முருகன் App
திருத்தணிகையாற்றுப்படை
கச்சியப்ப முனிவர்
பொன்மலைத் திருவில்2 / 3
திருத்தணிகையாற்றுப்படை · கச்சியப்ப முனிவர்

பொன்மலைத் திருவில்

நேரிசையாசிரியப்பா
✓
பொன்மலைத் திருவில் பன்னக நெடுநாண்
மாயப் பகழித் தாயக் குரிசில்
முரணமை யிருகால் திரள்மறைப் புரவி
அலர்மாை வாழ்க்கை வலவத் தேரும்
வழங்குதற் கமையா வண்மையி னிசைக்கும்
பெருந்தகு பாடல் திருந்திசைப் புலவர்
அறன்கடைக் ககலாப் பிறங்குதம் முளத்தில்
சாலாக் கல்வி மாலார்க் ககலா
வரன்மாண் டமைந்த உரன்மாண் பலகையில்
தண்டா விருப்பின் எண்டோள் முதல்வனோ(டு)
ஆனாது பயிலிய அருமறைக் கேள்வி
மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக் கடலென்(று)
ஆயிரு கடலும் ஆற்றலின் கடையா
ஐயம் திரிபெனும் அழல்விடம் படாது
வெய்ய செம்பொருளெனும் மிளிர்தீஞ் சுதைத்திரள்
ஆராக் காதலின் ஆராது கைப்பவும்,
ஊன்றுவிர லழுந்தா(து) உடல்தசை திணிந்து
கான்றதேந் தெரியல் கருங்குழல் மகளிர்க்(கு)
அணங்குள நிறீஇ ஆருயிர் கவர்க்கும்
வளங்கவின் கொழிக்கும் விளங்குசீ ரிளமையும்,
பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று
சிந்தை வழிச்செலும் ஐந்து(ம்)நிலை பெறீஇயர்
அளவினைத் திறத்தின் அயரா யாக்கையும்
அளகைக் கோமான் உளமழுக் கறுப்ப
நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமு(ம்)
நீடின்(று) இரியும் நிலைமை நாடி
ஏற்போர் அங்கைக் கொடைக்கடன் இறுத்து
நோற்போர் நோற்கும் நோன்மைசால் அறனெனும்
உறுதி யாக்கம் ஓய்யெனக் கழலவும்
வரைத்திரள் புரள்வின் திரைத்தெழும் திரைக்கணம்
விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்தும்
ஒளிறுவேல் அழுவத்(து) உருத்தெழுந்(து) அடர்த்துக்
களிறுவார் முரசும் பிளிறுமால் யானையும்
வைத்தபல் படையும் வழாதுகைக் கொண்டு
பராபவத் தெவ்வர் வரிசையி னிறுக்கும்
திரைகேழ் உரிமை முறைநேர் நடாவியும்
தத்தந் தொழிலில் தலைநின்று வளர்க்கும்
பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும்
மிஞிறும் தேனும் வெறிகவர் தும்பியும்
கஞலிப் பண்குரல் கஞற்றுவ சுழலும்
இருள்துஞ்சு மலர்ப்பொழில் மருள்சில் லோதிப்
பூவார் சோலைப் புறத்தகப் படுத்து
மேவரத் தடையிய விதுக்குறை கடுக்கும்
திவள்ஒளி மாண்ட குவவுநுதல் வாணுதல்
தீங்கதிர் அமிழ்தத் திங்கட் பிளவின்
நீங்குகார்க் கறையும் நிலாத்தவழ் வெண்மையும்
விராய்உருக் கொண்டென மிளிர்மதர் மழைக்கண்
செங்குமு தத்துச் சிறுமதி கிடந்தெனச்
