெல்வச் சந்நிதி மேலவனே.
22✓
ஏற்காம லேற்பவர்க் கில்லையென் னாம லிழிந்தபொய்து
தாற்றாமற் றீயவ ரோடணு காமல மார்க்கர்களைத்
தோற்காம னன்றி மறவாமற் றோன்றுசெல் வந்தருவாய்
மாற்றா லுயர்செல்வச் சந்நிதி மாமயில் வாகனனே.
23✓
ஓலமென் றேசுரர் கூப்பிட்ட போதத் துயர்வடிவாய்ச்
சாலநின் றேயஞ்ச னீவிரென் றோதும் தயாபரநின்
பாலருள் கூட வடைந்தனன் பாவி புரிபவந்தீ
ராலமுண் டார்மக னேசெல்வச் சந்நிதி யாண்டவனே.
24✓
குற்றங்க டர்க்குந் திருமுரு காவிக் குவலயத்தி
லுற்றலைந் தேனினி யாகிலுந் தானல் லுறுதிநிலை
சற்றரு ளாய்துரை யேசோலை சூழ்செல்வச் சந்நிதிவாழ்
கொற்றவ னேநற் றவர்போற்று ஞானக் குருபரனே.
25✓
தோகை மயின்மிசை மேவும் பிரானைச் சுரபதிக்கு
நாக வரசு நிலையீந்த நாதனை நல்லுயிர்க்குப்
போக முதல்வனைப் பொற்சந் நிதிசென்று போற்றியிந்தத்
தேகம் பெறுபயன் றேடலன் றோபெருஞ் செல்வமதே.
26✓
விண்ணவர் துரைத் தொலைத்தாண்ட நாதவென் வெம்பிணியாந்
திண்ணவிச் சூருந் தொலைத்தருள் வாய்நினைத் தேடுகின்றார்க்
கண்மைய னாகி யவலந்தீர்த் தாறு முகங்கொடுக்கும்
பண்ணளி யார்செல்ச் சந்நிதி வாழும் பராபரனே.
27✓
சுப்ர மணியனைச் சுரசங் காரச் சுடர்வடிவேற்
கைப்பெரு மானைபொற் சந்நிதி யானைக் கசிந்துருகிச்
செப்பிப் பணிபவ ரன்றோ சிறந்த புகழ்நிறுத்தி
யிப்புவி போற்று முயர்போகந் துய்த்தங் கிருப்பவரே.
28✓
பண்கொண்ட கார்மயில் வாகன னேயொரு பாங்குமின்றி
மண்கண்டு போத நகையாட வோவெனை வைத்தனையாற்
கண்கண்ட தெய்வங் கலியுகத் தேயெனக் காசினியோ
ரெண்கொண்டு போற்றுபொற் சந்நிதி யார்த்த விறையவனே.
29✓
தோத்திரம் பாடி யடியார் பணியத் துலங்கிரண்டு
நேத்திர நேச மழையா னனைந்து நினைந்துருகி
யாத்திரந் தீர்ந்தரு ளுக்கிலக் காவரஞ் ஞானிகளுந்
தீர்த்தன் றிருச்செல்வச் சந்நிதி யாலயஞ் சேர்ந்திடினே.
30✓
தாய்போ லினிய முகங்காட்டி யன்பரைத் தாங்குகின்ற
காய்போது தேன்கனி மாறாது காட்டுசெல் வச்சந்நிதிச்
சேய்போல வேறொரு தெய்வமுண் டோவிந்தத் தேசத்திலே
நாய்போ லலையென் மடநெஞ்ச மேயினி நன்றெமக்கே.
31✓
சங்கர பால சராசர ரூப சவுந்தரமா
மங்கல பாத மனோகர வன்பர் மனோலயனே
சங்கடந் தீர்த்தெனைக் காத்தரு ளாய்செல்வச் சந்நிதிவாழ்
செங்கடம் பாமலை மங்கைமைந் தாசச்சி தானந்தனே.
32✓
செய்வதென் யான்றி யேன்செல்வச் சந்நிதி சேர்முருகா
தெய்வமுன் னாலன்றி யொன்றணு காது சிறிதிரங்கி
யையவென் னாகுலந் தீர்மறை போலரு ளாற்றிரண்டு
கைவர வேல குமாரவுல் லாச கலாபத்தனே.
33✓
அஞ்ஞானி கட்கொழி யாநர கென்றறை வாரவர்க்கும்
மெய்ஞ்ஞான சைவத் திருமார்க்கங் காட்டிய மேலவனே
செய்ஞ்ஞான தேசிக னேநின் பெருமை சிறிதுணர
மெய்ஞ்ஞான மீசெல்வச் சந்நிதி நேச விழுப்பொருளே.
