நல்லூர் நாற்பது
வி. கந்தவனம்
சிறப்பீர் பத்து3 / 4
நல்லூர் நாற்பது · வி. கந்தவனம்
சிறப்பீர் பத்து
1✓
வீடுநலத் தூய்மைமிக விளங்கு மெங்கும்
விண்ணவரின் தன்மையுடன் விரதங் கொள்ளக்
கூடுமடி யார்களது குமரா வுள்ளக்
குன்றிலருள் பெய்துதுவக் குடிகொள் வாயே
நாடுகொடும் போக்குகளை நன்றே தள்ளி
நன்மைதரும் நல்வழியை நாளும் உன்னி
நாடிவிடுந் தொல்லைகளை நாசஞ் செய்யும்
நல்லூரான் கொடியேற்றம் நாளை என்றே!
2✓
விண்ணவரும் வியக்கின்ற வீதிப் பந்தல்
மிகுதோர ணங்களெழில் விளக்குக் கும்பம்
கண்ணைஅட கட்டிவிடுங் கலைக ளூறும்
காட்சிபல கலைஞர்களின் மாட்சி கூறும்
தண்ணெனவே கதிரவனுந் தன்மை மாறும்
தக்கவழி காட்டிநலத் தன்மை யூட்டி
மண்ணுலகி லடியவரின் வாழ்வை யாக்கும்
மயிலோனின் கொடியேற்றம் மறுநாள் என்றே!
3✓
கூடிடுவர் மண்வீழாக் கும்பல் வெள்ளம்
கூற்றாகிக் கொடுமைகளைக் கொல்லும் நின்னைப்
பாடிடுவர் பண்ணோடு பைந்தாள் தேனைப்
பருகிடுவர் பதறிடுவர் பத்தி முத்தி
ஆடிடுவர் அப்பாஓ! ஆட்கொள் என்பார்
அலறிடுவர் குளறிடுவர் ஆவல் மீறி
வாடிடுவர் வலியபிடி வாதம் நூறால்
வாழ்வுநலம் நல்லூரான் வைப்பா னென்றே!
4✓
தங்கும்பல் கோடிதவத் தண்ணூர் நல்லூர்
தன்னாலே ஊரோங்கத் தரணி யோங்க
எங்கும்பல் இன்பங்கள் இலங்க என்றும்
இருள்மாளும் ஒளிவீச ஏற வென்றே
செங்குந்த செம்முள்ளச் சீலர் கோலத்
தேர்வைத்துக் கொடிக்கான சேலை ஈய
பொங்கும்நல் வேதமுடன் மங்க லங்கள்
பொருந்தவுயர் பொழுதுகொடி போற்றி ஏறும்!
5✓
தித்திக்கும் மருந்தாகித் திறந்து கண்ணைச்
சிறந்துய்யும் வழிதன்னைத் தெரிக வென்றே
பத்தர்க்கு வழிகாட்டிப் பசியும் போக்கிப்
பார்த்துள்ளம் பழுத்தூறப் பத்தாம் நாளில்
முத்தொக்கு மஞ்சத்தில் முற்பி றப்பில்
மூண்டுள்ள தீவினைகள் முடித்தே நன்றாய்
எத்திக்கும் இடங்கூடி இருகை ஏந்தி
ஏற்றவே போற்றவே எழுவாய் நீயே!
6✓
மயிலேறி மனங்கொண்ட வள்ளி யோடு
வாழ்வாங்கு வாழ்கென்று வாழ்த்தி நல்ல
சுயமான அறிவேற்றித் துணிவு தந்து
துன்பங்கள் துன்புற்றுத் துவண்டே மாள
நயமுறு சிரிப்போடு நற்கண் ணோடு
நல்லூரி னருள்திக்கு நாலும் பாயப்
பயனூறு நீதந்து பதினே ழாம்நாள்
பனிப்பூச்சப் பரம்மீது பவனி கொள்வாய்!