செவ்வா யகத்த செயிர்தீர் வெண்பல்
விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்துசெகில் துயல்வர
வள்ளையி னொழுக்கிய அள்ளெழில் செஞ்செவி
செவ்வாய் கவுள்துணைச் சேல்விழி நெற்றி
இவ்வா யுறுப்பான் இன்சுவை அமிழ்த
உறுகொடை யாற்றி வறிதுகொடை காட்டும்
வளைநிதி தன்னைக் குடுமிகைக் கொண்டவ்
வளைமேல் கொண்டு வயங்கொளி தோற்றும்
பதும மாநிதி யிதுவெனக் கவன்று
தாவா வுறுவர் மேவா வுள்ளமும்
ஓவப் படமென உஞற்றுறு திருமுகம்
பகுவாய்ப் பொற்குழை மகரமீனா அன்(று)
ஐதுமீக் கிடத்தலின் ஐங்கணைக் கிழவோன்
வெய்து தன்னாணை விளக்கிய வுயர்த்த
அணங்குதவழ் கொடியின் இணங்குபணை வேய்த்தோள்
காம்புபுடை யடுத்து கதிர்மணிக் குன்றின்
தோள்புடை யடுத்த சுடர்ப்பூண் கொங்கை
குவிமுலைத் துணைகொள் சவிமணி மார்பில்
தத்தமது ஏணி கடவாது தணிய
நள்ளுநின் றுணர்த்தும் தள்ளாக் குறியின்
அணிவயிற் றொழுகிய மணிமயிர் வல்லி
நெடுகுமயி ரொழுக்கு நெடுவழிப் படர்ந்து
கடுமுலைக் கோட்டுக் களிறுபட எடுத்த
படுகுழி யனைய பயம்படு கொப்பூழ்
நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண
நடுநின்று தேய்ந்த இடுகுகொடி மருங்குல்
வையகம் உயிர்த்தோன் மதிபுனைந்(து) இயற்றலின்
கைபுனைந் தியற்றும் கதிர்மணித் திண்தேர்
கடா(து)உருக் கொண்(டு)ஓடும் தடாதபேர் அல்குல்
கீழ்மே லாகக் கிளர்ந்தெழின் அத்தகு
வாழையொடு பொருஉம் வார்ந்தசெறி குறங்கின்
வேற்றொரு தாமரை மேவந்து தொழில்செய
வீற்றிருந் தருளும் விரைமலர் ஏய்க்கும்
அலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி
மயில்இயல் மருளும் இயல்மட மாதரைச்
சீலம் விழைவே செயல்குறி இவற்றால்
நால்வகைப் பேதமும் மால்அறத் தெரிந்து
மருந்துமந் திரத்தும் திருந்துவிழை வேற்றித்
தேயம் பயிற்சி சேட்டை யியல்பே
இன்பத் துறையே இருவகைத் தொழிலே
இங்கித வகையே இவைநனி நாடி
இருவகைப் பொழுதொடும் ஏற்ப மருவிய
மூன்று காலமும் மூன்று வேகமும்
ஒப்பக் கலவி உஞற்றுபே ரின்ப
அவாஉளம் பொதிந்துகொண்(டு) அழற்றுவெம் படர்நோய்
தவாதுபிறை போலத் தணிவின்றி வளர
உவாமதி போல உருவே தபவும்
கடவுட் பொங்கரும் தடமருப்(பு) ஆவும்
சிந்தா மணியும் நந்தா நிதிகளும்
கலன்முத லான வளம்பல கொழிப்ப
பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்தத்
தெவ்வுத் தானவர் அவ்வித் தேங்க
விரிகதிர்ப் பிழம்பும் அரிமான் தவிசின்
களிகூர் நெஞ்சால் காவல் வைகும்
ஒளிகூர் மகவான் உறுபத மாதி
எளிதினுய்த் தளிக்கும் தெளிவினைப் போலாது
