குன்றக்குடிப் பதிகம் 1,2,3
தண்டபாணி சுவாமிகள்
குன்றக்குடிப் பதிகம் - 1: நூல்2 / 5
குன்றக்குடிப் பதிகம் 1,2,3 · தண்டபாணி சுவாமிகள்
குன்றக்குடிப் பதிகம் - 1: நூல்
1கொச்சகம்✓
பொன்னைமதித் திறுமாப்போர் புறங்கடையிற் போய்உழலும்
என்னையும்நின் னருட்சீடன் எனவுரைத்தற் கிசைந்தாயோ?
முன்னையுல கீரேழும் முறைப்படிபோய்த் திரும்புதகர்
தன்னைநடத் தியபாலா! தமிழ்க்குன்றைப் பதியானே.
2✓
அளிவளரும் மலர்க்கூந்தல் ஆயிழையார்க் ககம்குழையும்
எளியனையும் நின்சீடன் எனவுரைத்தற் கிசைந்தாயோ?
களி(று)உகைக்கும் மகவான்தன் கண்கலக்கம் தீர்த்தாண்டாய்!
குளிர்பொழில்சூழ் தருகுன்றைக் குடிபுரக்கும் கோமானே.
3✓
மானம்ஒரு சிறிதேனும் மருவார்போல் இரந்தலையும்
ஈனனாம் எனைச்சீடன் எனவுரைத்தற்(கு) இசைந்தாயோ?
கானகத்துக் குறப்பேதை களிகூர்ந்து தரும்தினைமாப்
போனகத்துக் கினியோனே! பொழிற்குன்றை புரப்பானே.
4✓
மாங்குயில்நேர் மொழிநல்லார் மயக்கத்தால் மாழைவிழைந்(து)
ஏங்கும்எனைத் தன்சீடன் எனவுரைத்தற்(கு) இசைந்தாயோ?
வீங்குமுலைத் துணைத்தெய்வ வேழமகள் மணவாளா!
ஓங்குமலை தொறும்ஆடல் உஞற்றும்குன்றைப் பதியானே.
5✓
சந்தேக மெனும்முதலை தான்விழுங்கத் தளர்ந்துமனம்
நொந்தேனைச் சீடன்என நுவலுகைக்கும் இசைந்தாயோ?
இந்தேறும் செஞ்சடிலத்(து) இறைவனரு ளியபாலா!
கொந்தேயும் மலர்ச்சோலை குலவுகுன்றக் குடியானே.
6✓
மணங்காட்டும் தண்கமல மலர்ப்பதத்துன் அடியவர்பால்
இணங்காத வன்நெஞ்சத்(து) எனைச்சீடன் என்றாயோ?
அணங்காரும் மயிலினமும் ஆடும்நலம் அவிர்சோலை
உணங்காத குன்றைநகர்க்(கு) உயர்ச்சிதரும் உரவோனே.
7✓
வாணாளை வீணாக்கி மகிதலத்தில் உழல்வேனை
நாணாமற் சீடனென நவின்றீடற்கும் இசைந்தாயோ?
மாணார்தண் கடம்பணியும் மணிமார்பத்(து) அயில்வேலா!
சேணாடர் புகழ்குன்றைத் திருநகரிற் செவ்வேளே.
8✓
நீற்றிகழ்ச்சி மலிதீயோர் நெடுங்கழுவின் மிசையேற
ஏற்றியநீ யெனைச்சீடன் எனவுரைத்தற் கிசைந்தாயோ?
மாற்றிலுயர் பொன்போலும் மழமேனிக் குமரேசா!
காற்றியலும் தண்சோலைக் கவின்குன்றைப் பதியானே.
9✓
சூரன்முதற் றானவரைச் சுடர்வேலால் அடர்கின்றாய்
ஈரமலிந் தெனைச்சீடன் எனவுரைத்தற் கிசைந்தாயோ?
வாரணப்புட் கொடியானே! மயிலூரும் வானவனே!
காரணவும் மலர்ச்சோலைக் கவின்குன்றக் குடியானே.
10✓
மூவர்களும் பணிந்தேத்தும் முண்டகப்பூம் பதத்தெந்தாய்!
யாவரினும் கடையாகும் எனச்சீடன் என்றனையோ?
சேவலம்புட் கொடியோனே! சிகியுகைக்கும் செவ்வேளே!
பாவலவர் புகழ்குன்றைப் பதிபுரக்கும் கோமானே.
11✓
இந்தணியும் சடையானை இயற்றமிழ்மா முனிவனைஆண்(டு)
அந்தணன்பால் எனைச்சீடன் ஆகுமென்ற விதம்யாதோ?
மந்தரறி வரியானே! வளங்குலவு குன்றைநகர்க்
கந்தனே! முக்காலும் காரணம்என் றுரைத்தானே.
12✓
கிள்ளைஎனப் பலகாலும் கிளத்தியசொற் கேட்டிருந்தும்
வெள்ளைமதி யாலிரந்து மெலியும்நெல்லைப் பதியானைத்
தள்ளைநிகர்க் குன்றைநகர்ச் சரவணவேள் சாக்கிரத்திற்
கொள்ளையருட் சீடனெனக் கூறியவா(று) எளிதன்றே.