திருத்தணிகையாற்றுப்படை
கச்சியப்ப முனிவர்
அத்தகு பெருமான்3 / 3
திருத்தணிகையாற்றுப்படை · கச்சியப்ப முனிவர்
அத்தகு பெருமான்
நேரிசையாசிரியப்பா✓
அத்தகு பெருமான் அருள்விளை யாடலைச்
சற்றிது கேண்மதி! தவமேம் படுந!
விச்சுஒன் றின்றி விளைவுமிக்(கு) ஆக்கியும்
விச்சுமிக் கிருப்ப விளைவுமுழு தொழித்தும்
ஒளிதலை வளர்ப்ப ஒளிகளைத் தணித்தும்
அழுக்கினைக் கழுவ அழுக்கினை யேற்றியும்
உறுதொழி லாளர்க்கு உறாதுசேண் அகன்றும்
வறுந்தொழி லாளார்க்(கு) உவந்துடன் கலந்தும்
விதித்தநல் விதிகளை விலக்கென உவர்த்தும்
விலக்கினை விதியென மேதகு நயந்தும்
இத்தகு தொழின்மை நித்தலும் இயற்றிப்
பொற்றபே ரின்பு அருள் பெற்றியன் அஃதான்(று)
இருமுது குரவர் எழுவாய்ச் சுற்றமொடு
துயர்இலங்(கு) உலகம் தோற்றுதல் பொருட்டுத்
தந்தை யென்ன ஐந்துமுக னாகியும்
அன்னை யென்ன மனோன்மணி யாகியும்
முன்முறை தந்தையர் தாய ரென்ன
நாதஞ் சிவமே நலத்தகு விந்து
மேதகு சத்தி வேறுவே றாகியும்
பின்முறை தந்தையர் தாய ரென்ன
மகேசன் உருத்திரன் மகேசைஉமை யாகியும்
தமைய னென்னத் தந்திமுக னாகியும்
தனைய னென்னத் தாமரை மருட்டும்
மூவிரு முகமும் முந்நான்கு கரமும்
மருவிவீற் றிருக்கும் ஒருதா னாகியும்
கடப்படும் இரண்டு கைகோள் இயங்க
நான வார்குழல் நகையிழை யானையைக்
கானவர் அரும்பெறல் காமரு மாதினைக்
கற்பினில் களவினில் பொற்புற மணந்தும்
பொருள்துறை முழுதும் புரையின்றி நடப்ப
அண்டகோ டிகளும் அரைக்கணத் தளவையின்
வறிதுநகை தோற்றி இறுவது புரியும்
எறுழ்வலி யாற்றல் எய்யான் போல
மந்திரம் தூது செலவுஇகல் மற்றும்
ஆற்றிவெஞ் சூர்வலி காற்றி உல(கு)ஓம்பியும்
எல்லாம் அறிந்(து)அறி விக்கும்அவ் வியல்பெக்
கண்கூ டாகக் காட்டுவன் அதாஅன்று
மூவகை யுருவாய் மூவுல குயிர்த்தும்
மூவகை உருவும் முயங்காப் பரம்பொருள்
பந்தம் வீடு பல்லுயிர்க் கமைத்தும்
பந்தம் வீடு படாத பெருந்தகை
ஆருயிர்க் குயிராய் அமைந்தன நடாவியும்
ஆருயிர் காட்சிக்(கு) அணுகா அருந்திறல்
தானாய் நின்று தற்காண் தனிமுதல்
அளிகளின் அளியா அளிகளூஉங்கு அளியன்
ஒளிகளின் ஒளியா ஒளிகளூஉங்கு ஒளியன்
வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளியன்
அளவினின் அளவா அளவினூஉங்கு அளவன்
இன்னான் ஒருவனை முன்னுபு சென்றவன்
பூங்கழல் சேவடி போற்றுதி ஆயின்
பேர்அஞர் உறுத்த பேதுறு நோயும்
காரண நோயும் கையிகந்(து) இரியக்
கடைக்கணித் தருளிக் கரையில் நாற்பொருளும்
கொடைக்கடன் நீயிர் குறித்த அளவையின்
எண்மடங்கு ஆற்றி என்றும் தீரா
அகம்படித் தொழின்மையின் அழுத்துவன் அன்றே
ஆடகப் பசும்பொன் பாடகச் சீறடி
நாடக மகளிர் நவிற்றிய ஆடல்
சிலம்பு கிண்கிணி தீங்குழல் முழவம்
முரசம் தூரி முழங்(கு)ஒலி யானும்
விண்தலம் உரிஞும் வியன்மணிப் புரிசைக்
கொண்டல்கண் படுக்கும் கோபுர நிரைகள்
ஆடுகொடி சுமந்த மாடநெடு மாளிகை
இன்னன பிறவும் மன்னுதா லானும்
ஒலிதிரைக் கடலும் ஓங்குபல் வரையும்
உடங்கு தொக்(கு)அண்மி ஒண்துறை யாடி
இருபகுப் பினவாய் இருகரை மருங்கும்
நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கும்
மும்மையும் அளிக்கும் மூவா முழுமுதல்
ஐம்முக னாகி அமர்ந்தவீ ரட்டமும்