பார்முதிர் புணரிப் பாயல் கடவுள்
வார்மதுப் பொகுட்டு மரைபலர்ப் புத்தேள்
என்(று)இவர் தமக்கும் எய்தற் கரிய
சரியை கிரியை யோகத் தவநிலைப்
பெயர்பொச் சாப்பப் பிறக்கணித் துகவும்
ஊன நாடகம் உஞற்றிய திருவருள்
ஞான நாடகம் நவிலிய மாறலும்
ஆனா மலப்பகை நோனாது கழலத்
தானா நந்தத் தனிஉயிர் மடங்கக்
கண்காண் குருமுதல் கடவுள் ஆகி
உயிரே அவத்தை உணர்த்தும் தன்மை
அருளின் இயல்பே ஆங்கதன் பயனே
பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென்று
அனைவகை யேழும் அரில்தபத் தெரிப்பத்
தாழாது கேட்டு வீழாது சிந்தித்(து)
அங்கைக் கொண்ட அமிழ்தெனத் தெளிந்து
பொங்குபே ரின்பம் புணராது புணரும்
நிட்டை கூட நிலையது நீங்கவும்
பஃறிறப் பகைஞர் படையொடு நேர்ந்தென
வெஃறிறம் காட்டாது வீற்றுவீற்(று) உடற்றும்
பிணிக்கோட் பட்டுப் பேதுறு மனத்தான்
முந்தையோர் ஈட்டும் முழுநிதிச் செல்வமும்
பொய்ம்மை யாளர் புகழெனத் தேய
நோய்ப்பகை யாளர்க்கு நொடிந்தென் சிதரின்
பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி
அதுவென வெறுவி யதன்றுமற் றிதுவென
முன்னைநாள் மருந்தை முறைமுறை இகழாப்
பின்னைநாள் மருந்தைப் பெட்டுவாய் மடுத்துப்
பண்டைநோய் மேலும் பருகுபல் மருந்தால்
மண்டுநோய் வேறு மரீஇக்கிளர்ந்(து) உருப்ப
உரைத்தஎன் மொழிவழி ஒழுகினை யல்லைகொல்
பெருத்துநோய் தெறுமென மருத்துவன் ஒழியத்
தெய்வத் திறத்தால் தீர்வுகாண் பாம்என
உள்ளூர் வயின்வயின் தெள்ளிதின் ஓங்கும்
புரிமுறுக் கவிழ்க்கும் பூம்புனல் தீர்த்தமும்
பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும்
படிந்தும் பணிந்தும் பயன்கா ணாமை
அணிஅயற் புறநகர் மணிகெழு கோட்டமும்
விரத நியதிப் பரவுகட னாதிப்
பல்வேறு தொழிலொடு படர்ந்துபணிந் தேத்தியும்
கவலை நெஞ்சம் கையறு(பு) இனையச்
சேட்சென் றொராஅல் செய்தென வலித்து
மிக்கநோய்க் கிரங்கும் ஒக்கல்புறந் தழுவ
வறுமைக் கவற்சியும் இறுகுறப் பிணிப்ப
இல்லும் தமரும் இசையில் நாடும்
மென்மெலக் கழீஇ விரிகதிர்ப் படையால்
இருள்கால் சீக்கும் எழுபரித் தேரோன்
கடுஞ்சினம் திருகிய கொடுமைகூர் அமயத்து
முளிமுதல் முருக்கிய முழங்(கு)அழல் போழ்ந்து
வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர்த் தெறூஉம்
பைதரு கானத்துப் படர்நெறி யொதுங்கலின்
முந்துபர லுழந்த வெந்துயர்க் கொப்புள்
பிந்துபர லுழத்தொறூஉம் பிளந்துநீ ருகுப்ப
இயங்காச் செல்லல் இணையடி தாங்க
வெயிற்பகை யுழந்த வேர்ப்புபுறம் நனைப்பச்
துறை மாருதம் துறைத்துறை யெடுத்த
