முருகேசர் முதுநெறி வெண்பா
இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)
அறத்துப்பால்2 / 4
முருகேசர் முதுநெறி வெண்பா · இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)
அறத்துப்பால்
1கடவுள் வாழ்த்து✓
தேவரையுஞ் சூரனையுந் தேற்றுருவாற் றேர்ந்தனநீ
மூவரிறை யென்ன முருகேசா - வோவில்
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
2வான் சிறப்பு✓
அன்பரிடர் கண்டரன்பா லப்பருஞ்சம் பந்தரொடு
முன்பொருகா சேற்றார் முருகேசா - வின்புதருந்
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
3நீத்தார் பெருமை✓
ஈண்டுதச தோற்றமா லேய்ந்தான் பிருகுரையான்
மூண்டரற்பு சித்தும் முருகேசா - பூண்ட
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
4அறன் வலியுறுத்தல்✓
அற்றமின்றிச் சாமந்தன் கோனிதியா லண்ணல்பணி
முற்றுவித்தின் புற்றான் முருகேசா - மற்றதனால்
ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.
5இல்வாழ்க்கை✓
மெய்த்தமிழ்வே தத்துலகுய் வித்துயர்ந்தார் வள்ளுவனார்
முத்தவில்வாழ் வுற்று முருகேசா - வுத்தமமாம்
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.
6வாழ்க்கைத் துணைநலம்✓
கோதில் சுதரிசனன் சொற்றிறம்பாக் கோதையொடு
மூதஞர்தீர்ந் துய்ந்தான் முருகேசா - பேதமிலாப்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.
7புதல்வரைப் பெறுதல்✓
துற்றுநர குற்றோர் சசிவன்ணன் சூழ்நெறியான்
முற்றினர்சொர்க் காதி முருகேசா - வுற்றுப்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
8அன்புடைமை✓
கின்னரரோ டேமேதா கேதரைமீட் டார்வசவர்
முன்னரன்பாற் சென்று முருகேசா - மன்னுலகில்
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.
9விருந்தோம்பல்✓
துன்னுவனத் துந்தருமன் சூழ்முனிவர்ப் பேணுதலான்
முன்னுவளம் பெற்றான் முருகேசா - வுன்னின்
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.
10இனியவை கூறல்✓
அண்டமுதல் வற்பழித்தே யைந்தலையு ளொன்றிழந்தான்
முண்டகன்செம் மாந்து முருகேசா - மண்டிப்
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.
11செய்ந்நன்றியறிதல்✓
மெய்த்தரும தெய்வநன்றி வீட்டிமதி மம்மருற்றான்
முத்தவற்ச நாபன் முருகேசா - வித்தரையில்
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
12நடுவுநிலைமை✓
நீதியிற்பாஞ் சாலிகடா விற்குவிடை நேர்விகன்னன்
மூதவையிற் சொற்றான் முருகேசா - காதலினால்
சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்.
13அடக்கமுடைமை✓
ஓங்குதருக் கம்வாத வூரருழைச் செய்துபுத்தர்
மூங்கையராய்ச் சோர்ந்தார் முருகேசா - வாங்கதனால்
யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
14ஒழுக்கமுடைமை✓
வேதநெறி பேணாத் துராசாரன் மிக்கயர்ந்தான்
மோதலகை பற்ற முருகேசா - தீதில்
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுவாக் கறிந்து.
15பிறனில் விழையாமை✓
பார்க்கவனார் பன்னியத்தம் பற்றியலி யாயினன்முன்
மூர்க்கனாந் தண்டன் முருகேசா - வேர்க்கும்
பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.
16பொறையுடைமை✓
மன்னவனாற் றன்னையொறுப் பித்துமரு வாவுசுதன்
முன்னவனைக் காத்தான் முருகேசா - வுன்னும்
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
17அழுக்காறாமை✓
ஆர்த்தபொறா மைச்சிசுபா லன்கண்ண னாழியினான்
மூர்த்தமறுப் புண்டான் முருகேசா - கூர்த்த
அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுவாக் கறிந்து.
18வெஃகாமை✓
மாண்டுநக ரோடளறு வாய்ந்தான் பராந்தகக்கோன்
மூண்டரன்பு வெஃகி முருகேசா - வேண்டும்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.