34✓
தம்பவம் போல வழியுமித் தேகஞ் சதமெனக்கொண்
டம்பலத் தாடி யருள்செல்வச் சந்நிதி யாண்டவன்றாட்
செம்பது மந்துதி செய்யா ரறம்புரி யாச்சிறியோர்
கம்பமுற் றென்செய்பவர் காண்ம னார்வருங் காலத்திலே.
35✓
அடைக்கல மென்றடைந் தோர்தமைக் காக்கு மறுமுகன்வேற்
படைக்கல வேள்செல்வச் சந்நிதி வாழும் பராபரனா
ரடிக்கம லந்தலைக கொண்டார்தம் பாதத் தருந்துகளோர்
முடிக்கணி யாகக் கிடைத்தவர்க் கேகுறை முற்றுறுமே.
36✓
ஆறுமில் லாதுகைக் கோறுணை யாக வடைந்தவெல்லாப்
பேறுமுன் னாலல்ல றீரவும் யானொரு பேதைகெட்டாற்
பாருமை யாசெல்வச் சந்நிதி யாய்பழு தாகுமன்றே
யுருமுள் ளாய்சர்வ பேருமுள் ளாய்நின் னுயர்ச்சிக்கதே.
37✓
திருமா லயனிந் திரன்சுரர் வாழச் சிறந்தவைவேற்
பெருமான் மகிழ்செல்வச் சந்நிதி மேலோன் பெரும்புகழை
யொருமா மனதுட னோதி யுருகி யுருகினன்றோ
கருமா மலைபிணி மாளநின் றாடிக் களிப்பதுவே.
38✓
அன்புகொண் டார்தமை யாதரிப் பாயென்ப ரன்புகொள்ளாப்
புன்பிழைப் பாலரைப் போக்குவை யோபுலன் சோர்ந்துபொற்றாள்
பண்பது போற்குற்றம் யாதிருந் தாலும் பரிந்தெனக்கு
னன்புதந் தாள்செல்வச் சந்நிதி யோங்கிய வற்புதனே.
39✓
கல்லா லமர்ந்து மறைநூ லுரைத்த கடவுளுக்குஞ்
சொல்லார் பொருளுப தேசித்த சோதி சுடர்ப்பொதியை
யெல்லார் முனிக்கு மியலை யுணர்த்து மினியபெம்மான்
வெல்லார் பதமலர் சந்நிதி வேண்டு வினைநெஞ்சமே.
40✓
வேதச் சிரசில் விளங்கும் பிரானைவிண் ணோர்கலக்கம்
போதச் சிவனடி வேலேந்தி னோனைப் புனக்குறமா
னேசச்செல் வச்சந் நிதிமுரு கோனைநின் றேவணங்கிப்
பாதச்செந் தாமரை சூடவல் லோர்க்கில்லை பாவங்களே.
41✓
அந்தர நேரினு மல்லல்வந் தாலு மரசர்களாற்
றொந்தாரை நேரினுந் துட்டர்வந் தாலுந் தொடர்நமனார்
மந்தர நேரினு நேர்செல்வச் சந்நிதி வாழ்பெருமான்
சுந்தரப் பாலகப் பிரமணி யாதுணை தோன்றுவையே.
42✓
என்புத்தி யொன்றையுங் கேட்கின்றி லாய்மன மேயினிநா
னுன்புத்தி கொண்டு வருத்த விடேனுனை யோர்கொடியோன்
றன்புத் திரர்குலஞ் சுட்டவெவ் வேள்செல்வச் சந்நிதிச்சேய்க்
கன்புத் திருத்தமிழ் விண்ணப்ப மாலை யனுப்பினனே.
43✓
ஐயா நமசிவன் செல்வா நமவெமை யாதரித்தான்
மெய்யாநம செல்வச் சந்நிதி யாய்நம வேல்விளங்குங்
கையா நமசுப்ர மணியா நமவெனக் காதல்கொண்டான்
மையா ருலக வருத்தங்க டீர்த்து வரந்தருமே.
44✓
அஞ்சாத துரை யமராடி வென்று மடைந்தவர்க்கே
துஞ்சா தருடந்து முய்யவைத் தாயென்ன சொல்லுமையா
மஞ்சார்செல் வச்சந் நிதியர சேபெரு மாருதத்தோர்
பஞ்சாய்ச் சுழன்று நிலைதடு மாறிய பாவிக்குமே.