பூழி போர்த்த பொற்பறு மாசு
கலுழ்நீர் அல்லது கயந்தலை யின்மையின்
கழுவுதல் புரியா முடையபில் காயமோடு
இலையின் மராத்த நிலையின் மென்னிழல்
சேய்வரல் வருத்தம் சிதைபாக்(கு) அசைந்து
நெட்டுயிர்ப் பெறிந்து நினைதரும் இரவல
ஆற்றா நின்னுளத்(து) அவலமினி யொழிக
புளிரூரும் மருளும் போக்கரும் சுரத்து
வீற்றுவீற்(று) ஒழுகும் ஆற்றினில் திரியா(து)
ஒருநெறி எதிர்ப்பா(டு) உற்றது முன்னைப்
பழுதறு பெருந்தவப் பயனது போலும்
விழும வெந்துயர் முழு(து)ஓரால் வேண்டின்
பாணியா(து) இன்னே காணிய எழுமதி
தோல்தேர்க்(கு) ஓடும் திருகுகோட்(டு) இரலையின்
நோய்ப்பகை யென்ன வாய்ப்பிலா தமையும்
அடுத்தடுத் தியானும் அலமரு காலை
ஊர்ஊர் வைகிய சீர்கெழு மாந்தருள்
உண்டி கலவி உறுதொழில் முதலா
மண்டிய பகுப்பின் வரையறைப் படாது
வேறுவே றுயிர்க்கும் வெம்பிணி யாளரும்
கருவி போழ்ந்த பெரும்புண் ணுறுநரும்
குட்டம் பெருநோய் முட்டிய வாதம்
முயலகன் ஆதி மொய்ப்பிணி யுழவரும்
பாப்புக் கோளாதிப் பலவகைக் கடிநரும்
பேய்க்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரும்
உறுப்புக் குறைநரும் ஒண்குண மிழநரும்
இன்ன பஃறிறத்(து) எனைவரும் அன்றிக்
கல்விவேட் டவரும் கான்முளை வீழ்நரும்
செல்வம் வீழ்நரும் தேய(ம்)நா டுநரும்
அலர்மலை மடவார் கலவிகா முறுநரும்
இரண்டறு கலப்பின் இன்பநச் சுநரும்
இனையபல் வேறு நிலனவினர் எவரும்
வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவும்
மேற்கொண் டெழுந்து மேனாள் நேர்ந்த
பொற்கிழித் திரளும் பூந்துகில் மூடையும்
மணிப்பூண் பேழையும் வார்தரு கவரியும்
பைம்பொற் கவிகையும் செம்பொற் சிவிகையும்
ஊர்தியும் கொடியும் வார்விசி முரசும்
சூட்டுவா ரணமும் தோகைய மயிலும்
தத்தமக் கியன்ற தழீஇயனர் போதும்
ஓசைதிக் கதிர்க்கும் மாசனப் பெருக்கம்
காண்டொறும் காண்டொறும் ஈண்டிய களியேன்
உடங்குசென்(று) இருப்பான் ஒருப்பட் டெழலும்
துன்னிய விழுமநோய் தன்ன(ம்) நீங்க
உறுதுயர் யாக்கை சிறிதுவலி யெய்த
ஓய்யெனக் கிளர்ந்த உவகைநெஞ் சத்துப்
படர்பே றூக்கம் பிடர்பிடித் துந்த
எழுந்தனன் இம்மென ஏகுதல் தொடங்கி
அடிபெயர்த் தோறும் ஆருர்ப்பிணி நழுவ
உவரி நீரின் தவளமும் மகிழ்வால்
அவன்மிசை பாடா அனைத்து(ம்) நெறியாகச்
சென்றனன் அடுத்து மன்ற(ல்)நகர் நுழைதலும்
வெருவுநோய் இருகூற்(று) ஒருகூறு விலங்கக்
காட்சி ஆர்வம் கையிகந்(து) ஈர்த்தலின்
நறுமணம் கமழும் நந்திநதி குடையா(து)
எழுமுனி வரர்தம் எழசுனை ஆடா(து)
