திருச்சந்நிதித் தோத்திரமாலை
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
வெண்பா3 / 3
திருச்சந்நிதித் தோத்திரமாலை · ச. வயித்தியலிங்கம் பிள்ளை
வெண்பா
69✓
நிதியுண்டாங் கல்வி நிலையுண்டா நேச
மதியுண்டாம் வாழ்வுண்டாம் வானோர்-துதிசெல்வச்
சந்நிதித்தென் மேற்பதிவாழ் தந்திமுகத் தெந்தைபத
முன்னிப் பணிய முறை.
70✓
வீராசெல் வச்சந் நிதிபூத்த விண்ணவனே
பாரா யெனைக்கடைக்கண் பாருமையா-நேரார்
திருமா லயன்றேடுஞ் சீராளா சோதி
தருபாலா நின்றாள் சரண்.
71✓
பையாடு பாம்பின்வாய்ப் பட்டதனித் தேரையைப்போ
லையானான் வாட லழகிதோ-மெய்யா
கலியுகத்திற் கண்கண்ட கர்த்தனே செல்வம்
பொலிசந் நிதியாய் புகல்.
72✓
பொருளழப்பா லாழி புரிந்தளித் தார்சே
யருளலர்பொற் சந்நிதிவா ழத்த-னிருளழியப்
பார்ப்பானென் னெஞ்சே பதறேல் கருதையன்
சீர்ப்பாதப் போது தினம்.
73✓
நவக்கிரக தோஷமெனை நண்ணாமற் காத்துத்
தவக்கிரமத் தாள்பணியத் தாதா-வநுக்கிரகசெங்
கோலா லுலகாளுங் கோவே குருராஜா
வேலாபொற் சந்நிதிவாழ் வே.
74✓
எங்கே யிருந்தாலு மென்னவினை வந்தாலுந்
தங்குமன மேசெல்வச் சந்நிதிவாழ்-தங்க
வரைராசன் போற்றுலக மாதா வளித்த
துரைராச னுண்டே துணை.
75✓
தாயைப் பிரிந்தகன்று தானலையும் பெற்றியைப்போன்
மாயைப் புவியிலெனை மாழ்கவிடேல்-நேயத்
திருவாருஞ் சந்நிதியா செல்வா சுரர்க்கா
யுருவாகி வந்த வொளி.
76✓
சங்கத் திருந்து தமிழாய்ந்த பண்டிதனே
பங்கப் படாமலெனைப் பாருமையா-சங்க
வனவேடர் போற்றிசைப்ப வானுருவங் காட்டுங்
கனவேல நீயே கதி.
77✓
ஓதி யுணர்ந்தறியே னுன்புகழ்பொற் சந்நிதியாய்
காதிலே கேட்டறியேன் கைதவனிப்-போதுற்றே
னும்பர் குறைகேட் டுருகி யிரங்கியநற்
சம்புதவு தேவா சரண்.
78✓
தொண்டர்க் கெளியானே சோதிவடி வேலோனே
யண்டர்க் கருள்புரிந்த வண்ணலே-விண்ட
விதியால் வருந்திடுமிவ் வேழைக்கு நேசந்
நிதியா யருள்புரிய நேர்.
79✓
இன்பமுறு மேவினைக ளெல்லா மொழியுமே
துன்பறுமே பொற்சந் நிதித்தூய-வன்பாளர்
கந்தா குகனே கதிர்வேலா கன்னியுமை
மைந்தா வெனமகிழ வார்க்கு.
80✓
பச்சைமயில் மேலோனே பண்ணவர்க்கு வாழ்வளித்த
நிச்சவடி வேலோனே நின்மலனே-யச்ச
மகற்றியெனை யாள்செல்வச் சந்நிதிவா ழத்தா
சதற்கா ரணசண் முகா.
81✓
பாற்கா வடியேந்திப் பாடிமகிழ்ந் தையாநின்
னாற்காக்கப் பட்டவரை நானுருகிப்-பார்த்தே
பணிந்துசெல்வச் சந்நிதியார் பண்ணவனே துன்பந்
தணிந்து சிறப்பவரந் தா.
82✓
விசய னுயிர்க்கிரங்கி வேடுவனாய்ச் சென்று
விசயனடி பட்ட விருண்மேலோ-னிசைசிறுவ
னெப்படியுங் காப்பா னிறைசெல்வச் சந்நிதியா
னிப்படியி லென்று மெனை.
83✓
முத்தி முதலே முழுமூல மந்திரமே
சக்தியுமை கந்தசெல்வச் சந்நிதியார்-முத்தே
பெருமருந்தே நாயேன் பிணிவீட்ட வுள்ளத்
தொருமருந்தே யாகி யுறை.
84✓
அஞ்சு முகங்காணி லாறு முகங்காட்டி
யஞ்சலென நின்றருளு மாண்டவனார்-செஞ்சரணே
தஞ்சமெனச் சென்று தழைக்கும்பொற் சந்நிதி
நெஞ்சமே நின்று நினை.
85✓
ஆட்டுக் கடாவுரவுக் கஞ்சியவிண் ணோர்துதிக்க
ஆட்டுக் கடாவதுவே வாகனமாக்-காட்டுங்
கருணைபொற் சந்நிதி வாழ்கந்த சாமி
தருணத் துதவி தரும்.
86✓
ஆமய வாழ்வி லடியேனைக் காத்துச்சா
காமயவாழ் வுங்காணக் காட்டுவாய்-சேமத்
திருச்சந் நிதிவாழுந் தெய்வமே தூய
வருட்சந் நிதானத் தமர்ந்து.
87✓
அடியார்க் கெளியன்பொற் சந்நிதிவா ழத்தன்
முடியாப் பெரும்புகழை முன்னிற்-கிடையாத
தொன்றில்லை கண்டா யுயர்வா யுழனெஞ்சே
சென்றிறைஞ்சு வாய்நீ தினம்.
88✓
அஞ்சாத சூர ணணிமயிலாய்த் தானமையத்
துஞ்சா வரங்கொடுத்த சோதியே-கஞ்ச
மலர்ப்பாத னேசெல்வச் சந்நிதியாய் வந்தே
னவப்பாவம் போக்கி யருள்.
89✓
ஒருமான் மகிழ வொருமானைக் கொன்ற
வொருமான் மருக னொருமான்-பெருமான்
தருமான்செல் வச்சந் நிதிமானைச் சாற்ற
வருமா லிருமான் வசம்.
90✓
தாராத் தனிக்கொடையாத் தந்தெனக்குன் சேமவருள்
தீராயென் சென்மத் திருக்கெல்லாஞ்-சீரா
ரனத்தோன்மால் காணா வணிசந் நிதியாய்
வனப்பூர் மயிலாய் மகிழ்ந்து.
91✓
மெய்யடியார் போற்றி விளங்குசெல்வச் சந்நிதிவா
ழையனருள் போற்றிதுணை யானமயில்-செய்யவேல்
போற்றி யுயர்சேவல் போற்றிதிருப் பாதமலர்
போற்றிநிதம் போற்றியெனப் போற்று.