45✓
வஞ்சப் பெருங்கொடுங் கூற்றுற னோக்கி வரும்பொழுது
தஞ்சத் திருமயின் மேலரு ளோரிரு சார்விளங்கக்
கஞ்சக் கரமலர் வேல்கொண்டு காட்டிக் கருணைதரக்
கெஞ்சிப் பணிமன மேசெல்வச் சந்நிதி கிட்டிநின்றே.
46✓
குணமுந் தனமு மறிவும் பதியுங் குலமுமில்லாப
பணமுந் துணையும் பயன்றரு மோகொண்டு பார்க்கிற்சர்வ
கணமும் பணிகரு ணாகர நீயருள் காட்டினல்லான்
மணமுந்து சோலை மலர்செல்வச் சந்நிதி மாணிக்கமே.
47✓
ஊரா ரிருந்துமென் னுற்றா ரிருந்துமென் னோமருந்துப்
பேரா ரிருந்துமென் பேணுவ ரோபிணி வந்துருமேற்
சாரா முதச்செல்வச் சந்நிதி சார்கந்த சாமிநின்னா
ளாராவிக் கஞ்சத் தடிமல ருண்டிண்ன வற்றிடற்கே.
48✓
நாடுக டோறு மிரண்மூடி நிற்க நலிவிளக்கு
வீடுக டோறொரு கோடியிட் டாலென் விளங்கிடுமோ
தேடுங்கள் செல்வநற் சந்நிதி யாகிய சீபதியே
யாடுங் கலாப மயிலார்மெஞ் ஞானமெய் யாதித்தனே.
49✓
பச்சை மயில்வடி வேலோ னெனது பரிபவந்தீர்த்
தச்ச மகற்றி யருடரு மோதுய ரான்மெலிய
வைச்சிடு மோவறி யேனரு ளாழி வராசலநே
ருச்சித மாஞ்செல்வச் சந்நிதி வாழுறை யோன்செயலே.
50✓
ஐயா கவலைக் கிலக்காகி னேனிவ் வுலகத்துள்ளோர்
பேயாக் கணிப்ப ரிதுவோ வழகி துன்பொருட்கே
தாயா யுயிர்க்குயி ராகிப் புரக்குந் தனிப்பொருணீ
யாயாய்செல் வச்சந் நிதியர சேயென தாண்டவனே.
51✓
அத்தா வருக வருகபொற் சந்நிதி யாரகில
கத்தா வருக வருகசெவ் வேற்கரக் கார்மயிலார்
முத்தா வருக வருகவொ ராறு முகம்படைத்தே
நித்தா வருக வருக பராமுக நீத்தினியே.
52✓
உண்டே மயிலுண்டு வேலுண்டு சேவ லுருகிநின்றோர்க்
கண்டே யருள்பொழி யாறு முகமுண்டு காணநல்ல
தண்டார் துரைவீர வாகுண்டு தாமப் பணிபுரியப்
பண்டார்செல் வச்சந் நிதிமுத லாகிய பண்ணவற்கே.
53✓
கண்மணி யேயன்பர் காரிரு ணீக்கும் கதிபடைத்த
விண்மணி யேவிண் ணவர்வாழ வேல்கொண்ட மெய்ப்பொருளாந்
திண்மணி யேசெல்வச் சந்நிதி யாருந் திருப்பதிவாழ்
தண்மணி யேதளர்ந் தேனெம் பிரானென்னைத் தாங்கிக்கொள்ளே.
54✓
கொண்டாடி னார்மனத் துள்ளே புகுந்து குடியிருக்கும்
பண்டார மாஞ்செல்வச் சந்நிதி ஞானப் பராபரனே
கண்டாலுங் கண்கள் துயின்றாலும் உன்னிரு கான்மலர்மேல்
தொண்டா யிருக்கும் வரமரு ளாய்நின் றொழும்பனுக்கே.
55✓
கண்ணாரக் கண்டுன்னை வாயார வாழ்த்திக கருதுமன்பால்
எண்ணார வுன்றிரு நாமங்க ளேநிதம் எண்ணியெண்ணிப்
பண்ணார் பவப்பிணி தீர்ப்பதென் றோபக ராய்வடிவேற்
றண்ணார் திருச்செல்வச் சந்நிதி வாழுந் தயாபரனே.
56✓
ஆலத்தி னாலமு தாக்கிய நாதன் அருள்வடிவாஞ்
சீலத்தி னாற்பொலி சந்நிதி வாழுந் திருக்கந்தனே
காலத்தி னால்வரு தீமையும் பாவக் கடும்பிணியும்
கோலத்தி னாற்றொலைத் தேயெம்மை யாளுங் குருபரனே.