அறுமுக னாகி அமர்ந்த கீழ்க் கோட்டமும்
பொன்னும் மணியும் புதுமலர்க் குவையும்
திரைக்கயிற் றூஉய்த் திளைத்தெழுந் தொழுகும்
நந்தி யாற்று நறும்புனல் மடுக்கும்
குரங்குகதிர்ச் சாலியும் கொழுந்தீங் கரும்பும்
குலைப்பூங் கதலியும் கோள்தெங் கினமும்
கோள்கண்மீப் பரிக்கும் பாளைக் கமுகும்
வயின்வயின் பொதுளி வளம்பல உறந்த
முருகலர்ப் பண்ணை ஒருபுறஞ் சூழ
அவரை துவரை அரில்கதிர் வரகு
சாமை யிறுங்கு ததைந்தன விளையும்
கொல்லை முல்லை கோழிணர்ப் பூவையும்
பந்தர் மாதவி உந்திய கோங்கும்
பைங்காற் கொன்றை பசும்பொற் சுண்ணமும்
வளியுளர்ந் தெடுப்ப மறுபுல வரைப்பும்
போர்த்தன கமழ்ந்து பொறிவண்(டு) அழைக்கும்
அரும்புலப் புறவம் ஒருபுறஞ் சூழச்
செருந்தி மந்தாரம் குருந்துவழை பாடலம்
கோங்கு சண்பகம் வேங்கைமகிழ் சந்தனம்
குங்குமம் மரவம் கோழ்அகில் கப்புரம்
இல்லம் ஆவிரை வில்லம் பாங்கர்
பிடர்ஞெமை நமைஆண்(டு) அடர்வரை எகின்சே
அசோகம் தேக்கே ஆத்தி சூதம்
மருது போதி வஞ்சி காஞ்சி
ஞாழல் புன்னை நரந்தை மாதுளை
பொகுட்டரை யிருப்பை பூஞ்சினைச் சரளம்
முன்னம் பலாசு முருக்கை வருக்கை
சோதி மாமரம் தொத்தின நாகம்
அன்றி அனைத்தும் துன்றிய கறிக்கொடி
மல்லிகை முசுண்டை மற்றும் பரித்து
மணங்கமழ் காமர் வல்லி யொன்றே
இணங்குபூத் தருந்தன் இகழ்ச்சியை நாடி
வசைபடத் தத்தம் இசைவிளக் குவபோல்
பொறிவரிச் சுரும்பும் வெறிநுகர் தேனும்
தோகைமா மயிலும் தொடிக்கண் பூவையும்
கிள்ளையும் குயிலும் தெள்ளுகுரல் காட்டி
வண்டளிர்ப் பொதும்பர் மருங்குகால் வளைஇ
நுண்தளி நறுந்தேன் நோலாது திவளும்
ததைமலர்ச் சினைய தருவைந் துடுத்த
பொன்நகர் வறுமையை முன்னிநக் காங்கு
வேரல் நரன்றுக வெண்மணிக் குப்பையும்
பிறழ்பல் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச்
சிங்கவல் லேறு பொங்குசினந் திருகி
எழுந்துதாய்த் துமிப்ப இருங்கடா யானை
மத்தகம் பிளந்து மாயிருங் குன்றத்து
வெண்புனல் அருவி வீழ்வன போலச்
சலசல வுக்க தரளக் குவாலும்
நிலவுராய்ந் தவழ நெமிர்ந்தன மிளிரும்
கவான்மலைப் புனத்துக் கதிர்த்தினை காக்கும்
உவாமதி முகத்தார் ஓச்சினர் விடுக்கும்
கவணையில் மணியோ கங்குல் கானவர்
விலங்கினம் துரக்கும் இலங்குகூர்ங் கணையோ
அலைத்தர விசும்பின் நிலைத்தரு கலன்கள்
பல்வகை மின்கொடி ஒல்கிவீழ்ந் தென்ன
வெல்வரை நிரையும் பில்குசுதிர் மணிப்பூங்
காழும் தாமமும் கவினத் ததைஇய
மண்டபம் மேடை மாடமே னிலைகள்
இயங்கா நிலைத்தேர் இயங்குமணிப் பஃறேர்
விமானவூர் திகளும் வேற்றுமை தோற்றா
வளம்பல தழீஇயெம் மருங்குமெய் யடியார்
இடும்அகில் தூமமும் எக்கரின் குவைஇய
படரொளி யூட்ட பளிதக் குப்பை
கான்றதீம் புகையும் கழுமிவிண் கெழுமி
யிமையார் நாட்டம் இமைப்பன செய்ய
மல்லல் ஆவணம் மறுகும் வீதியும்
நாடொறும் எழிலால் நவநவ மாகி
இமைக்குநர் நாட்டம் இமையாமை செய்ய
மண்தலம் விண்தலம் மாற்றிய தென்ன
இறும்பூது பயவா ஏர்குலாய்க் கிடந்த
திசைகாப் பாளர் இசைநிறை தேவர்
அலரவன் நெடுமால் ஆதிய கடவுளர்
முதுக்குறை யன்பின் முறைமுறை பழிச்சச்
சாறுநாள் அல்லது வேறுநாள் அறியா(து)
உலகமுழு(து) ஓம்புபல் சிறப்பின்
நிலைபெறு தணிகை மலைகிழ வோனே.