அலைமலைப் பகைஞன் அருட்கயம் படியாது
நாக வன்சுனை நன்புனல் தோயாது
விண்டு தீர்த்தம் மேவரக் குளியாது
அலரவன் இருஞ்சுனை அழிபுனல் முழுகாது
எத்துயர்த் திரளும் அத்தினத்(து) அகற்றும்
சரவணப் பொய்கைத் தடம்புனல் துளைந்து
மென்மெலக் குன்றம் மீமிசை இவர்ந்து
காலை நண்பகல் மாலைமுப் போதும்
வைகல் வைகல் மலர்முன்று தெரிக்கும்
நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது
புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலின்
அடியிடப் படாஅ ஆரிடை வீதி
ஒதுங்குபு பைப்பைய ஒருமுறை சூழ்ந்து
தூவும் எள்நிலத்துத் தோயாது வெறுத்த
தேவர்கள் குழுவும் தேயத் தொழுதியும்
தடைஇய வாயல் தடையாது நுழைந்(து) ஆங்கு
ஒருவர்மெய் மணிப்பூண் ஒருவர்மெய் வடுச்செய
நெருங்கிச் சென்று நித்தில வாள்நகை
வள்ளி நாயகி மணத்தினை முடித்த
கள்ள வேழக் கடவுளைப் பணியா
வீரர்ஒன் பதின்மர் வார்கழல் தாழ்ந்துமற்(று)
ஆவயின் வதியும் அமரரைத் தொழுது
பூதப் பகுப்பும் பூதகா ரணமும்
இந்தியக் கூட்டம் இரண்டுமுக் குணமும்
நந்து(ம்)ஆங் காரமும் நலத்தகு கரணமும்
இறுவாய் மாயை எழுவாய் ஏழும்
சுற்றம் என்னத் தோன்றிய ஐந்தும்
விராய்நின் றியக்கி மராநுநின் றொளிரும்
ஆரா இன்ப அருள்நிலை அம்ம
தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப
அருள்திரு உருவுகொண்(டு) அவிர்மணித் தவிசின்
ஞான சத்தியும் கிரியா சத்தியும்
வானவர் கோமான் வளம்பயில் மகளும்
கானவர் நலங்கூர் கன்னியும் என்ன
இரண்டு பாலும் இருந்தனர் களிப்பக்
கண்டமெய் அடியர் கலவினிர் போற்றக்
காணா விண்ணவர் கலவாது ஏத்தக்
கண்கடை யொழுகும் கருணை நோக்கமோ(டு)
இனிதுவீற் றிருக்கும் எழில்நேர் காண்டலும்
எஞ்சுநோய் துவர இரியல் போக
விஞ்சுநாற் பொருளும் மேவந்து துவன்ற
ஆற்றாக் கடுந்துயர் அருநர குழப்பவர்
நோற்றமுன் னூழ்நனி நூக்கலு(ம்) நொடிப்பின்
ஆயிடை நின்று மாயிரும் துறக்கம்
புக்குழிப் பொலிவித்(து) ஒக்க தோற்றத்து
விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க
ஒருகதி விட்டுமற்(று) ஒருகதி யடைந்தவர்
மயங்கறி வென்ன உயங்குமுன் உயங்கல்
எய்யே னாகி இறுமாப் பெய்தி
செய்முறை தெரியாது திருமுன் நிற்ப
இருமைப் பயனும் எளிதினுற் றளிக்கும்
பூதியும் றிருவுருப் பூச்சுநன் களித்திட்(டு)
என்னைத் தன்வச மாக்கிய உலகை
என்வச மாக்கி என்றுமோர் இயல்பின்
நின்றதன் நிலையின் நீங்கா திருத்தி
விடாதுவிட்டருள மெய்யருள் மேற்கொண்டு
ஒழியா தொழிந்து வழிவரு கின்றனன்