7✓
திசையாவும் வென்றாங்கு திரும்பும் வேளை
திடங்கொண்ட செயல்வீரன் திறமை காட்ட
அசைவெய்தக் கைலாய வழகுக் குன்றம்
அடித்தோடிப் பெருக்காகி யழித்த கங்கை
விசைகண்ட அருளுள்ளம் விரலாற் சற்றே
மிதித்துள்ள திறமைக்கு விதித்தே யெல்லை
இசைகேட்டு மகிழ்ந்துள்ளம் இளகுங் காட்சி
ஈர்க்கும்பத் தொன்பதினில் எங்கள் நெஞ்சே!
8✓
ஆலால முண்டமரர் அல்லல் தீர்த்தோன்
ஆள்கின்ற அடியாரின் அமிழ்தக் குன்றம்
மேலேறி வருங்கோல வேளை பத்தர்
மேல்வாங்கும் கண்ணோடு மெய்ம றந்தே
பாலாசுத் தேனாகப் பழங்க ளாகப்
பார்த்தொன்றிப் பருகிடுவர் பாரி லோங்க
வேலோடு விளைக்கின்ற மெய்வி ருந்தாம்
மேலான எழிற்காட்சி வேறெங் குண்டோ?
9✓
தங்கமயில் மீதிலொரு தண்ட பாணித்
தனியழகுச் கோலமதைத் தாங்கி வந்தே
பொங்குபுகழ் ஊர்த்தெருவைப் போர்த்தே ஆர்த்துப்
போற்றியுனைப் பாடியுளம் பொலிவார் பொன்னாய்
மங்கிவரும் மாலையிலே மாம்ப ழத்தின்
மாண்கதையின் உட்பொருளை மனத்தே கொள்ள
வெங்குழுயி ரிருந்துமிக வினிப்பா யென்றே
இருபத்தி ரண்டதனி லியம்பா நிற்பாய்!
10✓
நீண்டவுயர் கோபுரமுன் நின்றே யென்றும்
நீங்காத பேரன்பில் நீந்த மக்கள்
வேண்டவருள் ஆனைமுகன் மாம்பழத்தை
வேலான மேலான மெய்நாங் காண
ஆண்டியென மாண்டவெழி லணிக லன்கள்
ஆடைகளும் நீக்கிநிலை அழகைக் காட்டிப்
பூண்டுகலைக் கோவணமும் புகுவை கோயில்
புரியாத பொருளுக்குப் புதல்வ னென்றே!
11✓
தேரென்றாற் கருமகவுஞ் சிறந்தே யார்த்துத்
தெரிந்தின்பப் பயனுறுதித் திளைத்தே பூக்கும்
பேரொன்று பேச்சொன்று மூச்சு மொன்றே
பேசாத வாயெல்லாம் பேசும் நாளை
தேரென்று தேரென்று திருநாள் முன்னாள்
தேங்கிவந் தடியார்கள் திரள்வா ரன்றே
ஊரொன்றாம் நல்லூரும் உலக மாகும்
ஊர்கூடும் வெள்ளத்துக் குவமை யுண்டோ?
12✓
மாடங்கள் மடங்கள்பேர் மண்ட பங்கள்
மன்றங்கள் பந்தல்கள் மாடி வீடு
ஆடுங்காற் பந்தல்கள் அப்போ தொன்றும்
அந்தரக் குடிசைகள் அண்டி யுள்ள
வீடெல்லாம் விரிந்தோடி விளங்கும் நற்பேர்
வீதிகள் பாதைகள் மிஞ்சி யுள்ள
ஊடெல்லாம் கோடியோ தோடை பக்க
ஊரெல்லாம் உறைவரே உருகி மக்கள்!
13✓
விடிகாலை பெருக்காற்று வீதி யாவும்
விரைந்தோடிக் கடல்நல்லூர் விம்மிக் கூடும்
பிடிவாதம் பலவாறு பிடித்தே கீற்றுப்
பிறைகொண்ட சடையானின் பிள்ளை யன்புக்
கடியார்கள் ஆளாகி யாறாய்க் கண்ணீர்
அலைமோத அழிவாக வலைக்கும் அல்லல்
விடியாத வாழ்நாளின் விடிவைக் காண
விரைந்துண்மை விளக்கத்தில் வியர்த்தே வீழ்வார்!