57✓
பதினா யிரங்குற்றம் செய்தாலு மென்னையுன் பாதத்திலே
பதமாக்கி வைத்தல் முறையல வோபதி னாலுலகும்
பதமாய் விளக்க மிகுகோர சூரன் மாவினையோர்
பதமாக்கி யாண்ட குருவே கதிரைப் பராபரனே.
58✓
பாவலர் போற்றும் பழம்பொரு ளேயென்றன் பாவமெல்லாம்
பூவலர் போற்றும் பொறுத்தரு ளாய்புது நஞ்சையுண்டு
தேவர்கள் போற்றப் புரந்தருள் பூத்த சிவப்பொருளாம்
காவலர் போற்றுபொற் சந்நிதி யாகிய கற்பகமே.
59✓
பொல்லாத பாவி இவனென நீயெனைப் பூதலத்தோர்
எல்லாரு மேச இகழ்ந்துவிட் டாலினி ஏதுசெய்வேன்
கல்லா லெறியவும் சொல்லா லடிக்கவும் காவல்கொண்ட
சொல்லாளன் மாமுரு கோனேபொற் சந்நிதித் தூமணியே.
60✓
மீதார் கதிரைப் பராபர னேயெம் வினையகற்றப்
போதா ரயனரி தேவர்கள் போற்றவிப் பூதலத்தே
தாதாரருஞ் சோலை செறிசெல்வச் சந்நிதி சார்ந்துவைவேற்
பாதார விந்தம் பணியநின் றான்சென்று பார்மின்களே.
61✓
நோயான தென்னை மிகவாட்ட வாட்ட நுவலுமுடல்
பேயாட்ட மாடத் துடித்தே புலம்பிப் பெரிதுமுன்னைச்
சேயான வேற்கந்த னேதுதித் தேனுன் செவியிலெல்லாம்
பாயா திருத்தலென் னேயரு ளாழிப் பராபரமே.
62✓
பெறுதற் கரியவிம் மானிடப் பேற்றினைப் பெற்றுமுன்னைக்
குறுகிப் பணிந்துயர் பேரின்ப வீட்டைக் குறித்தடையாச்
சிறுமக்கள் போலத் திரியாம லேழையுன் சீரடிக்கே
உறுதிப் படவன்பு தந்தெனைக் காத்தருள் உத்தமனே.
63✓
சுடச்சுட மாற்றுயர் பொன்னதைப் போலமெய்த் துன்பமெல்லாஞ்
சுடச்சுடத் தொண்டர் தமைக்கரை யேற்றிச் சுருதிமொழி
திடப்படக் காட்டிச் சிவகதி சேர்க்குந் திருக்கதிரைத்
தடப்பதி யாஞ்செல்வச் சந்நிதி வாழுந் தயாநிதியே.
64✓
தேவேசெல் வச்சந் நிதிப்பதி மேவித் திருந்துமன்பர்
பாவே விரும்பும் பராபர மேபத மாமுனிவர்
கோவேயிவ் வேழை தனக்கிரங் காயெண் குணக்குன்றமா
மாவே சுகவடி வேலாயுதங் கொண்ட மாதவனே.
65✓
கல்லா கியவென் மனமது சாலக் கசிந்துருக
நல்லா யெனக்கு வரந்தரல் வேண்டும் நவிலுமன்பர்
சொல்லான பாடற் கிரங்குமை யாசொர்ணச் சந்நிதிவாழ்
வல்லாள னேதொல்லை மாமயி லேறிய மாணிக்கமே.
66✓
அருட்குடை யோன்செல்வச் சந்நிதியீச னடியவர்தா
மிருட்குடை யார்துன்ப மெய்தார் பிறவி யெடுக்கினுநற்
பொருட்கொடை யாரென வாழ்ந்தே புவியிற் பொருந்தியபொய்த்
திருக்குடை நீக்கியப் பேரின்ப மோட்சமுஞ் சேர்குவரே.
67✓
துணையின்றி வாடுந் தமியேனைப் பார்த்தென் றுயர்களைய
வணைகின்ற காலமெக் காலங்கொ லோவரு ளாயலந்தோர்க்
கிணைகின்ற தஞ்சமு மின்பது மாகி யிசைந்தசெல்வத்
திணைகொண்ட சந்நிதி யானே யமரர் சிகாமணியே.
68✓
வேல்போற்றி வேள்செல்வச் சந்நிதி யீசர் விளக்குதண்டைக்
கால்போற்றி சேவல் மயில்போற்றி போற்றி கருதுமன்பர்
மால்போற்றி ஞானத் திருவுரு ளாகி மலர்ந்தபச்சைப்
பால்போற்றி போற்றியென் றெந்நாளு மோதப் பயமில்லையே.