19புறங் கூறாமை✓
துஞ்சுமணத் தோடுவணஞ் சூரன்முத லோர்த்துழற்றி
முஞ்சலுற்ற தந்தோ முருகேசா - விஞ்சலுறக்
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.
20பயனில சொல்லாமை✓
கற்றும் பயனிலசொல் கன்னனுரைத் தெஞ்ஞான்று
முற்றுபழி பூண்டான் முருகேசா - வுற்றுணரிற்
பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.
21தீவினையச்சம்✓
பாவ மெனாதரன்செய் பற்றலின்வேந் தோடயர்ந்தார்
மூவர் மறையோர் முருகேசா - மேவ
எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
22ஒப்புரவறிதல்✓
தொண்டருக்கேற் றுந்தரும சீலரமு துத்தொகுத்தார்
முண்டகன்மால் போற்று முருகேசா - மிண்டும்
இடனில பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
23ஈகை✓
பொன்னகர்க்கோ னேற்பத் ததீசி புறவெலும்பை
முன்னலின்றித் தந்தான் முருகேசா - மன்னி
இலனென்று மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள.
24புகழ்✓
எத்தனையோ வாசவர்நா ளின்பமிந்த்ரத் துய்ம்மனுற்றே
மொய்த்தபுகழ் பூண்டான் முருகேசா - வுய்த்துணரின்
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.
25அருளுடைமை✓
வாழ்கணங்க ளாக்கினன்சா தானந்தன் வன்னரகின்
மூழ்குங்கொடி யோரை முருகேசா - தாழ்கிலா
நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.
26புலான் மறுத்தல்✓
காமுறுமூன் றுய்த்தலின்மா யீகனுமார்க் கண்டனான்
மோமுலுருப் பெற்றான் முருகேசா - வீழும்
படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம்.
27தவம்✓
பற்றிலனந் தன்புற் பதத்தெனடா னந்தநட
முற்றவத்தாற் கண்டான் முருகேசா - வற்றமற
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்.
28கூடாவொழுக்கம்✓
சந்நியா சம்புனைந்தே சானகியைத் தான்கவர்ந்தான்
முன்னிலங்கை வேந்தன் முருகேசா - துன்னும்
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
29கள்ளாமை✓
நாகவசக் கள்வசிட்ட னாற்சுரபி யைப்பற்று
மோகமல்கிக் கெட்டார் முருகேசா - போகுங்
களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.
30வாய்மை✓
மாழ்கித் தருமனொரு பொய்யுரைத்தே வன்றுயருண்
மூழ்கிமிகச் சோர்ந்தான் முருகேசா - தாழ்கலின்றிப்
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
31வெகுளாமை✓
சித்தரா மன்வெகுளி மூண்டிழந்தான் றீக்கண்ணை
முத்தனல்ல மன்பான் முருகேசா - நித்த
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.
32இன்னா செய்யாமை✓
தன்னைவதை முத்திநா தன்றனையு மெய்ப்பொருளார்
முன்னைநனி காத்தார் முருகேசா - மன்னுலகில்
இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
33கொல்லாமை✓
தத்திநடந் தெவ்வுயிருந் தாங்குதயை யாற்பரதர்
முத்தரின்மேம் பட்டார் முருகேசா - மெத்து
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.
34நிலையாமை✓
தக்கன்மதர்த் தெச்சமொன்று தான்செய்தயச் சென்னிபெற்றான்
முக்கணனை யெள்ளி முருகேசா - வுக்கமின்போல்
நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
35துறவு✓
மேக்குவணை யின்பும் வெறுத்துச் சிவமகவான்
மோக்கநிலை சார்ந்தான் முருகேசா - வூக்கித்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
36மெய்யுணர்தல்✓
செம்மைப் பொருளென்னத் தேர்ந்துநினைக் கும்பமுனி
மும்மலமற் றுய்ந்தான் முருகேசா - விம்மைதனிற்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
37அவாவறுத்தல்✓
பற்றறுத்து வாமதே வன்பிறவாப் பான்மைபெற்றான்
முற்றியரன் பூசை முருகேசா - கற்றுணர்ந்தோர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
38ஊழ்✓
விஞ்சுகங்கைத் தம்பநுனி மேவுபரிக் கித்தரவான்
முஞ்சினனாய்ந் தோர்முன் முருகேசா - வெஞ்சலிலா
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.