14✓
அசையாத மணியோசை யாறு மார்க்க
அடிக்கமணி எட்டழகி லாறு கூடும்
திசையாவும் பழிதீர்ந்து சிறப்பி லோங்கத்
தீபங்கள் சின்னங்கள் சீராய்ச் சூழ
இசைவாயும் கருவிகளும் இசைப்பப் பத்தர்
இருகைகள் தலைக்கேற இணையி லின்ப
விசைமீற விண்ணார்க்கச் சிலிர்க்கத் திக்கு
வெல்லழகிற் பல்லழகிற் சொல்ல வொண்ணாப் -
15✓
பேரழகிற் சீரணியிற் பெற்ற நல்ல
ஊர்மயிலிற் சேர்கொடியு முற்ற வேலும்
ஈரழகி மார்களிரு பக்க மேற்க
வார்கருணை முறுவலுடன் வடிவி லோங்குந்
தேரெனவே பேரொளியுந் திகைத்து நிற்கச்
செல்லுகையிற் கொல்லுதுயர் வெல்லு கின்ற
ஆர்கழலும் அடியவருக் காகுங் காட்சி
அரகரவோ அரகரவோ அமிழ்தக் காட்சி!
16✓
பார்ப்பார்கள் பார்ப்பார்கள் பத்தர் கைகள்
பன்னியெழுந் துச்சிகொளப் பாங்கர் நீங்க
ஆர்ப்பார்கள் முருகான அமிழ்தை யுண்டே
யருமையோ வருமையென் றாடிப் பாடி
வார்ப்பார்கள் கண்ணீரை வற்றா ஊற்றாய்
வடிவேலன் வழங்கவே வாழ்வின் பேற்றை
வேர்ப்பார்கள் வேலாஓ வேலா என்பார்
வேண்டுவன வேண்டாது வேண்டிக் கொள்வார்!
17✓
கார்கண்ட மயில்போலக் களிப்பார் பல்லோர்
கண்பெற்ற முகம்போல ஒளிப்பார் பல்லோர்
நீர்கண்ட நிலம்போல நிறைவார் பல்லோர்
நிகரற்ற நூல்செய்து நிலைப்பார் பல்லோர்
பார்கண்ட பொருள்பெற்ற பசியோர் பல்லோர்
பைந்தமிழெச் சுவைத்தினிது பயின்றோர் பல்லோர்
ஊர்கண்டு தேர்கொண்ட உருவத் தேனை
உண்டிங்கு பெற்றுள்ள உரிமை உய்வார்!
18✓
வாராத பேரில்லை வந்தே தீர்வார்
வாழ்நாளை வளமாக்கும் மனங்கொள் காட்சி
பாராத பேரில்லைப் பார்த்தே தீர்வார்
பயனொன்று வேறில்லைப் பன்னீர்க் காட்சி
நேராத பேரின்பம் நேர்ந்தே தீரும்
நெஞ்சம்நெக் குருகிவிழும் நீர்க்கண் காட்சி
தீராத வினையாவும் தீர்ந்தே தீரும்
தீர்த்தம்வேல் ஆடவரும் திருப்பொற் காட்சி!
19✓
அடியார்கள் ஆளாகும் அருட்பாற் காட்சி
அல்லலுமட் டூழியமும் அழியுங் காட்சி
விடியாத வாழ்வாங்கு விடியுங் காட்சி
விண்டமிழின் அமுதமணம் வீசுங் காட்சி
முடியாத முயற்சிகளும் முடியுங் காட்சி
முத்தமிழர் ஆட்சியினை நுகருங் காட்சி
அடியார்கள் படிமீதில் ஆடிப் பாட
ஐவர்களும் தூநீரில் ஆடுங் காட்சி!
20✓
உடையாத உள்ளங்கள் உடையுங் காட்சி
உண்மையினை உணர்ந்தவர்கள் உருகுங் காட்சி
அடையாத அருளுரிமை அடையுங் காட்சி
அடியவர்கள் வீட்டுப்பே றடையுங் காட்சி
படையாக நெடுநேரம் படிகள் மீதில்
புடைசூழ்ந்த அடியார்கள் பூக்க முக்கண்
உடையானும் வேலோருஞ் சுரரு மொன்றாய்
உளமாடி நீராட உலகம் உய்யும்!