நல்லூர் நாற்பது
வி. கந்தவனம்
போற்றிப்பத்து2 / 4
நல்லூர் நாற்பது · வி. கந்தவனம்
போற்றிப்பத்து
1✓
அன்பாகி அருளாகி அறிவாய் நல்ல
அமிழ்தாகி அழகாகி அனைத்து மாகி
இன்பாகி இருந்துள்ள இருளைப் போக்கி
எமையானும் உமையாளன் இறைவன் இந்தத்
துன்பாகுங் குமிழ்வாழ்வில் துவள்வார் தொல்லை
துடைத்தாள அருள்செய்யக் கிடைத்த செல்வா
உன்பாதம் உன்பார்வை உன்வேற் கைநல்
லூருண்டே உறுநோய்கள் உண்டோ போற்றி!
2✓
உளனாளும் உயிராயெம் உள்ளம் உள்ளான்
உலகண்ட வெளியுள்ள உலகக் கோமான்
வளனாகும் வாழ்வுக்கு வழியாய் மாயை
மலம்போக்கும் மணியான மருந்தாய் மாதை
அளவான அரைமார்பில் அணைத்தா னுக்கோர்
அழகாறு முகமான ஆற்றல் ஊற்றாய்
வளமார்நல் லூர்போற்றி வாழும் எங்கள்
மனம்பற்றி மகிழ்வூட்டும் மயிலா போற்றி!
3✓
வல்லாரின் வல்லானாய் வடிவே லாயுள்
வளமாக்கி யாய்நல்ல வற்றா வூற்றாய்
எல்லாரின் உள்ளத்தும் என்றும் நின்றே
இயல்பாக இனிக்கின்ற இன்ப மாகி
இல்லாரின் உள்ளாரின் இன்னல் யாவும்
இல்லாமற் செய்கின்ற எழிலார் தூய
நல்லூரிற் பெருமானாய் நாளும் நம்மை
நன்றாகக் காக்கின்ற நாதா போற்றி!
4✓
மெய்யான பொருள்மேனிச் சிவனார் தாமும்
மேலாக வளர்த்தஎழில் மென்பொன் மானும்
மெய்ஞ்ஞானக் கலையாவும் மிக்கான் ஐந்து
கையானும் தம்பியரும் களிப்பாற் பூக்க
உய்வான கருமங்கள் உண்மை ஓங்க
உலகாளும் உனதூறும் உள்ளம் கொள்ளத்
தெய்வானை வள்ளிமயில் செய்வேல் நல்லூர்
செய்துள்ள தவமென்ன செந்தாள் போற்றி!
5✓
கொடிதீர்த்த இடைக்காலங் கோடி கோடி
கொண்டுன்னை உள்ளத்திற் கொடுமை மாண்டு
விடிவாகும் வாழ்வென்று விம்மிப் பொங்கி
விழியாறு பாய்ந்தோட விட்டே யாவும்
அடிதீர்ந்த மரமாகி அண்டிக் கண்டே
அணுவாக வணுவாக வனுப விக்கும்
அடியார்கட் கருள்பாலித் தல்லல் தீர்க்கும்
அழகான நல்லூரின் அறிவே போற்றி!
6✓
வேறேது பேறெது வேலே போதும்
வேண்டாத தொல்லைகளும் வீழ்ந்தே தீரும்
மாறாத இளமைஎழில் மணமுஞ் செய்ய
மலரடியும் மயக்கிவிடும் முகங்க ளாறுஞ்
சீறாத பாம்புமயில் சீர்வேல் சேவல்
திருவள்ளி தெய்வானை தருநற் காட்சி
ஆறாத அடியவருக் கமிழ்தே யாக
அருள்வாயே நல்லூரின் அறிவே போற்றி!
7✓
முனைப்பொழிய முருகுதரும் முருகன் நீயே
மூண்டதுயர் முடித்துவரும் முனிவன் நீயே
நினைப்பவர்கள் நின்னடியை நீங்கா இன்ப
நீர்வழிய நெக்குருகி நீந்தா நிற்பார்
உனைப்புரியின் உண்மைநல ஒளிசேர் வாழ்க்கை
உண்டுபல கண்டுவழி உலகம் உய்யும்
தினைப்புலநல் மயில்பின்னர் சென்ற நல்லூர்த்
திருமேனி நம்பின்னர் வருமே போற்றி!
8✓
ஆண்டுபல ஆரியர்கள் ஆண்ட நல்லூர்
ஆடிஒரு வேட்டைதனிற் பெருமாள் ஆண்டே
மீண்டுமுயிர் ஊட்டிஎழில் மிகுநல் லூராய்ப்
பூண்டுபுகழ் ஆண்டரசு புரிந்தே நின்னை
வேண்டிஅரி தானவொரு வேலை செய்தான்
வெற்றிஎழில் வேலருளின் பெற்றி போற்ற
நீண்டபுகழ்க் கோயிலவன் நிறுவித் தந்தான்
நின்னடிகள் நாம்காண நின்றாய் போற்றி!
9✓
வரலாற்றுப் புகழ்கொண்ட வளநல் லூரில்
வன்கனக சூரியனும் மாடப் பொன்னார்
நிரலான வீடுநெடுஞ் சாலை நீள
நிலையாகக் கலையாக நிறுவப் பின்னாள்
பரராச சேகரனும் பக்கம் எல்லாம்
பலகோயில் கண்டானே பாரோர் நாளும்
கரமேந்திக் கடலாகக் கண்ணீர் கொட்டக்
கலைக்கோயில் நீகொண்டு களித்தாய் போற்றி!
10✓
ஆடிமயில் ஏறிவரின் அடியார் கூட்டம்
ஆடியுற வாடிவரும் அருளில் இன்பம்
கூடிவரப் பாடிடுவர் கூர்வேல் போற்றி
குலவுமெழில் நிலவுபுகழ் கூட்ட வீதி
மாடிமனை மலர்ப்பொழில்கள் மலியும் நல்லூர்
வாழ்ந்துமகிழ் வெய்திவரும் மயிலா நம்மைத்
தேடியிடர் தீர்க்கவருந் திருத்தா ளுண்டே
தேவையிவண் ஒன்றுமிலைத் தேவர் நாமே!