நல்லூர் நாற்பது
வி. கந்தவனம்
வேண்டும் பத்து4 / 4
நல்லூர் நாற்பது · வி. கந்தவனம்
வேண்டும் பத்து
1✓
ஆண்டவர்கள் அன்றுபுவி ஆற்றல் கொண்டோர்
ஆக்கமறி வூக்கமுடன் அறத்தில் வல்லோர்
நீண்டபுகழ் பூண்டவர்கள் நிகரில் லாதோர்
நீதிமுறை மாறுபட நீர்க்கண் ணோடே
ஈண்டவர்கள் இருள்படர இன்னல் சூழ
இருதலையிற் கொள்ளியெறும் பானார் இங்கே
மீண்டவர்கள் மேன்மையுடன் நல்லூர் வேலா
விளங்கிவர நீஅருளல் வேண்டும் வேண்டும்!
2✓
இனிமையிலே ஏற்றமுடன் என்றும் வாழும்
இளமையிலே முழுமையிலே இளகுஞ் செம்மைத்
தனிமையிலே வன்மையிலே சங்கங் கண்ட
தகைமையிலே தாய்மையிலே சான்றோர் போற்றும்
கனிமையிலே கருத்தினிலே கடவுள் தன்மைக்
கருணையிலே கவர்வதிலே கற்றோர் தம்மைப்
பனிமையிலே பதுமையிலே பால்வாய்ப் பண்பில்
பழைமையிலே வழமையிலே அழகுக் காமோர்-
3✓
மொழியினிலே அரியதமிழ் மொழியைப் போன்றோர்
மொழிவேறொன் றில்லையென மொழிந்தார் சான்றோர்
விழியினிலே பெருமூச்சில் விழும்நீ ரோடு
வீரமொழி தீரமொழி வீழ்ந்தாள் தாழ்ந்தாள்
வழியெதுவு மில்லாத வறியோர் போல
வந்தகுறை எச்சமதில் வாழும் ஈனப்
பழியொழிய நல்லூரிற் படைவேற் கந்தா
பார்த்தருள வேண்டுமவள் பார்மேல் ஓங்க!
4✓
துள்ளிவிழும் தொடர்அருவிக் கொடிபோல் அன்புத்
தூயவுயர் குழல்வீணை மதிபோல் பண்புப்
புள்ளிஎழில் மான்நடன மயில்போல் வெல்லும்
புலிவில்லு மீன்தென்றல் புயற்காற் றைப்போல்
உள்ளதமிழ் நம்முடலின் உயிரின் மேலாள்
உலகமுவந் துயர்த்திவரும் ஒப்பில் லாதோர்
வள்ளுவனைக் கம்பனிளங் கோவை வானோர்
வருந்தியருஞ் செயல்பெற்ற மருந்தை மிக்க-
5✓
அள்ளிவருங் காப்பியங்கள் ஐந்துங் கொண்டாள்
ஆழமறி யாதகடல் ஆனாள் மேனாள்
உள்ளிவரு வோர்உலவு தீர அள்ளிக்
கொள்ளைவளங் கொடுத்தவுயர் கோன்மை கொண்டாள்
தள்ளியவள் வான்புகழைத் தரணி கொள்ளும்
தன்மையறி யாதவர்கள் தாழ்த்தி விட்டார்
கொள்ளமனங் கூடவிலைக் கொற்ற நல்லூர்
வள்ளிமயிலா அவளை வாழ வைப்பாய்!
6✓
நன்றாகும் வாழ்விங்கு நாளை நம்மோர்
நடிப்பின்றி நஞ்சின்றி நல்லோர் வல்லோர்
நின்றேகும் நிலைப்பாதை நின்றே நேர்மை
நீங்காது துயர்சற்று நீடித் தாலும்
ஒன்றாகும் உயிர்ப்பண்பு நன்றாய் ஊறி
உருவாகும் எதிர்காலம் உணர்விற் கொண்டு
வென்றாகும் வரைமுந்திச் சென்றால் நல்லூர்
வேலாநம் மவருணர அருளல் வேண்டும்!
7✓
வெள்ளாட்டு வேலைகளில் வேண்டாப் பேச்சில்
வெறும்வாயைச் சப்புவதில் விற்பார் நேரம்
முள்ளூட்டில் முள்நீக்க முன்னே மூச்சாய்
முன்னேற முயல்வார்கள் முயற்பொம் பாகும்
கொள்ளாட்டில் அதுசூழல் கோயில் மேளம்
கொக்கொக்க ரக்கென்று குதிப்பார் பின்னர்
தள்ளாட்டம் தலைமீறத் தாமே தாழ்வார்
தண்ணல்லூ ரோயின்னார் தழைத்தல் வேண்டும்!
8✓
எடுப்பார்கள் இருப்போர்கள் தடுப்பார் தாங்கார்
ஏனென்றால் ஏனென்பார் எண்ணார் ஏதும்
முடிப்பார்கள் முயல்வோர்கள் முயலார் முந்தி
முற்றாகச் சிந்தனைகள் முன்பின் இன்றிக்
கெடுப்பார்கள் கேட்டாலோ கேளாக் காது
குடிப்பார்கள் குதர்க்கங்கள் உளறிச் சும்மா
நடிப்பார்கள் இவர்போக்கை நல்லூர்த் தேவா
நாமுய்ய அறிவுவழி நாட்டல் வேண்டும்!
9✓
ஒட்டார்நின் சென்றாங்கே ஓமாம் என்றே
ஓடேந்திப் பலபக்கம் ஓடி ஆடி
விட்டார்கள் பலபேர்கள் வீரம் மானம்
விற்றார்கள் இனப்பண்பு வீணே தாமாய்க்
கெட்டார்கள் முப்பாலைக் கேட்டார் இல்லைக்
கிளித்தட்டு விளையாட்டுக் கீச்சு மாச்சுத்
தட்டாது நல்லறிவைத் தனிநல் லூரோய்
தாமாக இவர்மாறத் தரல்நீ வேண்டும்!
10✓
நம்மவர்கள் நல்லவர்கள் நல்லூர் வேலா
நற்செயலில் வல்லவர்கள் நன்றே ஆனால்
தம்மையறி யாதவர்கள் தமிழின் பண்பின்
தன்மைதெரி யாதவர்கள் அதனால் தாழ்ந்தார்
வெம்மையர சாட்சிமிக வெந்தார் நொந்தார்
வேறுபட நின்றுரிமை விட்டார் கெட்டார்
செம்மையுடன் செந்தமிழர் சிறப்பாய் ஓங்கச்
செய்தருள வேண்டுமெழில் தேர்நல் லூரோய்!